விளம்பரம் எழுதுபவர் மக்களைப்படிக்க வேண்டும்!
""நான் இதுவரை 800 விளம்பரப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன்.


தீபாவளி வரப் போகிறது.
ஆனால் அதற்குள் தீபாவளி பரபரப்பு வந்துவிட்டது.
காரணம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளின் விளம்பரங்கள். இந்த விளம்பரங்களில் பெரும்பான்மையானவற்றை எழுதியவர் எந்தவித விளம்பரமுமில்லாமல் தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் தியாரூ.
கடந்த 18 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கும் அவரின் வெற்றிக்கான காரணங்கள் எவை? என்று கேட்டோம்.
""நான் இதுவரை 800 விளம்பரப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நிறைய பத்திரிகை விளம்பரங்களும் எழுதியிருக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம், நான் ஒரு படைப்பாளியாகவும் இருப்பதுதான்.
துணிக்கடை விளம்பரம், வாகனங்களுக்கான விளம்பரம், நகைக்கடை விளம்பரம், நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்கள், கல்வி நிறுவனங்களின் விளம்பரம் என அனைத்து வகை விளம்பரங்களையும் நான் எழுதியிருக்கிறேன்.
ஒரு கவிதையை ஒரு வாசகன் ரசிக்காமல் போகலாம். ஆனால் ஒரு விளம்பரம் மக்கள் மனதைத் தொடாமற் போகக் கூடாது. எனவே விளம்பரம் எழுதும் நான், மக்களைப் படிக்க வேண்டியிருக்கிறது.
கார் சிக்னலில் நிற்கும்போது கார் கண்ணாடியைத் துடைக்க வரும் இளைஞன், காரைத் துடைக்கும் துணி விற்கும் பெண் என்று யாராக இருந்தாலும் அவர்களுடன் பேசுவேன். அவர்களுடைய ரசனை, அவர்கள் பேசும் மொழி எல்லாம் என் மனதில் பதிந்துவிடும். சாலையில் செல்லும்போது நான் காணும் காட்சிகள் எனக்குள் பதிவாகிவிடுகின்றன.
ஏழை, பணக்காரர், அதிகார வர்க்கம், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எல்லாத் தரப்பு மக்களின் விருப்பம், ரசனை ஆகியவை தெரிந்தால்தான் அவர்களுடைய மனதைத் தொடும் விளம்பரங்களை எழுத முடியும். சாதாரண சோப்பை வாங்கும் ஏழை மனிதனுக்குத் தேவை என்னவென்றால், அந்தச் சோப் விலை குறைவாக இருக்க வேண்டும். நீண்ட நாளைக்குப் பயன்தர வேண்டும். விலை அதிகமுள்ள குளிக்கும் சோப் வாங்கும் மேல்தட்டு மக்களுக்கு அந்த சோப்பைப் பயன்படுத்தினால் அழகு கூட வேண்டும். வாசனை கமழ வேண்டும். இப்படி எந்தப் பொருளை யார் பயன்படுத்துகிறார்கள்? அவர்களுடைய மனோபாவம் என்ன? அவர்கள் பயன்படுத்தும் மொழி எது? என எல்லாவற்றையும் நன்கு தெரிந்திருந்தால்தான் இந்த விளம்பரத்துறையில் ஒருவர் பிரகாசிக்க முடியும்.
விளம்பரம் செய்யப்படுவதே போட்டிகள் நிறைந்த உலகில் ஒரு தயாரிப்பைத் தனியாக எடுத்துக்காட்டத்தான். அந்தப் பொருளுக்குப் போட்டியாக உள்ள பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொண்டுதான் விளம்பரத்தை எழுதுவேன். இதில் என்ன ஆச்சரியம் என்றால், ஒரு பொருளுக்கும், அதன் போட்டி பொருளுக்கும் விளம்பரம் எழுதுவது நான் ஒருவனே என்பதுதான்.
நான் எழுதக் கூடிய விளம்பரங்கள் மிகவும் சுருக்கமாக இருக்கும். ஒரே வரியில் ஒரு நிறுவனத்தைப் பற்றி மக்கள் மனதில் பதியும்படி எழுத வேண்டும். 300 பக்கங்களில் சொல்லப்படுகிற விஷயங்களை 30 வினாடிகளில் விளம்பரத்தில் சொல்ல வேண்டும். தேவையில்லாமல் ஒரு சொல் கூட விளம்பரத்தில் இருக்கக் கூடாது. எனவே விளம்பரத்தை எழுதும்போது சிற்பத்தைச் செதுக்கும் மனநிலையோடுதான் எழுதுவேன்.
அடுத்த மாதம் ஒரே மேடையில் நான் எழுதிய 7 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன'' என்கிறார் பெருமையாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...