நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி

என் தந்தையாரை - தனது தாத்தாவை பார்த்து ஆசி பெற்று, அமெரிக்காவுக்குப் போன என் மகள் லட்சுமி சுனந்தா, ஓர்
நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி
Published on
Updated on
4 min read

30. இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்...

என் தந்தையாரை - தனது தாத்தாவை பார்த்து ஆசி பெற்று, அமெரிக்காவுக்குப் போன என் மகள் லட்சுமி சுனந்தா, ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அந்த சமயத்தில் அவளுக்கு துணையாக இருக்க, இரண்டு வாரங்களுக்கு பின்னர் என் மனைவி ராணியை அங்கே அனுப்பி வைத்தேன். பேரக் குழந்தையைப் பார்க்க என்னையும் அமெரிக்காவுக்கு வரச்சொல்லி என் மகள் வற்புறுத்திக் கேட்க, என் தந்தையாரின் அனுமதியுடன் அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து பயணத் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

நான் அமெரிக்காவுக்குப் போகும் நாளைச் சொல்லி என் தந்தையாரிடம் ஆசி வாங்கச் சென்றேன். செய்தியைச் சொன்னேன். அப்போது இங்கிருந்த பிரச்னைகளைத் தீர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்.

""வாழ்க்கை என்பது போர். அதை நீ வெல்ல வேண்டும். அதற்கு இந்தப் பயணம் உதவட்டும். சரி... போய் வா... ஆனால், நீ திரும்பி வரும்போது நான் உயிருடன் இருப்பேனோ... என்னவோ?'' கண்களில் நீர் ததும்ப சொன்னபோது... எனக்குள் இனம்புரியாத வேதனையுடன் அறைக்குத் திரும்பினேன். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், எனக்கு அமெரிக்க பயணம் அவசியமா? அப்புறம் போய் பேரக் குழந்தையை பார்த்து வரலாம் என்று கருதி புறப்படுவதற்கு முன்தினம், என் பயணத்தை ரத்து செய்து, அந்தச் செய்தியை என் தந்தையாரிடம் சொன்னேன்.

""பயணத்தை மேற்கொண்டிருக்கலாமே... நான் எப்படியும் மேனேஜ் பண்ணிக் கொண்டிருப்பேன்'' என்று சொன்னாலும், என் பயணம் ரத்தாகிவிட்டதில் அவர் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி.

அப்போது அவர் சொன்னார்:

""வாழ்க்கை என்பது ஒரு புதிர், கனவு... அதற்கு விடைகண்டு, அந்தக் கனவை நனவாக்க வேண்டும்.

சுவாமி சிவானந்தர் அருளிய ஒரு கதையை இந்தச் சமயத்தில் சொல்கிறேன் கேள்... என்று அம்புலிமாமா பாணியிலே சொன்னார்:

ஓர் ஊரில் ஒரு பெரும் பணக்காரர். அவரது அந்திமக் காலம் நெருங்கும்போது, அவரைச் சுற்றி அவரது பிள்ளைகள் அழுத வண்ணம் இருந்தார்கள்.

அப்போது அவர் அவர்களைப் பார்த்து, அந்த வங்கியில் ஒரு இருபது லட்சம்... இந்த வங்கியில் ஒரு பத்து லட்சம் போட்டிருக்கிறேன். இவரிடம் 5 லட்சம் கொடுத்திருக்கிறேன்...  என்று மெதுவாக சொல்லச் சொல்ல ஆர்வமாக மகிழ்ச்சியுடன், அப்பாவுக்கு இந்த வயதிலும் எவ்வளவு ஞாபக சக்தி என்று  அவர்கள் ஒரு தாளில் எழுதி வந்தனர்... ஒரு சில விநாடிகள் தயங்கி, தாமதித்து அவர் பரந்தாமனுக்கு பத்து லட்சம் தரவேண்டும்... என்று சொன்னவுடன் எழுதுவதை அப்படியே நிறுத்தி... அப்பாவின் மூளை குழம்பிவிட்டது... ஏதேதோ பிதற்றுகிறார் என்று நழுவிவிட்டனர்.

இதுதான் உலக நிலைமை. லாபத்தில் பங்குபோட தயாராக இருப்பவர்கள் நஷ்டத்தில் பங்குபோட விரும்பவில்லை. கையில் காசு உள்ள வரையில்தான் சொந்தமும் பந்தமும். அவர்கள் சுயநலத்துக்கு உட்பட்டே செயல்படுகின்றனர்...

இதைத்தான் கவியரசு கண்ணதாசன் தமது பாடல் வரிகளில்

"பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா, சோதனையில் பங்குபோட சொந்தமில்லே பந்தமில்லே' என்றார்.

"வாழ்க்கையைக் கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம்' என்பார் சுவாமி விவேகானந்தர்.

நமக்கு எல்லாம் வேண்டுமென்றால் நாம் எல்லாவற்றையும் விடவேண்டும். அதாவது அனைத்தையும் துறந்தவனுக்கு அனைத்தும் உரியதாகும்.

இன்று முழு சம்பாத்தியமும் சுயநலத்துக்கே பயன்படுத்தப்படுகிறது. இன்று எதிர்பார்ப்பு உபசாரம்தான் நடைபெறுகிறது. வியாச பகவான் 18 புராணம், 18 உபபுராணம், 18 உபோப புராணம் எழுதினார். அனைத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது பிறருக்கு உதவுவது புண்ணியம்... பிறருக்கு தீங்கிழைப்பது பாவம் என்பதே'' என்ற என் தந்தையார்,

என்னிடம், ""நான் சொன்னதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?'' என்று கேட்டார். ""ஆம்'' என்றவுடன், அன்று வழக்கத்துக்கு மாறாக மீண்டும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்: ""நீ காலையில் எத்தனை மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பாய்?'' என்று.

""சுமார் காலை 5 மணிக்கு...''

""இன்னும் கொஞ்சம் சீக்கிரம்... விடியற்காலை 4 மணிக்கு உன்னால் எழுந்திருக்க முடியுமா?''

""முடியும். நாளையே நீங்கள் சொன்னபடி விடியற்காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன்''.

""நீ அதிகாலை எழுந்து... நான் அன்றாடம் என்ன வேலையெல்லாம் செய்து வருகின்றேனோ... அதாவது விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர் உட்பட விஜயா கார்டனையும் கேசவன் மேஸ்திரி உடன்வர ரவுண்ட்ஸ் வந்து, அங்கு தேவையானவற்றை கவனித்துச் செய்ய வேண்டும்''.

""அது எனக்கு பிரச்னையே அல்ல. நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன்'' என்று மறுநாள் அதிகாலையில் தொடங்கி, காலை 7.30 மணிவரையில் என் தந்தையார் சொன்னபடி விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த்சென்டர், விஜயா கார்டனில் எனது மேற்பார்வையில் பணியைத் தொடங்கி அதை அன்றாடம் தொடர்ந்து செய்து வந்தேன்.

அன்றாடம் அதிகாலையில் தொடங்கி, அந்த வேலைகளை முடித்து, என் இருப்பிடத்துக்கு வந்து, குளித்து, உடையுடுத்தி, கார்டனில்  அவரைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, நடக்க வேண்டியதைப் பற்றி ஆலோசிக்க ஆவலுடன் செல்வேன்.

ஆனால், அவரோ அதற்கு முன்னாடியே அப்போது என்னுடன் ரவுண்ட்ஸ் வந்த கேசவன் மேஸ்திரி வாயிலாக அனைத்தையும் அறிந்து, அதில் உள்ள நிறைகளைச் சொல்லி பாராட்டுவார்.  குறைகளைச் சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்குவார்.

அப்போது சொல்வார்:

""அனுமன் பிறருக்குத் தொண்டு செய்வதிலும் அர்ஜுனன் நட்பிலும் பலிச்சக்கரவர்த்தி தன்னையே தருவதிலும் சிறந்து விளங்கியவர்கள். அவர்களைப்போல இருக்க நாம் முயற்சி பண்ண வேண்டும்'' என்று குறிப்பிடுவார்.

இது தந்தை } மகன் மாதிரி மட்டுமல்ல. குரு சிஷ்ய பாவத்தில் சொல்லப்பட்ட உபதேசமும்கூட. இன்னும் சொல்லப் போனால் எனக்குக் குரு என் தந்தையே. அவருடைய இருப்பிடமே எனக்கு குருகுலமாக விளங்கி வந்தது.

விஜயா மருத்துவமனையில் 1996- இல் ஏற்பட்ட மாதிரியான பிரச்னையே விஜயா ஹெல்த் சென்டரில் 1999 - இலும் ஏற்பட்டது.

விஜயா ஹெல்த் சென்டரில் எலும்பு முறிவு மருத்துவம் சம்பந்தமான ஆர்த்தோபெடிக் பிரிவை நிர்வகித்து வந்த டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ் 1999ஆம் ஆண்டு, தனியாக மருத்துவமனையைத் தொடங்கி விலகினார்.

சக்கர நாற்காலியில் வலம் வந்து கொண்டிருந்த என் தந்தையாருக்கு இது சங்கடமானது.  இன்னொரு சவாலானது. காரணம், அந்தத் துறையை... ஏற்கெனவே நிர்வகித்த அளவில் இனி நிர்வகிக்க புதிய பொறுப்பாளர் அமைய  வேண்டுமே... என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் தந்தையார் நினைவில் பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. ராஜசேகர ரெட்டி வந்தார். அவர் ஏற்கெனவே விஜயா மருத்துவமனையில் டாக்டர் டி.ஜெ. செரியனிடம் உதவி மருத்துவராக சிறப்பாகப் பணியாற்றியவர். பின்னாளில் அவர் ஆர்த்தோ படிப்பை மணிப்பாலில் முடித்து, தமது துணைவியார் தனுஜாரெட்டி (தோல் நோய் சிகிச்சை நிபுணர்)யுடன் சென்று இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆர்த்தோ சர்ஜனாக பணியாற்றி வருகிறார் என்ற செய்தியை டிரஸ்டி ரமணா ரெட்டியார் வாயிலாக அறிந்து, டாக்டர் சி. ராஜசேகர ரெட்டியுடன் தொடர்பு கொண்டார் என் தந்தையார்.

என் தந்தையாரின் வேண்டுகோளை ஏற்று டாக்டர் சி. ராஜசேகர ரெட்டி தமது துணைவியாருடன் சென்னைக்கு வந்து, விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில், அவரது தலைமையில் விஜயா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ராமா  ஆர்த்தோபிடிக்ஸ் (யஐபஞ) என்னும் எலும்பு முறிவு சிகிச்சை மையத்திற்கு பொறுப்பேற்றார். இன்று 70 படுக்கை வசதிகளுடன் 24 மணிநேர மருத்துவ வசதியுடன் கொண்ட இந்த மையம் தென்னிந்தியாவில் சிறந்த பத்து எலும்புமுறிவு சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. என் தந்தையார் விரும்பிய மாதிரி குறைந்த செலவில், இங்கே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 மூட்டு மற்றும் இடுப்பெலும்பு இணைப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. நுணுக்கமான நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் ஒருசில இந்திய மருத்துவமனைகளில் இந்த விடோ (யஐபஞ)வும் ஒன்று  என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு தகுந்த அறுவை சிகிச்சைகளைச் செய்யும் இந்த மையம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து எலும்பு முறிவு, மாற்று சிகிச்சையில் பயிற்சி பெற வருபவர்களுக்கு ஓர் பயிற்சி மையமாகவும் திகழ்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறே என் தந்தையார் நிகழ்த்திய இன்னுமொரு சாதனை இது.

இந்த அரிய வாய்ப்பைத் தந்த என் தந்தையாருக்கு நன்றி செலுத்தும் முகமாக... விஜயா ஹெல்த்சென்டர் வளாகத்திலேயே தமது இருப்பிடத்தையும் அமைத்து, என் தந்தையாரின் கனவை நனவாக்க  தமது மருத்துவக் குழுவுடன் இரவு பகலாக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராஜசேகர ரெட்டி.

என் தந்தையாரும் சக்கரபாணியாரும் இணைந்து 1947 ஜூலை மாதம் தொடங்கிய சந்தமாமா 12 இந்திய மொழிகளில், இந்திய கலாச்சார பண்பாட்டுக் கதைகளை வெளியிட்டு ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியது. ""இந்த உலகுக்கு என்னை அறிமுகப்படுத்தி, முகவரி கொடுத்து பிரபலமாக்கியது சந்தமாமா'' என்பார் என் தந்தையார்.

அதனால் சந்தமாமாமீது என் தந்தையார் தமது தனி அபிமானம், பாசம், அன்பு காட்டி வந்தார். 1997ஆம் ஆண்டு வரையில் வெற்றிநடை போட்டு வந்த சந்தமாமா தொடர்ந்து வெளிவருவதில் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன. குறிப்பாக அச்சகத்துறை தொழிலாளர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் தொடங்கி, இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் நிகழ்வுகள் ஆகியவை தொடர் பிரச்னைகளாக வர, என்னால் அவற்றை அவரைப்போல சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவரது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருந்திருந்ததால் இந்தப் பிரச்னைகளை எளிதாக்கி தீர்த்திருப்பார்.

எடுத்துக்காட்டாக, விஜயா வாகினி ஸ்டூடியோ தொழிலாளர் வேலை நிறுத்தம் (1962 இல்) வந்தபோது, ஸ்டூடியோவில் வேலைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டபோது, தனி மனிதனாக இருந்து அதைச் சமாளித்து தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வைத்தவர். இதனால் தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஸ்டூடியோ நிர்வாகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்:

""நல்ல முதலாளி இருக்கலாம், நல்ல தொழிலாளி இருக்கலாம். ஆனால் இவர்களைவிட நல்ல நிர்வாகி தேவை. அப்போதுதான் நிறுவனம் சிறப்பாக இயங்கும். காரணம் நமக்காக நிறுவனம் அல்ல, நிறுவனத்துக்காக நாம் என்ற எண்ணம் இந்த மூவரிடமும் மேலோங்கி இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்''.

இந்த மூவரில் யார் எந்தத் தவறை எப்படி, எங்கே செய்தார்கள் என்று கண்டறிய முடியாதபடி சந்தமாமா அதன் பொன்விழா ஆண்டில் (1998இல்) உடல்நலம் குன்றிய என் தந்தையாரின் அனுமதியுடன் இளைப்பாற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது.

அடுக்கடுக்காகத் தொடரப்பட்ட இன்னல்களுக்கிடையே குடும்ப உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருந்து நடத்திவந்த சந்தமாமா பப்ளிகேஷன்ஸ், இறைவன் அருளால் வெளியார் உதவியுடன் சந்தமாமா இந்தியா லிமிடெட் என்ற பெயருடன், என் தந்தையாரின் பிறந்தநாளான டிசம்பர் முதல் தேதி (01-12-1999) அன்று அவரது விருப்பப்படியே, மீண்டும் சந்தமாமா இதழை 12 தேசிய மொழிகளில் வெளியிட்டேன்.

சந்தமாமா இதழ் நிறுத்தப்பட்டபோது, நான் அவரிடம் வாக்களித்தபடி மீண்டும் சந்தமாமா இதழை அன்று அவரது திருக்கரங்களில் வழங்கினேன். அப்போது அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர்... முகத்தில் விவரிக்க இயலாத மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அவரின் பிறந்தநாள் நல்லாசியைப் பெறும் அரிய வாய்ப்பும் அன்று எனக்குக் கிடைத்தது.

அப்போது அங்கிருந்த ஒரு நண்பரிடம் என் தந்தையார், ""ஓராண்டுக்குப்பின் சந்தமாமா வெளிவருவது உலகின் எட்டாவது அதிசயம். இது அதிசயத்திலும் அதிசயம்'' என்று சொல்லி மகிழ்ந்தார்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com