தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாகாவரம் பெற்ற மர்லின்

காதலைப் பற்றிய கற்பனை கதைகள் சாகாவரம் பெற்றவை அல்லது பிரச்னைகளை கிளப்புபவை. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் மர்லின் மன்றோவின் மரணம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமாக சிஐஏ மட்டுமின்ற

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:26 am

அ. குமார்

காதலைப் பற்றிய கற்பனை கதைகள் சாகாவரம் பெற்றவை அல்லது பிரச்னைகளை கிளப்புபவை.

ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் மர்லின் மன்றோவின் மரணம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமாக சிஐஏ மட்டுமின்றி மாஃபியா, அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி என பலரது பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

ஆண்டுதோறும் அவரது நினைவு தினத்தன்று

அவரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்த வண்ணம்

உள்ளது. நடிகைகளிலேயே அதிக அளவில் எழுதப்பட்டு விற்பனை ஆவது மர்லின் மன்றோவைப் பற்றிய புத்தகங்கள்தாம். இவரது இயற்பெயர் நார்மா ஜீன் பெக்கர்.

பெரும்பாலான புத்தகங்கள் 1942-ம் ஆண்டில் மர்லின் தன் பதினாறாவது வயதில் ஜேம்ஸ் டாகெர்ட்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவத்திலிருந்துதான் துவங்குகின்றன. ஜேம்ஸ் கடற்படையில் சேர, மர்லின் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் மர்லினுக்கு சமைக்கவோ, பொது இடங்களில் சகஜமாக பழகவோ தெரியாது என்பதை புரிந்து கொண்ட ஜேம்ஸ், ஒரு கணவனாக இருப்பதைவிட, அவரின் பாதுகாப்புக்காக ஒரு தந்தையாக இருப்பது மேல் என்று கருதினாராம்.

ஜேம்ஸ் கடற்படையில் சேர்ந்தபோது, மர்லின் பாராசூட் தயாரிப்பு நிறுவனமொன்றில் சேர்ந்து வேலை செய்தார். நாட்டுப்பற்றை விளக்க ஒரு துண்டுப்படம் எடுக்க கவர்ச்சியான பெண்ணைத் தேடியபோது காமிராமேன் கண்களில் மர்லின் தெரிந்தார்.

கடற்படை பணியிலிருந்து ஜேம்ஸ் திரும்பி வந்தபோது கணவனா? மாடலிங்கா? என்ற பிரச்னை எழுந்தது. மர்லின் ஜேம்ûஸ விவாகரத்து செய்தார். மர்லின் மன்றோவின் முதல் திரைப்படம் "தி ஹாஸ்பட் ஜங்கிஸ்' வெளிவந்தபோது அனைவரது பார்வையும் அவர் மீது திரும்பியது. பிரபல தயாரிப்பாளர் எலியா கஸன், மர்லின் மீது அன்பு செலுத்தினாலும், ""மர்லின் எளிமையானவர்; ஆனால் மனைவியாக இருக்க ஏற்றவர் இல்லை'' என்று சொன்னார்.

மர்லின் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் உலகப் புகழ்பெற்ற பேஸ் பால் வீரர் ஜோ டி மாசியோ அவருக்கு அறிமுகமானார். "நயாகரா' படத்தில் நடிப்பதற்காக மர்லின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த 37 வயதான ஜோவும் உடன் சென்றிருந்தார். இரண்டாண்டுகள் இருவரும் நெருங்கி பழகிய பின்னரே ஜோவைத் திருமணம் செய்து கொள்ள மர்லின் சம்மதித்தார். 15 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் 200 புகைப்படக்காரர்கள் சூழ இவர்கள் திருமணம் நடந்தது. தேனிலவுக்கு போகும் வழியில் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு ஜோ ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் அனைவரும் மர்லினிடம் கேள்வி கேட்டார்களே தவிர, ஜோவை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

துவக்கத்திலிருந்தே இத்திருமணம் தவறாக கருதப்பட்டது. ஜோவின் பொறாமைக் குணம் பிரச்னைக்கு காரணமாயிற்று. அந்த நேரத்தில் வெளிவந்த மர்லினின் "தி ùஸவன் இயர் இட்ச்' படத்தில் காற்றில் அவரது கவுன் பறக்கும் காட்சி ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் வெளிவந்த இரண்டாவது வாரத்தில் இருவருமே விவாகரத்து பெற்றனர். விரைவிலேயே திரைக்கதாசிரியர், எழுத்தாளர் ஆர்தர் மில்லரை சந்தித்த மர்லின் காலம் தாழ்த்தாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். தனக்கு ஓர் ஆதரவு தேவை என்பதற்காக திருமணம் செய்து கொண்டாரே தவிர, குடும்பம் நடத்தக்கூடிய பக்குவத்தில் அவர் இல்லை.

எடை பெருக்கம், குடிப்பழக்கம், உடல்நலக் குறைவு போன்றவை மர்லினின் வாழ்க்கையை நிலை குலைய வைத்தது. இரண்டாண்டுகளுக்குப்  பின்னர் ஞாபக மறதி, உற்சாகமின்மை, போதை மருந்து, தூக்க மாத்திரை பழக்கம் போன்றவை மேலும் அவரது வாழ்க்கையை பாதித்தது. நிலையற்ற மணவாழ்க்கையோடு நீண்ட காலமாக எதிர்பார்த்த குழந்தை கருவிலேயே கலைந்தது போன்ற நிகழ்ச்சி அவரை மேலும் பாதித்தது.

அவரது டாக்டர் ரால்ப் கிரீன்சன், அதிக சக்தி கொண்ட 300 மி.கி. நெம்புடால் என்ற மாத்திரையை உட்கொள்ள அனுமதித்தாராம். இது இருவாரங்களுக்கொரு முறை 100.மி.கி. அளவு மட்டுமே உட்கொள்ளலாமென்று மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்ட அளவாகும். மீண்டும் விவாகரத்து, படங்களும் தோல்வி, புதிய படங்களும் இல்லை என்ற நிலையில் 1962-ம் ஆண்டு திடீரென அவரது வாழ்க்கையில் புதிய மனிதரொருவர் இடம் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் கென்னடிதான் அவர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்போதுதான் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவர்களிருவரும் அடிக்கடி சந்தித்திருந்தாலும் அவர்களுடைய உறவு அளவுக்கு மீறி வர்ணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போன்று மர்லின் மரணத்திற்குப் பின்னர் ஜான் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடியையும் இணைத்து வதந்திகள் பரவின. ஒவ்வொரு முறையும் மக்கள் சூழ்ந்திருந்த சந்தர்ப்பங்களில்தான் இவர்களுடைய சந்திப்புகள் நிகழ்ந்தன.

மர்லின் நடித்த கடைசிப்படம் "சம்திங் காட் டு கிவ்'. இந்தப் படத்தில் அவர் உடல் நலமின்றி இருந்தார். கென்னடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்ட இவரை ஃபாக்ஸ் ஸ்டூடியோ தடுத்தது. அதையும் மீறி இவர் புறப்பட்டுச் சென்றார். மெடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மர்லின்தான் பிரதான விருந்தினராகக் கருதப்பட்டார்.

மர்லினின் 36-வது பிறந்தநாளின்போது முன்னாள் கணவர் ஜோ டி மாக்சியோ மீண்டும் அவருடன் இணைந்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர்களிருவரும் இணைந்தபோது முன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பதாகவே உணர்ந்தனர். வாழ்க்கையில் பொறுமையும், முதிர்வும், ஏற்பட்டிருப்பதை உணர்ந்த மர்லின், மீண்டும் ஜோவைத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்.

1962-ம் ஆண்டு ஜூலை மாத இறுதி வாரத்தில் ஒருநாள் மர்லின் வீட்டிற்கு பிரபல பாடகர் பிராங்க் சினட்ராவும், கென்னடியின் மைத்துனரான பீட்டர் லாஃபோர்டும் விருந்தினராகச் சென்றனர். அப்போது என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. அளவுக்கு மீறி நெம்புடால் மாத்திரையை மர்லின் உட்கொண்டதாகவும், அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனாலும் ஜோவுடன் மர்லின் திருமண வரவேற்பு குறித்து திட்டமிட்டதாகவே சொல்லப்பட்டது.

1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி விடியற்காலை படுக்கையில் மர்லின் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விடியற்காலை 4.25 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டபோது வீட்டு வேலைக்காரி வாஷிங்மெஷினை இயக்கிக் கொண்டிருந்தாராம். மர்லின் உடல்மீது எவ்வித காயங்களும் இல்லை. தற்கொலைக்கான கடிதமும் இல்லை. டாக்டர்களின் கருத்துக்கு மாறாக தற்கொலை என முடிவெடுக்கப்பட்டது.

அதிக அளவில் தூக்க மாத்திரையை உட்கொண்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் உடலில் விஷத்தை செலுத்திய அறிகுறி தெரிந்தது. போஸ்ட் மார்ட்டத்தில் உடல் உறுப்புகள் நிறம் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது டாக்டர் ரால்ஃப் கிரீன்சன் மர்லினுடன் இருந்துள்ளார். விடியற் காலையில் அவரது வேலைக்காரி வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்க வேண்டிய அவசியமென்ன என்பதும் மர்மமாகவே இருந்தது. சாட்சியத்தை மறைக்க துணிகளை துவைத்தாரா? டாக்டருக்கும் வேலைக்காரிக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. புதியதொரு வாழ்க்கையை துவங்க நினைத்திருந்த நேரத்தில் நிகழ்ந்த மர்லினின் மரணம், ஹாலிவுட் நடிகைகளிலேயே மறக்க முடியாத சம்பவமாக இன்னும் உலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.