ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 26

அண்ணா சென்னை வந்தால் கார்னர் எஸ்டேட் அறையில் தங்குவார்  அல்லது அவரது பழைய நண்பர் டபுள்யூ.கே. தேவராச (முதலியாரின்) இல்லத்திலுள்ள கூடம், ஒரு கிழிந்த சோபா, இரண்டு உடைந்த நாற்காலிகள், பழம்பாய் இரண்டு, அழு
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 26
Published on
Updated on
5 min read

அண்ணா சென்னை வந்தால் கார்னர் எஸ்டேட் அறையில் தங்குவார்  அல்லது அவரது பழைய நண்பர் டபுள்யூ.கே. தேவராச (முதலியாரின்) இல்லத்திலுள்ள கூடம், ஒரு கிழிந்த சோபா, இரண்டு உடைந்த நாற்காலிகள், பழம்பாய் இரண்டு, அழுக்கேறிய நான்கு ஐந்து தலையணைகள், அங்குதான் அண்ணாவின் ராஜசபை நடைபெறும். காராபூந்தி, வெங்காய பக்கோடா, சிங்கிள் டீ அடிக்கடி வந்து கொண்டிருக்கும். கிழிந்த சோபாவில் அண்ணா அமர்ந்திருப்பார். சம்பத்தையும் அதில் உட்கார வைத்துக் கொள்வார். எதிரே கிழிந்த பாய், தலையணையோடு மற்றவர்கள் அமர்ந்திருப்பார்கள். கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.பி. லிங்கம் போன்றவர்கள் வருவார்கள். பிரியாணி பொட்டலங்கள் கே.ஆர்.ஆர். உபயம்.  நெடுஞ்செழியனுக்கும் அன்பழகனுக்கும் தயிர்சாதப் பொட்டலங்கள். அண்ணாவுக்கு கார் உபயம் எஸ்.எஸ்.பி. லிங்கம்,  பெட்ரோலுடன்.

இந்தச் சூழ்நிலையில் அங்கே விடிய விடிய விஷயாலோசனைக் கூட்டம் நடைபெறும் விலகி வந்தோரின் நிலைகளை எடுத்துரைக்கவும், தலைவர்களின் கருத்தை விரிவாக வெளிடவும் அண்ணா டி.எம். பார்த்தசாரதியைக் கொண்டு "மாலை மணி' என்ற நாளேட்டினைத் தொடங்கினார். அண்ணா ஆசிரியராகவும், நெடுஞ்செழியன், காஞ்சி கல்யாணசுந்தரம் துணை ஆசிரியர்களாகவும் பணிபுரிந்தனர்.

அண்ணா கேட்டுக்கொண்டதற்கிணங்க, சம்பத் வேலூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி பெரியாரின் கொள்கைத் தவறினையும், எடுக்கவிருக்கும் எதிர்காலச் செயல்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார். சிறுசிறு சலசலப்புகள் தவிர மற்றபடி கூட்டங்கள் அமைதியாகவும், பரபரப்போடும் நடைபெற்றன.

சுற்றுப்பயணம் முடித்து சென்னை வந்த சம்பத்தை அவரது இல்லத்தில் அண்ணா சந்தித்தார். ஏராளமான தோழர்கள் அமர்ந்திருக்க வெளி மாவட்டங்களில் நிலவிய நல்ல சூழ்நிலைகளை விளக்கிக் கூறினார் சம்பத்.

திராவிடர் கழகத்தில் இருந்து விலகியோருக்கு கூடிப் பேச சென்னையில் ஓர் இடம் தேவைப்பட்டது. நீதிக்கட்சிப் பிரமுகர் திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள 7-ஆம் இலக்கமிட்ட தமது கட்டடத்தின் மாடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அங்கேதான் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி கூட்டத்தை அதன் துணைத் தலைவர் கே.கே. நீலமேகம் கூட்டினார். இக்கூட்டம் 17.9.49 காலை ஏழு மணிக்கு நடைபெற்றது.

சம்பத்தின் முயற்சியால் தி.மு.க.

சம்பத்தின் பெரும் முயற்சியால் கூட்டப்பட்ட திராவிடக் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் தனிக் கட்சி தொடங்குவதற்கான தீர்மானத்தை முன் வைத்து அண்ணா ஆற்றிய நீண்ட உரையில் அடிக்கடி சம்பத் பற்றியும்  உருக்கமாக குறிப்பிட்டார்.

...""இலட்சியத்தை இழக்கவும் முடியாது. எதேச்சதிகாரத்திற்குப் பலியாகவும் கூடாது... கழகத்தைக் கைப்பற்றுவதும் புதிய தலைமையின் கீழ் நாம் பணியை நடத்துவதும் சாத்தியமான காரியமேயாகும். இதை நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளுகிறேன் (பலத்தகரவொலி)...

...நாட்டின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வடநாடு  தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்பட வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள் டில்லியின் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டுவிட்டன. தொழிலாளரின் பிரச்சினை யாரும் ஒதுக்கிவிடாத நிலையிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ பஞ்சமும் ,

பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பிக் கேடு விளைவிக்கும் விதத்தில் கெட்டு வருகிறது. பழமையோ, புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான், நாம் கழகத்தைக் கைப்பற்றும் காரியத்தில் ஈடுபடவேண்டி நேரிடும், இது யாருக்கு லாபமாக முடியும் என்பதைத்தான் தோழர்கள் மிக மிக ஜாக்கிரதையாகக் கவனித்துப் பார்க்கவேண்டும்.

கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு, யாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய எவரும் கட்டுப்பட வேண்டிய முறைகள் உண்டு. தனி மாநாடு கூட்டித் தலைவர் மீதும் நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவித்துப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதுதான் முறை.

ஆனால் நாமறிந்துள்ள பெரியார், இந்த முறைக்குக் கட்டுப்படவோ, இதனை ஏற்கவோ தயாராகவோ இல்லை. அவருடைய தலைமை அவருடைய பேனா முனையில் இருப்பதாகக் கருதி, கடைசிவரை கழகம் தம்மிடமே இருப்பதாகவும் மாறுபட்டவர்கள் கலகக்காரர்கள் என்றும் சாதிக்கவே எண்ணுகிறார் என்பது அவருடைய பேச்சாலும் எழுத்தாலும் தெரிகிறது. அவருடைய சுபாவம் நமக்குத் தெரியும்.

எனவே கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு ஒரு கால அளவோ, உருவமோ ஏற்படாது.

நாம் ஒருபுறம், திராவிடர் கழகம் என்ற லேபிளுடன் அவர் மற்றொருபுறம் அதே லேபிளுடன் உலவுவதும், இருசாராருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி வாழ விரும்பும் சந்தர்ப்பவாதிகள் ஆட்டமாடுவதும் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, நான் முன்னால் குறிப்பிட்டபடி பாசிசமும், பழமையும், நாட்டை நாசமாக்குவதுமான காரியம்தான் நடைபெறும்.

கழகம் ஏற்கனவே அமைப்பும், ஒழுங்கும், சட்டதிட்டமும் உள்ளதாக இருந்திருப்பின், இந்நிலை எற்பட வழி இருந்திருக்காது. கழகம் இப்போதுள்ள நிலையில் பெரியாரின் போக்குக்கு ஏற்றவண்ணம் அசைந்து கொடுக்கும் தன்மையில்தான் இருக்கிறது. இது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்று நான் கருதுகிறேன். காலம் நிர்ணயிக்க முடியாது.  தீர்ப்பு பெறும் நிலையும் எற்பட முடியாது.

கைப்பற்றுவதற்கான நடவடிக்கையுடன் பகை உணர்ச்சி பட்டுப்போகாது வளர்ந்தவண்ணம் இருக்கும்.  ஏனெனில் முறைப்படி நாம் கழகத்தைக் கைப்பற்றினாலும், பெரியார் அந்த முறைக்குக் கட்டுப்படப் போவதில்லை. அவரைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான சட்ட திட்டமும் கழகத்துக்கு இல்லை. எனவேதான், கழகத்தைக் கைப்பற்றுவதென்பது தீராத போராகவே இருந்துவரும்.

கழகத்தைக் கைப்பற்றுவது என்ற முறை தோன்றினால், இதிலே மும்முரமாக ஈடுபட நேரிட்டதாகக் கூறி, டிரஸ்டு ஏற்பாட்டை ஒத்திப்போட முனைவார். கழகத்தைக் கைப்பற்றி விட்டோம் என்ற நிலையை நாம் தெரிவித்தால், கழகமே கைவிட்டுப்போய் விட்டது. இனி எதற்கு டிரஸ்டு என்றுகூட கூறி விடக்கூடும். அந்தப் பல லட்சம் அவர் கருத்துப்படி பொது டிரஸ்டு ஆக்கப்படுவதற்கு வழி செய்து வைக்கும் வகையிலே பார்த்தால் கழகத்தைக் கைப்பற்றுவது என்ற முறையை நாம் மேற்கொள்ளக் கூடாது. லேபிள் இருக்குமிடமே இருக்கட்டும்;  டிரஸ்டு எழுத வாரும் என்று நாம் கூறவும், ஆமாம் அவர்களும் கழகத்தை அவரிடம் இருக்கவிட்டார்கள். இனியும் என்ன தாமதம் டிரஸ்டு எழுத, என்று நாடு கேட்கவும், ஒரு வழி செய்து தருவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

கழகத்தின் லேபிள் அல்ல முக்கியம்.  கொள்கைகள், வேலைத்திட்டம், இவைகளே முக்கியம். ஒரு தனி நபர் கூட லேபிள் தம்மிடம் இருப்பதாக எப்போதும் கூறிக் கொண்டிருக்க முடியும்.  ஆனால் கூட்டு முயற்சிக்கான வசதியும் வாய்ப்பும் வலிவும் நம்மிடம் இருக்கிறது  ஏராளமான அளவில்  வளரக்கூடிய விகிதத்தில் கொள்கைகளைப் பரப்பி லட்சியத்தை வெற்றிகரமாக்க, நாம் தனித்திருந்து அவருடைய தலைமையை மட்டுமல்ல. லேபிளையும் நீக்கிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற பெயருடன் பணியாற்றி வருவதுதான் நல்ல வழி என்பது என் கருத்து''...

நல்லதொரு முடிவு:

அண்ணாவின் அறிவுரைக்குப் பிறகு நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்ட தீர்மானங்கள் வருமாறு:

1. பெரியாரின் திருமணம் கழகத்தின் பகுத்தறிவுப் பிரசாரக் கொள்கைக்கும், லட்சியத்திற்கும் கேடு பயப்பது.

2. கழக உறுப்பினர்கள் பெரும்பாலோர் இத்திருமணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட சமயத்திலும், திருமணத்திற்குப் பிறகு கண்டனம் தெரிவித்தபோதும், பெரியார் பேசியும் எழுதியும் வந்த போக்கு ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகவும் எதேச்சதிகார முறையாகவும் இருக்கும் காரணத்தால், பெரியாரின் தலைமையில் நம்பிக்கையில்லை.

3. இந்நிலையில் எதிர்கால வேலைத்திட்ட முறையை வகுக்கும் பொறுப்பைக் கீழ்க் கண்டவர்கள் அடங்கிய அமைப்புக் குழுவினரிடம் இக்கமிட்டி ஒப்படைக்கிறது.

தோழர்கள் கே.கே. நீலமேகம், ஏ. சித்தையன், கே.வி.கே. சாமி, எஸ். முத்து, ஜி. பராங்குசம், கே. கோவிந்தசாமி, என்.வி. நடராசன் (செயலாளர்).

அமைப்புக் குழுவின் முடிவு வருமாறு:

1. திராவிடக் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ. ராவின் திருமணத்திற்குப் பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே கழக நடிவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தைச் செயலற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கிற நாட்டு நிலையில், இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளும் லட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும், நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும் உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும், நாம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவதெனக் கமிட்டி தீர்மானிக்கிறது.

கழகக் கொடி:

நீண்ட  சதுர வடிவத்தில், மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி, சிவப்பு நிறமாகவும் அமைந்திருக்க வேண்டும்.

கொடியின் அளவு (2ஷ்3) அகலம் இரண்டு பங்கு நீளம் மூன்று பங்கும் இருக்க வேண்டும். அகலம் 2 அடியானால் நீளம் 3 அடி இருக்கவேண்டும் என்பதாகும்.

கருப்பு: அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.

சிவப்பு: அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக்கொண்டு வரவேண்டும்.  அழித்துக்கொண்டு வருகிறது. இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளிபோல் என்ற கருத்துடன், கருப்பு மேலும் சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த அமைப்புக்குப் பொதுச் செயலாளராக இருந்து பணி புரியும்படி சி.என். அண்ணாதுரை அவர்களை அமைப்புக்குழு கேட்டுக்கொண்டது.

பின்னர் நூற்றுப்பதின்மர் கொண்ட ஓர் பொதுக்குழுவும் பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து ஓர் பிரசாரக் குழுவும் அமைப்புக் குழுவும், நிதிக்குழுவும்,  அமைத்துக்கொண்டது.

பொதுக்குழு:

சி.என். அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், டி.எம். பார்த்தசாரதி, மணிமொழியார், என். ஜீவரத்தினம், கே. கோவிந்தசாமி, வி. முனுசாமி, சி.வி. ராஜ், எம்.ஆர். பாண்டியன், வி.டி. பெரியசாமி, மா. இளஞ்செழியன், சி.டி.டி. அரசு, ஏ.என். இராமன், சத்தியவாணி முத்து, எஸ். தருமாம்பாள், பி. இராமசுவாமி. (பட்டியல் நீளுகிறது)

தி.மு.கழகத் தொடக்கவிழா:

காலையில் கமிட்டி கூடி முடிவுசெய்த வேலைத் திட்டத்தைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழாவின் மாபெருங்கூட்டம் 17.9.49 அன்று மாலை, சென்னை, ராயபுரம், ராபின்சன் பார்க் மைதானத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவிற்குப் பெத்தாம்பாளையம் பி. பழனிச்சாமியை தலைமை வகிக்கும்படி தோழர் டி.எம். பார்த்தசாரதி முன்மொழிய, தோழர் கே. கோவிந்தசாமி வழிமொழிய, தோழர் பி.வி. முத்துசாமியின் துணைமொழிக்குப் பிறகு தோழர் பி. பழனிச்சாமி தலைமை வகித்துக் கூட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்தினார்.

பின்னர் தோழர்கள் ஏ. சித்தையன், என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், எஸ்.ஆர். சுப்ரமணியம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, இரா. நெடுஞ்செழியன், மதுரைமுத்து, கே.கே. நீலமேகம் தோழியர் சத்தியவாணிமுத்து ஆகியவர்கள் பேசிய பிறகு அண்ணா ஆற்றிய நீண்ட உரையிலிருந்து...

""...திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல, அதே கொள்கைப் பாதையில்தான்  திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகள், கருத்துகளில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

சுவீகாரப் பிள்ளை

நான்தான் அவரோடு பலத்த கருத்த வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவில்லை என்றும் பேசுவது தவறு.  உண்மைக்குப் புறம்பானது. எனக்கு, அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1933-ஆம் ஆண்டில்தான். அப்போது நான் பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கடுத்து திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும் நானும் முதல் முதலில் சந்தித்தது  எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்குத் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து, ""என்ன செய்கிறாய்?''

என்று கேட்டார். ""படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்''என்றேன். ""உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?'' என்றார். ""இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம்'' என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகிவிட்டேன். பொது வாழ்வில், அன்றையிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான். அவரது குடும்பத்தாருக்கு இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை, எனக்கும் அவருக்கும். ஏன் அவருடைய அண்ணார் மகன் சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 ஆண்டுகள் அவரோடு பழகினேன். 14 ஆண்டுகளாகப் பொது வாழ்வில் இருக்கின்றேன்''.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com