ஆசிய சாதனை!
ஐ.ஆர்.மெட்வின் தேவா. வயதோ எட்டு தான். என்ன சாதனை செய்தான் இவன்? ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கி விளையாடும் விளையாட்டில் யாருமே


ஐ.ஆர்.மெட்வின் தேவா. வயதோ எட்டு தான். என்ன சாதனை செய்தான் இவன்? ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கி விளையாடும் விளையாட்டில் யாருமே எடுக்கத் தயங்கும் "லிம்போ ஸ்கேட்டிங்' பிரிவில் 9 அங்குல தாழ்வான உயரத்தில், 40 மீட்டர் (தோராயமாக 131 அடி) நீள தூரத்தைக் கடந்து ஆசிய சாதனைப் படைத்துள்ளான்.
இதற்கு முன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் "ரோஹன்' தரையிலிருந்து 10 அங்குல தாழ்வான உயரத்தில், 10 மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்த சாதனையை மெட்வின் தேவா தற்போது முறியடித்துள்ளான்.
சென்னை அண்ணா நகரில் இருக்கும் மெட்வின் தேவாவின் தந்தை பெயர் வி.ஐ.ராஜூ. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். தாயார் ஜாஸ்மின் ஜூலி. இவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர்களின் ஒரே மகன்தான் மெட்வின் தேவா. இவன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பயிற்சியாளர் அண்ணாநகர் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பைச் சேர்ந்த கே.பி.உன்னிகிருஷ்ணன். 3 வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டுப் பயிற்சியை செய்யத் தொடங்கினான் மெட்வின்.
"லிம்போ ஸ்கேட்டிங்' என்பது சாதாரண ஸ்கேட்டிங் போல அல்ல. இதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. மெட்வின் இதற்கு முன்னர் 2011-ஆம் ஆண்டு சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான "லிம்போ ஸ்கேட்டிங்' போட்டியில் தங்கப்பதக்கமும், சென்ற ஆண்டு நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றான்.
மெட்வின் இப்போது செய்துள்ள சாதனை என்னவென்றால் இரு கால்களையும் நன்றாக வில் போல வளைத்து, வளைந்துள்ள கால்களின் மீது தனது கைகளை ஊன்றி 9 அங்குலம் மட்டுமே உயரமுள்ள இடத்தில் உடம்பை நன்றாக மடித்து 40 மீட்டர் கடந்தான். கடக்கும் போது 1 மீட்டர் இடைவேளியில் 9 அங்குலம் உயரமுள்ள கூம்பின் மீது குறுக்காக எடை குறைவான ஒரு அலுமினிய குழாய் வைக்கப்பட்டிருந்தது. இதனை இடிக்காமல் கடந்து வந்தான் மெட்வின். அதுதான் லிம்போ ஸ்கேட்டிங் பிரிவில் ஆசிய சாதனையாகவும், இந்தியாவின் சாதனையாகவும், தமிழகத்தின் சாதனையாகவும் மாறியுள்ளது.
""என்னுடைய பெற்றோர், பள்ளி முதல்வர் எமிலி டைட்டஸ், நண்பர்கள் அளித்த தொடர் ஊக்கமும், என்னுடைய பயிற்சியாளர் அளித்த கடுமையான பயிற்சியும் நான் லிம்போ ஸ்கேட்டிங்கில் ஆசிய சாதனை புரிய உதவியாக இருந்தது'' என மகிழ்ச்சி பொங்க கூறுகிறான் மெட்வின் தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...