தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓர் அரசகுமாரியின் நினைவுகள்...

கூச் பீகார் இளவரசியான காயத்ரி தேவி, சிறுவயதில் 500 பணியாட்களுடன் அரண்மனையில் தங்கி வளர்ந்தவர். பன்னிரண்டாவது வயதிலேயே சிறுத்தையை சுட்டு வீழ்த்தியுள்ளார். அழகும் துணிச்சலும் கொண்ட இவர் அவரது உடன்பிறந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:22 am

அ. குமார்

கூச் பீகார் இளவரசியான காயத்ரி தேவி, சிறுவயதில் 500 பணியாட்களுடன் அரண்மனையில் தங்கி வளர்ந்தவர். பன்னிரண்டாவது வயதிலேயே சிறுத்தையை சுட்டு வீழ்த்தியுள்ளார். அழகும் துணிச்சலும் கொண்ட இவர் அவரது உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடமிருந்து மாறுபட்டிருந்தார். லண்டனில் இருந்த தாயாருடன் சிறுவயதிலேயே உலகைச் சுற்றியவர்.

 உலகப் புகழ்பெற்ற போலோ விளையாட்டு வீரரும் ஜெய்ப்பூர் மகாராஜாவுமான ஜெய்யை ஆறாண்டுகள் காதலித்துத் திருமணம் செய்தவர். அரண்மனையின் புதிய சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதோடு ஜெய் ஏற்கனவே மணந்திருந்த இரு மனைவிகளுக்குள்ள உரிமையை விட, ஜெய் தனக்களித்த சுதந்திரத்தை தக்கவைத்துக் கொண்டவர்.

 மகாராணிகளுக்கே உரிய கலாசார வரைமுறைகளைத் தாண்டி பல கல்வி நிலையங்களை உருவாக்கியவர். அரசியலிலும் வெற்றிகரமாக வலம் வந்த இவர், ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் பல்வேறு சோதனைகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று. "எ பிரின்சஸ் ரிமெம்பர்ஸ்' என்ற புத்தகத்தில் அவர் எழுதிய நினைவுகளிலிருந்து ஒரு பகுதி...

 ""ஜெய்ப்பூரிலிருந்து திரும்பியவுடன் என்னுடைய அம்மா சொன்னார், ""நீ வளர்ந்தவுடன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஜெய் சொன்னார். இதுபோன்ற உதவாத கருத்துக்களை நான் இதுவரை கேட்டதே இல்லை.''

 என்னுடைய உலகத்திற்கு வெளியே ஒரு ஹீரோ என்னை விரும்புவதாகக் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. இதை நான் சீரியஸôக எடுத்துக் கொண்டேன். காரணமின்றி அவர் இப்படி சொல்லியிருக்க முடியாது. எனக்கு இது புதிராகவும் இருந்தது. அடிக்கடி செய்திகளில் அடிபடும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். அவரைப் பற்றி யாராவது பேசினால் சுவாரசியமாகக் கேட்பேன். அவர் அணியும் உடைகளை ரசிப்பேன். அவர் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்வேன். மொத்தத்தில் அவரை முழுமையாக விரும்பினேன்.

 எனக்குள் வித்தியாசமான ஆசைகள் இருந்தன. ஜெய் போலோ விளையாடும் போது கை மணிக்கட்டில் பாண்டேஜ் அணிவது வழக்கம். ஒருமுறை அவர் பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய பாண்டேஜ் பட்டை ஒன்றை எடுத்துவந்து அதிலிருந்து சில நூலிழைகளைப் பிரித்தெடுத்து லாக்கெட்டினுள் வைத்து எங்கு சென்றாலும் அதை அணிந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அதற்கடுத்த ஆண்டுகளில் பலமுறை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆண்டுக் குளிர்காலத்தில் அவர் கொல்கத்தா வருவார். தில்லியில் நடக்கும் குதிரைக் கண்காட்சி, போலோ பந்தயங்களின்போது அடிக்கடி ஜெய்யை அம்மா சந்திப்பதுண்டு. அவரது பணியாட்களிடம் என்னைப் பற்றி ஜோக் அடித்தாலும் நேரில் பார்க்கும் போது என்னிடம் அவர் பழகும் விதம் என்னைக் கவர்ந்தது. அப்போது கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருந்த என்னுடைய சகோதரன் படிப்பைத் தொடர முடியாமல் ஒரே ஆண்டில் இந்தியா திரும்பினான். அதேநேரத்தில் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற வைஸ்ராய் லார்டு வெலிங்டன், என் சகோதரனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார். என் சகோதரனுக்கு அப்போது 19 வயதுதான் ஆகியிருந்தது. அவனுக்கு நிர்வாகத்தில் நல்ல பயிற்சி தேவைப்பட்டது. அவன் கூச் பீகாருக்குத் திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் கண்களுக்கு ஜெய்யும் என் சகோதரனும் ஹீரோக்களாகத் தெரிந்தனர். அவர்களிருவரும் நண்பர்களாயினர். என்னுடைய சகோதரனை தெய்வமாக நினைத்தேன். பாசமாகவும் நேர்மையாகவும் இருந்த அவனைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது. அவனுக்குத் தெரிந்த சரித்திர சான்றுகளையும் கதைகளையும் எங்களுக்கு சொல்வான்.

 எனக்கு 15 வயதாகும்போது பெங்காலி மொழியை சரிவர பேசத் தெரியாததால் (கூச் பீகாரில் வட்டார மொழியாகப் பேசுவோம்) என்னுடைய சகோதரிகள் இவா, பேபியுடன் என்னையும் ரவீந்திரநாத் தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதனுக்கு அம்மா அனுப்பினார். இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் கல்விக் கூடமாக சாந்திநிகேதன் விளங்கியது. இந்திராகாந்தியும் அங்கு மாணவியாக இருந்துள்ளார். எங்களுடைய வகுப்புகள் மரத்தடிகளில்தான் நடக்கும். இவா ஓவியக் கலையைத் தேர்ந்தெடுத்தாள். நான் சாதாரண கல்வியைத் தேர்ந்தெடுத்தேன். அங்குள்ள நிர்வாக அதிகாரியின் குடும்பத்துடன் ஒருத்தியாக தங்கினேன்.

 ஆரம்பத்தில் அங்குள்ள பெண்கள் எங்களை அரச குமாரிகள் போல் நடத்தினர். பின்னர் பெங்காலி போல் பழகுவதற்கு கற்றுத் தந்தனர். அதேநேரத்தில் சாந்திநிகேதன் வாழ்க்கை முறைக்கு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. இந்த நிலைமை நீண்ட நாள் நீடித்தது. இவாவுக்குத் தனிப் படுக்கையறை கிடைத்தது. நான் மற்றப் பெண்களுடன் ஒரே கூடத்தில் படுத்துறங்க வேண்டியதாயிற்று.

 குருதேவ் என்றழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூரை நீண்ட அங்கியுடன் நரைத்த வெள்ளைத் தாடியுடன் அடிக்கடி பார்ப்பதுண்டு. ஓர் எளிமையான குடிசையில் அமர்ந்து கொண்டு ஓவியம் தீட்டுவது எழுதுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பார். வாரந்தோறும் பிரார்த்தனை கூட்டத்தில் தவறாமல் அவரைச் சந்திக்கலாம். அங்குள்ள அனைத்து மாணவர்கள் பற்றிய விவரங்களையும் அவர் தெரிந்துவைத்திருந்தார். அவரைப் பார்க்க சைக்கிளில் செல்வேன். ஒருமுறை என்னைச் சந்தித்தபோது கையெழுத்தை சீராக எழுதப் பழகும்படி கூறினார்.

 என்னுடைய அம்மா நாங்கள் கடைப்பிடித்துவந்த விரதத்தையும் சிவ பூஜையையும் நிறுத்தும்படி தகவல் அனுப்பினார். விக்ரக வழிபாட்டில் குருதேவுக்கு நம்பிக்கையில்லை. ஒருமுறை இடியும் மின்னலுமாக இருந்தபோது "பயந்தாயா' என்று என்னிடம் கேட்டார். "இல்லை' என்றேன். "சிறுவயது பெண்கள் இடியையும் மின்னலையும் பார்த்து பயப்படுவதுதான் அழகு' என்றார். அதேபோல் நான் நடனமாடுவதை நிறுத்திவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டவர், "ஒருபெண் நடனமாடுவதை நிறுத்துவது அழகல்ல' என்றார். எல்லா விஷயங்களையும் அவர் எப்படித் தெரிந்து கொள்கிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. தன்னுடன் பயிலும் திரிபுரா மகாராஜாவின் உறவுக்கார மாணவனை இவா காதலிப்பதையும் இவர் தெரிந்து வைத்திருந்தார்.

 சாந்திநிகேதனில் ஓராண்டுகாலம் தங்கியிருந்தோம். 1935-ஆம் ஆண்டு நாங்கள் திரும்பவும் கூச் பீகார் திரும்பினோம். அங்கு மெட்ரிகுலேஷன் முடித்த பின்னர் மேற்கொண்டு என்னை படிக்க வைக்க சுவிட்சர்லாந்து அனுப்புவதென அம்மா தீர்மானித்தாள். இலாவும் மேற்கொண்டு ஓவியப் படிப்பை முடிக்க என்னுடன் வருவதென முடிவு செய்தாள். என்னுடைய பரோடா பாட்டி இவா, மேனகா ஆகியோர் கப்பலில் செல்வதென்றும் நானும் அம்மாவும் சில நாட்கள் கழித்து விமானத்தில் செல்வதென்றும் முடிவு செய்தோம்.

 அவர்கள் கிளம்பிச் சென்றவுடன் கொல்கத்தா பார்ட்டி ஒன்றில், அம்மாவிடம் சிலர் "மூத்த மகள் இவா, திரிபுரா மகாராஜாவின் உறவுக்காரப் பையனைத் திருமணம் செய்துகொண்டது உண்மையா?'

 என்று கேட்டனர். அது வதந்தி என மறுத்த என்னுடைய அம்மா, பின்னர் விசாரித்தபோது கொல்கத்தா ரிஜிஸ்தர் ஆபீசில் ரோமந்திர கிஷோர் தேவ் வர்மாவை இவா பதிவுத் திருமணம் செய்து கொண்டது உண்மையெனத் தெரிந்தது.

 இதனால் அம்மா மனமுடைந்து போனார். என் தந்தையுடன் அவருக்கு நடந்த திருமணத்தின்போது பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது அம்மாவின் திருமணத்தை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவா, அவளாகவே முடிவுசெய்து திருமணம் செய்துகொண்டது அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக பாரீஸ் சென்று அவளை இந்தியாவுக்கு அழைத்துவந்து இந்திய முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தாள். ஒரு சமஸ்தான இளவரசி சாதாரண முறையில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளது திருமணத்திற்கு ஓர் அந்தஸ்து இருக்கவேண்டுமென்று விரும்பினார்.

 பாரீஸ் சென்றவுடன் இவாவைச் சந்தித்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். பரோடா பாட்டி மட்டும் தெம்பில்லாமல் இருந்தார். பாரீஸில் உள்ள பாட்டி வீட்டிற்குச் செல்லும் வரை ஏதும் பேசவில்லை. மூவரும் தனியாகப் பேசச் சென்றனர். நாங்கள் ஹாலில் ஆவலோடு காத்திருக்க, நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இவா சிரித்த முகத்தோடு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னால் அறைக்குள் பலத்த குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அம்மாவின் திருமணத்தையே காரணம் காட்டி தன்னை நியாயப்படுத்திக் கொண்டது தெரியவந்தது.

 அம்மாவும் பாட்டியும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் கத்திக் கொண்டிருக்க, இவாவைச் சுத்தமாக மறந்துவிட்டனர்.

 "ஏன் இத்தனை அவசரமாக முடிவெடுத்தாய்?' என்று இவாவிடம் தேட்டேன். ரோமேந்திர கிஷோர் தேவ் சர்மா இன்னமும் மாணவராக அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதால் இந்த திருமணத்திற்கு நிச்சயமாக ஒப்புதல் தரமாட்டார்கள். அதனால் முதலில் திருமணம். பின்னர் வழக்கம்போல் தன்னுடைய கணவன் காலேஜுக்குச் சென்று இறுதித் தேர்வு எழுதுவது. தான் மட்டும் எதுவும் சொல்லாமல் வீட்டில் இருப்பது. பின்னர் சமயம் வரும்போது அனுமதி வாங்கலாமென்று கருதியே ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு மறுத்தால், ஏற்கனவே எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதென்று சொல்வோம். பிறகு மறுப்பேதும் சொல்லமுடியாதல்லவா? இதுதான் எங்கள் திட்டம் என்றாள். ஆனால் அவர்களது திட்டம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால் இவா திருமணத்திற்கான ஏற்பாடுகளை அம்மா செய்யத் தொடங்கினாள்.

 மேலும் சில வாரங்கள் பாரீஸில் பாட்டி வீட்டிலேயே தங்கினோம். பின்னர் லண்டன் சென்றோம். இவாவின் திருமணத்திற்காக சில பொருட்களை வாங்க அம்மா ஷாப்பிங் சென்றிருந்தாள். எதிர்பாராதவிதமாக லண்டன் பயணம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. சர் ஹெரால்ட் வெர்னர் டீமில் போலோ விளையாட ஜெய் லண்டன் வந்திருந்தார். சுவிட்சர்லாந்து பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்ததால், அதுவரை சும்மா இருப்பதைவிட, உருப்படியாக ஏதாவது கற்றுக் கொள்ளட்டும் என்று என்னுடைய அம்மா லேடி ஜியா வெர்னர் சிபாரிசில் அவரது பெண் எனக் கூறி "மங்க்கி கிளப்'பில் என்னைச் சேர்த்து விட்டார்.

 பல நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் அங்கு ஆடம்பரமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தாலும் அங்குள்ள சூழ்நிலை எனக்குப் பிடிக்கவில்லை. நான் உள்ளே நுழைந்தவுடனே அங்கிருந்த பிரின்சிபால் என்னை வரவேற்கும் போதே, ""இந்த கிளப்பில் சேரும் முதல் இந்தியக் குரங்கு நீதான்...'' என்று சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.

 ஆனால் அந்த சூழ்நிலை விரைவில் மாறியது. பெண்கள் மிகவும் சிநேக மனப்பான்மையுடன் சரளமாகப் பழகத் தொடங்கினர். வெர்னரின் மகள் ஜீனாவுக்கு ஜெய் அறிமுகமாகியிருந்ததால் எனக்கும் அவளைத் தெரியுமென்று கூறி அவளுடன் இயற்கையாக பழகினேன். அங்கு போலோ மைதானமொன்று இருந்தது. எப்படியாவது ஜெய்யை ஒருமுறை அங்கு அழைத்துவரும்படி என்னிடம் வற்புறுத்தினார்கள். எனக்குத்தான் அவரை அழைக்கும் தைரியம் இல்லை.

 மே மாதம் இவாவை கூச் பீகாருக்கு அழைத்துச் சென்று திருமணம் நடத்த அம்மா புறப்பட்டாள். என்னையும் மேனகாவையும் பாட்டியின் கண்காணிப்பில் விட்டுச் சென்றாள். சில சமயங்களில் ஜெய் என்னைச் சந்திக்க அனுமதி கேட்டு வருவார். ஆனால் பரோடா பாட்டி பிடிவாதமாக மறுத்துவிடுவாள்.

 ஒருமுறை, இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த போலோ போட்டியின்போது ஜெய் என்னையும் மேனகாவையும் அழைத்திருந்தார். வழக்கம்போல் பாட்டி மறுத்துவிட்டாள். எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பாட்டி ஒப்புதல் தரவில்லை. ஆனால் ஜெய் அவரது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவருடன் விளையாடிய ஜோத்பூரைச் சேர்ந்த ஹனத் சிங் மூலம் அழைப்பு விடுத்தார். இந்த முறை பாட்டி சந்தேகப்படவில்லை. எங்களை அனுப்ப ஒப்புக்கொண்டார். நாங்கள் மைதானத்துக்கு சென்றவுடன் நான் மட்டும் ஜெய்யுடன் தனியாக விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.