வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி

விஜயா மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியபோது,

News image
Updated On :26 ஜனவரி 2013, 10:08 am

வைரஜாதன்

23. நாடி பிடித்துப் பார்க்காத மருத்துவர்

விஜயா மருத்துவமனையில் பணியாற்றி நற்பெயர் பெற்ற மூன்று மருத்துவ நிபுணர்கள், என் தந்தையார் நல்லாசியுடன் அங்கிருந்து விலகி, அவரவர் துறைகளில் சாதனை படைத்தார்கள்.

டாக்டர் பத்ரிநாத்: விஜயா மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியபோது, அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்ற விரும்பினார். ஆனால் அவரது சேவை நம் நாட்டில்தான் தொடரவேண்டும் என விரும்பியவர்களில் என் தந்தையார் குறிப்பிடத்தக்கவர். காஞ்சி மகாசுவாமிகளுக்கு கண் சிகிச்சை செய்து அனுக்கிரகம் பெற்ற பின் அதன் பலனாக சென்னையில் என் தந்தையார் ஒத்துழைப்புடன் தொடங்கி வைக்கப்பட்ட பத்ரிநாத் அவர்களின் "சங்கர நேத்ராலயா' பல கிளைகளுடன் ஆல்போல தழைத்து இன்று உலகப் புகழ்பெற்று கண் மருத்துவத்தில் அரும் பணியாற்றி சாதனை புரிந்து வருகிறது.

டாக்டர் கே.எம். செரியன்: விஜயா மருத்துவமனை வளாகத்தில் "மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்' என்னும் மருத்துவமனையைத் தொடங்கி சிக்கலான பல இதய அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். தற்போது "ஃப்ரண்ட்லைன் ஹாஸ்பிடல்' என்னும் பிரபல இதய நோய் மருத்துவமனையை நிறுவி திறம்பட நிர்வகித்து வருகிறார்.

டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ்: விஜயா ஹெல்த் சென்டரில் எலும்பு முறிவு சம்பந்தமான ஆர்த்தோபெடிக் பிரிவில் செவ்வனே பணியாற்றிய பின், இன்று சர்வதேச புகழ்பெற்று விளங்கும் "மியாட்' மருத்துவமனையை ஏற்படுத்தி நடத்தி வருகிறார்.

இப்படி பல மருத்துவர்கள் விஜயா மருத்துவமனையில் பணியாற்றிய பின் சொந்தமாக கிளினிக், மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியை செய்து வந்தாலும் அன்று முதல் இன்றுவரை விஜயாவில் தொடர்ந்து சிறப்பாக மருத்துவப் பணியாற்றி வருகிறார் உலகப் புகழ்பெற்ற, மூத்த சிறுநீரகப் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் சி. சின்னசாமி.

விஜயாவின் அடுத்த தலைமுறை நிர்வகித்து வரும் விஜயா மருத்துவமனை குழுமத்தில், மருத்துவர் சின்னசாமி அவர்களின் புதல்வர்கள் டாக்டர் ரமேஷ், டாக்டர் ரவீந்திரன் ஆகிய இருவரும் மருத்துவப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

என் தந்தையாருடன் தமக்கேற்பட்ட அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் சி.சின்னசாமி:

""நான் தனிப்பட்ட முறையில் மருத்துவப் பணி செய்து வந்த நேரம். எனது கல்லூரி தோழர் டாக்டர் ராஜசேகர ரெட்டியின் மைத்துனர் டாக்டர் சந்துரு (நாகிரெட்டியாரின் மருமகன்) ஒருநாள் என்னிடம் நாகிரெட்டியார் வடபழனியில் மருத்துவமனை கட்டுவதாகவும் அங்கே பணியாற்ற என்னையும் வரும்படி அழைத்தார். காரணம் அப்போது சென்னையில் சிறுநீரகப் பிரிவு மருத்துவராக டாக்டர் வேணுகோபாலும் அவரையடுத்து நானும்தான் பணியாற்றி வந்தோம்.

நாகிரெட்டியாரைச் சந்தித்து, ""பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வடபழனிக்கு வர காலதாமதம் ஆகுமே... இதே மருத்துவமனையை நீங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலேயே அமைக்கலாமே?''

என்று கேட்டேன்.

""சென்னையின் வளர்ச்சி இனி மேற்கு திசை நோக்கித்தான் இருக்கும். அதுவும் தவிர வடபழனி முருகன் எனக்கும் வாழ்வு தந்த வைத்தியநாத பெருமான்... நோயாளிகளுக்கு நோயைப் போக்க நம்பிக்கையூட்டுவார்'' எனக் கூறினார்.

அவரது கூற்றுப்படி வடபழனி இன்று சென்னையின் இதயப் பகுதியாக வளர்ந்துவிட்டது. பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு வருவதற்கான காலதாமதத்தைக் கருதி, நான் அங்கிருந்து இங்கே வருவதற்குள் ஆபரேஷன் தியேட்டரில் எல்லாம் தயார் நிலையில் இருக்கும் என்று அவர் சொல்ல, ஒப்புக்கொண்டேன். சொன்னதை செயல்வடிவில் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு சிகிச்சைகள் எனத் தொடங்கி மேஜர் ஆபரேஷன் வரை செய்தேன்.

அதனால் ரெட்டியாருக்கு என் மீது அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டது. நான் விஜயா மருத்துவமனையிலேயே முழு நேரமும் பணியாற்ற விரும்பினார். அவரது விருப்பத்தை ஏற்று விஜயா மருத்துவமனை தொடங்கிய நாளில் இருந்து (1972 முதல்), தொடர்ந்து இன்று வரை அங்கேயே மருத்துவப் பணியாற்றி வருகிறேன்.

அந்நாளில் கட்டடப் பணிகள் நடந்துகொண்டே இருக்கும். நைட் ஷிப்ட் என்றால் அதிகாலை நான்கு மணி வரையில் வேலை நடக்கும். அப்போதும் ரெட்டியார் அதிகாலையில் மருத்துவமனைக்கு வருவார். முதல் ஆபரேஷன் முடிந்தவுடன் நோயாளியின் நிலைமை எப்படி இருக்கிறது? என்று கேட்டறிந்து, நோயாளி விரைவில் பூரண நலம் பெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

வெளியூர்களில் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் தம் வீட்டிலிருந்தே உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது டயாலிஸிஸ் செய்வதற்காக சென்னையில் சரியான வசதிகள் இல்லை. அந்த சிகிச்சைப் பிரிவை சென்னையிலேயே ஏற்படுத்த விரும்பி டாக்டர் ஜெயந்தி ராமராவை பம்பாயில் ஜஸ்லோக் ஆஸ்பத்திரி டாக்டர் மணியிடம் பயிற்சி பெற வைத்து வரவழைத்தார். அடுத்து டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தொடர, அதில் நானும் இணைந்து இதுவரை சுமார் 800 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன்.

ரெட்டியார், விஜயா மருத்துவமனையில் தமது அலுவல் அறையில் அமர்ந்திருந்தாலும், மருத்துவமனையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் அறிவார். அவரைச் சந்திக்க வருபவர்களை வாசல் வரையில் வந்து வழியனுப்பி வைப்பார்.

நோயாளிகள் வருத்தப்படும்படி மருத்துவர்கள் நடந்துகொண்டாலோ, அளவுக்கதிகமாக மருத்துவச் செலவை வசூலித்தாலோ, அதற்காக வருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சொல்வார். அந்த மருத்துவர் அதே மாதிரி தொடர்ந்து நடந்துகொண்டால், அவர் எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அவரை வாழ்த்தி அனுப்பிவிடுவார்.

நோயாளிகளை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என்பதுடன் அவர்களது பிரச்சினைகளை எப்படியோ அறிந்துகொள்வார். விஜயா மருத்துவமனையில் சிறப்பான மருத்துவப் பணியைத் தரவேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.

ஆபரேஷன் தியேட்டருக்கு ஏர் சர்க்குலேட்டர் ஏசியில் ஏர்பில்டர் வைத்து 100 சதவீதம் சுத்தமான காற்று வர வழிவகுத்தார். இதைச் செய்ய செலவு அதிகம் பிடிக்குமே என்றபோது பரவாயில்லை என்று சொல்லி அப்பணியை மேற்கொண்டார். தவிர அறுவை சிகிச்சைக்கான சிகிச்சை தர, பல உயர்தர மருத்துவ உபகரணங்களை தருவித்து வழங்கினார். இதில் ஒரு சிறப்பு. இதற்காக நோயாளியின் மருத்துவச் செலவைக் கூட்டவில்லை. மற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது விஜயா மருத்துவமனையில் மருத்துவச் செலவு குறைவாகவே இருக்கச் செய்தார்.

நாகிரெட்டியின் தொலைநோக்குப் பார்வை வியக்கத்தக்கது. சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் டி.ஜே. செரியன் அவர்களின் மருத்துவத் தொண்டு விஜயா மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் தங்குவதற்கு இடவசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. அவர் ரெசிடெண்ட் டாக்டராகவே விஜயா மருத்துவமனையில் பணிபுரிந்து மருத்துவ துறையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.

விஜயா மருத்துவமனை வளாகத்தில் மருத்துவத்துறை சம்பந்தமான கருத்தரங்குகள் நடைபெறும்போது, அதற்கான இடவசதி உட்பட அனைத்து தேவைகளையும் இலவசமாகவே செய்து தருவார் ரெட்டியார்.

அந்த மாதிரி நடைபெற்ற இதய சிகிச்சை மாநாட்டில் இதய சிகிச்சைப் பிரிவில் வீடியோகிராபியில் லைவ்ஆக பார்க்கும் வசதியை ஏற்படுத்தினார்.

விஜயா கார்டனில், ஒருமுறை பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர்களின் புகைப்படங்களை ஏற்கெனவே பெற்று, அவற்றை ஓவியமாகத் தீட்டி பரிசளித்தார் என்றால் அவர் மருத்துவர்கள் மீதும், மருத்துவத்துறை மீதும் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை உணரலாம்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் விஜயா மருத்துவமனையில் ஜெர்மனியில் இருந்து வந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிறுநீரக கற்களை சிறுதுளை வாயிலாக அகற்றும் சிகிச்சை, தென்னிந்தியாவில் முதல் முறையாக இரண்டே நாட்களில் வெற்றிகரமாக ஒன்பது பேருக்குச் செய்யப்பட்டது.

இம்மாதிரியான சிகிச்சையில் இன்றும் விஜயா மருத்துவமனைதான் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்று நாகிரெட்டியார் அடித்தளமிட்டுச் செயல்படுத்தியதே இதற்குக் காரணம் எனச் சொல்லலாம்.

சென்னையின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை டாக்டர் கே.எம். செரியனால் விஜயா மருத்துவமனையில்தான் செய்யப்பட்டது.

இந்திய குடியரசு முன்னாள் தலைவர்கள் வி.வி.கிரி (திருமதி கிரி), ஆர். வெங்கட்ராமன், சஞ்சீவ ரெட்டி மற்றும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, தொழிலதிபர்கள் பிர்லா, சிங்கானியா குடும்பத்தினர், ராம்கோ, சுப்பிரமணிய ராஜா, திரையுலக பிரபலங்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உட்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள் விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வி.ஐ.பி.க்களைக் காண வருபவர்கள், ரெட்டியாரைச் சந்தித்து வி.ஐ.பி.க்கள் உடல்நலம் பற்றி விசாரித்து அறிவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

சென்னையிலேயே முதன் முறையாக புறநோயாளிகள் தங்குமிடத்தில் ஏசி வசதியைச் செய்தார். அப்புறம் சென்னையில் அது பிரபலமடைந்தது.

விஜயா மருத்துவமனை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, மருத்துவ வசதியும் தந்து சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல் என்ற நற்பெயரை பெற்றது.

ரெட்டியாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் எந்த நிலையிலும் மருத்துவ உதவியை நாடி அவர்கள் வேறொரு மருத்துவமனைக்குச் செல்லமாட்டார்கள். ஒருதடவை ரெட்டியாருக்கு பல்வலி ஏற்பட்டபோது மருத்துவமனையில் ஆரம்பநிலையில் பணியாற்றி வந்த என் மகன் டாக்டர் ரவியிடம்தான் சிகிச்சை பெற்றுக் கொண்டார். அந்த அளவுக்கு தம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்துடன் நமது பாரம்பரிய ஆயுர்வேத, அக்குபஞ்சர் சிகிச்சைக்கான பிரிவையும் ஏற்படுத்தினார்.

தி.நகரில் என் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு காலையில் வந்திருந்து, சிற்றுண்டி அருந்தி, மதியம் வரை இருந்து மதிய உணவும் சாப்பிட்டு எங்களைப் பாராட்டி வாழ்த்தினார்.

விஜயா மருத்துவமனையில் பணியாற்றும் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டி மகிழ்வித்தது, என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்பது. என்னைப் பொறுத்தவரையில் நாகிரெட்டியார்  நோயாளிகளின் நாடிபிடித்துப் பார்க்காத மருத்துவர்.

இறைவன் நமக்கு வரங்களைத் தருகிறான். ஆனால், நாகிரெட்டியாருக்கு பொறுமை, ஊக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் அதிர்ஷ்டத்தையும் வரமாக அளித்தான். இவை அனைத்தும் இணைந்து அவருக்கு வெற்றியைக் குவித்தன...''

விஜயா மருத்துவமனை, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தபோது, மேலும் விரிவாக்கத்தை, மருத்துவ வசதியைத் தர விஜயா மெடிக்கல் அண்டு எஜுகேஷனல் டிரஸ்ட்ஐ நிறுவி, என் தந்தையாரும் தாயாரும் அதன் டிரஸ்டிகளாக இருந்து தொடங்கி வைத்தனர்.

குடும்ப உறுப்பினர்களாக என் சகோதரர்கள் பி. வேணுகோபால் ரெட்டி, பி. வெங்கட்ராம ரெட்டி இருவரும் டிரஸ்டிகளாகவும் என் தந்தையாரின் பிரதிநிதியாக நானும் நியமிக்கப்பட்டோம்.

நாளடைவில் உத்தம் ரெட்டி, ரமணா ரெட்டி, சந்திர மெüலி ரெட்டி ஐ.ஏ.எஸ். ஆகியோர் வெளியிலிருந்து டிரஸ்டிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உறுதுணையாக மருத்துவத்துறை நிர்வாகத்திற்கு டாக்டர் நஞ்சுண்டையாவும் நிதி நிர்வாகத்திற்கு டி. ராம்பாபுவும் பொறுப்பேற்றனர். மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளுடன் மருத்துவப் பணியும் தொடர்ந்தது...

விஜயா மருத்துவமனையின் கட்டடப் பணிகள் நடைபெற்றபோதும் அதன் வளர்ச்சிக்கும் திட்டமிட்ட எங்கள் மைத்துனர் டாக்டர் சந்துரு அவர்களின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தம் வாரிசுகள் நம் நாட்டில் மருத்துவக் கல்வி பெறவேண்டி, சென்னையில் ஒரு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினர். விஜயா மருத்துவமனையுடன் ஒரு மருத்துவக் கல்லூரியையும் ஏற்படுத்தினால் அந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியுடன் இந்திய கலாச்சாரம், பண்பாடுகளையும் அறிய முடியும் என்று விரும்பிய என் தந்தையார் அவர்களது விருப்பத்தையும் நிறைவேற்ற, பணிகளைத் தொடங்கியபோது வெளிநாட்டு வாழ் வாரிசுகளுக்கு மட்டும் என்ற நிபந்தனையை அரசு ஏற்காததினால் அந்த மருத்துவக் கல்லூரி திட்டம் கைவிடப்பட்டது.

1986ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பெருமைமிக்க தாதா சாஹேப் பால்கே விருதினை மேதகு குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனிடமிருந்து பெற்றார் (1987ல்). அதில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், தங்கத் தாமரையும் பொன்னாடையும் வழங்கப்பட்டது.

விருதினைப் பெற்றுக்கொண்டே என் தந்தையார், விழா மேடையிலேயே தமக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை தேசிய வறட்சி நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவிக்க, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஆரவாரம் செய்து பாராட்டினர்.

தேசிய விருது பற்றிய செய்தி வெளியான அந்த சமயத்தில் (29.08.1987) தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து, தமிழக அரசு துணை செயலாளர் சிவக்கொழுந்து அவர்கள் வாயிலாக என் தந்தையாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

அதில், "மத்திய அரசு உங்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்க முடிவு செய்து இருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இந்திய சினிமாத் துறையின் வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட்டிற்கும், நீங்கள் ஆற்றிய மாபெரும் பணியை நினைவுபடுத்துகிறது. இந்த சிறப்புமிக்க விருதைப் பெறும் உங்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...'

அமெரிக்காவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று சென்னை திரும்பியவுடன் என் தந்தையார் அவரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர். சொன்ன கருத்து என் தந்தையாரின் மனதில் புத்துணர்ச்சியை... புதுவேகத்தை ஏற்படுத்தியது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.