தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பல 'முதல்'களை நிகழ்த்திய முதல்வர்!

பாபுராவ் பெயிண்டர். இந்திய சினிமாவிலும் ஓவியத் துறையிலும் பயிற்சி பெறுபவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்களை மறப்பது வழக்கமானதுதான் என்றாலும் "இந்தியத் திரைப்படத் தந்தை' என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:02 am

அ. குமார்

பாபுராவ் பெயிண்டர். இந்திய சினிமாவிலும் ஓவியத் துறையிலும் பயிற்சி பெறுபவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்களை மறப்பது வழக்கமானதுதான் என்றாலும் "இந்தியத் திரைப்படத் தந்தை' எனப்படும் தாதா சாகேப் பால்கேயை விட சினிமாத் துறையில் மவுனப் பட காலத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர் இவர் என்பது பலருக்குத் தெரியாது.

ஐரோப்பாவிலிருந்து பயிற்சி பெற்று பால்கே இந்தியா திரும்பிய போது வெளிநாட்டில் தயாரான மூவி காமிராவுடன் வந்திறங்கினார். பாபுராவ் அதற்கு நேர்மாறாக தானே ஒரு காமிராவை உருவாக்கிப் படங்களைத் தயாரித்தார்.

உலகில் பல இயக்குநர்கள் ஓவியத் துறையில் ஈடுபாடு காட்டியது போல் பாபுராவ் தன் ஓவியத் திறமையை சமூக தொடர்புகளுக்குப் பயன்படுத்தியவர். மவுனப் படங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தது. தேச பக்தியை ஆதரித்தும் தீண்டாமை எதிர்ப்பையும் துணிச்சலுடன் தனது பாடல்களில் புகுத்தினார்.

சமூக விழிப்புணர்வையும் ரியலிஸத்தையும் வெளிப்படுத்திய வகையில் இந்திய சினிமாக்களின் முன்னோடியாக விளங்கினார். இவரது மராத்தி மவுனப் படமான "சவுக்காரி பாஷ்' என்ற படத்தைப் பார்த்து ரசித்த லோகமான்ய திலகர், பாபுராவின் தேசபக்தியைப் பாராட்டி ஜாலியன்வாலாபாக் படுகொலையை மையமாக வைத்து திரைப்படமொன்றை எடுக்கும்படி கூறினார். ஆனால் எதிர்பாராதவிதமாக திலகர் காலமானதால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.

மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் 1890-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி பிறந்த பாபுராவ், தன் குடும்பத் தொழிலான ஓவியம், சிற்பம் வடித்தல் போன்ற கலைத் துறையில் ஈடுபட்டதால் "பெயிண்டர்' என்ற அடைமொழி இவருடன் சேர்ந்து கொண்டது. இவரது ஓவியங்கள் தனித்துவம் பெற்றிருந்தன.

1917-ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே ஒருவர் மட்டுமே திரைப்படத் துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுவந்தார். அவரது படங்களை பார்த்து பிரமிப்படைந்த பாபுராவ் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த ராவ் இருவரும் படத் தயாரிப்பில் ஈடுபடவிரும்பினர். ஆனால் தயாரிப்புச் செலவுக்குப் பணம் இல்லை. பாபுராவும் ஆனந்தராவும் அயல் நாட்டுப் படங்களை பார்த்து அதிலுள்ள கலை நுணுக்கங்களை கவனித்து குறிப்பெடுத்தனர். மும்பையில் "செகண்ட்-ஹாண்ட்' புரஜக்டர் ஒன்றை வாங்கி அதை மூவி காமிராவாக மாற்றி படமெடுக்க முயற்சித்தனர். முயற்சி வெற்றி பெற்றது. எதிர்பாராதவிதமாக ஆனந்த ராவ் மரணமடைந்ததால் அவர்களது முயற்சி தடைப்பட்டது.

இருப்பினும் தன் முயற்சிகளில் மனந்தளராத பாபுராவ் சொந்தமாக "மகாராஷ்டிரா பிலிம் கம்பெனி' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமொன்றை நிறுவி பரிசோதனை முறையில் படமெடுக்கத் தொடங்கினார். இறுதியில் அவரது முயற்சி வெற்றி பெற்றது. திலகரின் நெருங்கிய நண்பர் கடில்கர் எழுதிய "கீசக வதம்' கதையை அடிப்படையாக வைத்து, "சைரேந்தரி' என்ற பெயரில் தயாரித்த அந்தப் படம் புராண கதை என்றாலும் அரசியல் கருத்துக்களை துணிச்சலுடன் புகுத்தினார்.

ஏற்கெனவே அந்த கதை நாடகமாக நடத்தியபோது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால் அதை திரைப்படமாக தயாரித்தால் பணம் சம்பாதிக்க முடியுமென கருதினார்.

1919-ஆம் ஆண்டில் முடிவடைந்த இத்திரைப்படத்தை திலகர் துவக்கிவைத்தார். சொந்த முயற்சியில் தானாகவே காமிராவை தயாரித்து படமெடுத்த விஷயத்தை கேள்விப்பட்ட திலகர், பாபுராவைப் பாராட்டி "சினிமா கேசரி' என்ற பட்டத்தை வழங்கினார்.

பல்வேறு வகையில் "சைரேந்தரி' ஒரு குறிப்பிடத்தகுந்த படமாகும். கீசகவதம் காட்சியைப் படமாக்கிய விதத்தைப் பார்த்த பெண்களில் பலர் அதிர்ச்சியில் மயக்கமடையவே, பிரிட்டிஷ் அரசு அந்தக் காட்சியை வெட்டும்படி கூறியது.

இந்தியாவில் முதன்முதலாக சென்சார் செய்யப்பட்ட படம் இதுதான். மேலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்த காரணத்தால் அப்போது வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன், இந்தப் படத்தை தடைசெய்ய பரிந்துரைத்தார்.

இந்தியத் திரையுலகில் முதன்முதலாக இந்தப் படத்தில் நடித்த குலாப் பாய், அனுசுயா பாய் என்ற நடிகைகளுக்கு திரைக்கு ஏற்ப கமலா தேவி, சுசீலா தேவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலாக போஸ்டர் விளம்பரம் செய்யப்பட்டதும் இந்த படத்திற்குத்தான்.

பாபுராவ் பெயிண்டரின் இரண்டாவது படமான "சிங்காத்' மராட்டிய சரித்திரத்தை அடிப்படையாக வைத்து சத்ரபதி சிவாஜியின் தளபதி தானாசாகிபைப் பற்றி எடுக்கப்பட்டதாகும்.

மராத்தியர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திலகர் பெரிய அளவில் சிவ ஜெயந்தியை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த நேரமென்பதால் இந்தப் படம் வெற்றியடையுமென்று பாபுராவ் நினைத்தது வீண் போகவில்லை. பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் தயாரித்த "சவுக்காரி பாஷ்' என்ற படம்தான் இந்திய கிராம வாழ்க்கையை பிரதிபலித்த முதல் படமாகும். கிராமங்களில் கடன் வாங்கும் விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்க எப்படித் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கும் சமூகப் படமான "சவுக்காரி பாஷ்' பெரும் வெற்றி பெற்றது.

பால்கே மற்றும் பாபுராவ் பெயிண்டர் இருவரது படங்களையும் ஒப்பீடு செய்த பிரபல திரைப்பட விமர்சகர் இஷாக் முஜாவர், பால்கேயின் திரைப்படங்களில் கற்பனையும் ஒளிப்பதிவும் குறிப்பிடும்படி இருந்தாலும் பாபுராவின் பங்கு இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் அதிகமென்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இண்டோரில் செயற்கை வெளிச்சத்தில் படமெடுக்கும் முயற்சியை தொடங்கிய இவர், ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கும் லைட்டிங் வித்தியாசத்தை காட்டி அசத்தினார்.

பின்னணியில் பால்கே பெயிண்ட் அடித்து படமாக்குவார். பாபுராவ் முதன் முதலாக செட் போட்டு படமாக்கினார்.

இயற்கையாக இருக்க வேண்டுமென்பதற்காக முப்பரிமாண முறையில் செட்டுகளை அமைத்தார்.

இந்தியத் திரையுலகின் தந்தை என்ற சிறப்பை தாதா சாகேப் பால்கே பெற்றிருந்தாலும் தனக்குப்பின் யாரையும் உருவாக்கவில்லை.

பாபுராவ் திரைப்பட பயிற்சிக் கூடத்தை அமைத்து சாந்தாராம், விஷ்ணுபந்த், தாம்லே, பாபுராவ் பெண்டார்கர், மாஸ்டர் விநாயக் போன்ற தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் உருவாக்கினார்.

ஓவியர் என்பதால் திரைப்பட காட்சிகளையும் நடிகர், நடிகைகளின் முகபாவங்களை காட்சிக்கு ஏற்ப கொண்டுவருவதில் திறமையாக செயல்பட்டார். இவரது பாணியைத்தான் சத்யஜித்ரே கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ஆரம்ப கால முயற்சியாகத்தான் இந்தியத் திரைப்படங்களில் இயற்கையான சூழ்நிலையை உருவாக்க அடித்தளமாகியது. 1954-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி காலமான பாபுராவின் தேசிய உணர்வும் தன்னம்பிக்கையும் இந்தியத் திரையுலகில் வழிகாட்டியாக அமைந்தது என்பது மிகையல்ல. இவரது நாற்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மும்பை, ஜேஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் இன்றும் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.