நான் சுதந்திரமான பெண்: ஸ்ருதி ஹாசன்
குழந்தை பருவத்திலிருந்தே என்னைப் பொறுத்தவரை நான் சுதந்திரமான பெண்ணாகவே கருதுகிறேன். என்னுடைய பிரச்னைகளை நானே தீர்த்துக்கொள்கிறேன்.


வெகுசீக்கிரத்தில் உணர்ச்சிவசப்பட்டாலும் மறைக்கும் மனபக்குவமுள்ள ஸ்ருதிஹாசன், ஆறு வயதிலேயே இளையராஜா இசையமைப்பில் "தேவர் மகன்' படத்தில் பாடியவர். இந்துஸ்தானி சாஸ்திரிய பாடகியான இவர் தன்னைப் பற்றி இங்கு மனம் திறக்கிறார்:
""நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். என்னுடைய அப்பா அய்யங்கார். அம்மா மராத்தி- ரஜ்புத் கலவை. எனக்கு ஐந்து வயதாகும்போது என்னுடைய தந்தையும் தாயும் திருமணம் செய்துகொள்ளும் காட்சியை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும் என்னுடைய அம்மா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தபோது முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினாராம். என்னுடைய தங்கை அக்ஷரா பிறந்தவுடன் வீட்டிலேயே அழகான சூழலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண நாளன்று நான் எதிலும் நாட்டமில்லாமல் மிகவும் அப்செட்டாகியிருந்ததாக அம்மா கூறினார்.
எங்களுக்கென்று தனி அடையாளம் ஏதும் இருக்கக் கூடாதென்று அம்மா விரும்பியதால் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது பஸ்ஸில்தான் சென்றோம்.
எனக்கு படிப்பில் அதிக ஆர்வமில்லை என்றாலும் கல்வி கற்பதில் எங்களுக்கு பள்ளிக்கூடம்தான் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டோம். நான் பிறந்தவுடனே என் அம்மா நடிப்பதை நிறுத்திவிட்டு என் அப்பாவின் திரைப்படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார். மற்ற நடிக நடிகைகளின் குழந்தைகள் யார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய விருப்பப்படி தனியாகவே வாழ்ந்தோம்.
என்னுடைய பெற்றோர்கள் பிரிந்திருக்கிறார்கள் என்பது மட்டுமே சின்னஞ்சிறு வயதில் தெரியும். அவர்களிருவரும் தனித்தனி வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்பதும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் குறுக்கிடக்கூடாது என்பதையும் அந்த இளம் வயதில் நான் புரிந்துகொண்டேன். அவர்கள் ஒன்றாக இருக்கிறார்களா? மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா என்பது குறித்து நான் கவலைப்பட்டதில்லை. சமூகத்தில் புகழ்பெற்ற தம்பதிகளின் குழந்தைகளாக இருக்கும்போது இது பிரச்னையாக தோன்றலாம். ஆனால் அது அவர்களுடைய சொந்த பிரச்னை. அதில் தலையிட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? சங்கீதத் துறையை தேர்ந்தெடுத்தேன்.
எனக்கு பதினைந்து வயதாகும்போது என்னுடை அம்மா என்னையும் அக்ஷராவையும் அழைத்துக்கொண்டு சென்னையில் தனி அபார்ட்மென்ட் ஒன்றில் குடியேறினார். அப்போது முதல் அம்மா பொருளாதாரரீதியில் சுதந்திரமாக இருந்தார். இவ்வாறாக நாங்கள் அங்கு வசித்து வந்தபோது ஒருநாள் அப்பா வந்து தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் இந்த வீட்டை அடமானம் வைக்க அனுமதிப்பீர்களா என்றும் கேட்டார்.
நாங்கள் சரியென்றோம். நாங்கள் அங்கிருந்து வெளியேறியபோது எங்களுக்கென்று ஆடம்பர பொருள்கள் ஏதும் இல்லை. இருந்தாலும் இருப்பதை வைத்துக்கொண்டு வசதியாக இருந்தோம். நானும் பொருளாதாரரீதியில் சுதந்திரமாக இருந்தேன். முதல் படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கிய வீடும் காரும் எனக்கு மனநிறைவை தந்தன.
என்னுடைய அம்மாவை பொறுத்தவரை அவர் உறுதியான பெண்மணி. இருபது ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்கத் தீர்மானித்தார். தேசிய விருது பெற்றார். நானும் இப்போது ஒரு நடிகை. என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு தாய் மட்டுமல்ல, நல்ல தோழியும் கூட. எங்களுடைய உறவு வலுவாக உள்ளது. சமையலில் மிகவும் திறமைசாலியான அவர் எனக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்.
எங்கள் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் பெற்றோர்களை அழைத்து அவர்களை வணங்கிய பின்னரே பணிகளைத் தொடங்குவேன். என் அம்மாவைப் பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண பெண்மணி. மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தன்னுடைய குழந்தைகள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் அவருக்குண்டு.
என்னுடைய தந்தையைப் பொறுத்தவரை அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். 60 வயதிலும் கடினமாக உழைப்பவர் அவர். காலையில் எழுந்தது முதல் அவருடைய சிந்தனை எல்லாமே சினிமாதான். உண்மையில் அவர் ஒரு வேடிக்கையான மனிதர்.
குழந்தை பருவத்திலிருந்தே என்னைப் பொறுத்தவரை நான் சுதந்திரமான பெண்ணாகவே கருதுகிறேன். என்னுடைய பிரச்னைகளை நானே தீர்த்துக்கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தை நான் நேசிப்பதுபோல், தனிமையில் ஒவ்வொருவரும் சுதந்திரத்தை அனுபவிப்பதுபோல் எனக்கும் ஓர் இடம் தேவை. அதனால்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர் அன்பாகவும் திறமையாகவும் பேசக் கூடியவராகவும் அழகாகவும் வாழ்க்கையை எதிர்த்துப்போராடக் கூடியவராகவும் மொத்தத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டும்.
"3' படத்தில் தனுஷுடன் நடித்தபோது தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு திறமையான நடிகர். நல்ல நண்பர். அந்த திரைப்படம் என் திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனை. தனுஷை என்னுடைய நண்பர் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். மீண்டும் அவருடன் நடிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
திரையுலகைப் பொறுத்தவரை மற்றவர்கள் எத்தனை படம் செய்கிறார்கள்? சம்பாதிக்கிறார்கள்? என்ன சொல்கிறார்கள்? என்பதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. ஒரு நீண்ட பயணத்தில் இறங்கிப் பின்னர் எனக்கென்று ஓர் இடம் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மற்றவர்கள் சொல்வதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். நமக்காக அவர்கள் நடிக்கப் போவதில்லை. நமக்காக அவர்கள் செலவழிக்கவும் போவதில்லை. நமக்கென்று தனி வழியை அமைத்துக் கொள்வோம், திறமையை வெளிப்படுத்துவோம்.''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...