நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆசியாவிலேயே மிகப் பெரிய கிருஷ்ணர் கோயில்!

மக்கள் அனைவரும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் ஆன்மிக ஞானம் பெற்று விழிப்புணர்வு அடைய வேண்டுமென்பதே இஸ்கான் என்ற அமைப்பின் கொள்கையாகும்.  அந்தக்

News image
Updated On :9 நவம்பர் 2013, 7:29 am

அ. குமார்

மக்கள் அனைவரும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் ஆன்மிக ஞானம் பெற்று விழிப்புணர்வு அடைய வேண்டுமென்பதே இஸ்கான் என்ற அமைப்பின் கொள்கையாகும்.  அந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே மிகப் பெரிய கிருஷ்ணர் கோயிலை அந்த அமைப்புக் கட்டியுள்ளது.

பெங்களூர் ராஜாஜி நகர் வெஸ்ட் ஆஃப் கார்ட் ரோடில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள "இஸ்கான்' ஸ்ரீராதா கிருஷ்ணா கோயில்தான் அது.

 1966-இல் "இஸ்கான்' அமைப்பைத் தொடங்கிய பிரபு பாதா,  1977-ஆம் ஆண்டில் மறையும் வரை அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா உள்பட இந்தியாவிலுமாக 108 இடங்களில் ஸ்ரீராதாகிருஷ்ணா கோயிலைக் கட்டினார். அவற்றில் ஒன்றுதான் இந்த பெங்களூர் கோயில்.

1987-ஆம் ஆண்டில் மலைப்பிரதேசமாகக் காட்சியளித்த இந்த இடத்தில் ஓலை கொட்டகை ஒன்றில்தான் இந்த இஸ்கான் அமைப்பு தொடங்கப்பட்டது.

இங்கு கோயில் கட்டுவதற்கான நிலத்தை அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே வழங்கினார். அப்போது முதலே கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. பத்தாண்டுகளாகத் தொடர்ந்த பணி 1997-ஆம் ஆண்டில் முடிவடைந்தது.

1997-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா இந்தக் கோயிலைத் திறந்து வைத்த பின்னர், பெங்களூர் வரும் சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் லால்பாக், கப்பன்பார்க், விதானசவுதா என்ற வரிசையில் இஸ்கான் கோயிலும் சேர்ந்துவிட்டது.

 இஸ்கான் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ண பலராம் மந்திர், ஸ்ரீபாலாஜி வெங்கடேஸ்வர தேவஸ்தானம், ஸ்ரீராதாகிருஷ்ண சந்திர மந்திர், ஸ்ரீ நீதாய் கவுரங்கா மந்திர், ஸ்ரீநரசிம்மதேவா - பிரகலாதா மந்திர் என ஐந்து கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில் விக்கிரகங்கள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. கோபுரக் கலசங்களும் தங்க முலாம் பூசப்பட்டவையாகும். மூலஸ்தானம் அருகே "இஸ்கான்' அமைப்பை உருவாக்கிய சுவாமி பிரபு பாதா சிலை உள்ளது.

கோயிலுக்காக 55 அடி உயர கொடி மரமும், குளமும் அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலைச் சுற்றிலும் பசுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறுகின்றனர்.

  இன்று தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் வாரந்தோறும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் கோயிலின் அமைப்பையும் கட்டடக் கலையின் அழகையும் கண்டு ரசிக்க வருகின்றனர்.

  இஸ்கான் கோயில் எங்கெங்கு உள்ளதோ அங்கு வரும் பக்தர்கள், அப்பகுதி மக்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலமாகவே இஸ்கான் அமைப்புகள் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 பெங்களூர் இஸ்கான் கோயிலில் நூலகம், கலை அரங்கு, விடியோ உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவைகளை தன்னார்வத் தொண்டர்களாக உள்ள பக்தர்களே கவனிக்கின்றனர். இங்கு சேவைசெய்ய விரும்புகிறவர்கள் மாமிசம், மது, புகைபிடித்தல் ஆகியவைகளை மறந்து ஜாதி மத பேதமின்றி பணியாற்றலாம். ஹரே கிருஷ்ணா தாரக மந்திரத்தை ஒவ்வொரு முறையும் 108 வீதம் நாளொன்றுக்கு 16 முறை ஜபிக்க வேண்டும். பக்தர்கள் இங்கேயே தங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பிரம்மசாரியாகவும் இருக்கலாம். இல்லறத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கலாம். பகுதிநேர பணிவிடையும் செய்யலாம். இங்கேயே தங்கியுள்ள பக்தர்கள் தினமும் விடியற்காலை 3 மணிக்கு எழுந்து 4.15க்கு கோயிலில் நடைபெறும் பூஜைக்கு வர வேண்டும். காலை 9.30 மணி வரை பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்.

 மக்கள் வறுமையில் வாடக் கூடாதென்பது பிரபுபாதாவின் உயர் கொள்கை. இக் கொள்கை காரணமாக, பெங்களூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 20 ஆயிரம் ஏழை மாணவ - மாணவியர்களுக்கு மதிய உணவை "இஸ்கான்' இலவசமாக வழங்குகிறது. 2000-ஆம் ஆண்டில் "அக்ஷய பாத்திரம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு மதிய உணவுக்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. சராசரி ஒரு மாணவனுக்கு மதிய உணவுக்காக ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. இந்தச் செலவு அனைத்தும் பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்துதான் செயல்படுத்தப்படுகிறது.  இந்தியாவிலேயே அரசு சாரா அமைப்பாக  மாணவ - மாணவியர்களுக்கு இலவச மதிய உணவை பெங்களூரு இஸ்கான் அமைப்பு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.