ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர்த் தொற்றுக்குத் தீர்வு!

ஆற்று தர்ப்பை, நாணல், சம்பா நெற்பயிரின் வேர், தர்ப்பைப் புல், கரும்பு வேர் ஆகியவை சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்று உபாதையை அழித்து, நீர்க்கடுப்பை அகற்றி, சிறுநீரைத் தாராளமாகப் பிரித்து வெளியேற்றும் ஆற்றல் உடையவை.
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர்த் தொற்றுக்குத் தீர்வு!
Updated on
2 min read

என் வயது 70. சிறுநீர்த் தொற்று காரணமாக PUS CELLS உற்பத்தியாகி இரவு நேரத்தில் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர் முழுவதுமாக அகலுவதில்லை. சில சொட்டுகளே சிறுநீர் பிரிகிறது. இந்த உபாதை மாற வழி என்ன?

ஏ.பரந்தாமன், திருப்பாலக்குடி.

ஆற்று தர்ப்பை, நாணல், சம்பா நெற்பயிரின் வேர், தர்ப்பைப் புல், கரும்பு வேர் ஆகியவை சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்று உபாதையை அழித்து, நீர்க்கடுப்பை அகற்றி, சிறுநீரைத் தாராளமாகப் பிரித்து வெளியேற்றும் ஆற்றல் உடையவை. இந்த ஐந்து மருந்துகளின் சேர்க்கைக்கு "த்ருண பஞ்சமூலம்' என்று பெயர். தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் இவை கிடைக்கக்கூடும். நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இவற்றைச் சேகரித்து, தண்ணீரில் வேக வைத்துக் குடிக்கப் பொறுமையில்லை, நேரமுமில்லை என்பதால் இவற்றைத் தயாரித்து விற்கும் மருந்துக் கம்பெனிகளின் துணையை நாட வேண்டியுள்ளது. "சுகுமாரம்க்ருதம்' என்ற பெயரில் விற்கப்படும் நெய் மருந்தை ஒன்றிரண்டு ஸ்பூன் அதாவது சுமார் 5 -10 மி.லி. உருக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நல்லது.

நீங்கள் முட்டை வடிவில் உள்ள பார்லி சாப்பிடுவது நல்லது. இதன் முழு அரிசியைக் கஞ்சியாக்கி அதன் தெளிவை காலையில் பருகலாம். மோருடன் சேர்த்துப் பருகினால், சிறுநீரை அதிக அளவில் பெருக்கி வெளியேற்றும். கிருமித் தொற்றும் இதன் மூலம் விலகுவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் போகும் உபாதை குறையும். அதுபோல, காராமணியைச் சுண்டலாகச் சாப்பிடுவதால், அது சிறுநீரை நன்றாக வெளியேற்றும். கொள்ளை 10 பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட, சிறுநீரகங்களின் உள்ளே புகுந்து, அங்குள்ள கற்கள், கிருமித் தொற்று போன்றவற்றைச் சுரண்டி வெளியாக்கும். அதுபோல, பசலைக் கீரையை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வர, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, இன்ஃபெக்ஷன் ஆகியவற்றைப் போக்கும். சுரைக்காய், சிறுநீரக உபாதைகளில் ஏற்படும் பல உபாதைகளை நீக்கக் கூடியது. பழங்களில் நாவல்பழம் சாப்பிட நல்லது. பீர்க்கங்காய் துவையலும் நீங்கள் சாப்பிட நல்லது.

பொது இடங்களிலுள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் போவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகு, அது வெளியேறும் துவாரத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவிக் கொள்வது நல்லது. வெள்ளரி விதையை மண்பானைத் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் அந்தத் தண்ணீரைக் குடிப்பதால், வாய்ப்புண், சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்துவார வெடிப்பு, சதை அடைப்பு, நீர்ச்சுருக்கு இவற்றைப் போக்கிப் பலம் தரும். இதுபோலவே, நெருஞ்சில் விதையையும் ஊறப்போட்டுச் சாப்பிடுவது நல்லதே.

சாதாரண பசு நெய்யை உருக்கி, சுமார் 10 மி.லி. உணவுக்கு முன்பு ஒரு தரம், உணவு செரித்தவுடன் அதே அளவில் ஒரு தரமும் சாப்பிடுவதால், பல சிறுநீரக உபாதைகளை நாம் குணப்படுத்தலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வஸ்தியாமயாந்தகம் கிருதம் எனும் நெய் மருந்தை இதுபோல உபயோகிப்பதும் சிறந்தது. பிருகத்யாதி கஷாயம் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, சிறுநீர் நன்றாக இறங்கும். அதன் பாதையைச் சுத்தமாக்கும்.

தசமூலஹரீதகீ எனும் லேகியம் காலை, இரவு உணவுக்கு முன் 10 கிராம் வரை நக்கிச் சாப்பிடலாம். இப்படி பல மருந்துகள் இருந்தாலும், எதை எப்படிச் சாப்பிட்டால் சரியாகும் என்பதை ஓர் ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே கூறமுடியும் என்பதால், நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு, விரைவில் குணமடைய முயற்சி செய்யவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com