அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்!
ஜூன் 11, 1963. தெற்கு வியட்நாம் சைகோனில் காலை 11 மணியளவில் ஒரு வயதான புத்ததுறவி திச் க்வாங் டக், நகரின் இரண்டு பாதைகள் சந்திக்கும் இடத்தில் இரண்டு சீடர்களுடன் காரில் வந்திறங்கினார்.


ஜூன் 11, 1963. தெற்கு வியட்நாம் சைகோனில் காலை 11 மணியளவில் ஒரு வயதான புத்ததுறவி திச் க்வாங் டக், நகரின் இரண்டு பாதைகள் சந்திக்கும் இடத்தில் இரண்டு சீடர்களுடன் காரில் வந்திறங்கினார். ஒரு சீடர் பரபரப்பான அந்தப் பாதையில் தரையில் ஒரு சிறிய தலையணையை வைக்க அதன் மேல் அந்த 66 வயது புத்தத் துறவி சப்பணமிட்டு தியான நிலையில் அமர்ந்தார். அவருடன் வந்த சீடர்கள் மீண்டும் காருக்குள் சென்று பிளாஸ்டிக் கேன் நிறைய இருந்த பெட்ரோலைக் கொண்டு வந்து புத்த துறவியின் மீது ஊற்றினார்கள். அவரைச் சுற்றி ஏராளமான புத்தத் துறவிகளும், பெண் துறவிகளும் சூழ்ந்திருக்க, சீடனொருவன் தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி, துறவியின் மீது வீச, நொடியில் அவரது உடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. வழியில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அந்தப் புத்த துறவி எவ்வித அலறலையும் வெளிப்படுத்தாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
இறுதியில் அவர் உடல் முழுவதுமாக கருகி உயிர் பிரிந்தவுடன் மஞ்சள் நிறப் போர்வையால் போர்த்தப்பட்டு தயாராக எடுத்து வந்த சவப்பெட்டிக்குள் கிடத்தி புத்தர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. ஐந்து நாட்கள் கிழித்து அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக பூலாம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆச்சரியப்படும் வகையில் அவரது இதயம் மட்டும் கருகி சாம்பலாகாமல் அப்படியே இருந்ததால் மீண்டும் அவரது கருகிய உடல் முறைப்படி எரியூட்டப்பட்டது. தெற்கு வியட்நாமில் ஜனாதிபதி நிகோ டின்டிம் ஆட்சியில் புத்தமதத்திற்கும் துறவிகளுக்கும் எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளைக் கண்டித்து க்வாங் டக் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தீக்குளிப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், ""நான் கண்களை மூடுவதற்கு முன் என் பார்வையை புத்தர் மீது செலுத்துகிறேன். இந்நாட்டு மக்களுக்கு மத அடிப்படையில் சம உரிமை அளிக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தாய் நாட்டின் ஒற்றுமையும் வலிமையும் மேம்படும். புத்தமதத்தைக் காப்பாற்ற எங்கள் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது தீக்குளிப்பைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் மேலும் ஐந்து புத்த துறவிகள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 1963 - ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஜனாதிபதி டிம் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, மறுநாளே கொல்லப்பட்டார்.
சம்பவதினத்தன்று அமெரிக்காவில் உள்ள "அசோசியேட்டட் பிரஸ்' பத்திரிகை புகைப்பட நிருபராக பணியாற்றி வந்த மால்கம் வைல்ட் பிரவுன், புத்த துறவி தீக்குளித்ததைத் தன்னிடமிருந்த ஒரு சாதாரண ஜப்பான் தயாரிப்புக் காமிரா மூலமாகப் புகைப்படமெடுத்து பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது தெற்கு வியட்நாமில் மேற்கத்திய நாடுகளின் பத்திரிகை நிருபராக இவர் ஒருவர்தான் இருந்தார். இந்தப் புகைப்படம் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியான போது உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்த ஆண்டின் "மிகச்சிறந்த உலக செய்தி புகைப்படம்' என தெற்கு வியட்நாம் அரசே இதற்கு தலைப்பிட்டது. ""இதுவரை எந்தவொரு செய்தி புகைப்படமும் இந்த அளவுக்கு மத உணர்வை வெளிப்படுத்தியதில்லை'' என்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடியே பாராட்டினார்.
ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் பத்திரிகை வரலாற்றில் இந்தத் தீக்குளிப்பு புகைப்படம் நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை வைத்து சீனாவும் வடக்கு வியட்நாமும் வேறு வகையில் பிரச்சாரம் செய்தன. ""தென்வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புத்த துறவிகள் போராட்டம்'' என திசை திருப்பின. புகைப்படமெடுத்த மால்கம் பிரவுன் இது குறித்து கூறியபோது, ""ஒரு வயதான துறவி தீக்குளிப்பதைப் பார்த்தபோது முதலில் அவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றினாலும், சுற்றிலும் இருந்த புத்த துறவிகள், பெண் துறவிகள் நிச்சயம் என்னை அனுமதிக்கமாட்டார்கள் என்றே தோன்றியது. அதே சமயம் தங்கள் மதத்தைக் காப்பாற்ற அவர்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதை ஒரு நிருபர் என்ற முறையில் உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமையும் எனக்கிருந்ததால் மனதை திடப்படுத்திக் கொண்டு படமெடுத்தேன். அரசுக்கு எதிராக மக்கள் பல வழிகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதில் இதுவும் ஒருவகை என்ற கருத்தில் இதை செய்தி புகைப்படமாக வெளியிட்டேன்'' என்றாராம்.
அவருக்கு உண்மையில் புகைப்படமெடுப்பதில் ஆர்வமில்லை. கொரியா யுத்தத்தின் போது தான் அவருக்கு ஜர்னலிசத்திலும் புகைப்படமெடுப்பதிலும் ஆர்வம் எற்பட்டதாம். புலிட்சர் விருது உள்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்ற இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அவரது 81வது வயதில் காலமானார். 1960ஆம் ஆண்டுகளில் நடந்த யுத்தங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில், மனித உணர்வை வெளிப்படுத்தும் வகையில் புத்த
துறவி தீக்குளித்த புகைப்படம் வெளியானது புகைப்பட ஜர்னலிசத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தது எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...