புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஏற்றுமதி - இறக்குமதி கொள்கைகளே ரூபாய் மதிப்பு குறைவதற்குக் காரணம்!

ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. கல்வி, மருத்துவச் செலவுகள் எல்லாம் உயர்ந்துவிட்டன. சாதாரண மனிதன் எப்படி உயிர் வாழ்வது?

News image
Updated On :5 அக்டோபர் 2013, 10:30 am

ந. ஜீவா

ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. கல்வி, மருத்துவச் செலவுகள் எல்லாம் உயர்ந்துவிட்டன. சாதாரண மனிதன் எப்படி உயிர் வாழ்வது? இந்தநிலை மாறவே மாறாதா? என்றெல்லாம் குரல்கள் எழுகின்றன.

இதற்குப் பதிலாக -

""இந்த நிலை மாறும். காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளைக் கடைப்பிடித்தால்'' என்கிறார் அ.அண்ணாமலை.

சென்னை தியாகராய நகர் தக்கர் பாபா வித்யால  யத்தில் "காந்தி கல்வி மைய'த்தை நடத்தி வருவதுடன், தமிழ்நாடு சர்வோதய மண்டலின் செயலாளராகவும் அவர் இருக்கிறார். அவரிடம் பேசினோம்:

காந்தியப் பொருளாதாரச் சிந்தனை இயந்திரமயத்துக்கும், நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் எதிரானதல்லவா? இது இப்போது பொருந்துமா?

இன்றையப் பொருளாதார வல்லுநர்கள் எல்லாரும் மக்கள் அனைவருக்கும் கார் கொடுப்பதைப் போலவும், காந்தியப் பொருளாதாரம் வந்து அதைத் தடுத்துவிடுவதைப் போலவும்  பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

காந்தியப் பொருளாதாரச் சிந்தனை தொழில்நுட்பத்துக்கு எதிரானதல்ல. தொழில் நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எப்படிப்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சி வேண்டும் என்பது முக்கியம். நமது நாட்டுக்கு, நமது மக்களுக்கு ஏற்புடைய தொழில் நுட்பம் வேண்டும். வேறு நாடுகளின் தொழில் நுட்ப வளர்ச்சி நமக்குப் பொருந்தி வராது.

நமது நாட்டின் பாரம்பரியத் தொழில்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவற்றில் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் பாரம்பரியத் தொழில்களை விட்டு வெளியேற மாட்டார்கள். ஆனால் நமது நாட்டில்  நடந்ததோ வேறு.

டிராக்டர் முதலான இயந்திரங்களுடன், செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்து, செயற்கை விதை என இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தால், விவசாயத்துக்குச் செலவு செய்யும் தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் விளை பொருட்களுக்கு கிடைக்கும் விலையோ குறைந்து போகிறது. விவசாயத்தில் வருமானம் குறைந்து போனதால், விவசாயி வேறு வழியின்றி நகரத்துக்கு பிழைப்புத் தேடி வந்துவிடுகிறான்.  எனவே காந்தியம் சொல்லும் இயற்கை முறையிலான வேளாண்மையே நமக்கு உகந்தது. கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதுவே அதிகரிக்கும்.

இயற்கைமுறையிலான விவசாயப் பொருளாதாரம் மட்டுமே போதுமானதா? தொழில்கள் வளர காந்தியம் என்ன சொல்கிறது?

வளர்ச்சி என்பது நகர்ப்புறம் கிராமப்புறம் இரண்டிலும் இருக்க வேண்டும். வளர்ச்சியின் பலன்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். நகரங்களில் மட்டுமல்லாமல், தொலைதூரக் கிராமங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி, தேவையான மூலப் பொருட்கள் கிடைக்கும் வசதி போன்றவை இருந்தால்தானே கிராமங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள்? முதலீடு செய்வார்கள்?

நாம் நமது குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உருளைக் கிழங்கு சிப்ஸ் தமிழ்நாட்டுக் கிராமங்களில் செய்யப்படுவதல்ல. மே.வங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் செய்யப்படுவது. ஆனால் அது தமிழ்நாட்டுக் கிராம கடைகளில் விற்கப்படுகிறது. இவ்வாறு எங்கோ தொலைதூரத்தில் தயாரிக்கப்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்து அவற்றை விற்பனை செய்ய வேண்டுமா? உருளைக் கிழங்கு சிப்ûஸ நமது கிராமத்தில் செய்ய முடியாதா? அதற்கான தொழிற்சாலையை கிராமத்தில் நிறுவ முடியாதா? கிராமங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை நகரங்களுக்குக் கொண்டு சென்று தொழிற்சாலை நடத்துவதைவிட, கிராமப்புறங்களிலேயே தொழிற்சாலைகளை அமைக்கலாமே? மேலும், பெரிய கம்பெனிகளை கிராமப்புறங்களில் தொடங்க இப்போதுள்ள போக்குவரத்து வசதி, தொலைத் தொடர்பு வசதிகளே போதுமானது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இப்போது குறைந்துவிட்டதே... காந்தியப் பொருளாதாரச் சிந்தனைமுறையில் இதற்கான மாற்று என்ன?

ரூபாய் மதிப்பு ஏன் குறைந்தது? நமது உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறைவு. ஆனால் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது அதிகம். இதனால்தான் நமது ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது.

விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். அதனால் நமது நாட்டில் வெங்காய விலை, அரிசி விலை, காய்கறி விலை எல்லாம் உயர்ந்து விடுகின்றன. பெட்ரோல், டீசல் போன்றவற்றை அளவுக்கதிகமாக இறக்குமதி செய்கிறோம். இப்படிப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளே ரூபாய் மதிப்பு குறையக் காரணம். இந்தக் கொள்கைகளை மாற்ற வேண்டும்.

அரசாங்கம் அதிகப்படியான பஸ்கள், ரயில்களை விட்டு பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்தினால், இவ்வளவு கார்களும், இருசக்கர வாகனங்களும் தேவையில்லையே? பெட்ரோல், டீசல் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்கலாமே? அதற்கும் மேலாக நமது நாட்டுப் பொருளாதாரம் இறக்குமதியை நம்பிக்கொண்டு இருக்காமல் சுயசார்புப் பொருளாதாரமாக இருக்குமே?

உலகமய, தாராளமய காலத்தில் சுயசார்புப் பொருளாதாரம் சாத்தியமா?

பிறநாடுகளுடன் பொருளாதார உறவுகள் மேற்கொள்ளாமல் எந்த நாடும் தனித்திருக்க முடியாது. அதே சமயம், நமது பொருளாதாரத்தை நாம்தான் திட்டமிட வேண்டும்.

உலகநாடுகளிடமும், உலக வங்கியிடமும் நிறையக் கடன் வாங்குகிறோம். அப்படி வாங்கிய கடனை  நாட்டின் அடிப்படையான பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவு செய்வதில்லை. கடன் வாங்கி ரோடு போடுகிறோம். கடன் கொடுத்தவர்கள் சொல்கிற நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நாட்டின் பொருளாதாரத் திசை வழியைக் கடன் கொடுத்தவர்கள் தீர்மானிக்கிறார்கள்.  அப்படியானால், சுதந்திரமான பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்?

அந்நிய முதலீடுகளை ஈர்க்க என்ன செய்யலாம்? என்று திட்டமிடுவதைவிட, நமது உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியைக் குறைத்து, நமது பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றுவதற்கு முதலில் திட்டமிட வேண்டும். காந்தியம் இப்படிப்பட்ட சுயசார்புப் பொருளாதாரத்தைத்தான் வலியுறுத்துகிறது.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.