தங்கப் பதக்கமே குறி!
சிறுவயதிலேயே குறிபார்த்து பொருட்கள் மீது கல்லெறிவதில் சிறந்து விளங்கிய தீபிகா குமாரி, வில்வித்தையில் ஆர்வத்தோடு


சிறுவயதிலேயே குறிபார்த்து பொருட்கள் மீது கல்லெறிவதில் சிறந்து விளங்கிய தீபிகா குமாரி, வில்வித்தையில் ஆர்வத்தோடு ஈடுபடும்போது, அதற்குரிய உபகரணங்கள் முறையாகக் கிடைக்காததால் மூங்கிலில் ஆன வில், அம்புகளைப் பயன்படுத்தினாராம். இவரது ஆர்வத்தைக் கண்ட ஒன்றுவிட்ட சகோதரி வித்யா குமாரி, இவரை டாடா ஆர்ச்செரி அகாதெமியில் சேர்த்தபோது அவருக்கு வயது பன்னிரண்டுதான்.
ராஞ்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ரத்சத்தி கிராமத்தில் வசித்துவரும் தந்தை ஆட்டோ டிரைவர் சிவநாராயண் மஹோதா மற்றும் ராஞ்சி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் நர்ஸôகப் பணியாற்றி வரும் அவரது மனைவி கீதாவுக்கும் மூத்த மகளாகப் பிறந்த தீபிகா குமாரியின் வில்வித்தைப் பயிற்சிக்கு அவர்களால் பொருளாதார ரீதியில் உதவ முடியவில்லை.
ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஆர்ச்செரி அகாதெமி பயிற்சிக்காக மகளைத் தனியாக அனுப்பத் தயங்கினார்கள். 2007-ஆம் ஆண்டில் 13-ஆவது வயதில் வில்வித்தை பயிற்சி பெறத் தொடங்கியபோதுதான் அதற்கான முறையான கருவிகள் அவருக்குக் கிடைத்தன. 2009-ஆம் ஆண்டு 15-ஆவது வயதில் அமெரிக்காவில் ஓக்டெனில் நடந்த 17-ஆவது வோர்ல்ட் யூத் ஆர்ச்செரி சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் டோலா பானர்ஜி, பாம்பேயாலா தேவி ஆகியோருடன் இவரும் தங்கப் பதக்கம் பெற்றபோதுதான் இவரது திறமை வெளியுலகிற்குத் தெரிந்தது.
""முதன்முதலாக 2009-ஆம் ஆண்டில் ஜூனியர் வோர்ல்ட் விருது பெற்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும். என்னுடைய கிராமத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மேலும் வில்வித்தை பயிற்சியில் எனக்கு ஊக்கத்தையும், உலகம் முழுவதும் சென்று போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தையும் அளித்தது'' என்று கூறும் தீபிகா குமாரி, 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் பந்தயத்தின்போது "தங்கப் பதக்கம்' பெற்றதோடு இன்று உலக அளவில் மகளிர் பிரிவில் உலகச் சாம்பியனாக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்திய அரசின் "அர்ஜுனா' விருதும் சிலருக்குக் கிடைத்துள்ளது. தற்போது பத்தொன்பதாவது வயதில் இருக்கும் தீபிகா பி.ஏ. முதலாமாண்டு படித்து வருவதோடு தர்மேந்திர திவாரி, பூர்ணிமா மெஹ்தோ ஆகியோரின் திறமையான பயிற்சியால், ""இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் பந்தயத்திலும், 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் பெறுவதுதான் என்னுடைய குறிக்கோள்'' என்கிறார் தீபிகா குமாரி.
சரி; தீபிகாவுக்கு என்ன பிடிக்கும்?
பழைய இந்திப்பட பாடல்களைக் கேட்பதற்கும், மாடர்ன் டிரஸ் அணிவதற்கும் மிகவும் பிடிக்கும் என்கிறார் சிரித்தபடி.
அதுதவிர இவரின் விருப்பங்கள்?
""எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கவே விரும்புகிறேன். அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும், சுற்றிலும் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைக்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை விளையாட்டுத் துறையில் நுழைக்க நான் விரும்புவதில்லை. எனக்கென்று நல்ல நண்பர்கள் இல்லை. ஏனெனில் நண்பர்களைத் தேடுவதற்கு நேரமில்லை'' என்கிறார் தீபிகா குமாரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...