ஆர்.கே.நாராயணனுக்கு மால்குடி! சுதா நாராயணமூர்த்திக்கு அல்லதஹள்ளி!
""என்னுடைய மனைவி திறமையான என்ஜினியர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட'' என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்பு


""என்னுடைய மனைவி திறமையான என்ஜினியர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட'' என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்பு சுதாமூர்த்தியை அறிமுகப்படுத்தியபோது, சுதாமூர்த்தி தனக்காக, தனக்கு மட்டுமே, தன்னுடைய தனிமைக்காக எழுதுவதாக கூறினாரே தவிர, விமர்சனங்களைக் கண்டு பயந்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் மட்டுமே எழுதி வந்த இவர் ஆங்கிலத்திலும் எழுத விரும்பினார்.
அவரது முதல் ஆங்கில நாவல் "டாலர் பஹூ' சிறந்த விற்பனை வரிசையில் இடம்பெற்றதோடு, தொடர்ந்து அவர் எழுதிய நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. முன்னணி பதிப்பகத்தினர் அவரது படைப்புகளை வெளியிடப் போட்டியிட்டனர்.
""பல ஆண்டுகளாக என்னுடைய புத்தகங்களின் விற்பனைக்குக் காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்களா? என்னுடைய கணவர் நாராயணமூர்த்திக்காக பதிப்பகத்தினர் வெளியிடுகிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஆனாலும் என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து மறுபதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன'' என்று சொல்லும் சுதாமூர்த்தியின் புத்தகங்கள் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. குஜராத்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம் மற்றும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வெளியான "ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' இவரது 150-வது நாவலாகும்.
இன்னும் தாங்கள் ஓர் எழுத்தாளர்தான் என்பதில் சந்தேகமிருக்கிறதா? என்று கேட்டால், ""இப்போது இல்லை. முதலில் விமர்சனங்களைக் கண்டு கவலைப்பட்டதுண்டு. எழுதுபவர்கள் எழுதட்டும். என்னுடைய வாசகர்கள்தான் விமர்சகர்கள். உலகம் முழுவதும் பல புத்தகக் கடைகளில் என்னுடைய புத்தகம் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். புத்தகம் தரமாக இருந்தால் வாசகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். இல்லையெனில், நிராகரித்து விடுவார்கள். இந்த உண்மையை உணர்ந்த பின்னரே நான் சுதந்திரமாக இருப்பதை அறிந்தேன். என்னுடைய வெற்றியை அளவிடுபவர்கள் வாசகர்கள்தான். அதனால் இப்போது விமர்சனங்களைக் கண்டு பயப்படுவதில்லை'' என்று கூறுகிறார் சுதாமூர்த்தி. அவரது பழைய வீட்டின் பக்கத்திலேயே புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அவரது மகன் ரோஷன் குடும்பம் அங்கு வசிக்கிறது. அவரது மகள் அக்ஷதாவும் குடும்பத்துடன் அங்கு இருக்கிறார். புதிய வீட்டில் இவருக்கென்று ஒரு தனி லைப்ரரி மட்டுமே உள்ளது. மற்றபடி இவரும் இவரது கணவரும் பழைய வீட்டிலேயே வசிக்கின்றனர்.
சேத்தன் பகத், அமிஷ் திரிபாதி, சுதாமூர்த்தி ஆகியோர்தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதும் ஆசிரியர்களாவர். தற்போது கிடைக்கும் ராயல்டி தொகை மூலமாகவே இவர் சுதந்திரமாக வாழ முடியும். இவரது நாவல்கள் அனைத்தும் முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு பின்னர் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுகிறார். ஆரம்பத்தில் கன்னட மீடியத்தில் படித்த இவர் கல்லூரியில் படிக்கும்போதுதான் ஆங்கிலத்தை கற்கத் தொடங்கினாராம்.
""அதனால் என்னுடைய நாவல்கள் 12-ஆம் வகுப்பு புத்தகத்தை போலவே இருக்கும். டிக்ஷ்னரியைத் தேட வேண்டாம். என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களையே நாவலாக எழுதி வருகிறேன்'' என்கிறார்.
"ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' நாவல் பத்தாண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் "ப்ரீதி' என்ற பெயரில் முதலில் வெளிவந்தது. "அல்லதஹள்ளி' என்ற கற்பனைக் கிராமத்திலிருந்து கணவனுடன் நகரத்திற்கு வரும் பெண்ணொருத்தி, நகர வாழ்க்கையை ஏற்க முடியாமல் தவிப்பதுதான் கதையின் கருவாகும். இதைப் படித்த பல வாசகர்கள் ஆர்.கே. நாராயணனின் கற்பனை கிராமமான "மால்குடி'யை தேடியதுபோல் "அல்லதஹள்ளி'யையும் தேடத் தொடங்கினார்களாம்.
இரண்டாவது முறையாக "இன்போசிஸ்' பொறுப்பை ஏற்றுள்ள கணவர் நாராயண மூர்த்தியைப் பற்றி கூறும்போது, ""முதலில் அவரது வயதைப் பற்றிய கவலை வந்தது உண்மை. இன்போசிûஸப் பொறுத்தவரை அது அவரது மூன்றாவது குழந்தை. யார் எதைச் செய்தாலும் நான் குறை சொல்ல மாட்டேன். என் கணவராகட்டும், என் பிள்ளைகளாகட்டும் அவரவர் விருப்பப்படி இந்தப் பந்தயத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். "ரோம் நகரம் ஒரே நாளில் உருவாக்கப்படவில்லை. எல்லாமே நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதனால் ஓய்வெடுங்கள். நாளை என்பது மீண்டும் ஒருநாளே' என்று சொல்வேன். வீட்டில் அலுவலக விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. முழுமையான அமைதி. 35 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் திருமணமானவராக இருந்தால் இந்த அமைதியைப் புரிந்து கொள்ள முடியும்'' என்கிறார் சுதாமூர்த்தி.
ஒன்றரை ஆண்டுகளுக்கொரு முறை நாவல் எழுதுவது என்ற பழக்கத்தைக் கொண்டுள்ள இவர், மூன்றாண்டுகளுக்கு முன் கல்வெட்டுகள் ஆராய்ச்சி குறித்த ஓராண்டுகாலப் பயிற்சியையும் முடித்துள்ளார். இதற்காக கர்நாடகாவில் பல்வேறு சரித்திர இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். தற்போது குழந்தைகளுக்கான புத்தகமொன்றை தன்னுடைய பேத்திக்காக எழுதத் தொடங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...