தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்மாவின் கடைசி நாட்கள்!

சரியாகச் சொல்ல வேண்டுமானால் மரகதமணியின் இன்னொரு வாழ்க்கை இந்த எண்பத்து நான்காவது வயதில்தான் ஆரம்பமாகப் போகிறது என்பதே உண்மை.

News image
Updated On :31 மார்ச் 2013, 3:31 am

சரஸ்வதி பஞ்சு

சரியாகச் சொல்ல வேண்டுமானால் மரகதமணியின் இன்னொரு வாழ்க்கை இந்த எண்பத்து நான்காவது வயதில்தான் ஆரம்பமாகப் போகிறது என்பதே உண்மை. அந்த முதியோர் இல்லப் பராமரிப்பு விடுதியின் முன் அறையில் நாதனும், மரகதமணியும் காத்திருந்தனர். அன்றைக்கென மருத்துவரின் பரிசோதனைக்காக நான்கு பெண்கள் - மரகதமணியையும் சேர்த்து வந்திருந்தனர்.
 "இந்தப் பரிசோதனையில் நீங்கள் வெற்றி பெறவில்லை. வேறு இடம் பார்த்துக் கொள்ளவும்' என்பதைப் போல மருத்துவரின் அந்த வார்த்தைகள் மற்ற மூன்று பேர்களையும் வெளியேறச் செய்திருந்தது. இப்போது நான்காவதாகக் காத்திருந்த மரகதமணி ஆவலுடன். நாதனுக்கும் மனசு அடித்துக் கொண்டிருந்தது. "ஆண்டவரே மருத்துவப் பரிசோதனை நல்ல முடிவாக இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளவும் செய்தான். எத்தனையோ வாதம் பலத்த பேச்சு கண்ணீர் முட்ட வார்த்தைகள். ""என்னைத் தயவு செய்து புரிஞ்சுக்கோம்மா'' என்று மகன் நாதன் கெஞ்சவும், மரகதமணி சம்மதித்தாள். அடுத்த மாதம், அடுத்த ஆண்டு எப்படிப் போகப் போகிறது என்ற கவலை இப்போது இல்லை. இப்போதைய சூழலில் அவசியம் அம்மாவை அந்த முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான் அவனுடைய பிரச்னை.
 அம்மாவைப் பொறுத்த வரையில் இந்த வயதிலும் திடகாத்திரமாக இருந்தாள். சர்க்கரை, உப்பு, நீர் என்ற பிரச்னை இல்லை. அவ்வப்போது ரத்தக் கொதிப்பு தலைகாட்டும். வயதிற்கே உரிய வியாதி. மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிடுவதாலும், அசராத உழைப்பாலும் அம்மா இதுவரை படுக்கையில் படுத்து மற்றவரின் அலுப்பையோ, உதவியையோ நாடியதில்லை. ஆனால் தன் ஒருத்தியால் மட்டுமே உலகை ஆள முடியும் என்ற கர்வம். ஆனாலும் உழைக்கும் உழைப்புக்கு வஞ்சகமில்லாமல் கேட்டுச் சாப்பிடுவாள்.
 அம்மா நிறைய பாக்கியம் செய்தவள். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் என்று குழந்தைகளைப் பெற்றெடுத்தவள். நல்ல முறையில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துக் கொள்ளுப் பேரன், பேத்தி என்று கண்டவள். இந்த வயதில் இளைப்பாற ஓர் இடம் வேண்டும். அது எந்த இடம் என்பதுதான் இதுவரை சிக்கலாக இருந்தது.
 அம்மா, அப்பாவை இழந்த பிறகு கடைசித் தங்கை தானாக முன்வந்து அம்மாவைக் காலம் முழுவதும் நான் பராமரிக்கிறேன் என்றாள். அவளின் கணவன் ராணுவத்தில் பணி புரிந்ததால் வீட்டின் பாதுகாப்புக்கும் குழந்தைகளைப் பேணுவதற்கும் அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் தன் பெண்ணுக்கு உதவியாக இருக்கவும் மரகதமணி வர சம்மதித்தாள்.
 இன்றைக்கு கணக்குப் பார்த்தபோது காலம் இருபத்தி ஐந்து ஆண்டுகளைத் தன்னுள் விழுங்கியிருந்தது. நாதனும் குடும்பத்துக்கு மூத்த பையன் என்பதால், அவ்வப்போது தன் அம்மாவைப் பார்க்கப் போவான். பண உதவியும் செய்வான். அவன் மனைவியும் அதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. மாமியார் என்ற பெரிய சுமையைத் தன் மீது சுமக்க வைத்து தன் சந்தோஷம், தனிமை இவற்றைப் பறித்துக் கொள்ளாத வரை அவள் என்ன சொல்லப் போகிறாள்? தீபாவளி, பொங்கல் என்று தன் மாமியாரை வரவழைத்து உரிய மரியாதையைச் செய்வதோடு சரி, மரகதமணியும் தன் மூத்த பையனின் வீட்டுக்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வந்து தங்கிப் போகும் விருந்தாளியைப் போல் தங்கிப் போவாள்.
 அந்த நாட்களில் மருமகள் - மாமியார் இடையே வார்த்தைப் போர் வெடிக்கும். தன் மாமியார் வந்து தங்கி இருக்கும் அந்த நாட்கள் மிகவும் சிரமமாக இரண்டு பேர்களுக்குமே நகரும். இருதலைக் கொள்ளி எறும்பாகிப் போவான் நாதன். இவர்களின் மெüன யுத்தம் எப்போது முடியும் என்று மனதுக்குள் புழுங்கிப் போவான் நாதன்.
 இப்போது கூட தன் கடைசிப் பெண்ணை விட்டு வந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்காது. கடைசிப் பெண்ணான வசுமதியின் இரண்டாவது பையனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க உள்ளதால் இப்போது அந்தப் பிரச்னை எழுந்தது.
 ""அண்ணா'' என்று அழைத்த அவன் தங்கை வசுமதி, ""இதுவரை எப்படியோ அம்மாவை என் கூட வச்சசுக்கிட்டேன். ஆயிரம் பிரச்னைகள் வந்து அப்படியே அடங்கிப் போச்சு. இப்பப் புதுப் பெண் இந்த வீட்டுக்கு வரப் போகிறாள். அம்மாவின் குறுக்கீடுகளை நான் மகள் என்ற முறையில் பொறுத்துப்பேன். ஆனால் வரப் போகும் புதுப்பெண் பொறுத்துப்பாளா? இன்னொரு உண்மையையும் உங்க கிட்டே நான் சொல்லி ஆகணும். எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் ஆபிஸர் புரமோஷன் வரப் போகுது. ஃபைலில் என்னுடைய பெயர் முதலில் இருக்கு. இப்போதைக்கு வேகன்ஸி விழுப்புரத்தில்தான் இருக்கு. நான் ரிடையர் ஆக உள்ள இன்னும் ஒரு வருடத்தில் புரமோஷன் வருவதால், எனக்குச் சம்பள உயர்வு வரும். பென்ஷனும் கூடவே கிடைக்கும். கொஞ்ச நாட்களுக்கு இந்தப் புதுக்கோட்டை மண், அதன் மனிதர்களை விட்டுட்டு புதிய மண் அதன் வாசனை, மனிதர்களையும் பார்க்கலாமே, அதான் அண்ணா'' என்ற வசுமதியிடம் எந்த வார்த்தையையும் எதிர்த்துச் சொல்லவில்லை நாதன்.
 இதில் பெரிய விஷயம் என்னவென்றால், மரகதமணி வாயைத் திறந்து எதுவுமே சொல்லாததுதான். ஆனால் அவளுடைய மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதை அப்போதைக்கு உணரவில்லை நாதன்.
 இப்போது அம்மாவும் பையனும் ஒருவித முடிவுக்கு வந்து அதன் செயல்பாட்டுக்கு இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்துக்கு வந்திருந்தனர். அந்த இல்லத்தின் பொறுப்பாளியான அம்மாவிடம் பேசியபோது, ""இங்கே தங்க வருபவர்கள் ஓரளவு நோயின்றி இருக்கணும். தங்களின் சுயதேவைகளை அவுங்களே மற்றவர் உதவியின்றி பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருக்கணும். எங்கள் மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகே அனுமதிப்போம். நன்கொடை ரூபாய் ஐயாயிரம் கட்டணும். மாதாந்திர உணவுச் செலவு இருப்பிடம் இவற்றுக்கு மாதம் ரூபாய் மூன்று ஆயிரம் ஆகும். இதுதான் இந்த இல்லத்தின் கண்டிஷன்'' என்றாள் அவள்.
 விடுதிப் பொறுப்பாளரின் வார்த்தைகள் நியாயமாகவே பட்டது. நாதன் வாயைத் திறக்கவில்லை. விடுதிப் பொறுப்பாளரான அந்த அம்மா, ""இங்கே இன்னொரு செüகரியம் இருக்கு. தினமும் மருத்துவர்கள் வருவாங்க. உடல் நலக் குறைவு என்றால் இங்கே உள்ள மருந்தை,மாத்திரைகளைத் தருவாங்க. வரக் கூடிய நன்கொடையை பேங்கில் போட்டு அதில் வரும் வட்டியைத் தான் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்துகிறோம். வர்றவுங்க தன் அந்தஸ்தை வெளிப்படுத்த நன்கொடையாக பத்து ஆயிரம் இருபதினாயிரம் கூட தர்றேன் என்பார்கள். ஆனால் எங்களின் சட்டப்படி வெறும் ஐந்தாயிரம் மட்டுமே நன்கொடையாக வாங்குவோம். இந்தப் பராமரிப்பு இல்லம் ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆச்சு. இதுவரை எவ்விதப் பிரச்னையும் பெரிதாக இல்லை. அதற்குக் காரணம், இங்க வந்து தங்குபவர்களின் ஒத்துழைப்பே'' என்றார் மேலும்.
 வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான் என்ற மனநிறைவு அப்போதே நாதனின் மனதிற்குள் எழுந்துவிட்டது. ஆனால் அம்மா எவ்வித சலனமுமின்றி உட்கார்ந்திருந்தாள். ஆனால் மனதினுள் ஆயிரம் ஓட்டங்கள் இருக்கலாம்.
 ""யாரம்மா மரகதமணி உள்ளே போங்க''
 நர்ஸின் அழைப்பு. உள்ளே போய் ஐந்தே நிமிஷத்தில் திரும்பி வந்தாள் மரகதமணி. மருத்துவரின் ஒப்புதலோடு அந்த முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். கீழ் போர்ஷனில் வரிசையாய் அறைகள். அடுத்து அடுத்து 12 அறைகள். ஓர் அறைக்கு இருவர் என்ற கணக்கில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டு இருந்தன. அவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கென்று சிமெண்ட்டாலான கப் போர்டு. சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று வைத்துக் கொள்ளலாம். ஆளுக்கு ஓர் ஆள் உயர பீரோ. அதனுள்ளே தாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளலாம். இருவர் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள தனிக் குளியலறை மற்றும் அதை ஒட்டிய கழிப்பறை. வேளா வேளைக்கு காலை டிபன், காபி, மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று ஹோட்டலில் இருந்து வந்துவிடும். அவற்றைப் பங்கீடு செய்ய வயதான பெண் ஒருத்தியும் இருந்தாள். ஆக இவை யாவையும் விடுதி பொறுப்பாளர் சொன்ன விவரங்கள். அவையே போதுமானவையாக இருந்தது.
 மரகதமணிக்கு எந்த அறை ஒதுக்கப்பட வேண்டும் என்ற விவரத்தைக் கேட்டு பிறகு மரகதமணியை அந்த அறைக்குக் கூட்டிக் கொண்டு போனாள் அறைகளை நிர்வகிக்கும் அந்தப் பெண்.
 மரகதமணியின் வருகையை எதிர்பார்ப்பதைப் போல மற்ற அறைகளில் இருந்தவர்கள் எட்டிப் பார்த்தனர். புது வரவான மரகதமணியின் முகத்தை அவள் உடலை, நடையைப் பார்வையை அனைவருமே ரசித்தனர். அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்ததும் ஒரு வயதான அம்மா, ""வாங்க'' என்று வரவேற்றாள்.
 மரகதமணியைச் சுட்டிக்காட்டி, ""இவுங்கதான் உங்களோடு இந்த அறையில் இருக்கப் போறவுங்க'' என்றாள் அந்தப் பெண்.
 ""தாராளமாக'' என்றாள் அந்த அம்மாவும் புன்னகையுடன். தன்னுடன் ஒன்றாக இருக்க, தனிமையைப் பகிர்ந்து கொள்ள, இன்னொரு ஜீவன் வந்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி அந்த அம்மாவுக்கு.
 விடுதிப் பொறுப்பாளர் சொன்னதைப் போல ரொம்பவும் செüகரியமாகத்தான் இருந்தது அந்த அறை.
 ""அம்மா நீங்க உக்காருங்க. வெளியே போய் உங்களுக்கு மதியம் சாப்பிட ஏதேனும் வாங்கி வர்றேன்'' என்று புறப்படலானான் நாதன்.
 ""அதற்கு அவசியமில்லை தம்பி. எல்லாருக்கும் மதிய வேளைக்கான சாப்பாடு வரும் நேரம். இங்கே தங்குவதற்கு பணம் கட்டிய அடுத்த நிமிடமே இங்கே உணவு அருந்த உரியவராகிவிட்டீர்கள். அதனால் உங்கள் அம்மா இங்கேயே சாப்பிடலாம்''
 ""எனக்கு இப்பத்தான் மனசு சந்தோஷமா இருக்கு. ஏன்னா உன்னைச் சரியான பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டோமே என்கிற சந்தோஷம்தான் அது. ஆனால் மனசுக்குள் சின்ன வேதனை. அதை வெளியே சொல்லவா'' என்றான் நாதன்.
 "சொல்' என்பதைப் போல தன் மகனைப் பார்த்தாள் மரகதமணி.
 ""எனக்குத் திருமணம் ஆகி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனைவியும் வந்து ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகளும் இப்போ ஆளாகிவிட்டார்கள். சொந்தமாக வீடும் கட்டியாயிற்று. விருந்தினர் உறவினர் யாரோ வந்தால் அவர்களின் வசதிக்காக மாடியில் ஒரு தனி அறை குளியல் வசதி என்று ஏக அமர்க்களம். வந்து தங்குபவர்கள் பெருமையாக இருக்குப்பா நன்றி என்று சொல்லிப் போவார்கள். வருகிறவர்களுக்கு வக்கணையாக என் மனைவியும் சமைத்துப்போட்டு அவர்களின் பாராட்டுகளையும் பெற்றுக் கொள்வாள். ஆனால் என்ன பிரயோஜனம்? உன்னைப் பொறுத்தவரை எவ்வளவு சுகத்தை நீ இழந்திருக்கிறாய் என்று சொல்கிறேன் கேள். மருமகள் இருந்தும் அவள் கையால் சாப்பிட்டது இல்லை. விருந்தாளியைப் போல மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கி இருந்து போவாய். மறுநாளே கூட்டைத் திறந்ததும் பட்டென்று பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போல் போய்விடுவாய். உன் பேரப் பிள்ளைகளை உன் மடியில் போட்டு அவர்களை நீ கொஞ்சியதில்லை. அவர்களும் பாட்டி பாட்டி என்று உன் கன்னங்களைக் கிள்ளி கதை சொல்லேன் என்று கெஞ்சியதில்லை. உன் மாமியார் எங்கே? என்று என் மனைவியிடம் மற்றவர் கேட்கும்போது "அவுங்க தன் பொண்ணின் வீட்டில் இருக்காங்க, பொங்கிப் போட்டுக் கொண்டு. இங்கே அவ்வளவு செüகரியம் பத்தாது' என்பாள். நீயும் என் வீட்டுக்கு வந்து, "என் பையன் கட்டிய வீடு எனக்கு இங்கே தங்க உரிமையுண்டு' என்று சண்டை போட்டது இல்லை. நானும் என் கடமை கழிந்தது என்று உன் செலவுக்கென அவ்வப்போது பணம் அனுப்புவேன். ஒவ்வொருநாளும் பெத்தவளுக்குச் சோறு போடாத அவலநிலையை மனதில் கொண்டு. நீயும் உனக்கு விதி விட்ட வழி இதுதான் என்பதைப் போல உன் பெண் வீட்டிலேயே இன்றுவரை தங்கிவிட்டாய். என் தங்கை உன்னைப் பேணி வேளா வேளைக்குச் சோறு போட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் செலவு பண்ணி வைத்தியம் பார்த்துப் புண்ணியத்தைச் சேர்த்தாள். ஆனால் என்னுடைய பக்கம் நான் பாவத்தைச் சுமந்து கொண்டேன். அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. நான் உன்னிடம் பேசி இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்துக்கு வரும் வரையில் உன் மனதைத் திறக்கவே இல்லை. "சரி வாப்பா... இத்தனை காலம் வெளியே இருந்தாயிற்று. இனி வாழப் போகும் கொஞ்சகாலமாவது நீ கட்டிய வீட்டில் உன்னோடு என் மருமகள், பேரப் பிள்ளைகளோடு இருக்க ஆசைப்படுறேன்' என்று சொல்லவே இல்லை. உன் சுய கெüரவம் தடுத்து இருக்கலாம். அதற்குக் காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். வீட்டுப் படியை மிதித்தால் இத்தனை காலம் எங்கோ இருந்துவிட்டு இப்போதுதான் உங்கள் மருமகள் பேரப் பிள்ளைகளைப் பார்க்க ஆசை வந்ததா? என்ற கேள்வியை ஏளனமாக உன் மருமகள் எழுப்புவாளே என்கிற பயம்தான் அது. நானும் என் பங்குக்குக் கோழையாகத்தான் இருக்கிறேன். "வாம்மா இது உன் வீடு இப்போதாவது வா' என்று கூப்பிடவில்லையே. ஏனெனில் உன் மருமகள் மீது நானும் கொண்ட பயம். ஆக உன் வாழ்க்கைச் சக்கரம் இங்கேதான் வந்து நிற்க வேண்டும் என்பதைப் போல இந்த எண்பத்து நான்காவது வயதில் இந்த முதியோர் பராமரிப்பு இல்லம் உன்னை அரவணைக்கத் தயாராக உள்ளது. உன் மனதில் பழைய வாழ்க்கை திரைப்படம் போல வந்து நிம்மதியைக் குலைக்காமல் பார்த்துக் கொள்'' என்றபடி வெளியே வந்தான் நாதன் மனநிம்மதியுடன்.
 இங்கே அவன் தன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், ""ஒரு வழியாக அம்மாவை முதியோர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டேன். மாதம் ஒன்றுக்குப் பராமரிப்புச் செலவு ரூபாய் மூவாயிரம் கட்ட வேண்டும்'' என்றான்.
 "" இப்போ வர்ற பென்ஷன் பணத்தில் மூவாயிரம் ரூபாய் தண்டச் செலவா? ஏன் எந்தவித மாதாந்திர கட்டணமும் கட்ட வேண்டிய அவசியமில்லாத முதியோர் பராமரிப்பு இல்லத்தில் உங்க அம்மாவைச் சேர்த்திருக்கலாமே'' என்று பதில் சொன்ன மனைவியை எரிச்சலோடு பார்த்தான் நாதன்.
 அடுத்த கணம், ""ஏன் தண்டச் செலவு என்று நீ நினைக்கும் அந்தப் பணத்தை உனக்கு மாதாமாதம் தந்துடுறேன். உன் மாமியாருக்குச் சோறு போடேன். வயசான காலத்தில் நம்ம வீடும் பாதுகாப்பாக இருக்கும்'' என்று சொல்ல நினைத்தான்.
 ஆனால் சொல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.