திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இரண்டு ஜப்பானியப் படங்கள்

யோஜி யமாடா என்ற ஜப்பானிய இயக்குநரின் திரைப்படங்கள் சென்னை தியாகராயர் நகரில் அண்மையில் திரையிடப்பட்டன. திரையிடப்பட்டதில் இரு படங்களின் கதையம்சம் வித்தியாசமானது. அக்கதைகள் வருமாறு: THE TWILIGHT SAMURAI

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:49 am

யோஜி யமாடா என்ற ஜப்பானிய இயக்குநரின் திரைப்படங்கள் சென்னை தியாகராயர் நகரில் அண்மையில் திரையிடப்பட்டன. திரையிடப்பட்டதில் இரு படங்களின் கதையம்சம் வித்தியாசமானது. அக்கதைகள் வருமாறு:



THE TWILIGHT SAMURAI

சைபி ஒரு சிறந்த சாமுராய். வாள் வீச்சு, சிலம்பம், சுருள் பட்டா எல்லாம் அவனுக்குத் தெரியும். அந்தப் பிரதேச காவல் மையத்தில் அவன் சொற்ப வருமானத்தில் வேலை பார்த்து வந்தான். லெட்ஜர்களையும், கோப்புகளையும் பாதுகாக்கும் பணி. இடையிடையே காவல் பணிக்கும் செல்வான்.

பாரம்பரிய சாமுராய்-போராளி என்றாலும் அவன் ஒரு முரடன் அல்ல. காருண்யம் மிகுந்த ஞானி. கன்ஃபியூஷியஸ் தத்துவங்களை ஆழ்ந்து கற்றவன். காரணமின்றி, எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று நினைப்பவன்.

அவனது பால்ய பருவத்துத் தோழி தோமே அன்று அவனைக் காண வந்திருந்தாள். அவள் கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். சைபி திருமண வயதை அடைந்ததும் தோமே அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் தனக்கு சொற்ப சம்பளம் என்பதால், தன்னை மணந்துகொண்டு தோமே கஷ்டப்படக்கூடாது என்று சைபி மறுத்துவிடுகிறான்.

அவனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள். சில ஆண்டுகள் கழித்து, அவள் சயரோக நோயால் இறந்து போகிறாள். இப்போது சைபிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

12 வயதுள்ள மூத்த மகள் ஒருநாள் கேட்டாள்,""அப்பா! நான் படிப்பதை விட்டுவிட்டு, தையல் கற்றுக்கொள்ளப் போகிறேன். நாம் கிராமத்தில் இருக்கிறோம். நம் வறுமை நீங்க என் தையல் தொழிலும் உதவும்!''

""மகளே! கல்வியே சிறந்த செல்வம். கல்வி, சிந்தனை சக்தியை வளர்க்கும். சிந்திக்கும் மானிடன்தான் சிறப்பாக வாழ முடியும். அதனால் முதலில் நீ படித்து முடி!''

ஒருமுறை சைபியைப் பார்க்க வந்த தோமே விடை பெற்றுக்கொள்ள வந்தாள். தோமேயின் கணவனும் ஒரு சாமுராய்தான். ஆனால் அவன் திருத்த முடியாத குடிகாரன். தோமேயை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்.

""நானும் கூடவே வந்து உன்னை வீட்டில் விடுகிறேன்'' என்கிறான் சைபி. வீட்டருகே அவர்களைக் கண்ட தோமேயின் கணவன் கோடா, ""இவ்வளவு நேரம் கழித்து வருகிறாயே!'' என்று தோமேயிடம் சண்டை பிடித்து அவளை அடித்தான். சைபி தடுக்கவே அவனுக்கு கோபம் வருகிறது. அவன் நன்றாகக் குடித்திருந்தான்.

""நீ சுத்த வீரன் என்றால் நாளை ஆற்றங்கரையில் வாள் போருக்கு வா. நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம்'' என்று கோடா கத்தினான்.

ஆற்றங்கரை. சைபி ஒரு சின்னக் கழியைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். ""வாள் போருக்கு ஏன் மரக்கழி? வாள் பிடிக்கத் தெரியாதா?'' என்று கோடா கேலி செய்கிறான்.

""நான் வாள் வீசினால் உன் உயிர் பறிபோகும். கழியால் தாக்கினால் நீ காயம் மட்டுமே அடைவாய்!'' என்று சைபி அமைதியாகச் சொல்கிறான்.

முதல் சுற்றிலேயே மரக்கொம்பினால் தாக்கி கோடாவின் வாள் வீச்சுகளுக்கு பதில் சொல்லி, தோளில் ஒரு தட்டுத் தட்டுகிறான். கோடா மூர்ச்சை அடைந்து வீழ்ந்தான். ""முகத்தில் நீர் தெளித்தால் மயக்கம் நீங்கி எழுவார். உயிருக்கு ஆபத்தில்லை. பயப்பட வேண்டாம்!'' என்று கோடாவின் உதவியாளர்களிடம் சொன்னான் சைபி.

சைபியின் பெருந்தன்மை குறித்து ஊரார் வியப்புடன் பேசிக்கொண்டார்கள்.

காவல் மையம் சைபிக்கு ஒரு ஆணையிட்டது. யோகோ என்ற புரட்சிக்காரனை கொல்லத் தூண்டியது.

""கொல்ல வேண்டும் என்றால் அதற்கு மிருக வெறியும், அராஜகமும் வேண்டும். அதற்கு நான் ஆள் அல்ல; நான் மனசாட்சி உள்ளவன்...''

காவல் மைய கமிஷனர் சீறுகிறார்.

""மையத்தின் ஆணையை மீறினால் வேலை நீக்கம் செய்யப்படுவாய். புரட்சிக்காரனைக் கொன்றாலோ பதவி உயர்வு! கொழுத்த சம்பளம்!'' அரை மனதுடன் ஒத்துக்கொள்கிறாள் சைபி.

தாக்குதலுக்குப் புறப்படுமுன் தன் பால்ய பருவத்தோழி தோமேக்கு ஆள் அனுப்பினான். கணவனை அவள் விவாகரத்து செய்திருந்தாள். ""இந்தப் போரில் ஜெயித்தால் உன்னை மணந்து கொள்கிறேன்'' என்கிறான் சைபி.

புரட்சிக்காரனைத் தாக்கச் செல்கிறான். ""சைபி! என்னை தப்பிக்கவிடு! என் சோகக் கதையைக் கேள்!'' என்கிறான் புரட்சிக்காரன். சைபி நினைத்திருந்தால் முதலிலேயே வாள்போர் செய்திருக்கலாம். ஆனால் புரட்சிக்காரனின் சோகக் கதையைப் பொறுமையுடன் கேட்டான்.

""உன்னைத் தப்பவிட முடியாது. நான் கை நீட்டி சம்பளம் வாங்குகிறேன். எனவே காவல் மையத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்''

கடுமையான வாள் போர். புரட்சிக்காரன் யோகோ மிகவும் திறமைசாலி. சைபிக்கு ஆழமான வெட்டுக் காயங்கள். ஆனால் இறுதியில் யோகோ கொல்லப்படுகிறான்.

புரட்சிக்காரனை உடனே கொல்லாமல் சைபி கதை கேட்டுக்கொண்டிருந்தானே என்று சக வீரர்கள் வியக்கிறார்கள்.

சைபிக்கும், தோமேக்கும் திருமணம் நடந்து, இனிய இல்லறம் நடந்தது.

ABOUT HER BROTHER

டெட்சுரோ-அக்காவின் குடும்பத்துக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான். அவன் ஊதாரித்தனமாக செலவு செய்வான். அளவுக்கு மீறிக் குடிப்பான்.

ஆனால் அக்கா கின்கோ தன் தம்பியிடம் மிகுந்த அன்புள்ளவள். நிரந்தரக் கடன்காரனான அவன் கடன்களை எல்லாம் புன்முறுவலுடன் தீர்த்து வைப்பாள்.

கின்கோவின் மகள் கொஹாரு. தன் அக்காள் மகள் திருமணத்தின்போதுகூட நன்றாகக் குடித்துவிட்டு வந்து டெட்சுரோ தொல்லை கொடுக்கிறான். அடிக்கடிப் பணம் கேட்பதும் குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்வதும் கண்டு கொஹாரு கொதித்துப் போனாள்.

ஒருநாள் தாய் கின்கோவும், மகள் கொஹாருவும் டெட்சுரோவை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்கள். வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார்கள். டெட்சுரோவுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அன்று அக்காள் வீட்டை விட்டு ஓடிப் போனவன் ஐந்து ஆண்டுகள் கழித்தும் வரவில்லை.

ஒருநாள் ஒசாகா பட்டணத்தில் இருந்து செய்தி வந்தது!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெட்சுரோ சாகக் கிடக்கிறான். இன்னும் ஓரிரு மாதங்களில் மரணம் சம்பவித்துவிடும். இடியால் தாக்குண்டது போல் துடித்தாள் அக்காள் கின்கோ.

""என்னம்மா இந்த உதவாக்கரைத் தம்பிக்காகவா இப்படித் துடித்துப் போகிறாய்?'' என்கிறாள் மகள்.

தன் எளிய மருந்தகத்தின் வருமானத்தில் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தம்பியைப் பார்க்க விரைந்தாள்.

தம்பி டெட்சுரோ இருந்தது ஒரு தர்ம ஆஸ்பத்திரியில். முதியோர் இல்லமாக அது பராமரிக்கப்பட்டு வந்தது. தன்னைப் பார்க்க வந்த அக்காவை முதலில் டெட்சுரோ பார்க்க மறுக்கிறான்.

இத்தனை ஆண்டுகள் இல்லாத அக்கறை இப்போது மட்டும் வந்ததேன் என்ற கோபம். ஆனால் அந்த மருத்துவமனையிலேயே தங்கி, அனுதினமும் தன் தம்பிக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள் அக்கா.

மரணத் தேதி நெருங்கிக்கொண்டே வந்தது. தன் மகளும் டெட்சுரோவைப் பார்க்க வர வேண்டும் என்று தாய் ஆசைப்பட்டாள். ஆனால் முதலில் மகள் அதற்கு சம்மதிக்கவில்லை.

""மகளே உனக்கு கொஹாரு என்று பெயர் சூட்டியதே என் தம்பி டெட்சுரோதான்! நாங்கள் பலர் என்னென்னமோ பெயர்களைச் சொன்னோம். ஆனால் நவீனமான பெயரை உனக்கு வைத்தது அவன்தான்!''

தன் தாயின் அன்பைக் கண்டு கொஹாரு உருகிப் போகிறாள்; சம்மதிக்கிறாள். கொஹாரு மருத்துவமனைக்குச் சென்றபோது டெட்சுரோ பேசும் சக்தியை இழந்துவிட்டிருந்தான். ஆனாலும் கொஹாருவின் வரவை உணர்ந்து கொண்டான். அவள் கையை அன்புடன் பற்றிக்கொள்கிறான்.

பிறகே உயிர் பிரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.