அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெற வைத்த புகைப்படம்!
1972-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தென்கிழக்கு வியட்நாம், மேற்கு சைகோன் நகரத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள டிராங்க்பாங்க் அருகில்


1972-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தென்கிழக்கு வியட்நாம், மேற்கு சைகோன் நகரத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள டிராங்க்பாங்க் அருகில் உள்ள கிராமமொன்றில் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க அமெரிக்க ராணுவத்தினர் உதவியுடன் நாபாம் குண்டுகள் வீசப்பட்டன. அதன் ரசாயன ஆயுத தாக்குதலில் பொதுமக்கள், சிறுவர்கள், ராணுவத்தினர் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போது ஒன்பது வயது சிறுமி கிம்புக், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு வெற்றுடம்புடன் ஓடி வந்ததை அசோசியேட்டட் பிரஸ் போட்டோகிராபர் நிக் அட் மற்றும் பத்திரிகையாளர் கிரிஸ்டோபர் வெய்ன் நேரடியாகக் கண்டனர். அந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் "கிம்புக்'கின் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் மற்றும் இரு கிராம மக்கள் பலியாயினர்.
நெஞ்சைப் பதைபதைக்க வைத்த இந்தக் காட்சியை போட்டோகிராபர் நிக், புகைப்படமெடுப்பதை பார்த்த கிம்புக், இவர்களை நோக்கி ஓடிவந்து, ""உடம்பெல்லாம் தகிக்கிறது. தண்ணீர் கொடுங்கள்'' என்று கேட்டாளாம். நிக்கும், வெய்னும் அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்ததோடு, உடல் மீதும் தண்ணீரை ஊற்றினர். தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அவளது உடல் மீது ராணுவ வீரர்கள் அணியும் கோட்டை போர்த்தி மறைத்து அவளுடன் காயமடைந்த சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சூசி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ஏற்கெனவே நாபாம் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் ராணுவ வீரர்களும் குவிந்திருந்தனர். "கிம்புக்'கை பரிசோதித்த டாக்டர்கள் அவளது உடலில் 65 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் உயிர் பிழைப்பது கடினமென்று கூறினர்.
""அவளுக்குச் சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே மருத்துவமனையை விட்டு போவேன்'' என்று நிக் உறுதியாகக் கூறியதோடு, "கிம்புக்'குக்கு மருத்துவச் சிகிச்சை துவங்கிய பின்னரே அங்கிருந்து கிளம்பினாராம். ஓராண்டு காலம் மருத்துவமனையில் தங்கியிருந்த "கிம்புக்'கிற்கு முதுகிலும் கைகளிலும் பதினேழுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாகக் குணமடைந்த பின்னரே கிம்புக் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். இதற்கிடையில் நிக் பலமுறை அவளை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
கோடாக் 400 ஏஎஸ்ஏ கேமராவில் கறுப்பு வெள்ளை பிலிமில் "கிம்புக்'கை புகைப்படமெடுத்த நிக், சைகோனில் உள்ள அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) லேப்பில் டெவலப் செய்து ஸ்பெஷல் காபினெட்டில் ஹேர் டிரஸ்ஸர் மூலம் உலர வைத்து எட்டு விதமான புகைப்படங்களை அமெரிக்காவில் உள்ள ஏபி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினார். யுத்தத்தின் கொடூரத்தை விளக்குவதாக இருந்தாலும் வெற்றுடம்புடன் ஒரு சிறுமி ஓடி வருவதைப் பிரசுரிக்க இயலாது எனக் கூறி நியூயார்க் அலுவலகம் அவற்றை நிராகரித்துவிட்டது. அப்போது சைகோன் புகைப்படத் துறையின் தலைவராக இருந்த ஹார்ஸ்ட்ஃபாஸ் டெலக்ஸ் மூலம் விவாதித்து, அமெரிக்க ராணுவத்தின் தேவையற்ற தலையீட்டால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை உலகம் அறிய வேண்டுமென்பதற்காகவே புகைப்படத்தைக் கண்டிப்பாக வெளியிடும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின்னரே நியூயார்க் போட்டே எடிட்டர் ஹால்ப்யூல், இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து தங்கள் கொள்கையை விட்டுக்கொடுத்து, பிரசுரிக்க ஒப்புக்கொண்டார்.
அன்றைய காலகட்டத்தில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப முறை ஏதும் இல்லாததால் அந்தப் புகைப்படத்தை 14 நிமிடங்கள் வரிவரியாக மின்சாரத்தின் மூலம் டிரான்ஸ்மிட் செய்து முதலில் டோக்கியோ போட்டோ பீரோவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் சைகோனிலிருந்து வந்த ரேடியோ சிக்னல் ஆட்டோ ரிலே மூலம் டோக்கியோவிலிருந்து ஏபி கண்ட்ரோலில் உள்ள பகுதிகளுக்கும், சப்மரின் ஒயர் கம்யூனிகேஷன் சர்க்யூட்ஸ் மூலம் நியூயார்க், லண்டன் நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஏபி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டது.
"நாபாம் கேர்ள்' என்ற தலைப்பில் 1972-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்தப் புகைப்படம் பிரசுரமாகி வியட்நாம் யுத்தத்தின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது. 1972-ஆம் ஆண்டின் சர்வதேசப் பத்திரிகை புகைப்படப் போட்டியில் இதற்கு கவுரவம்மிக்க "புலிட்சர் விருது' கிடைத்தது. வியட்நாம் யுத்தத்தின் கொடூரங்களை விளக்க இதைவிட வேறு புகைப்படங்கள் சாட்சியமாகக் கிடைக்காததால் "கிம்புக்'கின் கதையும் தகவலும் தகுதி பெற்றவையாகக் கருதப்பட்டன.
இந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் டிராங்பாங்கில் நாபாம் குண்டுகள் அமெரிக்கப் படையினர் வீசியதாகக் கருதி அமெரிக்க மக்கள் உடனடியாகப் படைகளை வாபஸ் பெறும்படி நிர்பந்தப்படுத்தினர். உண்மை அதுவல்ல. நாபாம் குண்டுகள் அந்தக் கிராமத்தின் மீது வியட்நாம் விமானப் படையினரால் தவறுதலாக வீசப்பட்டது என்று அமெரிக்க ராணுவம் நிரூபிக்க முயற்சித்தது.
நியூயார்க் டைம்ஸில் வெளியான புகைப்படத்தைப் பார்த்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டது தவறு என்ற அமெரிக்க மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதுபோல் இந்தப் படம் வெளியானதை பெரிய அதிர்ச்சியாகக் கருதினார். ""இந்தப் புகைப்படம் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான சாட்சியாக இருக்கலாம். ஆனால், தெற்கு வியட்நாம் விமானப் படை தன் நாட்டின் மீதே குண்டுகளை வீசியது எதிர்பாராத சம்பவமாகும். எதிராளிகளைத் தாக்குவதாகக் கருதி வீசிய குண்டுகள் அவர்கள் நாட்டு மக்களையே அகதிகளாக்கிவிட்டன'' என்று வெள்ளை மாளிகை ஊழியர்கள் தலைவர் ஹால்டிமன் கூறினாலும் அமெரிக்க மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. முடிவில் அமெரிக்கப் படைகள் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறின.
நிக்கை பொறுத்தவரை அந்தப் புகைப்படத்தை உலக வரலாற்றில் ஓர் அழிக்க முடியாத சாட்சியாகவே கருதினார். வியட்நாம் யுத்தத்தை பொறுத்தவரை அது வெறும் புகைப்படமாக இருக்கலாம். யுத்தத்தின் கொடூரத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்டதல்ல. அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் இன்று கனடாவில் தன் கணவர், இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருவது அந்தப் புகைப்படத்தைவிட அழிக்க முடியாத ஆதாரமாகும். அந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தை நானும் "கிம்புக்'கும் என்றைக்குமே மறக்க முடியாது'' என்று கூறும் நிக், லாஸ்ஏஞ்சல்ஸில் வசித்து வந்தாலும் அடிக்கடி "கிம்புக்'குடன் போனில் பேசி நலம் விசாரித்து வருகிறாராம். 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள அசோசியேட்டட் பிரஸ்ஸிற்காக இன்னும் இவர் தொடர்ந்து பிரபலமானவர்களைப் புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றும் பத்திரிகைகளில் இவரது புகைப்படங்கள் வெளிவந்தாலும் "நாபாம் கேர்ள்' என்றாலே இவரது பெயர்தான் நினைவுக்கு வரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...