காகிதத்தில் நாற்காலி... பிளாஸ்டிக் பாட்டிலில் சுவர்!
சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடுபேட்டை கிராமத்தில் 400 மாணவர்கள் பயிலும் "சிறகு மாண்டிசோரி பள்ளி'யை


சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடுபேட்டை கிராமத்தில் 400 மாணவர்கள் பயிலும் "சிறகு மாண்டிசோரி பள்ளி'யை நடத்தி வருகிறார் உமா.
""எங்களுடைய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சுற்றுச் சூழல் பற்றிக் கற்றுக் கொடுக்கிறோம். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம்'' என்கிறார் அவர்.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பழைய செய்தித்தாள்களைப் பயன்படுத்தி மேசை, நாற்காலிகள் எல்லாம் செய்கிறார்கள். 120 கிலோ எடையுள்ள குண்டு ஆசாமிகள் அந்த நாற்காலியில் உட்கார்ந்தாலும் ஒன்றும் ஆகாதாம்.
""எங்கள் பள்ளியில் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது இரண்டு விஷயங்களுக்கு. ஒன்று கழிவுப் பொருட்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவது, மற்றொன்று சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உருவாக்குவது. இதற்காக எங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்'' என்கிறார் உமா.
""காலையில் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவனும் ஆய்வுக் கூடம் செல்ல வேண்டும். அங்கே ஒரு சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருக்கும். மாணவன் அந்தச் சைக்கிளில் அமர்ந்து பெடலைச் சுற்ற வேண்டும். ஐந்து நிமிடம் சுற்றியதும் அந்த மாணவன் சென்று விட வேண்டும். இப்படியே ஒவ்வொரு மாணவனும் செய்ய வேண்டும். எதற்கு என்கிறீர்களா? பள்ளியின் ஆய்வுக்கூடத்துக்குத் தேவையான மின்சாரத்தை இப்படித்தான் நாங்கள் உற்பத்தி செய்கிறோம். சைக்கிளில் இணைக்கப்பட்டுள்ள டைனமோ மற்றும் கருவிகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
பாடப் புத்தகங்களில் வரும் பாடத்தில் மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி ஒரு பாடம் இருந்தால் மாணவர்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொள்வார்கள்? ஆர்வம் காட்டுவார்கள்? அதற்குத்தான் இந்த சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஏற்பாடு. அதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சூரிய ஒளி மின்சாரப் பேனல்களையும் பள்ளியில் பொருத்தியிருக்கிறோம்'' என்கிறார் உமா.
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சுவரில் செங்கலுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்துக் கட்டியிருந்தார்கள். கொஞ்சம் அருகே சென்று கவனித்தால், காலியான பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை அடைத்து, அவற்றை செங்கலுக்குப் பதிலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இதென்ன புதியதாக இருக்கிறதே? பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்திக் கட்டுவதால் சுவர் வலிமையாக இருக்குமா? சந்தேகத்தைக் கேள்விகளாக்கினோம்.
""நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திவிட்டுத் தூக்கிப் போடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏராளம். அவை மண்ணில் எளிதில் மக்குவதுமில்லை. அழிவதுமில்லை. அந்தப் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சுற்றுச் சூழலுக்குக் கேடு இல்லாத வகையில் எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தோம். கட்டடத்துக்குப் பயன்படுத்த முடிவு செய்தோம். இதனால் கட்டடத்தின் வலிமை குறைவதில்லை. இந்தப் புதிய முறையை மாணவர்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்தியதால், அவர்களுக்குப் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் எவ்வளவு கேடுகள் ஏற்படுகின்றன என்பதும் தெரியும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் மிக நன்றாகத் தெரியும்'' என்கிறார் உமா.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோனார் நடைபாதையில் வசிப்பவர்களின் குழந்தைகள். பிச்சையெடுப்பதையே தொழிலாகக் கொண்டு பிழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
""பிச்சையெடுப்பதையே தொழிலாகக் கொண்டு பிழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. பள்ளி திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இருக்கும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவர்களைப் பிச்சையெடுக்க அனுப்பிவிடுவார்கள் பெற்றோர். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, பழைய காகிதத்தில் பொருட்களைச் செய்வதற்குக் கற்றுக் கொடுக்க முடிவெடுத்தோம். இப்போது எங்கள் மாணவர்கள் பழைய காகிதத்தைப் பயன்படுத்தி டேபிள், நாற்காலி, ஆபரணங்கள் எல்லாம் செய்கிறார்கள். அப்படிச் செய்த பொருட்களை சனி, ஞாயிறுகளில் விற்பனை செய்கிறார்கள். அதாவது பிச்சையெடுப்பதில்லை. இதற்காகத்தானே நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம்?''
என்ற உமாவிடம், ""மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதைவிட பெற்றோர் பிச்சையெடுக்காமல் இருக்க அவர்களுக்குத் தொழிற் பயிற்சி தருவது மேல் அல்லவா?'' என்று கேட்டோம்.
""அந்த முயற்சியும் எங்களிடம் உள்ளது. இப்போது சென்னையில் சிக்னல் அருகே கார்கள் நிற்கும்போது காகிதத்தில் செய்யப்பட்ட பொருட்களை- குறிப்பாக ஆபரணங்களை - விற்பனை செய்கிறார்கள். பொம்மைகளை விற்பனை செய்கிறார்கள். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு சிலர் ஆட்டோ ஓட்டுகிறார்கள். இது எங்களுடைய முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்.
""எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. அடுத்த ஆண்டு 11 ஆம் வகுப்பு வர இருக்கிறது. ஆனால் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவனை நாங்கள் கல்லூரி வரை படிக்க வைக்கிறோம். எங்களிடம் பத்தாவது படித்த மாணவர்களில் மூன்று பேர் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்கிறார்கள். இருவர் எம்பிஏ படிக்கிறார்கள்'' என்கிறார் பெருமையாக.
உமா பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை செüகார்பேட்டையில்தான். நகரத்தில் பிறந்தாலும் அவர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது என்னவோ, "தரிசு நில மேம்பாட்டுக்கு உதவும் அரசின் திட்டங்கள்' என்ற பொருளில் ஆராய்ச்சி செய்துதான்.
""நகரத்தில் பிறந்தாலும் எனக்கு இயற்கையின் மீதும், சுற்றுச் சூழல் மீதும் எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால்தான் எங்கள் பள்ளியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் இருக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்முறைகளை வைத்திருக்கிறோம்'' என்கிறார்.
""சுற்றுசூழலுக்கு உகந்த காகிதப் பொருட்கள் ஆகட்டும், பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்திய சுவர் ஆகட்டும், சைக்கிளைச் சுற்றுவதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமாகட்டும் இவற்றையெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஸ்வராஜ் பல்கலைக்கழகத்தின் சிக்ஷாந்தரில் இதற்கான பயிற்சி தருகிறார்கள். எங்கள் பள்ளியின் ஆசிரியர்களையும், தன்னார்வத் தொண்டர்கள் சிலரையும் ராஜஸ்தானுக்கு இதற்காக அனுப்பி வைத்துப் பயிற்சி பெறச் செய்தோம். அவர்கள் கற்றுக் கொண்டதை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளிக்கும் எங்கள் பள்ளியை நடத்த நன்கொடைகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். எங்களுடைய பணியின் அருமையைத் தெரிந்து கொண்டவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்'' என்கிறார் உமா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...