ராஜஸ்தான் என்றால் பாலைவனம்- ஒட்டகங்கள். அடுத்தபடியாக கோட்டைகள், அரண்மனைகள், பெரிய ஏரிகள், ஏரிகள் மத்தியில் அரண்மனைகள். இது தவிர எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இளஞ்சிவப்பு நிறம். காரணம் மார்பிள் என்கிற சலவைக் கற்களால் கட்டப்பட்ட அரண்மனைகள்- சுற்றுச் சுவர்கள். "மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி' என்பதற்கேற்ப மக்களும் இதே வகை கற்களால்தான் வீடுகள், கடைகள், நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு வெளிப்பூச்சு பூசத் தேவையில்லை.
ராஜஸ்தானைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா? அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஏற்றது. மிதமான வெப்பம்- குளிர் சுற்றுலா பயணிகளுக்கு சுகமாக இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு வெயிலைத் தாக்குப்பிடிப்பது சிரமம். பலருக்கு "சன் ஸ்ட்ரோக்' வந்து, நீர்ச்சத்து குறைவால் உடல் நலம் பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
ஜெய்சால்மர் தங்கக்கோட்டை
சிறு குன்றின் மீது அமைந்துள்ள கோட்டையை தங்கத்தின் பெயரால் "கோல்டன் ஃபோர்ட்' என அழைக்கின்றனர். காரணம் பொன் நிறத்தாலான கற்களால் இக்கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்', சத்யஜித்ரேயின் "úஸôனார் கிலா' உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெற்ற கோட்டை இந்த ஜெய்சால்மரின் கோட்டைதான். காலை வெயில்- உச்சி வெயில்- மாலை வெயில்- எந்த வெயிலிலும் இந்தக் கோட்டை ஜொலிக்கிறது. கண்களை உறுத்தாது- நம்பலாம். நுணுக்கமான வேலைப்பாடுகள் ராஜபுதனத்தாரின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. கட்டப்பட்ட காலத்தில் மட்டுமல்ல; இப்போதுங்கூட இது பிரமாண்ட கோட்டைதான். இதன் பிரமாண்டத்தின் ஒன்றாக கோட்டையினுள் தோண்டப்பட்டிருக்கும் பல கிணறுகள். அதே போன்று வடிகால் வசதியையும் குறிப்பிடலாம். அடுத்தொரு பிரமாண்டம் இதன் கொத்தளங்கள். அதாவது அரணுக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கொத்தளங்களின் எண்ணிக்கை மட்டும் 99.
அரண்மனை- தர்பார் ஹால்- மன்னரின் வசிப்பிடம், அதன் பக்கவாட்டில் அரசியின் அந்தப்புரம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், தளபதிகள், அலுவலர்கள், வீரர்கள் குடியிருப்புகள் எல்லாமே நம்மை அசத்துகின்றன.
இன்றும் கூட அரச பரம்பரையினர் நான்காயிரம் பேர் இங்கேயே வசித்து, கோட்டை பாழடைந்து போகாமல் புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். சிலர் தங்களது ஒதுக்கீடுகளை உணவகங்கள், தங்கும் இடங்கள், கடைகளாக மாற்றி வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.
தர்பார் ஹால் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது. அனுபவிக்கப் பிறந்தவர்கள் அந்தகால அரச பரம்பரையினர் என்பது அருங்காட்சியகப் பொருள்கள் மூலம் அறியமுடிகிறது.
வீதிகள் குறுகிய சந்துகளாக; ஏராளமான கோயில்கள். ஜைன கோயில், சிவன் கோயில் என பல உண்டு.
அந்தக் காலத்தில் குதிரையில் சவாரி செய்த இடங்களில் இன்று மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள் பறக்கின்றன. மூலைக்கு மூலை ராஜஸ்தானிய பாரம்பரிய சால்வைகள், விரிப்புகள் தொடங்கவிடப்பட்டு "என்னை வாங்கு- வாங்கென்று' ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
தோலாலான கைவினைப் பொருள்கள் இங்கு தாராளம். ஒட்டகத் தோல் என்று சொல்கிறார்கள். உடன் கைடாக வந்தவர் பார்த்து வாங்க வேண்டும் என்கிறார். பேரம் பேச வேண்டுமாம். விலை ரூ.100 என்றால் ரூ.35-க்கு கேட்க வேண்டும். நடக்கிற கதையாகத் தெரியவில்லை.
மருத்துவ ஆலோசனைக்கு 104
ராஜஸ்தானில் 104 எண்ணுக்கு போன் செய்தால் இலவச மருத்துவ ஆலோசனை கிடைக்கும். நோய்களை அறிதல், யாரிடம் சிகிச்சை பெறலாம் என்ற விவரம் சில நிமிஷங்களில் கிடைத்துவிடும். இதுகுறித்து சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் மாத்துர் கூறுகையில்,""பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களும் நோய் குறித்த விவரம் தெரியாமல்தான் இருக்கிறார்கள். இதற்கான உரிய ஆலோசனையை 104 எண்ணுக்கு டயல் செய்தால் பெறலாம். இந்த ஆலோசனை வழங்குகிற ஆன்-லைன் குழுவில் டாக்டர்கள், செவிலியர்கள், மனநோய் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். உடனடி சிகிச்சைத் தேவை என்றால் ஆம்புலன்ஸ் வண்டி அனுப்பப்பட்டு உரிய மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவார். இதில் பிரசவம் சார்ந்த அழைப்புகள் அதிகம். இதற்கென 202 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் சேவை செய்கின்றன. பிரசவம் சார்ந்த அவசர உதவி திட்டத்திற்கு "ஜனனி எக்ஸ்பிரஸ்' என்ற வாகன உதவித் திட்டமும் உண்டு. பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனை செல்ல ஆலோசனை கேட்க பயன்படுத்தலாம்'' என்று தெரிவித்தார்.
இலவச மருந்து, மாத்திரை
ராஜஸ்தானில் பார்மஸிகள் தூங்கி வழிகின்றன என்று சொன்னார்கள். காரணம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதுதான். இத்திட்டத்தின் இயக்குநர் டாக்டர் அமித்
குமார் வர்மா சொல்கிறார்: ""மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் பலமடங்கு விலையைக் காட்டி மக்களைப் பயமுறுத்துகிறார்கள். சில ஆபத்துதவி மருந்துகளின் விலையோ கேட்கவே வேண்டாம். வானத்து உச்சிக்கு சென்றுவிடுகின்றன. நாங்கள் டெண்டர் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்து, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகிறோம். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னதாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் சுகாதாரத்துறை செயல்பாடுகளைப் பார்த்தோம். ஆலோசனைகளைப் பெற்றோம். டாக்டர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி சீட்டின் பேரில் மருந்துகள் வழங்கப்படுகின்றன'' என்றார். இவர் மருத்துவம் படித்த டாக்டர் மற்றும் ஐ.ஏ.எஸ்.
சேவை மையங்கள்
வேலைவாய்ப்பை உருவாக்க பஞ்சாயத்து யூனியன் அளவில் கிராம சேவை மையங்கள் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு, ஜாதிச் சான்றிதழ், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள், மின் கட்டணம் செலுத்துதல், ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தல் போன்றவை மிகக் குறைந்த செலவில் கிடைக்கிறது. இந்த மையத்திற்கு "இமித்ர' என்று பெயரிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டு அங்கேயே வேலை வழங்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜோத்வரா மையத்தில் இத்திட்டப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெறவும் திட்டமிடுகிறார்கள். எல்லாமே மத்திய அரசின் உதவியால் செயல்படுகிற திட்டங்கள்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு என்பதால் திட்டங்கள் அனைத்தும் நேரு பெயரில், இந்திராகாந்தி பெயரில், ராஜீவ்காந்தி பெயரில்தான் உள்ளன. மாறுதலுக்கு கஸ்தூரிபாய் காந்தி பெயரில் ஒரு திட்டம் இருக்கிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பெண் கல்வியை மேம்படுத்த- அதுவும் மலைப்பகுதியில் வசிப்போரிடையே 200 உறைவிடப் பள்ளிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலம், ஹிந்தி, விஞ்ஞானம், கணிதம் முக்கியப் பாடங்கள். இதுதவிர தையல், கம்ப்யூட்டர் படிப்பும் உண்டு. விளையாட்டும் உண்டு என்பது சொல்லாமலே தெரிய வரும். ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.1800 பாடப்புத்தகங்களுக்கானது. தினசரி ரூ.30 சாப்பாட்டு செலவுக்கு, இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உண்டு.
ஜெய்ப்பூர்: கண்டதும் கேட்டதும்
அரண்மனைகள் நிறைந்த நகரம் ஜெய்ப்பூர். ராஜா ஜெயசிங் நிர்மாணித்த ஊரானதால் அவரின் பெயராலேயே இந்நகரம் அழைக்கப்படுகிறது. அவரின் சிலை ஊரில் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் சட்டசபை அருகேயுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரம்தான் நாட்டில் உயரமானதாம். உயரம் 264 அடி. அவ்வளவு உயரத்தில் பறக்கும் தேசியக்கொடியும் மிகப் பிரமாண்டமானதாகத்தான் இருக்கிறது.
இதே பூங்காவில் மனித உருவில் நிறுத்தப்பட்டிருக்கும் பல வண்ண கற்பாறைகள், ராஜஸ்தானில் கிடைக்கும் கிரானைட் கற்களின் வகைகளாகும். எத்தனை வகையான கற்கள் உண்டோ அவற்றிலிருந்து சாம்பிளுக்கொன்றாக எடுத்து வந்து நிறுவியிருக்கிறார்கள். வெறும் பாறைகளை நிறுத்தினால் எப்படி? எனவே மனித உருவில் சிற்பம்போல நிறுவியிருக்கிறார்கள்.
ஜெய்ப்பூர் என்றாலே இளஞ்சிவப்புதான்! அதனால்தான் இந்நகரை "பிங்க் சிட்டி' என்று அழைக்கிறார்கள். பாரம்பரிய பெருமையை நிலைநாட்ட, அவ்வப்போது அரண்மனை, அரசுக் கட்டடம், மதில் சுவர்கள், தனியார் கட்டடங்கள், கடைகள், ஓட்டல்கள் என இளஞ்சிவப்பு நிறத்தை பூச்சு வேலை மூலம் மெருகேற்றுகிறார்கள். ஜவஹர்லால் நேரு பெயரிலான தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத்திட்ட (ஒசசமதங) நிதியுதவியின் பேரில் பூச்சு வேலை நடக்கிறது.
ஜெய்ப்பூரின் முக்கிய சாலைகளில் பேருந்துக்கென தனிப்பாதை உண்டு. இந்தப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்வதில்லை. இதுவும் ஒசசமதங திட்டம்தான்.
சுற்றுலா செல்லும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கு ஷேர் ஆட்டோவை அமர்த்தி கொண்டால் போதும். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்துவிடலாம்; செலவும் குறைவு. நினைத்த இடங்களிலும் இறங்கிக் கொள்ளலாம்.
ஜெய்ப்பூர் "பிரஸ் கிளப்' நாட்டிலேயே மிகவும் மூத்தது- வசதிகள் அதிகம். இந்த பிரஸ் கிளப்பில் பெரிய அளவிலான கூட்ட அரங்கு, மினி அரங்கு, நீச்சல் குளம், பார் வசதி, விளையாட்டுகள், உடற்பயிற்சிக்கூடம், கான்டீன் என அனைத்து வசதிகளும் உண்டு. இதன் தலைமைப் பொறுப்புக்கு வருவது சுலபமல்ல; நிறைய செலவு செய்ய வேண்டியிருக்குமாம்.
பாலைவனம் சோலைவனமாக மாறிய விந்தை
ஆரவல்லி மலையடிவாரம் பொட்டல் காடு. நடந்தால் கால் புதையும் மணல்; கடற்கரை மணல் போல. வெயில் கண்களை கூச வைக்கும். இவ்வாறாக இருந்த பகுதி தற்போது சோலைவனமாக மாறியிருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைக் குடில். சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்தில் விவசாயம்.
மணலில் நீர் காய்ந்து போகாமல் இருக்க, பிளாஸ்டிக் விரிப்புகளை பாத்தி பாத்தியாகப் போர்த்தி மணலை மூடியிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கில் ஆங்காங்கே துளை. செடிகளை நட வசதியாக. தரையில் பாம்புகளைப் போல ரப்பர் குழாய்கள். ஆங்காங்கே துளையிடப்பட்ட குழாய்கள். இந்த துளை வழியாகத்தான் நீர் வெளியேறுகிறது.
இவையனைத்தும் ஓரிடத்திலிருந்தே இயக்கும்படியான வசதியுடன் கணினியில் இணைக்கப்பட்டிருக்கிறதாம். ""தண்ணீர் பாய்ச்சுதல், தெளித்தல் எல்லாம் துல்லியமாக கணக்கிடப்பட்டு இயங்குகிறது. வீட்டில் இருந்தபடியே! வெளியூர் சென்றிருந்தாலும் கணினியில் இயக்கிவிட முடியும்'' என உறுதியாகச் சொல்கிறார் யோகேஷ்குமார் வர்மா. இவர் ராஜஸ்தான் ஆலிவ் கார்ப்பரேஷனின் மேலாளராக இருக்கிறார்.
""வசுந்தராதேவி முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சரின் இஸ்ரேல் பயணம் இத்திட்டத்திற்கு வழிவகுத்தது. அங்கிருந்த விவசாயப் பண்ணைகளைப் பார்வையிட்டு வந்ததன் பலன். ஐரோப்பிய நாடுகளின் ஆலிவ் விவசாயம் இங்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் ஆலிவ் எண்ணெய் இறக்குமதி 25 ஆயிரம் மெட்ரிக் டன்னை எட்டும். இதைக் கணிசமாகக் குறைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் ஐந்தாயிரம் ஹெக்டேரில் ஆலிவ் மரங்களை (செடிகளைப் போன்றே உள்ளது) நட்டு, பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறிய வர்மா, ஆலிவ் மரக்கன்றுகள் உற்பத்திப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
பதியன் போடுகிற முறையில் முருங்கைமரக் கிளை, ரோஜாச் செடி போன்று அதன் குச்சிகளை அதற்குத் தேவையான உரமிட்ட பைகளில் நட்டு வைத்து புத்தம்புது செடிகளை உருவாக்குகிறார்கள். குச்சிகள்- செடிகளாக உருவாகி மரமாகிற அதிசயத்தை அடுத்தடுத்த பிரிவுகளில் பார்க்கும்போது ஆச்சரியத்தில் நமது கண்கள் மேலும் விரியும்.
தக்காளி, மிளகாய் பயிரிடப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார் வர்மா. ஒரே கொத்தில் 60 தக்காளிப் பூக்கள். அத்தனையும் காயாகி, பழமாகும் என்றார். மிளகாய்ச் செடிகள் ஏழடி உயரம் வளர்வதாலும், தக்காளிச் செடி நாற்பதடி உயரம் வளர்வதாலும் அவற்றை படுக்கை வாக்கில் வளர்க்கிறார்கள். இதனைப் பார்த்து வியக்கும் நேரத்தில், ""இதே போன்று நம்ம ஊர் கிருஷ்ணகிரி விவசாயப் பண்ணைகளிலும் பார்க்க முடியும்'' என்றார் உடன் வந்திருந்த ஒரு பத்திரிகை நிருபர்.
பணப்பயிர்களாக சில மருந்துச் செடிகள், நட்சத்திர ஓட்டல்களின் பயன்பாட்டுக்கென சூப் வகைச் செடிகள், ஒவ்வொன்றின் சுவையும் வித்தியாசமானது; அலாதியானது.
இத்திட்டத்தில் மாநில அரசு இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் குறிப்பிட்ட அளவு நிதியும் வழங்கி ஓர் அங்கமாக இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியும் உண்டு.
பசுமைக்குடில் அமைத்துத் தருவது அரசுதான்!
பாலைவனத்தை சோலைவனமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 40 சதவீதம் மானியம் வழங்கி, பசுமைக்குடில் அமைத்துக் கொடுத்து, சொட்டு நீர் பாசனத்துடன் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கான அமைப்பு முறைகளை தோட்டக் கலை மற்றும் வேளாண் துறை செய்து தருகிறது.
சொட்டு நீர் பம்பு செட் இயங்கத் தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் பெறுகிறார்கள். இதற்கு மரபுசாரா எரிசக்தித் துறை 80 சதவீதம் மானியம் வழங்குகிறது. இந்த அமைப்பையும் ஏற்படுத்தித் தருவது அரசுதான். விவசாயி நில உடமையாளராகவும், நீட்டிய படிவங்களில் கையொப்பமிடுகிறவராக மட்டுமல்ல; உழைப்பவராகவும் இருக்க வேண்டும்.
பலியா கிராமம் ஜெய்ப்பூரை அடுத்த பாஸ்ஸி பஞ்சாயத்து யூனியனில் இருக்கிறது. இங்கு ரமண்லால் மீனா குடும்பம், கூட்டுக் குடும்பமாக வசிக்கிறது. "மீனா' என்பது ராஜஸ்தானில் முக்கிய ஜாதிப் பிரிவு. ரமன்லால் குடும்பத்தினர் உயர்வகை மற்றும் பணப் பயிர்களாக உள்ள காய்கறிகளைப் பயிரிடுகிறார்கள். ஏராளமான விவசாய நிலம் இருப்பதால் குடும்பமே உழைக்கிறது. விளைந்த காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல குளிரூட்டப்பட்ட வாகனத்தை வைத்திருக்கிறார்கள். வாகனத்தின் விலை ரூபாய் பதினாறு லட்சம். இதற்கும் மானியம் உண்டாம்!
ஒரு வாரம் ராஜஸ்தான் பயணம். சென்னைப் பத்திரிகை தகவல் மையத்தின் ஏற்பாடு
ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர் பகுதிகளில்
அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளை அறிவது நோக்கம்.
பயணத்தில் கண்டதும் கேட்டதும் சில துளிகள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


