தனிமைப் பெண்மணி ரேகா
எல்லா நாட்களுமே அழகானவை''- என்று சொன்னாலும் ரேகாவை பொறுத்தவரை தனிமைதான் அவருக்கு பிடித்தமானதாகும். மனநிலை பாதிக்கப்பட்ட நடிகையாகவே பலரும் இவரை கருதுவதுண்டு.


""எல்லா நாட்களுமே அழகானவை''- என்று சொன்னாலும் ரேகாவை பொறுத்தவரை தனிமைதான் அவருக்கு பிடித்தமானதாகும். மனநிலை பாதிக்கப்பட்ட நடிகையாகவே பலரும் இவரை கருதுவதுண்டு. ""இதற்கு மீடியாக்கள்தான் காரணம். என்னைப் பற்றி அவர்கள் தவறாக எழுதுவதால் மக்களும் என்னைத் தவறாகவே நினைக்கிறார்கள்'' என்கிறார் ரேகா.
ரேகாவின் பங்களா மும்பை பந்த்ரா பான்ட் ஸ்டாண்டில் சல்மான்கான் வீட்டிற்கும் ஷாருக்கான் பங்களாவுக்கும் நடுவில் உள்ளது. அந்த நடிகர்களை வேண்டுமானால் சாதாரணமாகவே அவர்கள் வீட்டு மாடியில் ரசிகர்கள் தரிசிக்கலாம். ஆனால் ரேகாவின் பங்களாவில் அத்தனை சுலபமாக நுழைந்துவிட முடியாது. எப்போதும் வெளிக்கதவுகள் மூடியே கிடக்கும். ""என்னுடைய வீடு திறந்த வீடு அல்ல. எப்போது யாரை அழைக்க வேண்டுமென்று எனக்குத் தெரியும். நான் தனிமையில் வாழ்பவள். சமூகத்தில் நான் ஒரு நடிகை. பாதுகாப்பு பிரச்னைகளும் உண்டு. உண்மையில் எனக்கு கூட்டத்தைக் கண்டால் பிடிக்காது. நினைத்த நேரத்தில் கண்ட இடங்களுக்குப் போக மாட்டேன். உலகம் சுற்றுபவளும் அல்ல. வீட்டிற்குள் இருக்கும்போது சங்கீதம் கேட்பது பிடிக்கும். எனக்குத் தேவையானவற்றை நானே சமைத்துக் கொள்வேன். நேரத்தோடு தூங்கச் செல்வேன். யாருடனாவது வெளிநாட்டிற்குச் சென்றேன் என்றோ, இரவு நேரத்தில் கண்டபடி நடனமாடுகிறேன் என்றோ, மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறேன் என்றோ யாரும் என்னை சுட்டிக் காட்ட முடியாது''
""நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இதை யாரும் எனக்கு கற்றுத் தரவில்லை. 13-வது வயதிலேயே என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். என்னுடைய சுதந்திரத்தை சக்தி வாய்ந்த பரிசாக எனக்கு நானே ஏற்றுக்கொண்டேன். என்னைத் தவிர வேறு யாரையும் நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மற்றவர்களைப் பற்றி விமர்சிக்கவும் எனக்கு உரிமையில்லை. என்னைத் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை''என்கிறார் ரேகா.
பதின்மூன்று வயதில் சென்னை சர்ச் பார்க் கான்வெட்டிலிருந்து அம்மாவும், நடிகையுமான புஷ்பவல்லியுடன் மும்பை வந்த ரேகா, தன் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ""என்னுடைய தந்தை
ஜெமினி கணேசன் அவரது வாழ்நாளில் ஒருமுறை கூட என்னுடன் பேசியதில்லை. பதின்மூன்று வயதில் எனக்கென்ன தெரியும்? தொடர்ந்து துன்புறுத்தப்பட்டேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேட்டபோது என் அம்மா சொன்னார்: "எல்லாரும் உன்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்காதே. இதெல்லாம் உன்னுடைய விதி. யாரிடமும் பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் வாழ கற்றுக்கொள்'.
1966-ம் ஆண்டு "ரங்குலா ராட்டனம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் "பானுரேகா' என்றழைக்கப்பட்ட ரேகாவின் திரை வாழ்க்கை தொடங்கியது. 1970-ம் ஆண்டில் வெளியான இவரது முதல் இந்திப்படமான "சவான் பதான்' ஒரே நாளில் இவரை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இருந்தாலும் திரையுலக ஆரம்ப காலத்தில் எழுந்த பிரச்னைகள் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்து சாப்பிட்ட உப்புமாவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் கூறப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
1976-ம் ஆண்டு அமிதாப்பச்சன் நடித்த "தோ அஞ்சானே' படத்தில் துணை நடிகையாக நடித்த ரேகாவுக்கு அப்படத்தின் மூலம் நிலையான பெயர் கிடைத்தது. 1978-ல் அமிதாப்புடன் "முக்காதர் கா சிக்கந்தர்' படத்தில் ஜோடியாக நடித்தபோது பாலிவுட்டின் வெற்றி ஜோடியாக கருதப்பட்டார். கூடவே இவரது நெருங்கிய நட்பு பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அமிதாப், ஜெயபாதுரியை திருமணம் செய்து கொண்ட பிறகும், இருவரும் ஒன்றாகப் பழகியது பிரச்னையை கிளப்பவே, 1981-ல் அமிதாப்- ரேகா உறவுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ரேகாவின் திரை வாழ்க்கையும் மாறியது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
ரேகா தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அனைத்துமே விமர்சனத்துக்குள்ளாயின. விலைமகள், மனவளர்ச்சி குன்றிய பெண் போன்ற பாத்திரங்கள் அவரை தேசிய விருது பெறுமளவுக்கு உயர்த்தின. தனக்கென்று தனி பாணியில் ஏறக்குறைய 180 படங்களில் நடித்து புகழ் பெற்ற ரேகா, 1990-ஆம் ஆண்டு முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சேர்ந்து வாழவில்லை. ஓராண்டுக்குள் முகேஷ் தற்கொலை செய்து கொண்டபோது, ரேகா அமெரிக்காவில் இருந்தார். மீண்டும் 1993-ம் ஆண்டில் வினோத் மெஹ்ராவை திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்தி கிளம்பியபோது ரேகா அதை மறுத்தார்.
இது குறித்து ரேகா கூறுகையில், ""இப்போது என்னிடம் எந்தவிதமான கேள்விகளும் இல்லை. என்னுடைய அப்பா ஏன் என்னுடன் தங்கவில்லை? மீண்டும் ஏன் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை? எனக்கென்று ஏன் குழந்தைகள் இல்லை? ஏன் வேறு யாரும் என் வாழ்க்கையில் பங்கு பெறவில்லை? என்பது போன்ற கேள்விகள் இப்போது எதுவுமில்லை. ஏனெனில் எனக்கென்று எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை. ஐம்பத்தெட்டாவது வயதில் காலடி வைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை ரொம்ப சிம்பிள்!'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...