படப்பிடிப்பின் இடைவெளிகளில் ஓவியம் வரைவேன்!
அரை மணி நேரத்தில் நான்கு விதங்களில் ஒரே உருவத்தை வரையும் திறமை ஹன்சிகாவுக்கு உண்டு. ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு ரசனையைப் பிரதிபலிக்கின்றன.


இந்த முறை நாம் சந்திப்பது ஓவியர் ஹன்சிகாவை... நடிப்பு தவிர ஓவியம் வரைவதிலும் திறமை பெற்ற ஹன்சிகா ஏற்கெனவே ராதை - கிருஷ்ணா, விநாயகர் உள்ளிட்ட பல்வேறு படங்களை வரைந்திருக்கிறார். விரைவில் தன் ஓவியங்களைக் கண்காட்சியாக சென்னையில் வைக்கவும் திட்டம் வைத்திருக்கிறார்.
அரை மணி நேரத்தில் நான்கு விதங்களில் ஒரே உருவத்தை வரையும் திறமை ஹன்சிகாவுக்கு உண்டு. ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு ரசனையைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வோர் ஓவியத்தையும் பார்த்து ரசிக்கும் ஹன்சிகாவின் முகத்தில் அத்தனை சிரிப்பு!
""கண்ணும், சிரிப்பும்தான் என்னிடம் அழகாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இப்போது நான் வரைந்த ஓவியங்களும்தானே..!'' பூரித்துக் கேட்கும் ஹன்சிகாவிடம்....
""ஆமாம், உங்களைப்போல்
உங்கள் ஓவியங்களும் அழகாகத்தான் இருக்கின்றன...'' என்றதும், ""கேட்பதற்காகச் சொல்லக் கூடாது. உண்மையாகவே நீங்கள் அப்படிச் சொல்லியிருந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். ஓவியத் திறமை என்பது என்னிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. சின்ன வயதில் இருந்தே சினிமா.. சினிமா... என பரபரப்பாக இருந்ததால், எனக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை வெளியே எடுத்து வைக்க முடியவில்லை. இப்போது வீண் விஷயங்களில் அதிகம் தலைகாட்டாமல் இருப்பதால், கிடைக்கும் நேரத்தை என்ன செய்யலாம்? என யோசித்தபோதுதான், மீண்டும் ஓவியர் என்கிற இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இன்னும் அதிக நம்பிக்கையை உண்டாக்கும் விதத்தில் நாளுக்கு நாள் ஓவியங்களை வரைந்து வருகிறேன்'' என்றார்.
தனியாக இருப்பதே பாதுகாப்பு என்கிற மனநிலைதான் உங்களை ஓவியராக முன் நிறுத்தியது என எடுத்துக் கொள்ளலாமா...?
மும்பையில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் நிறைய ஓவியப் பள்ளிகள் இருக்கும். படப்பிடிப்பு இல்லாத வேளைகளில் அம்மா அந்தப் பள்ளிகளுக்கு அழைத்துப் போவார். படப்பிடிப்புத் தளங்களைவிட அங்கேதான் நான் அதிக சந்தோஷமாக இருந்தேனாம். அதனால் அந்தப் பள்ளிகளுக்கு அடிக்கடி அழைத்துப் போவார். வண்ணத்தின் அழகு வெளிச்சத்தில்தான் தெரியும் என்பதுபோல், எனக்கு இன்னொரு விதமான அழகும், ஆர்ப்பரிப்பும் அங்கு இருந்தன. ஓவியங்கள் மீதான வசீகரம் பிடித்துப்போக முழுவதுமாக அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஹீரோயின் என்கிற அந்தஸ்துக்கு வந்த பின் ஓவிய உலகில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு விஷயம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அதில் கவனம்கொள்ள வைத்திருக்கிறது. எதையாவது ஒன்றை உணர்வதும், உணர்த்துவதும்தானே வாழ்க்கை.
காயப்படுத்தாத அனுபவங்கள், திணிக்கப்படாத பொறுப்புகள் என பெரிய வாழ்க்கை கிடைக்கும்போதுதான் ஓவியங்கள் போன்ற அரியதொரு விஷயங்கள் மனதில் உண்டாகும்.... சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உங்களுக்கு அப்படியொரு மனநிலை கிடைக்குமா...? சினிமா வேறு ஒரு தளமாச்சே...?
நீங்கள் கேட்பதன் அர்த்தம் புரிகிறது. மும்பையில் உள்ள போடார் என்கிற சர்வதேசப் பள்ளியில் படித்தேன். பிரேயருக்குப் போகவில்லை என்றால் அடிப்பார்களோ என்று பயந்து போயிருக்கிறேன். நான் உண்மையா கடவுளுக்குக் கீழ்ப்படிகிறேனா, இல்லையா என்பதை பற்றி பெரியவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. நான் நல்லா ஜெபம் செய்கிற மாதிரி நடிப்பேன். அதுக்கே என்னை ஸ்கூலில் லீடராக்கி விட்டார்கள். அடுத்தவர்களுக்குப் பயந்து நான் சாமி முன்னாடி நின்று இருக்கிறேனே தவிர, எனக்காக நான் இன்னும் ஒருமுறை கூட நின்றதில்லை. நான் கடவுள் முன்னாடி மண்டியிட மாட்டேன் என்று தெரிந்ததும், என்னை வற்புறுத்தாமல் என் உணர்வுகளுக்கு மதிப்பு தந்தார்கள் என் அம்மா. எல்லா இடங்களிலும் சுயமாக இருக்க வேண்டும் என்கிற விஷயம் வந்தது அங்கேதான். என் குழந்தையிடம் நானும் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மன உளைச்சல், பொறுப்புகள் இவையெல்லாம் அடுத்தகட்டம்தான். இந்த நிமிடம் என் வாழ்க்கை என்னிடம்தான் இருக்கிறது. அதை நான்தானே வாழ முடியும். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் நினைக்கட்டும். இந்த நொடி என்னுடையது.
ஆன்மிக படங்கள்தான் உங்கள் ஓவியத் திறமையின் அடையாளமா....?
என் நம்பிக்கையைப் பிரச்சாரமாக நான் உங்களிடம் எடுத்து வைக்க முடியாது. எந்த உருவங்களில் மனம் ஆட்கொள்கிறதோ அந்த உருவங்களை மட்டும்தான் ஓவியங்களாக எடுத்து வைக்க முடியும். கடல், மலை, காடு, ஆகாயம், எறும்பு, திமிங்கிலம், சூரியன், நட்சத்திரம்... இப்படி இயற்கையைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் எவ்வளவு சின்னவள் என ஒவ்வொரு முறையும் தோன்றும். இதையெல்லாம் படைத்தது கடவுள்தான். அந்தக் கடவுளின் ரூபங்களை நான் பல விதங்களில் ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறேன். விநாயகர் எனக்குப் பிடித்த தெய்வம்.
இஷ்ட தெய்வம் என்பார்களே அதுபோல. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதும், விநாயகரை வணங்காமல் செல்ல மாட்டேன். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் இடத்துக்கு விநாயகரின் அருள் இருப்பதாகவே நினைக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன வரைவதற்கு. இப்போதுதான் முதற்கட்டத்துக்கு வந்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் கண்காட்சியாக பார்வைக்கு வைத்த பிறகு, அடுத்தகட்டம் பற்றி யோசிப்பேன். இயற்கைக் காட்சிகளும், உலகின் கவனத்தை ஈர்த்த தலைவர்களும் அதில் அதிகமாக இடம் பெறலாம்.
ஏழு படங்கள் வரை கையில் இருப்பதாகச் செய்தி... எப்படி நேரம் கிடைக்கிறது...?எனக்கென சில நேரங்களை இப்போது ஒதுக்கத் தொடங்கியிருக்கிறேன். படப்பிடிப்பு இடைவெளிகளில்கூட செல்போனில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தி "டச் ஸ்கீரின்' மூலம் நான் வரையப்போகும் ஓவியங்களுக்கு உருவம் கொடுத்து விடுவேன். பின்னர், நேரம் கிடைக்கும்போது அதை அப்படியே பெயிண்டிங்கில் கொண்டு வந்து விடுவேன்.
டச் ஸ்கீரின் மூலமாகவே ஓர் ஓவியத்தைக் கொண்டு வந்து விடலாம். நீங்கள் பார்த்த ஓவியங்கள் அப்படித்தான் உருவாயின. ஆனால், அப்படிச் செய்யாமல் என்ன வரையலாம்? என்பதைத் திட்டம்போட மட்டுமே நான் செல்போனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
உங்களை மிகவும் உற்சாகப்படுத்திய பாராட்டு எது...?
பலர் பாராட்டி விட்டார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி யாரும் இல்லை. திரையுலகில் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கிறவர்கள், என்னிடம் முதன்முதலாகப் பேசியவர்கள் எல்லோருமே பாராட்டி விட்டார்கள். அந்தப் பாராட்டுக்கள் எல்லாவற்றையும் என்னால் மறக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...