மீரா நாயரின் காதல் கதை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தயாரிப்பாளர் - இயக்குநர் மீரா நாயர், அமெரிக்காவில் வசிக்கும்போது நியூயார்க்கிலும், இந்தியா வரும்போது


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தயாரிப்பாளர் - இயக்குநர் மீரா நாயர், அமெரிக்காவில் வசிக்கும்போது நியூயார்க்கிலும், இந்தியா வரும்போது டெல்லியிலும், உகாண்டா செல்லும்போது கம்பாலாவிலும் தங்குவதுண்டு. நியூயார்க், டெல்லி என்றால் புரிந்துகொள்ளலாம். கம்பாலாவுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
வேறொரு நாட்டில் படப்பிடிப்பிற்காகச் சென்ற இடத்தில் அறிமுகமில்லாத ஒருவரைப் பார்த்தவுடனே இவர்தான் என் கணவர் என்று முடிவெடுத்து திருமணம் செய்துகொண்ட அனுபவம் இவருக்குக் கிடைத்துள்ளது. உகாண்டா நாட்டில் "மிஸிஸிப்பி மசாலா' படப்பிடிப்பிற்காகச் சென்ற மீரா நாயர், கம்பாலாவில் சந்தித்த முகமது மம்தானியைப் பார்த்தவுடனே கணவனாக நினைத்து திருமணம் செய்து கொண்டாராம். கதாசிரியரான முகமது இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆவார்.
முகமதுவை திருமணம் செய்தபின் கம்பாலா சென்றபோது, என்னை ஒரு பைத்தியமாகவே சிலர் நினைத்தனர். இது ஒரு இன்ஸ்டென்ட் காதல். ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் சந்தித்தவுடனே காதல் வயப்படுவது அபூர்வமானது. இப்படி நடக்குமென்பது எனக்கே தெரியாது. உகாண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன் ஆட்சியில் மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற நான், என் சொந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வர வேண்டியதாகிவிட்டது. காதல் அனைத்தையும் ஆக்ரமித்துவிட்டது. இந்தத் திருமண உறவின் மூலம் "ஜோஹ்ரன்' என்றொரு மகன் இருக்கிறான். உகாண்டாவிலேயே பிறந்ததால் அவனுக்கு அங்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ நான் போன் செய்யும்போதெல்லாம் "நான் உகாண்டாவின் இளவரசன் பேசுகிறேன். நீங்கள் யார்?' என்று கேட்கிறான்'' என்று சொல்கிறார் மீரா நாயர். முதன்முதலாக 1988-ஆம் ஆண்டு மும்பையில் நடைபாதைச் சிறுவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுத்த "சலாம் பாம்பே' இவரை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.
""என்னுடைய கதைகள் மக்களைப் பற்றியும் காதலைப் பற்றியும் இருப்பதற்கு எனக்கேற்
பட்ட அனுபவங்களே காரணம். உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அடுத்தடுத்து ஏற்படும் அழுத்தங்கள் மேலும் உணர்வுகளை வெளியே கொண்டுவரும். என்னுடைய படங்களில் இதைப் பிரதிபலிக்கும் வகையில் நகைச்சுவை, காதல், நடனம், மனஉறுதி ஆகியவை இடம்பெறுவதை பார்க்கலாம்'' என்கிறார் மீரா நாயர்.
""அப்படியானால் பாலிவுட் மசாலாப் படங்களைப்போலவே எடுக்கலாமே? என்று கேட்கத் தோன்றும். ஆனால், அப்படியோர் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய உணர்வுகள் வித்தியாசமானவை. பாலிவுட் பாணியில் மசாலா படங்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. என்னுடைய நண்பர்கள் கரண்ஜோஹர் போன்றோர்களிடம் அந்தப் பணியை விட்டுவிடுகிறேன்'' என்கிறார்.
""பாலிவுட் மாபெரும் சமுத்திரம் போன்றது. நம்முடைய உணர்வுகளுக்கு ஏற்ப எடுக்கும் படங்கள் ரசிகர்களைத் திருப்தி செய்ய முடியாமற் போகலாம். என்னுடைய படங்களை விமர்சனம் செய்வது குறித்து நான் பயப்படுவது இல்லை. என்னுடைய "வானிடிஃபேர்' படத்திற்குக் கடுமையான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டன.
அதைத் தயாரிக்கும்போதே என்னுடைய சகோதரன் விக்கி என்னை எச்சரித்தார். "வானிடிஃபேர்' நான் நினைத்தபடி வெற்றி பெறாதது குறித்து வருத்தம்தான்'' என்று கூறும் மீரா நாயரின் சகோதரர் விக்கி இவரைவிட மூத்தவர். டெல்லியில் ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது குழந்தைகளுக்கு மீரா நாயரை மிகவும் பிடிக்குமாம். ""மீரா நாயர் என்னைவிட இளையவள். அதற்காக என்னை மீரா நாயரின் சகோதரர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வது சரியல்ல'' என்கிறார் விக்கி.
எதையும் தானே உணர்ந்து செய்ய வேண்டுமென்பதில் மீராவுக்கு சிறு வயதிலிருந்தே பிடிவாதம் உண்டாம். அவரது குடும்பத்தினர் எடுக்கும் எந்த முடிவுக்கும் எதிர்மறையான முடிவுகளையே இவர் எடுப்பதுண்டாம்.
இவரது தாயார் பிரவீண் நாயருக்கு 80 வயதாகிறது. பக்கவாதத்தால் தாக்கப்பட்டிருந்தாலும் தனக்கும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இடையே யாரும் குறுக்கிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதோடு டெல்லியில் தனியாக வசித்து வருகிறாராம். தேவைப்படும்போது அவரே இவர்கள் வீட்டிற்கு வந்து பார்ப்பதுண்டாம்.
""இதுதான் என்னுடைய வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. ஏற்கெனவே செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒருமுறை செய்யும் தவறு மூலம் கிடைக்கும் அனுபவங்கள் புதிதாகக் கற்றுக்கொள்ள உதவும். "மான்சூன் வெட்டிங், எ ஹிஸ்டரிகல் ப்ளைண்ட்னஸ், 11-09-01 (செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது) போன்ற படங்கள் அனைத்துமே ஒரே மாதிரியான உற்சாகத்தையே அளித்தன.
11-09-01 அன்று வீடு திரும்பாத தன்னுடைய மகனைத் தேடும் தாயைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படமாகும். என்னுடைய ஒவ்வொரு படமும் வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டதாகும். "தி நேம்சேக்' திரைப்படம் ஜூம்பா லஹாரியின் நாவலைத் தழுவியதாகும். இதில் ஓரளவு என்னுடைய உண்மை வாழ்க்கையைப் பிரதிபலித்திருக்கிறேன். கலாசார அதிர்வுகளையும் தனிமைப்படுத்துதலையும் ஓர் இயக்குநர் என்ற முறையில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திலும், இந்தியாவில் டெல்லியிலும், உகாண்டாவில் கம்பாலாவிலுமாக வாழ்வது எனக்குப் பிடித்திருக்கிறது. நியூயார்க்கில் அமெரிக்கவாசியாக இருப்பதுபோல் கம்பாலாவில் இருக்கும்போது அங்குதான் என்னுடைய காதல் மலர்ந்தது என்பதால் நெருக்கம் இருந்தாலும் அந்த நாட்டு மக்களிடம் சற்று வித்தியாசமான வாழ்க்கையைத்தான் நடத்த வேண்டியிருக்கிறது. வீட்டில் இருக்கும்போது இந்தியில்தான் பேசுவோம். ஆங்கிலத்தில் பேசுவதில்லை. என்னுடைய மகன் ஆங்கிலத்தில் பேசினால் உடனே என் கணவர் குறுக்கிட்டு "எக்ஸ்க்யூஸ் மி, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்பார். அந்த நாட்டு மொழி ஸ்வாஹிலியைக் கற்பது எனக்கு இன்னமும் சிரமமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உலக மக்கள்'' என்கிறார் மீரா நாயர்.
பஞ்சாபியான இவரது பெயரின் பின்னால் நாயர் சேர்ந்தது எப்படி? வழக்கமாக நய்யார் என்றுதானே இருக்க வேண்டும்?
""என்னுடைய கொள்ளு தாத்தாக்களில் யாரோ ஒருவர் செய்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன். அதனால்தான் மலையாளி நாயர்கள்போல் நாயர் என்ற உச்சரிப்பு வந்துவிட்டது. கேரளாவுக்குச் சென்றபோது மலையாளிபோல் காட்டிக் கொள்ள விரும்பினேன். ஆனால் அங்குள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தபோது என்னுடைய வேஷம் கலைந்துவிட்டது''. மலையாளமும் தெரியாது. ஸ்வாஹிலியும் தெரியாது. ஆனால், கம்பாலா குறித்து இவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளன.
""இந்தியாவில் "மாய்ஷா' என்ற பெயரில் படத்தயாரிப்பு லாபரெட்டரி ஒன்றைத் துவக்கி இளம் தயாரிப்பாளர்களுக்கு திரைக்கதை எழுதப் பயிற்சியளிக்கப் போகிறோம். எய்ட்ஸ், வறுமை போன்ற விஷயங்களை புதிய முயற்சியாக பாலிவுட் பிரபலங்கள் நடுவே கமர்சியல் சினிமா மூலமாகவே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது''
அப்படியானால் கமர்சியல் சினிமாவுக்கும், ஆர்ட் சினிமாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டால், ""அப்படி இல்லை. எல்லா சினிமாவுமே கமர்சியல்தான். மக்கள் எங்களை விரும்பும்போதுதான் வித்தியாசம் தெரிகிறது. தயாரிப்பு முயற்சியில்தான் வித்தியாசம் இருக்கும்'' என்கிறார் மீரா.
அப்படியானால் இந்த முயற்சிகள் ஆஸ்கர் விருதுக்கானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டால், ""ஆஸ்கர் விருது வேண்டாமென்று கூறும் தயாரிப்பாளர் யாராவது இருந்தால் காட்டுங்கள். என்னுடைய முதல் படம் ""சலாம் பாம்பே'' அகாதெமி விருதுகள், கோல்டன் குளோப் விருது போன்று சுமார் 25 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சில விருதுகளைப் பெற்றேன். சில விருதுகளை இழந்தேன். தீபாமேத்தா, சேகர் கபூர் போன்றோர் விருதுகளைக் குறிவைத்தே படங்களைத் தயாரிப்பதாகக் கூறுவதுண்டு. இந்த கிரியேடிவ் முயற்சியில் எந்தவிதத் தவறும் இல்லை. தீபாமேத்தா என்னுடைய நெருங்கிய நண்பர். என்னைவிட வித்தியாசமானவர். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் அனைத்து வண்ணங்களையும் ரசிப்பேன். தீபா எதையும் சீரியஸôக எடுத்துக்கொள்வதுகூட எனக்குப் பிடிக்கும். அதனால்தான் நல்ல படங்களை எடுக்கிறேன். என் நண்பர்களையும் திரைப்படங்களையும் பார்க்க வேண்டும். சந்தோஷமாகத் திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்தியாவுக்கு வந்தேன். இங்குள்ள வறுமை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியாவுக்கு நான் வந்திருக்கவே கூடாது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தபோது கிடைத்த கதைகள்தான் என்னை இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மாற்றியது'' என்கிறார் மீரா நாயர்.
என்னுடைய உணர்வுகள் வித்தியாசமானவை. பாலிவுட் பாணியில் மசாலா படங்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...