வில்லும் பியானோவும்!

ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் முனைவர் தி.சுரேஷ் சிவன். மதுரை மேலமாசி வீதியில் வசித்து வரும் இவர் தமிழ், இசை இரண்டிலும்
வில்லும் பியானோவும்!
Updated on
2 min read

ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் முனைவர் தி.சுரேஷ் சிவன். மதுரை மேலமாசி வீதியில் வசித்து வரும் இவர் தமிழ், இசை இரண்டிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றதோடு, தமிழில் எம்.பில்., பட்டமும், இசையில் முனைவர் பட்டமும், கோவில் கட்டடக் கலையில் உயர் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழிசை வித்தகர், சிறந்த தேவார இசை ஆசிரியர், சிறந்த தமிழிசைப் பாடகர், கலைவளர்மணி, தெய்வத் தமிழிசை செல்வர் விருது என இவர் இசைக்காக பெற்ற விருதுகள் மொத்தம் 9.

இசைத் தமிழ் மலர்கள், சங்க இலக்கியத்தில் இசைக் குறிப்புகள், தமிழிசை ஆய்வு மாலை (6 தொகுப்புகள்) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய நற்றமிழ் மாலை மற்றும் அருந்தமிழ் மாலை தொகுப்புகள் என இவர் எழுதிய நூல்கள் மொத்தம் 10. தேவாரப் பாடல்கள், பன்னிரு திருமுறை மலர்கள் என இவர் வெளியிட்ட இசைக் குறுந்தகடுகளின் எண்ணிக்கை மொத்தம் 9.

இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, குடியரசுத் தலைவரின் செம்மொழி இசைத்தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிவன் சொல்கிறார்:

""சிறுவனாக இருந்தபோது என் அம்மாவுடன் கோவில்களுக்குச் செல்கையில், கோவில்களில் பாடும் தேவாரப் பாடல்கள் மீதும், நாதசுவர இசையின் மீதும் தணியாத தாகம் ஏற்பட்டது. 17வது வயதில் மதுரை ஜலதரங்கம் சீனிவாச ஐயங்காரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். பின்னர், மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயத்தில் கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டினை முதன்மைப் பாடமாகவும், வயலினை துணைப்பாடமாகவும் படித்து இசையில் பட்டம் பெற்றேன். நான் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் இருந்ததால், அங்கிருந்த சைவ சித்தாந்த சபையில் இலவசமாகவே தேவாரம் கற்றேன். கந்தசாமி மற்றும் முத்தையா ஓதுவார்கள்தாம் எனது குருநாதர்கள். அதன் பின்னர் தேவாரப் பாடல்களை கற்றுத் தரக்கூடிய ஆசிரியரானேன்.

குரல் வளத்துக்காக தினசரி 4 மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு இசையின் மீது மேலும் அளவு கடந்த மோகம் உண்டானது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர் முதல் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அம்புஜம் கிருஷ்ணா வரை  எழுதிய பாடல்களைப் பற்றிய இசை அரங்குகளை  இதுவரை 150-க்கும் மேற்பட்டவற்றை பக்கவாத்தியங்களையும் சேர்த்துக் கொண்டு நடத்தி இருக்கிறேன்.

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் உள்ள இசைக் கருவிகள், திருக்குறளில் உள்ள இசைக் கருவிகள் குறித்து பல்வேறு கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். இதன் முடிவு, தமிழக இசைக் கருவிகளில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் வெளிநாட்டினர் பல இசைக் கருவிகளை உருவாக்கினர் என்பதே. தமிழக இசைக்கருவிகளில் ஒன்றான வில்தான் நரம்புக்கருவியாக உருப்பெற்று, அதுவே வீணை வடிவமாகி "ஹார்ப்' என்று வெளிநாட்டினரால் அழைக்கப்படும் பியானோவாக உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே ஆய்வு செய்து "தமிழ்-ஐரோப்பிய இசைக் கருவிகள் இசைக்கும் ஆய்வுத்திட்டம்-2011' என்ற ஒரு கட்டுரையையும் எழுதி அதையும் எனக்கு விருது வழங்கிய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com