கனடாவிலிருந்து ஒரு குழு, அண்மையில் நமது தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் ஆர்வமுள்ள கனடா நாட்டுத் தொழில் அதிபர்களையும் அந்தக் குழு அழைத்து வந்தது. சென்னையில் இதற்காக "கனடா - தமிழ்நாடு இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு' என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்கள். தமிழக ஆளுநர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றார்.
கனடாவிலிருந்து வந்த குழு என்றவுடன் எல்லாரும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இங்கிருந்து கனடாவுக்குச் சென்று பல்வேறு தொழில்களையும், நிறுவனங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார். அவர் கண்மணி தனசேகர். அவரிடம் பேசினோம்:
""எனது சொந்த ஊர் தஞ்சாவூர். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். எம்.ஏ., பொலிடிகல் சயின்ஸ் & பப்ளிக் ரிலேஷன்ஸ் படிக்கும்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் கோல்டு மெடல் பெற்றேன். படித்து முடித்ததும் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் 10 ஆண்டுகள் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவில் வேலை செய்தேன். இன்னொரு நிறுவனத்தில் விற்பனைத்துறையின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினேன். இந்த அனுபவங்களோடு நான் இருந்தபோதுதான் கனடாவுக்குப் போனேன். அங்குள்ள "என்ரிச் கனடா' என்ற நிறுவனத்தில் குளோபல் சேல்ஸ் ஹெட்டாக இருக்கிறேன். இந்த நிறுவனத்தை நடத்துபவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபுபெக்கர் என்பவர்தான். அவர் தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்குச் சென்று முதன்முதலாக டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்.
"என்ரிச் கனடா' நிறுவனத்தின் சார்பில்தான் நாங்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பு குஜராத் போன்ற மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறோம். "வைப்ரண்ட் குஜராத்' என்று ஒரு முழக்கம் இருப்பதைப் போல "வணக்கம் தமிழகம்' என்ற முழக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
கனடாவிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீட்டைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் செயலில் இறங்கியிருக்கிறோம்.
கனடாவில் உள்ள தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.
விவசாயத்துறை சார்ந்த தொழில்களைச் செய்ய அவர்களுக்கு ஆர்வம் அதிகம். உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவது, பாதுகாப்பது ஆகியவற்றைச் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். உலக அளவில் கோதுமை அதிகமாக விளையக் கூடிய நாடு கனடா. "உலகின் உணவுக் கூடை' என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
அடுத்து சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதிலும் பல நவீன தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் தொழில்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.
அங்குள்ள பல்கலைக் கழகங்கள் இந்திய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றன. இதற்காக அண்ணா பல்கலைக் கழகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இவை தவிர, சுற்றுலா, ஹோட்டல் தொழில், சாலைகள் அமைப்பது போன்றவற்றிலும் ஈடுபட கனடா நாட்டினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு பெரிய பணிகளைச் செய்யும் குழுவில் பெண்ணாகிய நான் எப்படி இருக்கிறேன்? என்று நிறையப் பேர் கேட்கிறார்கள்.
இந்தப் பணி என்று இல்லை, எந்தப் பணியிலும் பெண்கள் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்காது. கீழே தள்ள முயற்சிப்பார்கள். தவறான முறையில் விமர்சிப்பார்கள். நான் என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவர்களைப் பொருட்படுத்துவதில்லை. என்னால் முடியும் என்ற நம்பிக்கை, விடா முயற்சி என்னிடம் இருப்பதால் என் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது.
என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களைச் சார்ந்திராமல் சுயமாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
தேவையற்ற பயங்களை விட்டுவிட வேண்டும். முதன் முதலில் கனடாவுக்குச் செல்லும்போது எனக்குச் சிறிது பயமாக இருந்தது. ஆனால் கொஞ்சநாளில் பயம் போய்விட்டது.
என்னுடைய முன்னேற்றத்துக்கு - உயர்வுக்கு என் குடும்பத்தினரும் முக்கிய காரணம். என்னுடைய கணவர் பி.பி.தனசேகர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்கிறார். என்னுடைய மகள்கள் ஐஸ்வர்யாவும், ஸ்மிருதியும் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேலை தொடர்பாக நான் எந்த நாட்டுக்குப் போனாலும், ஊருக்குப் போனாலும் எந்தத் தடையும் சொல்லாமல் என் குடும்பத்தினர் என்னை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இப்படிப்பட்ட பணிகளைச் செய்ய முடியாது.
நான் எல்லாரிடமும் நன்கு பழகிவிடுவேன். கனடாவில் உள்ள "தமிழ்நாடு கலாசார சங்கம்' என்ற அமைப்பின் இயக்குநர்களில் நானும் ஒருத்தி.
கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் குழந்தைகளுக்கு நமது தமிழ் கலாசாரம், வளமான பாரம்பரியம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். நமது தமிழ் கலாசாரம் பற்றி அங்கு வாழ்கிற பிற மக்களும் தெரிந்து கொள்வதற்கான நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
தமிழ்நாட்டு விழாக்களான பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி போன்றவற்றை அங்கேயுள்ள 500 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து கொண்டாட ஏற்பாடு செய்கிறோம். பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.
கனடாவுக்குப் புதிதாக குடிபெயர்ந்த தமிழர்களுக்கு வேலை தேடுவதற்குக் கூட உதவி செய்கிறோம். கனடா பற்றிய பல்வேறு தகவல்களை அவர்களுக்குச் சொல்கிறோம்.
இதைவிட முக்கியமானது கனடா - தமிழ்நாடு பரஸ்பர வளர்ச்சிக்கான செயல்களைச் செய்கிறோம்'' என்கிறார் பெருமையாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


