ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சுத்தத்தைத் தரும் சிகிச்சை முறைகள்!

என் வயது 40. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் FATTY LIVER என்றும் GALL BLADDER (பித்தப்பை) பெரிய அளவிலும் POLYPS உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்துகள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சுத்தத்தைத் தரும் சிகிச்சை முறைகள்!
Updated on
2 min read

என் வயது 40. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் FATTY LIVER என்றும் GALL BLADDER (பித்தப்பை) பெரிய அளவிலும் POLYPS உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளனவா?

கமால், சென்னை.

மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் இருவகைப்படுவர். அதனால் மருத்துவமும் இருவகைப்படும். ஒன்று ஸந்தர்ப்பணம் - அதாவது உடலுக்கு வலிமையையும், மனதிற்கு களிப்பையும் உண்டு பண்ணுவது. மற்றொன்று அபதர்ப்பணம்- அதாவது உடலை இளைக்கச் செய்வது, மனதுக்குத் துன்பத்தைத் தருவது. நிலம் மற்றும் நீரின் ஆதிக்கப் பூதங்களால் உருவான மருந்துகளால், உணவு வகைகளால், செய்கைகளால் மேற்கொள்ளப்படும் முறையானது, ஸந்தர்ப்பணம் சிகிச்சை முறையாகும். நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பூதங்களின் ஆதிக்கத்தால் உருவான மருந்து, உணவு, செய்கைகளின் வாயிலாகச் செய்யப்படும் சிகிச்சை முறையானது, அபதர்ப்பணம் என்ற வகையைச் சார்ந்தது.

மாமிச உணவை அதிகம் சாப்பிடுவது, இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட்ட பிறகு, பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது, நொறுக்குத் தீனியை அடிக்கடி வாயில் போட்டு அரைத்துக் கொண்டே ஒரே இடத்தில் நிறைய நேரம் அமர்ந்து கொண்டு மற்றவர்களுடன் அரட்டை அடிப்பது, கவலையேதுமில்லாமல் மன மகிழ்ச்சியுடன் அமைந்துள்ள சோம்பேறித்தனமான வாழ்க்கை போன்ற சில காரணங்களால் உடலின் உட்புற உறுப்புகளின் மந்தமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கின்றன. இதனால் நீங்கள் குறிப்பிடும் கல்லீரல், பித்தப்பை உபாதைகள் தலை தூக்குகின்றன. மேலும் குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், மேற்படி காரணங்களால் உட்புற உறுப்புகளில் நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டன என்று கூறலாம். அதனால் ஸந்தர்ப்பண சிகிச்சைக்கு நீங்கள் தகுதியற்றவர் என்றும் அபதர்ப்பண சிகிச்சைக்கு மட்டுமே பொருத்தமானவர் என்றும் உறுதிபடக் கூறலாம்.

இந்த அபதர்ப்பண சிகிச்சை முறையானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அவற்றுக்குச் சோதனம் என்றும் சமனம் என்றும் பெயர். சோதனம் என்றால் உடல் உட்புறக் கழிவுகளை வெளியேற்றிச் சுத்தப்படுத்துதல் என்று அர்த்தமாகும். ஐந்து வகையான பிரிவைக் கொண்ட இந்த சிகிச்சைக்கு பஞ்சகர்மா என்று பெயர். மருந்தைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து தேவையற்ற கபத்தை வெளியேற்றுவது, பேதி மருந்து கொடுத்துப் பித்தத்தை வெளியேற்றுவது, கஷாய வஸ்தி எனும் எனிமா முறையால் குடலில் வாயுவின் தேக்கத்தை ஆசனவாய் வழியாக அப்புறப்படுத்துவது, மூக்கினுள் மருந்தைச் செலுத்தி, தலைப்பகுதியை சுத்தப்படுத்துவது, ரத்தக் குழாய்களைக் கீறி கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவது என்ற ஐந்து உடல் சுத்தத்தைத் தரும் சிகிச்சை முறைகளால், நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தை, உடல் உட்புறப் பகுதிகளிலிருந்து பிரித்து வெளியேற்றிவிடலாம். இந்த சிகிச்சை முறைகளைக் கையாள்வதற்கு நோயாளிக்கு உடலில் வலு தேவை. நோயும் வலுவான நிலையிலிருந்தால் இந்த வைத்திய முறை சிறந்தது.

சிலர் நோஞ்சானாக இருப்பார்கள். உடல், மன வலுவும் சரி, நோயின் தன்மையும் சரி, குறைவான அளவில் இருக்கும்.

அவர்களுக்குச் சமனம் அதாவது தோஷத்தை வெளியேற்றாமல், சிகிச்சை செய்ய வேண்டிய தோஷத்தைத் தவிர, மற்ற தோஷங்களுக்குக் கேடு ஏற்படுத்தாமல், சீற்றமடைந்த தோஷத்தை அதன் இருப்பிடத்திலேயே அமைதி அடையும்படி செய்யும் சிகிச்சையாகும். அது ஏழு வகைப்படும். பாசனம் - செரிக்காமல் இரைப்பையில் கிடக்கும் உணவை, மருந்தின் மூலம் செரிக்க வைப்பது. தீபனம் - பசித் தீயைத் தூண்டுவது, க்ஷýத் - பட்டினியிருத்தல், த்ருட் - தண்ணீர் தாகத்தை அடக்காதிருத்தல், வ்யாயாம: - உடற்பயிற்சி, ஆதப - வெயில் உடலில் படும்படி அமர்ந்திருத்தல் மற்றும் மாருதா: - காற்று உடலில் நன்றாகப்படும்படி நடத்தல்.

மேற்கண்ட சிகிச்சை முறைகளை நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கிச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பிரிவுகளில் எது உகந்தது என்பதை மருத்துவர்களே தீர்மானிக்கட்டும். உணவில் நீங்கள் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள், காலையில் ஒரு கைப்பிடியாக வகைக்கு, கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை எடுத்துத் தனித்தனியாக வெள்ளைத் துணியால் மூட்டை கட்டி, 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகக் குறுகியதும், துணி மூட்டைகளை அகற்றி கஞ்சியின் சூடு அடங்கியதும் 1 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடவும். கல்லீரல் அடைசல், பித்தப்பை டஞகவடந ஆகியவற்றை இந்த உணவு வகை, உரசி வெளியேற்றும். நெருப்பு, வாயு, ஆகாயத்தை அதிகம் கொண்ட உணவு வகை என்பதால், நிலம், நீரின் ஆதிக்கத்தை வெளியேற்றும் திறன் கொண்டது. மதிய உணவாகச் சிறிது சாதம், சாம்பார் சாதம், மோர் என்று சாப்பிட்டு, தேன் கலந்த தண்ணீரைச் சிறிது பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்படும் வகையறாக்களை மட்டுமே சாப்பிட்டு, தெளிந்த மோரைப் பருகவும். கறிவேப்பிலை, சுக்கு, கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் "காலசாகாதி' எனும் கஷாய மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com