நடிகன்

ஏதோ காசில்லாம மட்டமான சரக்கைக் குடிச்சாலும், பேச்சிலே ஹை க்ளாஸாகவே இருப்பேன். ஞாபகம் வச்சுக்கோ'' என்று தள்ளாடும்
நடிகன்
Updated on
3 min read

இரவு பத்து மணி இருக்கும். காம்பவுண்டின் வாசலில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, விறுவிறுப்பான மெகா சீரியல்களோடு வாழ்ந்து கொண்டிருந்த குடும்பப் பெண்களும் ஆண்களும் மெல்ல எழுந்து வந்து, வாசல் பக்கம் எட்டிப் பார்த்தார்கள்.

காம்பவுண்டை ஒட்டி நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரனிடம், ஓர் இளைஞன் உரக்கப் பேசிக் கொண்டிருந்தான். வெளியூரிலிருந்து பயணம் செய்து வந்தவன் போல், இருந்த அவன் முதுகில் ஒரு பெரிய லக்கேஜ் துணிப்பை சாய்ந்து கொண்டிருந்தது. சிறிது தள்ளாடியபடி, உரத்த குரலில், எதிரே நிற்கும் ஆட்டோக்காரனின் காதுகளையும் தாண்டி, ஊருக்கே கேட்கும் ஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

""ஏய்... என்னை ஏமாத்தப் பாக்கிறியா? குடிகாரப் பயலை ஈஸியா ஏமாத்திடலாம்னு நெனைக்கிறியா? ஏய்... நான் எவ்வளவு குடிச்சாலும் நிதானம் தவறமாட்டேன், தெரியுமா? ஏதோ காசில்லாம மட்டமான சரக்கைக் குடிச்சாலும், பேச்சிலே ஹை க்ளாஸôகவே இருப்பேன். ஞாபகம் வச்சுக்கோ'' என்று தள்ளாடும் உடம்போடு- ஆனால் நிதானமான குரலில் கையை நீட்டி, மடக்கி, அந்த இளைஞன், ஆட்டோக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அந்தக் காம்பவுண்டுக்குள், எதிர் எதிராக இரண்டு வரிசைகளில், மூன்று மூன்று குடும்பங்கள். அந்தக் குடிகார இளைஞனுக்கும், ஆட்டோக்காரனுக்கும் இடையே நடக்கும் சண்டை, சீரியல் காட்சியைப் போல அல்லது சீரியல் காட்சியை விட சுவாரஸ்யமாக இருந்ததால், ஒவ்வொரு குடும்பமாக, வாசலை நோக்கி நகர்ந்து வந்துவிட்டார்கள்.

""ஏன் தம்பி... இப்படியெல்லாம் பேசுறே? நூறு ரூபாய்க்குச் சம்மதிச்சுதானே, இம்புட்டுத் தூரம் ஏறிக்கிட்டு வந்தே? இப்போ, பேசினபடி கூலியைக் கொடுக்காம, தகராறு பண்றியேப்பா? எல்லா ஆட்டோக்காரங்களும் பேசின கூலிக்கு மேலே கேட்டு சண்டை போடுவாங்க. ஆனா நான் பேசின கூலியைத்தானே கேக்குறேன்?'' என்று ஆட்டோக்காரன் பொறுமையாக வாதாடிக் கொண்டிருந்தான்.

 ""ஏய்... நான் தகராறு பண்ணலே... நீ கேட்டபடியே நூறு ரூபாயை அப்பவே கொடுத்திட்டேனே? அப்புறம், மறுபடியும் கேக்கிறியே? ஒரு சவாரிக்கு ரெட்டைக் கூலியா? இதென்னய்யா... அநியாயமாயிருக்கு? இந்த அநியாயத்தையெல்லாம், நாட்டிலே யாரும் தட்டிக் கேட்கமாட்டாய்ங்களா?'' என்று இந்த நாட்டின் குடிமகன், ஆதங்கத்துடன் கேட்டுத் தள்ளாடியபடியே பேசிக் கொண்டிருந்தான்.

""ஏன் தம்பி, நீ ஆட்டோவிலே ஏர்றபோது, நிதானமா, குடிக்காமத்தானே இருந்தே? இப்போ இப்படி நிதானமில்லாமப் பேசுறியே?''

""எஸ்... நான் நல்லா நிதானமாயிருந்தப்போதான் நூறு ரூபாய்... முழுசா ஒரு நூறு ரூபாய் நோட்டு குடுத்தேன். மறந்துட்டியா? நீயும் தண்ணி போட்டிருக்கியா?''

""என்ன முழுசா நூறு ரூபாய் நோட்டு கொடுத்தியா?'' என்று  கேட்ட ஆட்டோக்காரன், சட்டென்று சட்டைப் பை, பாண்ட் பைகளில் கைவிட்டுப் பண நோட்டுகளையெல்லாம் வெளியே எடுத்துக் காட்டினான்.

""பாரு... இதிலே நூறு ரூபா நோட்டே இல்லே. எல்லாம் பத்து, இருபது ரூபாய் நோட்டுகள்... சில்லறைதான் பாரு'' என்று கைகளை அவன் முகத்தின் முன்னே நீட்டிக் காட்டினான் ஆட்டோகாரன்.

அவற்றை உற்றுப் பார்த்தபடியே இருந்த இளைஞன் சட்டென்று நிமிர்ந்தான்.

""ஏய்... என்னை ஏமாளின்னு நெனைச்சிட்டியா? வர்ற வழியிலே, நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து பெட்ரோல் போட்டுக்கிட்டியே, அதை நான் பார்க்கலேனு நெனைச்சுக்கிட்டியா? கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிருக்கேன்னு நெனைச்சிட்டே போலிருக்கு'' என்று ஒரு குடிகாரச் சிரிப்பு சிரித்தான் அவன்.

சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்த எபிúஸôடின் ஃப்ளாஷ் பேக் புரிந்து விட்டது. ஆட்டோக்காரனை எல்லாரும் முறைத்துப் பார்த்தார்கள்.

 ""ஏம்ப்பா... தம்பிதான் எல்லாத்தையும் விவரமாச் சொல்றானே? இந்தக் காலத்துப் பசங்க, கொஞ்சம் குடிகாரங்க. ஆனா ஏமாளி இல்லே. நிதானமாக இருக்கிறவங்ககிட்டே, உன்னோட ஏமாத்து வேலையை வச்சுக்கோ... போப்பா... எங்க தூக்கத்தையெல்லாம் கெடுத்துக்கிட்டு நடுராத்திரியிலே சண்டை போட்டுக்கிட்டிருக்கே.... போ... போ...'' என்று ஆட்டோக்காரனை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.

தான் எவ்வளவு பேசினாலும் அவர்கள் தனக்குச் சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டான் ஆட்டோக்காரன்:

""சரி தம்பி, நடக்காததையெல்லாம் நடந்தது மாதிரி, சொல்லிட்டே... எல்லாத்தையும் மேலே இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டிருக்கான்'' என்று தலையை நிமிர்த்தி மேலே பார்த்தபடி, பலவீனமான குரலில் முணுமுணுத்துக் கொண்டே, ஆட்டோவை ஓட்டிச் சென்றான் அவன்.

கடைசியாக அந்தக் கூட்டத்துக்குள் எட்டிப்  பார்த்த மீனா, அந்த இளைஞனைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனாள்:

""ஏன்டா ரவி, நீ எப்போ வந்தே? நீதான் ஆட்டோக்காரனோடே தகராறு பண்ணிக்கிட்டிருந்தியா?''

""ஒண்ணுமில்லேக்கா... உள்ளே வா '' என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே கடைசியாக இருந்த வீட்டை நோக்கி நடந்தான் ரவி.

""ஏன்டா பத்து நாளா எங்கேடா போயிருந்த? திடீர்னு ஆளைக் காணலை? இப்ப என் வீட்டுக்கு வர்றவன் தண்ணி போட்டுக்கிட்டு வரணுமா? எல்லாரும் என்னை வேடிக்கை பார்க்குறாங்க... நல்லவேளை... உங்க அத்தான் வெளியூர் போயிருக்காக... புள்ளைகளும் தூங்கிடுச்சுங்க... இல்லேன்னா... உன்னைப் பார்த்து எவ்வளவு சங்கடப்படுவாங்க? உனக்கு எத்தனை நாளாய் இந்தக் குடிப்பழக்கம்?'' என்று கோபமாகப் பேசியபடி, வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அவனைக் கூட்டி வந்தாள் அக்கா.

ரவி கடகடவென்று சிரித்தான்.

""ஏக்கா... நான் குடிச்சிருக்கேன்னு நீயும் நினைச்சிட்டியா? இல்லேக்கா... குடிகாரன் மாதிரி நடிச்சேன்'' என்று தம்பி சொன்னதும், திகைத்துப் போனாள் அவள்.

""என்ன நடிச்சியா?''

""ஆமாக்கா... எனக்கு இப்ப வேலை கிடைக்கிறதுக்கு  இந்த நடிப்புதான் கை கொடுத்துச்சு. பத்துநாளைக்கு முன்னால... நம்ம ஊரில் சினிமா ஷூட்டிங் நடந்துச்சில்லே... அப்ப கூட்டத்தில் நின்ன நான் குருடனாட்டம் நடிச்சு, கேமரா ஃபீல்டுக்குள் நுழைஞ்சிட்டேன். எல்லாரும் என்னை அடிச்சு விரட்ட ஓடி வந்தாங்க. நான் தடுமாறித் தவிப்பதைப் பார்த்த டைரக்டர் பரிதாபப்பட்டு என் கையைப் பிடிச்சுக்கிட்டார். நான் அவரிடம் நான் குருடனில்லே... குருடனாய் நடிச்சேன்னு சொன்னேன். என் நடிப்புத் திறமையைப் பார்த்த டைரக்டர் அந்த ஸ்பாட்டிலேயே எனக்கு ஒரு ரோல் குடுத்து நடிக்க வைத்தார். தொடர்ந்து மற்ற படங்களில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கொடுக்குறேன். சென்னைக்கு வான்னார். போனேன். பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்தார்'' என்றவன் சட்டென்று பதறி... ஐயோ என் ஹேண்ட் பேக் எங்கே காணோம்?'' என்று அலறினான்.

""நீ வர்றப்போ தோளிலே இந்த லக்கேஜ் பேக் மட்டும்தானே இருந்திச்சு?'' என்றாள் மீனா.

""ஐயையோ அக்கா.. பணம் வச்சிருந்த ஹேண்ட் பேக்கை ஆட்டோவிலேயே விட்டுட்டேனே? இப்போ அந்த ஆட்டோவை எங்கே போய்த் தேடுறது?'' என்று கதறினான் ரவி. அவனது நெஞ்சு படபடவென்று துடித்தது.

""அந்த ஆட்டோ நம்பர் தெரியுமா?''

""தெரியாதே அக்கா'' என்று பதறினான். உடம்பெல்லாம் நிஜமாகவே இப்போது தள்ளாடியது.

""சரி போ... நடிப்பிலே வந்தது... நடிப்பாலேயே போயிட்டுது... வாசலிலே எங்களுக்கெல்லாம் நிஜமாகத் தெரிஞ்சது. மேலே இருந்து பார்த்துக்கிட்டிருந்தவனுக்கு நடிப்புனு தெரிஞ்சிருச்சு. அதுதான் தண்டனை கொடுத்துட்டான் அவன். ரவி... இனிமேலாவது நிஜ வாழ்க்கையில் நடிக்காதே... ஓ.கே. கை கழுவிவிட்டு வா... சாப்பிடலாம். தோசை சுட்டுத் தர்றேன்'' என்று சமையற்கட்டுப் பக்கம் திரும்பினாள் அக்கா.

அப்போது வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. சட்டென்று வெளியே ஓடி வந்தான் ரவி.

ஆட்டோவிலிருந்து இறங்கிய ஆட்டோக்காரனின் கையில் ஹேண்ட் பேக் இருந்தது.

""இந்தா தம்பி... உன்னோட ஹேண்ட் பேக். குடிவெறியிலே இதை ஆட்டோவிலே வச்சிட்டு இறங்கிட்டே. வீட்டுக்குப் போனப்பறம்தான் பார்த்தேன். பாவம், ராத்திரி பூராவும் தூங்க மாட்டியேனு உடனே கொண்டு வந்திட்டேன்'' என்று பையை அவனிடம் கொடுத்தான் ஆட்டோக்காரன்.

பரபர என்று பையைத் திறந்த ரவி, அதிலிருந்து நாலைந்து நூறு ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுத்து அவனிடம் நீட்டினான்.

""ரொம்ப தாங்கஸ் சார்... இத வாங்கிக்குங்க ''

""கூலி நூறு ரூபா மட்டும் கொடு தம்பி. நான் பிச்சைக்காரன் இல்லே. தொழிலாளி. என்னோட நூறு ரூபாய் போதும்'' என்று ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தான் ஆட்டோக்காரன்.

திகைத்துப் போன நடிகன், அந்த தொழிலாளி நின்ற இடத்தைக் குனிந்து தொட்டுக் கும்பிட்டு விட்டு, அவன் திரும்பிச் சென்ற பாதையைப் பார்த்துக் கை கூப்பியபடி நின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com