இந்தியாவின் 'கிரேடா கார்போ' சுசித்ரா சென்
அண்மையில் 83 வயதில் மரணமடைந்த சுசித்ரா சென், 1978ஆம் ஆண்டிற்கு பின்னர் வெளியுலக வாழ்க்கையைத் தவிர்த்து வாழ்ந்து வந்தார். இவருக்கும்


அண்மையில் 83 வயதில் மரணமடைந்த சுசித்ரா சென், 1978ஆம் ஆண்டிற்கு பின்னர் வெளியுலக வாழ்க்கையைத் தவிர்த்து வாழ்ந்து வந்தார். இவருக்கும் ஹாலிவுட் நடிகை கிரேடா கார்போவுக்கும் உள்ள ஒற்றுமையும் இதுதான். அவரும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் வெளி நிகழ்ச்சிகளைத் தவிர்த்ததோடு, வீட்டுக்குள்ளேயே சுசித்ரா சென்னைப் போலவே அடைப்பட்டுக்கிடந்தார். கடைசிப் படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மனதில் இருந்த இளமைத் தோற்றத்தை மாற்ற விரும்பாமல் தங்கள் வயதையும் முதிர்வையும் வெளிகாட்ட இருவருமே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. இதே கொள்கையைத்தான் தமிழ் பிரபலம் டி.ஆர்.ராஜகுமாரியும் கொண்டிருந்தார். என்றாலும், அவர் குடும்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டார் என்று சொல்வது உண்டு.
1931 ஆம் ஆண்டு பங்களாதேஷில் உள்ள பாட்னாவில் கருணாமாயி-இந்திரதாஸ் குப்தா தம்பதியினரின் இரண்டாவது மகளாகப் பிறந்த ரோமோ தாஸ் குப்தா, பதினாறாவது வயதில் தீபாநாத் சென் என்பவரை மணந்தபோது பின்னணிப் பாடகியாக வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ரிகார்டிங் ஸ்டூடியோ சென்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த நிறுவனமே தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. தீபாநாத்தும், ரோமாவும் இது குறித்து அவரது மாமனார் ஆதிநாத்திடம் சொல்லத் தயங்கினர். ஆனால் அவர் அளித்த அனுமதியின் பேரில் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டாலும், 1948 ஆம் ஆண்டில் மூன்மூன் சென் பிறந்த பின்னரே இவரது முதல் வங்காளப் படமான "சாத் நம்பர் கையேடி' (1953 ஆம் ஆண்டில்) வெளியானது. அந்தப் படத்தில்தான் இவருக்கு "சுசித்ரா சென்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
அதே ஆண்டில் முதன்முறையாக உத்தம் குமாருடன் நடித்த "ஸôரே சுத்தார்' வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவர், பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் உத்தம் குமாருடன் மட்டும் ஜோடியாக 30 படங்களில் நடித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் இவர்களைப் போல் ஆதர்ச தம்பதிகளாக வாழவேண்டுமென்று பல வங்காளக் குடும்பத்தினர் நினைத்ததுண்டாம். இவர் திரையுலகில் மேலும் மேலும் வெற்றிப் பெற, ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கத் தூண்டுகோலாய் இருந்த கணவர் தீபாநாத்துக்கும் சுசித்ராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிவை நோக்கிச் சென்றது. சுசித்திரா தனிமைப் பெண்ணாக மாறினார்.
1955 ஆம் ஆண்டில் இவரது முதல் இந்திப் படமான பிமல்ராயின் "தேவதாஸ்' வெளியானது. அதே ஆண்டில் வங்க மொழியில் நடித்து வெளிவந்த இவரது படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆயின. 1957ஆம் ஆண்டு வெளிவந்த ரிஷிகேஷ் முகர்ஜியின் "முஸôபிர்' வங்காளத் திரையுலகையும் தாண்டி இவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது.
இந்தியில் ஏழு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் வங்கமொழி கலந்த இவரது இந்தி உச்சரிப்பு ரசிகர்களைக் கவரவில்லை. தாயும், வக்கீல் மகளுமாக இரட்டை வேடத்தில் இவர் நடித்த "உத்தர் பால்குனி' இந்தியில் "மம்தா'வாகவும், தமிழில் "காவியத்தலைவி' யாகவும் வெளிவந்தன. தமிழில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று விரும்பி, அதன் தயாரிப்பை மேற்கொண்டதுடன், இரட்டை வேடமும் ஏற்றார் சௌகார் ஜானகி, இயக்கம் கே.பாலசந்தர்.
1960 ஆம் ஆண்டில் தேவ்ஆனந்துடன் நடித்த "பம்பாய் கா பாபு' "சர்ஹாத்' இரண்டு படங்களுமே தோல்வியுற்றன. 1963ஆம் ஆண்டு வெளியான "சாத் பகே பந்தா' பெங்காலித் திரைப்படம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத் தந்தது. வெளிநாட்டில் சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய முதல் இந்திய நடிகையும் இவர்தான்.
1971ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நாவலைப் படமாக்க சத்தியஜித்ரே நினைத்தபோது, அதில் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடும் பெண் பாத்திரத்துக்கு சுசித்ரா பொருத்தமாக இருப்பார் என்று கருதி நடிக்க அழைத்த போது, தொடர்ந்து படங்கள் கைவசம் இருந்த காரணத்தால் இந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். அதே போன்று ராஜ்கபூர் தயாரிப்பிலும் நடிக்க மறுத்ததுண்டு.
1972 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது பெற்றார் இவர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை கவிஞரும், இயக்குநருமான குல்ஸôர் இயக்கினார். இந்தப்படத்தில் இந்திராகாந்தியைப் போன்ற கதாபாத்திரத்தில், சஞ்சீவ் குமாருடன் இணைந்து நடித்தார். படத்தின் பெயர் ""ஆந்தி''. ஆனால் இந்தப்படம் எமர்ஜென்சி காரணமாக தடை செய்யப்பட்டு, பின்னர் திரையிடப்பட்டபோது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதுவே இவரது கடைசி இந்திப் படமாகும்.
1975 ஆம் ஆண்டு உத்தம் குமாருடன் சேர்ந்து நடித்த இவரது கடைசிப்படம் " ப்ரியோ பந்தோபி' வெளியானது. இதைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டில் வெளியான ""பிரணாய் பஷா'' படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காததால் அத்துடன் திரையுலகிலிருந்து சுசித்ரா விலகினார்.
வங்காளத் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது இவரது பெயர் முதலில் போட்டால்தான் வியாபாரம் ஆகுமென்ற நிலை இருந்தது. அதன் பின்னர் அவர் வெளியுலக வாழ்க்கையைவிட்டே ஒதுங்கியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு இவருக்கு "தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்ட போது கூட, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற காரணத்திற்காக அந்த விருதைப் புறக்கணித்தார்.
2012 ஆம் ஆண்டில் மேற்குவங்க அரசு அளித்த "பங்க பிபூஷன்' விருதையும் நேரில் வந்து வாங்கவில்லை. வங்காளத் திரையுலகைப் பொறுத்தவரை சுசித்திரா சென் ஒரு சகாப்தம் என்றாலும் அந்த சாதனையை அவரால் இந்தி திரையுலகில் நிரூபிக்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...