புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஐந்து பெண்டாட்டிக்காரர்!

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி. அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு. அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா...

News image
Updated On :28 டிசம்பர் 2013, 7:24 am

ந. ஜீவா

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி. அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு. அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்... மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா? என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா?

"ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்... வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.

அவரின் இந்த "பலதுணைக் குடும்பம்' பற்றி இப்போது உலகமெங்கும் தெரிய வந்தது,  டிஎல்சி தொலைக்காட்சியால்தான். இந்தத் தொலைக்காட்சி வரும் மார்ச் மாதத்திலிருந்து "எனது ஐந்து மனைவிகளும் 24 குழந்தைகளும்' என்ற தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பப் போவதாக அறிவித்தது. அதன் முன்னோட்டமாக, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மணி நேர "முன்னோட்ட நிகழ்ச்சி'யை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சி பிராடி வில்லியம்ஸ் குடும்பத்தைப் பற்றித்தான். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு உலகமெங்கும் இருந்து வந்து குவிந்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது டிஎல்சி தொலைக்காட்சி.

பிராடி வில்லியம்ஸ் தனது 16 வயது வரை பலதுணைக் குடும்பம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத சின்னப் பையனாகவேதான் இருந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான மார்மன் பிரிவைச் சேர்ந்தது அவர்களுடைய குடும்பம். ஒழுக்கம், நெறிமுறைகள் போன்றவற்றைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் மதப் பிரிவு அது. அந்தப் பின்னணியில் வளர்ந்த அவர்தான் ஐந்து பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை  வில்லியம்ஸ் எப்படி சமாளிக்கிறார்? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில் புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர்.

முதல் மனைவி பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை. குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை. கவலைப்படவுமில்லை. அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு எடுப்பவர். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள் உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ்.

ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். ரோஸ்மேரியும் வில்லியம்ûஸப் போலவே குடும்பக் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் படிப்பில் அவருக்கு நிறைய ஆர்வம். அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதற்கு உதவித் தொகை அவருக்குக் கிடைத்ததும், படிக்கக் கிளம்பிவிட்டார். இசையில் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார்.

நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  15 ஆண்டுகளுக்கு முன்பு  வில்லியம்ûஸக் கண்டதும் காதல் கொண்டுவிட்டார் நானி. பிறகென்ன? வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி 5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத் தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.

இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா. மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின் 5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்துவிட்டன.

இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால் சுமக்க முடிகிறது.

எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய ஒன்று.

""எனது குழந்தைகளுக்கு நான் ஒருத்தி மட்டும் அம்மா அல்ல. என்னைத் தவிர நான்கு அம்மாக்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களும் என் குழந்தைகளின் மீது அன்பு செலுத்துவார்கள்'' என்கிறார் ஐந்தாவது மனைவி ரோன்டா. இதே மனநிலையுடன் ஐந்து பேரும் இருப்பதால் பிரச்னைகள் எழுவதில்லை.

ஐந்து மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது சிரமமாக இல்லையா? என்று வில்லியம்ûஸக் கேட்டால், ""எல்லாருடைய தேவைகள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், பயங்கள் எல்லாவற்றையும் சமாளித்து, பாலன்ஸ் பண்ணி வாழப் பழகிவிட்டேன். அதனால் பிரச்னை எதுவுமில்லை'' என்கிறார்.

""பெண்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்தக் கூடாது. எனது மனைவியரின் பல்வேறு தேவைகளைச் சமமான அளவில் நிறைவேற்றிவிடுகிறேன். இந்த வீட்டில் தான் மிகவும் முக்கியமானவர் என்று ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்'' என்கிறார்.

அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு இப்படி பல மனைவிகளை அவர் திருமணம்  செய்து கொண்டதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறது. இவருடைய "பலதுணை' வாழ்க்கை முறை கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இதனால் வில்லியம்ஸ் குடும்பத்தினர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

அவருடைய சொந்தக்காரர்கள் - நண்பர்கள் -  சிலர் இப்போது பகைவர்களாகிவிட்டனர்.

ஆனாலும் வில்லியம்ஸ் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

தான் சார்ந்திருந்த மதப்பிரிவின் புறக்கணிப்பால் விரட்டப்பட்ட அவர்,  தனது குழந்தைகளுக்கு நன்னெறி காட்ட புத்தரின் கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.