தொழிலதிபராகும் பாடகி!
பின்னணிப் பாடகி, தொழில் கண்காணிப்பாளர், டப்பிங் கலைஞர் என அயராது உழைத்துவரும் சின்மயி ஸ்ரீவாதா, தொழிலதிபர் என்ற


பின்னணிப் பாடகி, தொழில் கண்காணிப்பாளர், டப்பிங் கலைஞர் என அயராது உழைத்துவரும் சின்மயி ஸ்ரீவாதா, தொழிலதிபர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். "ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான சின்மயி, அவரது குடும்பத்தில் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற மூன்றாவது தலைமுறை கலைஞராவார்.
""சிறுவயதில் என்னுடைய தாய் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் பயிற்சியளித்த போதே சங்கீதத்தில் மட்டுமின்றி, வேறு துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. முதன்முதலாக ஏ.ஆர்.ரகுமானில் தொடங்கி விஷால் சேகர் இசையமைப்பில் பாடியது வரை இது முடிவற்ற பயணமாகவே தோன்றியது. சென்னை எக்ஸ்பிரஸில் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது, பாலிவுட்டில் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தொடர்ந்து பாட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது'' என்கிறார்.
""மும்பையில் வளர்ந்த எனக்கு தமிழ் உச்சரிப்பு நடை எப்போதுமே ஒத்துவருவதில்லை. என்றாலும் தமிழை ஒழுங்காகப் பேசுவதற்கான முயற்சியில் இறங்கியபோதுதான் என்னுடைய தாய்மொழி தமிழின் அருமையை முழுமையாக உணரமுடிந்தது'' என்று கூறும் சின்மயி, ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என
பல மொழிகளில் பாடுவதோடு, பல தென்னிந்திய நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுப்பதிலும் வல்லவராக விளங்குகிறார்.
மொழிகளை நேசிக்கும் சின்மயி தற்போது "ப்ளு எலிஃபெண்ட்' என்ற பெயரில் தொடங்கியுள்ள நிறுவனம் மூலம் இவரது குடும்பத்திலேயே வர்த்தகத் துறையில் இறங்கும் முதல் பெண்மணியாக உருவெடுத்துள்ளார். ""என்னுடைய உறவினருக்காக பல கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும்போதுதான் இந்தத் துறையில் ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதை உணர்ந்தேன். இது குறித்து மேலும் ஆய்வு செய்த பின்னரே தகவல் துறையில் இணைந்து மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவதென்றும் தீர்மானித்தேன். இதுவரை இருந்த துறையிலிருந்து வெளியே வந்து புதிய துறையில் இறங்குவது சற்று கடினமானதுதான் என்றாலும் இந்தப் போராட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. வெற்றியைக் கொண்டாட முடிகிறது'' என்கிறார்.
இவரது வாடிக்கையாளர்களான போப்பஸ், போச், ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்கள் பணிகளைக் கொடுத்து வருகின்றன. பார்ச்சூன், யு.எஸ்.மாநிலத்துறையின் குளோபல் உமன்ஸ் மென்ட்டாரிஸ் பார்ட்னர்ஷிப்பில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களில் ஒருவராக இவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தப் புது அனுபவம் குறித்து சின்மயி என்ன கூறுகிறார்?
""அடிப்படையில் வர்த்தகம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். இந்தத் துறையைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று இந்த நாட்டின் பிரதிநிதியாகவும் இருப்பதால் இந்த முயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. தேவையான ஈடுபாட்டை இதில் செலுத்தியிருப்பதால் லாபமடைய முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது''என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...