அவள்...
சரசு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். கொடியில் காயப் போட்டிருந்த நூல் புடவையை மடித்துப் பைக்குள் வைத்தாள்.


சரசு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். கொடியில் காயப் போட்டிருந்த நூல் புடவையை மடித்துப் பைக்குள் வைத்தாள். பிளவுஸ் - புடவையின் நிறத்துக்குப் பொருத்தமாக இல்லை. கைக்கு அடியில் கிழிந்து போயிருக்கிறது. கையைத் தூக்கினால் சகலமும் தெரியும். பிளவுஸ் இப்படி இருக்கிறது என்று ஒருமுறை ராஜியிடம் சொல்லப்போய்... ""நீங்க ஏன் கையைத் தூக்கி அழகு காட்டறீங்க? அல்லது என் மருமவ என்னைக் கவனிக்க மாட்டேங்கிறா... அப்படின்னு எல்லாருக்கும் சொல்லிக் காட்டறீங்களா?'' இப்படிப் படபடவென்று வாங்கிக் கட்டிக்கொண்ட பின்பு - இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. வேறு வழியுமில்லை. கிழிசலைப் போட்டுக்கொண்டு, முந்தானையால் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான். கிழிந்த பிளவுûஸ மடித்து மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டாள்.
பாத்ரூமுக்குள் வழுக்கிவிடாமல் ஜாக்கிரதையாகப் போய் நோட்டம் பார்த்தாள். சப்பிப் போயிருந்த பேஸ்ட் ட்யூபை, இனிமேலும் அழுத்தினால், பேஸ்ட் ஏதும் வருவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனாலும், கைக்காவலுக்கு ஆகும்தான். போனவுடனே - பேஸ்ட் வாங்கச் சொன்னால், மகன் கோபித்துக் கொள்வான். ""என் தலைல செலவு ஏத்தி கொள்ளிக்கட்டையால கொளுத்தணும்னு ஆசையா உனக்கு?'' - இப்படிப் பிசாத்து பேஸ்ட், பிரளயம் உண்டாக்கிவிடும் என்பதால், அந்த ட்யூப், அப்புறம், ""இனிமேல் என்னைத் தேய்க்காமல் விட்டு விடு ப்ளீஸ்...'' என்று அந்த சோப்கூடக் கெஞ்சும். அப்படி மெலிந்த சோப் ரெண்டையும் பத்திரமாக எடுத்துக் கொண்டாள்.
தேங்காய் எண்ணெய் - ரெண்டு கை எடுத்து உச்சியில் வைத்து அழுத்தினாள். சூடு குறைந்தது போலிருந்தது. இனி அங்கே போன பின்பு, தேங்காய் எண்ணெய் எப்போது கிடைக்குமோ? அதற்குள் உடம்பு சூடாகிவிடும். உச்சி கொதிக்கும். சரியாக மூத்திரம் போக முடியாமல் கடுப்பு எடுக்கும். வேறு வழியில்லை.
பேத்தி வருகிற நேரம்... கண் துறுதுறுத்தது சரசுவுக்கு. கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டுப் போகலாமா என்று மனசு பரபரத்தது. ஸ்கூல் முடிந்து - ஆட்டோவில் வந்து இறங்கும் முன்பே "பாட்டீ...' என்று மஞ்சு, கத்திக் கொண்டேதான் இறங்குவாள். சரசுவின் விரலைப் பிடித்து இறுக்கி, அவளது பூஞ்சை உடம்போடு ஒட்டியபடி வீட்டுக்குள் வந்தால் - தூங்கும் வரைக்கும் பாட்டிதான் சகலத்துக்கும். டியர் பிரண்டு, விளையாட்டுத் தோழி, டியூஷன் டீச்சர், பஜனை டீச்சர், கதை சொல்லி, சகலமும் சரசுதான்.
ராஜி ஆபீஸிலிருந்து வீடு திரும்ப முன்னே பின்னே ஆனாலும், குக்கரில் ஓர் ஆழாக்குச் சோறு வடித்து பேத்திக்கு ஊட்டிவிட்டு வீட்டு வேலை எல்லாமே முடித்து விடுவாள் சரசு. இன்றைக்கு மஞ்சுவுக்குப் பரீட்சை முடிகிறது. நாளையிலிருந்து பத்து நாள் - விடுமுறையில் பாட்டியும் பேத்தியுமாக எங்கெங்கே போக வேண்டும்? ஊர் சுற்ற வேண்டும்? விளையாட வேண்டும்? கதைகள் சொல்ல வேண்டும்? என்றெல்லாம் பலமுறை சரசுவிடம் சொல்லியிருந்தாள் மஞ்சு. இந்த வருடம் முடிந்தால் - அடுத்த வருஷம் மஞ்சு - ஏழாம் வகுப்பு. கண்முன்னாடியே நெடுநெடுவென்று பேத்தி வளர்வதைப் பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறது சரசுவுக்கு. சின்ன வயசில் சரசு எப்படி இருந்தாளோ - அதே அச்சு அசல் மஞ்சு.
""ம்க்கும்... பெத்த அம்மா என்னோட ஜாடை ஒண்ணும் இல்ல. பாட்டிய மாதிரியே இருக்கணும்னு வரம் வாங்கிட்டு வந்தியாக்கும்...?''
ராஜி பலமுறை குத்திக்காட்டியிருக்கிறாள். ஜாடை எப்படி இருக்கிறது என்பதற்கு மஞ்சு எப்படிப் பொறுப்பாக முடியும்? என்பது இன்னமும்கூட சரசுவுக்குப் புரியவில்லை.
ராத்திரிக்கு மஞ்சுவுக்குப் பிடித்தமான சேமியா சேவை, இனிப்பும், எலுமிச்சை கலந்ததும் செய்து வைத்தாயிற்று. அவளுக்குப் பிடிக்குமென்று கைமுறுக்கு சுற்றிச் சுட்டு வைத்தாயிற்று. வேலை வேறொன்றும் இல்லை.
மஞ்சு வந்துவிடுவாள். அவளோடு கொஞ்ச நேரம் இருந்தாலே - நூறு ஜென்மத்துக்கான பலம் கிடைக்கும். ஆனால் - இன்றைக்கு ராத்திரி எட்டு மணிபோல ராகவன் வந்துவிடுவான். அதற்கு மஞ்சு எப்படிச் சம்மதிப்பாள் என்பது புரியவில்லை. விடுமுறை முழுதும் பாட்டியோடு இருக்க வேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லியிருந்தாள்.
வாசலில் எட்டிப் பார்த்தாள் சரசு. தூரத்தில் ஆட்டோ வருவது தெரிந்தது. வாசலில் நின்றதால் மஞ்சுவின் முகமும் தெரிந்தது.
உற்சாகமான துள்ளலோடு இறங்கும் மஞ்சு - அப்போது கலவரமான முகமும், வீங்கிய கண்ணுமாக அலங்க மலங்க இறங்கினாள்.
""மஞ்சுக்கண்ணு... என்ன ஆச்சு செல்லம்?'' - நீட்டிய கைக்குள் ""பாட்ட்டீ...'' என்று அழுகையோடு புகுந்தாள்.
""என்னாச்சு? ஏன் அழறே செல்லம்?''
அவளின் பிஞ்சு உடம்பு - வெடவெடவென்று பதறி அதிர்ந்தது.
""பாட்டிம்மா... பெரிய மனுஷியாயிட்டா உங்க பேத்தி. நானு ஸ்கூல் டீச்சர். பத்திரமா மஞ்சுவ வீட்டுல விடணும்னு வந்தேன். மஞ்சு பயந்துட்டா. கொஞ்சம் சமாதானப்படுத்துங்க...''
சந்தோஷமாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் அந்த ஆசிரியை.
""என்ன பாட்டி இது? ரத்தமாப் போகுது... நானு செத்துடுவேனா? என்னோடவே இரு பாட்டி.. எனக்குப் பயமா இருக்கு. உன் கையப் புடிச்சுக்கறேன். உன் மடில படுத்துக்கறேன்,பாட்டி... பாட்டி...''
மெல்லிசாகப் பலதும் அரற்றியபடித் தவித்தாள் மஞ்சு.
""உக்காந்துட்டாளாக்கும்... இன்னும் ஒரு வருஷமாச்சும் தள்ளியிருக்கலாம். நீங்க உங்க காலத்துல, இவ வயசுலதான் ஆளாயிருப்பீங்க. அதான் - பேத்தியும் ஊருக்கு முந்தி உக்காந்துட்டா...''
வீடு வந்த ராஜி - கரித்துக் கொட்டினாள். மகளுக்கு ஒரு விசேஷம் என்கிற சந்தோஷம் அவளிடம் காணோம்.
""இனிமே நான் வயத்துல புளி கரைச்சுட்டுத்தான் இருக்கணும். எல்லாமே என் தலையெழுத்து...''
ஒவ்வொன்றாய் - ராஜி - சாட்டையைச் சுழற்ற, இன்னமும் நடுங்கிய கோழிக்குஞ்சாக ஒட்டிக்கொண்டாள் மஞ்சு. ""பாட்டி... எனக்குப் பயமா இருக்கு பாட்டி. என்னோடவே இரு பாட்டி...'' என அரற்றல்.
குமாரும் வெடுக்வெடுக்கென்றான். ""ராகவன் இப்ப வர்றான்னு மெúஸஜ் அனுப்பிருக்கான். நீ ரெடியாயிட்டியா?''
""ம்....''
""பாட்டீ... நீ எங்க போற? சித்தப்பாட்டயா?''
""ம்....''
""ம்ஹும்... போகாத பாட்டி.. நானு உங்
கூடவே இருக்கணும். உங்கூடவே தூங்கணும். ராத்திரி எனக்குக் கதை சொல்லு பாட்டி...''
சரசுவை இன்னமும் கட்டிக்கொண்டாள் மஞ்சு.
ராஜி - புருஷனை எரித்து விடுவதுபோலப் பார்த்தாள். "ம்ஹும்.. வேண்டாம்...' என்பதுபோலக் கண்ஜாடை காட்டினாள். அவளின் மௌன ஜாடை புரிந்து குமார் தலையசைத்ததை - சரசு பார்த்துவிட்டாள் என்பதையும் குமார் பார்த்துவிட்டான். ஆனாலும் வேறென்ன செய்ய? மனைவிக்குத் தலையாட்டாமல் கணவன் உத்தியோகம் செய்ய முடியாதே?
""பக்கத்துல நாலு பேருக்குச் சொல்லு ராஜி. நல்ல விஷயம். நாளைக்கு ஏதாச்சும் ஸ்வீட்டு குடுத்துட்டுச் சொன்னா நல்லது...''
""க்கும்... இந்த சிட்டியில யாரும் அதைப் பண்ணறதில்ல... ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நீங்க கிளம்புங்க. நா பாத்துக்கறேன்....''
கடுகடுத்தாள் ராஜி.
""பாட்டீ... போகாத.... இங்கேயே இரு பாட்டீ. எனக்குப் பயம்மாயிருக்கு. என்னவோ ஆச்சு எனக்கு. ரத்தமாப் போகுது. நானு செத்துடுவேனா பாட்டீ...?''
மஞ்சு இன்னமும், இன்னமும் நெருங்கி இறுக்கிக் கொண்டாள்.
""உங்க சாமான்லாம் எடுத்தாச்சா? எதையாச்சும் மறந்துடுச்சுன்னு நாளைக்கு வந்து நிக்காதீங்க...''
ராஜி - கடுகடுவென்று சரசுவிடம் சொல்லிவிட்டு குமாரிடம் கேட்டாள் - ""எப்ப வர்றாரு உங்க தம்பி? கேளுங்க. டயமாகுது. நா தூங்கப் போகணும்...''
""மஞ்சுக்குச் சில சாங்கியம் பண்ணனுமே...''
""என்ன பெரிய சாங்கியம்? நாப்கின் வாங்கணும். அவ்வளவுதான். ஏதாச்சும் சொல்லி இங்கியே டேரா அடிச்சுடாதீங்க. செத்தே போயிடுவேன் நானு... விலைவாசி வெஷம் மாதிரி ஏறுது. ஒரு முழு மனுஷிக்கு எக்ஸ்ட்ராவா
சாப்பாடு, காப்பி, அது இதுன்னு செய்தா - எனக்கு பட்ஜெட் உதைக்குது. இந்த மாச கோட்டா - இன்னியோட முடியுதுன்னு நிம்மதியா இருக்கணும்...''
காரமான வார்த்தைகளை அனலில் வாட்டினாள் ராஜி.
""சரி நீங்க கௌம்புங்க. அடுத்த மாசம் பிப்ரவரி. இருபத்தெட்டு நாளுதான் உங்க சின்ன மகனுக்குச் செலவு. குடுத்துவச்ச மவராசன் அவரு.... சரி - கௌம்புங்க. டயர்டா இருக்கு. கொஞ்சம் தூங்கணும்....'' -கதவடைத்துக் கொண்டாள்.
வெளியே சரசுவை அழைத்துப் போக வரும் ராகவன் ஸ்கூட்டர் சத்தம்.
""பாட்டி... போகாத பாட்டி... எனக்கு ரத்தம் வருது பாட்டி... நா செத்துடுவேன் பாட்டி...'' மஞ்சு கதறினாள்.
மஞ்சள் பையை எடுத்துக்கொண்டாள் சரசு.
""அடுத்த மாசம் ஓடியே வந்துடறேன் கண்ணு. மகராசியா இரு...''
முந்தானையிலிருந்து கசங்கிய பத்து ரூபாயை எடுத்து மஞ்சுவின் கையில் தந்து நெற்றியில் முத்தம் தந்தாள். கண்ணீர் வழிந்தது.
""சீக்கிரம் கௌம்பும்மா.. நேரமாவுது சினிமா டயலாக்... டிராமா... அழுகை சீனு இதுக்கெல்லாம் நேரமில்ல. அவனவன் தாலி அறுந்து போகுது...'' இரண்டு மகன்களும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். கதறினாள் மஞ்சு. நகர்ந்தாள் சரசு....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...