எம்.ஜி.ஆரின் முதலாளி

தாம் விரும்பிய, தீர்மானித்த திட்டத்தை இரவுபகல் பாராது விடாப்பிடியாக இருந்து செயல்படுத்துவார்.
Published on
Updated on
5 min read

29. முடிவல்ல...
முடிவின் ஆரம்பம்
 
• நாகிரெட்டி நினைவுகள்
• மகன் விஸ்வம் எழுதுகிறார்

என் தந்தை ஒரு வைராக்கிய புருஷர். தாம் விரும்பிய, தீர்மானித்த திட்டத்தை இரவுபகல் பாராது விடாப்பிடியாக இருந்து செயல்படுத்துவார். இதற்கு பல எடுத்துக்காட்டுகள்... ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
 சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் "மெட்ராஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்' என்னும் மருத்துவப் பிரிவு மட்டுமே டாக்டர் சாலமன்விக்டர் தலைமையில் செயல்பட்டு வந்தது. அதுவும் விஜயா ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட, விஜயா மருத்துவமனை வளாகத்தில் இதய நோய் சிகிச்சை பிரிவு, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் டாக்டர் கே.எம். செரியனின் முயற்சியால் நிறுவப்பட்டு, அது பிரபலமானது. சென்னை முகப்பேர் பகுதியில் சொந்தமாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு, "மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்' டாக்டர் கே.எம். செரியன், அவர்தம் மருத்துவக் குழுவினருடன் 1996ஆம் ஆண்டு அங்கே மாற்றப்பட்டு, செயல்படத் தொடங்கியது...
 எனவே, விஜயா மருத்துவமனையில், ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த உலகத்தரத்துக்கு புதிய இதயநோய் சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை என் தந்தையாருக்கு ஏற்பட்டது. அவர் அதை ஒரு சவாலாகவே ஏற்று, செயல்படுத்த முனைந்தார்.
 சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைப் பிரிவில் புகழ்பெற்ற டாக்டர் கிரிநாத், டாக்டர் கே.எம். செரியனுடன் இணைந்து பணியாற்றிய இதயநோய் சிகிச்சை நிபுணர் கே.என்.ரெட்டி, அப்போது வேறொரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரை என் தந்தையார் விஜயா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
 விஜயா ஹார்ட் ஃபவுண்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி, அதன் இயக்குனராக கே.என். ரெட்டியை நியமித்தார். தொடக்கத்தில் இருந்த டாக்டர் ரமேஷ் சேஷாத்திரி விலக, அவரை அடுத்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஜெ. ரெட்டி, டாக்டர் பி.எஸ்.என். ராஜு ஆகியோருடன் சாதனை புரியத் துடித்த இளைய மருத்துவர்கள், அனுபவ மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் உட்பட 27 பேர் இணைந்து பணியாற்ற, இன்று உலகத்தரம் வாய்ந்த இதயநோய் சிகிச்சை மையமாக விஜயா ஹார்ட் ஃபவுண்டேஷன் விளங்கி வருகிறது. 1996 இல் 97 இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த விஜயா ஹார்ட் ஃபவுண்டேஷன் கடந்த 15 ஆண்டுகளில் 15,000 க்கும் மேற்பட்டோருக்கு இதய நோய் அறுவை சிகிச்சையும், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி 55,000 பேருக்கும் கூடுதலாக செய்தும் சாதனை புரிந்துள்ளது. அவர்களில் 3 வயது குழந்தை முதல் 93 வயது முதியவர் வரையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போதே... இதயத் துடிப்புடன் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டதினால் 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பாக வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சைகளை நடத்த முடிந்தது.
 விஜயா ஹார்ட் ஃபவுண்டேஷன் அமைப்புப் பணிகளில் என் தந்தையார் தீவிரமாக ஈடுபட்டு, பிறர் இதயங்களில் இடம் பெற்றிருந்தார். பிறர் நலம் பற்றி கவலைப்பட்ட அவர், 84வது வயதிலும் தமது உடல்நலத்தைப்பற்றி கவலைப்படவில்லை. அயராத உடலுழைப்பினால் அவரது முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ""அது புற்றுநோயாகக்கூட இருக்கலாம். எதற்கும் பயாப்சி எடுத்துப் பார்க்க வேண்டும்'' என்று கூற, இச்செய்தி ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த என் தாயாரின் உடல்நலத்தையும் பாதித்தது. என் தாயாரும் படுக்கையில் வீழ்ந்தார்.
 அன்பும் குணமும், உயர்ந்த அறிவும், பண்பும் நற்குடிப் பிறப்பும் மிக நிறைந்து பதி வாழ்க்கையே தனது நிதியாகக் கருதிய உத்தமப் பெண்மணி மீண்டும் எழுந்து வந்து எங்களுடன் சகஜநிலையில் இருக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
 ஆனால் என் தாயார் சேஷம்மா, 12.01.1997இல் எங்களை எல்லாம் தனிமைப்படுத்திவிட்டு, இப்பூவுலகைவிட்டு புகழுடம்பு எய்தினார்.
 திருமணமாகும் ஏழைப் பெண்களுக்கு திருமாங்கல்யம் வழங்கி, தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்று வாழ்த்திய எங்கள் தாயார், அவரது விருப்பப்படி தீர்க்க சுமங்கலியாகவே மறைந்தார்.
 ஒரு பெண் நற்கதிபெற தான தருமம் செய்ய வேண்டியதில்லை. உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டியதில்லை. தீர்த்த யாத்திரை செய்து புண்ணியம் தேடவேண்டாம். கணவனின் பாதம் பணிந்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே போதும். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,
 
 பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
 புத்தேளிர் வாழும் உலகு (58)
 
 "மனைவியர் தம் கணவரை வணங்கி, அவர் அன்பைப் பெறுவாராயின், அம்மனைவியர் பெருஞ்சிறப்பை உடைய மேலுலக வாழ்வை அடைவர்' என்கிறார்.
 பொதுவாக எங்கள் விஜயா நிறுவனத்தில் அமைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் கிரகப்பிரவேத்திலிருந்து, மருத்துவப் பிரிவு துவக்க விழா வரையில் என் தந்தையாரும் தாயாரும் இணைந்தே துவக்கி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவர்களுடைய கைகள் ராசியானவை.
 
 அமெரிக்காவில் வசித்து வரும் என் மகள் லட்சுமி சுனந்தாவிடமிருந்து அண்மையில் ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில் என் தாயார் - தந்தையாரைப்பற்றி குறிப்பிட்டு இருந்த வரிகளில், ""அம்மம்மா (என் தாயார் திருமதி சேஷம்மா) மறைந்தபிறகு தாத்தாவைப் பார்க்கப் போனேன். அவருடைய அறையில் சுவரில் இருந்த அம்மம்மாவின் ஓவியம் என்னைப் பார்த்து புன்னகைத்து ஆசி வழங்கியது.
 அப்போது தாத்தா (பி.நாகிரெட்டி) சொன்னார்:
 ""அம்மம்மா இருந்திருந்தால் என்னைப் படுத்த படுக்கையாக விட்டிருக்கமாட்டாள். நான் என்ன... எப்போது சாப்பிட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பாள். எனக்காக பீர்க்கங்காயில் இருக்கும் விதைகளைக்கூட நீக்கி எப்படி சமைக்கவேண்டும்? என்பதைச் சொல்வாள்.
 அம்மம்மா உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவளுக்காகவே ஓர் இல்லத்தைக் கட்டினேன். ஆனால் அவளோ வழக்கம்போல கார்டனில் இருக்கும் செடி, கொடி, மரங்களுடன் காமாலை நோயாளிகளுக்கு மருந்து தயாரிப்பது, மாடிப்படி, ஏறி இறங்கி அந்த நிலையிலும் வீட்டு வேலைகளையும் கவனித்துச் செய்து வந்தாள். நான் அவளுக்கு வசதியான வாழ்க்கையைத் தர முன் வந்தால், அவளோ எப்போதும்போல எளிய வாழ்க்கையே ஏற்றுக்கொண்டாள்.
 அவள் இருக்கும்போது, என்னுள் இருந்த தைரியம், பாதுகாப்பு எல்லாமே அவளுடன் என்னை விட்டு போன மாதிரி உணர்கிறேன். அவள் எனக்கு மட்டுமல்ல, அடுத்துவரும் தலைமுறையினர் வளமாக வாழ, அயராது உழைத்து பலம் வாய்ந்த அடித்தளம் அமைத்து இந்தக் குடும்பத்துக்கே தன்னைத் தந்திருக்கிறாள்.
 என் பணிகளை சுலபமாகச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவளது கடுமையான உழைப்புதான் காரணம்''...
 சொல்லிக் கொண்டிருக்கும்போதே தாத்தாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது...
 அன்று நான் தாத்தாவுடன் பேசியது என் வாழ்நாள் முழுவதும் என் நினைவை விட்டு அகலாது.
 நான் அங்கே இருந்தபோது, தாத்தாவை அடிக்கடி சந்திப்பேன். அப்போது அவர் சொன்ன அறிவுரைகளை என்னால் பின்பற்ற முடியாத சூழலில் இருந்தேன்.
 இப்போது, அவற்றை எண்ணிப் பார்க்கும்போது அவை எனக்கு நிறைய அர்த்தத்தைத் தந்து, இன்றைய சுயநல உலகை எனக்குப் புரிய வைக்கிறது... செயல்படுத்த முயற்கிறேன்...
 சாவு சகஜம், சாதனை நிஜம். செடி, கொடி, மரங்கள் தரும் பூ, பழங்களை அவை அனுபவிப்பதில்லை. மனித இனம் உட்பட பிறருக்கு வாழும் இனத்துக்கே தந்து உயர்ந்து அவை நிற்கின்றன. பிறரை உயர்த்தும்போது நாமும் உயர்வோம் என்பதை அந்த தாவர இனம் நமக்கு உணர்த்துகிறது. அதைப்போல சேஷம்மாவும்...'' என்றார் தாத்தா.
 
 என் தந்தையார் மரம், செடி, கொடிகளை மட்டுமல்ல, வண்டி, வாகனாதிகளையும் நேசித்தவர்.
 1964ஆம் ஆண்டில் எங்களுடைய நெருங்கிய உறவினர் இல்லத் திருமணம் நெல்லூரில் நடந்தது. பெற்றோர் உட்பட நாங்கள் எல்லோருமே நெல்லூருக்குப் போயிருந்தோம்.
 திருமணம் முடிந்தபிறகு என் மனைவி, என் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவருடன் நான் பிளிமத் ஸ்டேஷன் வேகன் காரை ஓட்டிவர நெல்லூரிலிருந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.
 நாங்கள் சூலூர்பேட்டைக்கு அருகில் வரும்போது, ரோட்டின் குறுக்கே ஒரு மாட்டுவண்டி வர, உடனே காரை நான் வேகமாக வலது பக்கம் திருப்ப... கண் இமைக்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த குழியில் கார் விழுந்து, மூன்று குட்டிக் கரணம் அடித்து கவிழ்ந்த நிலையில் நின்றது.
 நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே இருந்து மெதுவாக முக்கல், முனகலுடன் வெளியே வந்தோம். உடன் பயணித்த சகோதரிகள் இருவருக்கும் காலில் நல்ல அடி. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக எங்களுக்கு பின்புறமிருந்து அதேமாதிரி ஒரு காரில் சென்னையை நோக்கி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நிலைமையைச் சொல்லி அவரது காரிலேயே நாங்கள் சென்னைக்கு வந்தோம்.
 இதற்குள் இந்த விபத்து பற்றிய செய்தி நெல்லூரில் இருந்த என் தந்தையாருக்குத் தெரிய வர, உடனே அவர் அப்போது சந்தமாமா கட்டிடத்தில் கீழ்தளத்தில் இருந்த எங்கள் மைத்துனர் டாக்டர் சந்துருவுக்கு தகவல் தந்து, படுக்கை வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனை மாதிரி நிறுவப்பட்டு அனைத்து சிகிச்சை வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்துவிட்டார்.
 நெல்லூரிலிருந்து வந்தவுடன் அப்பா நம்மை கோபிப்பார் என்று நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக ""நல்லவேளை... அந்த கார் உங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டது. விபத்து நடந்த இடத்தில் வேறு விபரீதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால்... நினைக்கவே பயமாக இருக்கிறது. அந்த காருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த காரை டிவிஎஸ் வொர்க் ஷாப்புக்கு அனுப்பி சரிசெய்யச் சொல்லுங்கள். இனி அந்தக் காரை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். உங்கள் உயிர்களைக் காப்பாற்றிய இந்தக் கார் என்னுடனேயே இருக்கட்டும்'' என்று நம்பிக்கையுடன் கூறினார். பொதுவாக விபத்து நடந்த காரை அந்த உரிமையாளர் தொடர்ந்து பயன்படுத்த விரும்பமாட்டார். ஆனால், வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் விபத்து நடந்த அந்தக் காரைத்தான் பயன்படுத்தி வந்தார் என் தந்தையார். எதையும் உடன்பாடான கண்ணோட்டத்தில் கண்டு, தோல்வியை வெற்றிப்படியாக்கிய வித்தகர் அவர்.
 விஜயா என்னும் எங்களது சாம்ராஜ்யத்தை தாங்கிக் கொண்டிருந்த நான்கு தூண்களில் முதலாவதாக என் ஆசான் சக்ரபாணி என்ற தூண் சாய்ந்தது. அடுத்து, என் அருமை அண்ணன் பி.எல்.என். பிரசாத் என்னும் தூண் இரண்டாவதாகச் சாய, எங்கள்மீது படர்ந்திருந்த லட்சுமி என்ற கருணை எங்களை விட்டு அகல ஆரம்பித்தது.
 லட்சுமி கடாட்சம் நிறைந்துள்ள வீடு வைகுந்தத்திற்கு ஒப்பாக விளங்கும் என்பர் சான்றோர். எங்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து, எங்களையெல்லாம் அரவணைத்து ஆதரித்து, போற்றிப் பாதுகாத்து வந்த சேஷம்மா என்ற மூன்றாவது தூண் சாய்ந்தபோது, அந்த சாம்ராஜ்யத்தின் முடிவு ஆரம்பமானது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
 "பட்ட காலே படும்... கெட்ட குடியே கெடும்' என்பது முதுமொழி. ஆனால் "பட்ட காலே படும்... நல்ல குடியும் கெடும்' என்பதை புதுமொழியாகச் சொல்லலாம்.
 என் தந்தையாருக்கு, என் தாயாரின் மறைவினால் ஏற்பட்ட தனிமையுடன் முதுகுத் தண்டு பிரச்னையும் சேர, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, தயக்கமின்றி... உடனே பயாப்சி பண்ண ஒப்புக்கொண்டார். அதற்கான காரணம் கேட்டபோது சமயம் வரும்போது சொல்கிறேன் என்றார்.
 அவருக்கு 20.3.1997ல் பயாப்சி பண்ணப்பட்டது. அது அவருக்குள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்த அவரது இடுப்புக்குக் கீழ் எல்லா உடல் உறுப்புகளும் செயலிழந்தன. முறையான மருத்துவம் மேற்கொண்டால் அவரது அந்த பாதிப்பை நிவர்த்தி செய்து அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிவிட முடியும் என்று மருத்துவர்கள் சொன்னபடி அந்த நம்பிக்கையில் 2.5.1997 வரையில் விஜயா மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
 அதுவரை ஓடி... ஆடி... பணிகளைக் கவனித்து வந்த என் தந்தையார் 41 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபின்பு, விஜயா கார்டன் வீட்டிற்கு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தே அவரது திருக்கோயிலை, விஜயா ஹெல்த் சென்டரை வலம் வந்து கவனித்தார்.
 அவரது நிலையைக் கண்டு, நாங்கள் அவருக்கு ஆறுதல் சொன்னபோது... அவரோ, ""நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள் பெரியோர். என் உடலில்தான் ஊனம்... உள்ளத்தில் அல்ல'' என்று சொல்லி எங்களைத் தேற்றினார்.
 ""அன்று பயாப்சி பண்ண உடனே ஏன் ஒப்புக்கொண்டேன் தெரியுமா? என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நான் அடையவேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். டெல்லி ரயிலில் 36 மணி நேரம் தொடர்ந்து பயணிப்பவர்கள், தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்குள் வண்டி நுழையும்போது ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் இறங்குவதற்கு ஒரு பரபரப்பைக் காட்டுவார்கள். நான் முந்தி... நீ முந்தி என்று ரயில் பெட்டிக்குள் பாதையை அடைத்து நிற்பார்கள். அதைப்போல நான் நிர்ணயித்து வைத்திருக்கும் இலக்கை அடைய வேண்டுமல்லவா அதனால்தான்...'' என்றார் நம்பிக்கையுடன்.
 உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சக்கர நாற்காலியிலும் படுக்கையிலும் இருந்து பணியாற்றிய தந்தையாரைப் பார்க்கும்போதெல்லாம் என்னையறியாமலேயே விவரிக்க இயலாத வேதனை, வருத்தம் என்னுள் எழும்.
 அதனால் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். அவருக்குப் பக்கத்தில் நானும் இருந்து பணிவிடை செய்வது என் பிறவிக்கடன் என அவருள் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுத்த விரும்பினேன். என் இருப்பிடத்தை தற்காலிகமாக சந்தமாமா பில்டிங்கில் இருந்து விஜயா கார்டனுக்கு மாற்றினேன். ஆனால் அவரது உடல்நிலை? நான் அவருடனேயே நிரந்தரமாகத் தங்கி, தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணிவிடை செய்ய வேண்டிய வாய்ப்பை எனக்குத் தந்தது.
 என் தந்தையார் சக்கர நாற்காலியில் சுழன்று சுழன்று வந்தாலும் உடல் நிலை மனதளவில் வேலை செய்ய ஒத்துழைப்பு தர மறுத்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஒருநாள் என்னை அழைத்தார்...
 (தொடரும்)
 தொகுப்பு: வைரஜாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com