தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நான் ஜோன் ஆஃப் ஆர்க் அல்ல: மல்லிகா சாராபாய்

மல்லிகா சாராபாயைப் பொருத்தவரை ஒற்றை வார்த்தையில் அவரைத் திறமைசாலி என்று  கூறுவது அவரது பன்முகத் திறமைகளை மறைப்பது போலாகிவிடும்.

News image
Updated On :23 மார்ச் 2014, 5:04 am

பூா்ணிமா

மல்லிகா சாராபாயைப் பொருத்தவரை ஒற்றை வார்த்தையில் அவரைத் திறமைசாலி என்று  கூறுவது அவரது பன்முகத் திறமைகளை மறைப்பது போலாகிவிடும். பரதநாட்டியக் கலைஞர், நாடகக் கலைஞர், சினிமாத்துறை பிடிக்காமல் வெளியேறியவர், சமூக ஆர்வலர் என ஒவ்வொரு துறையிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு தனக்கென்று ஓர் அடையாளத்தை வைத்திருப்பவர் மல்லிகா சாராபாய்.

58 வயதாகும் மல்லிகாவின் இத்தனை திறமைக்கும் அவரது குடும்ப பாரம்பரியம்தான் காரணம் என்று கூறலாம். இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி விக்ரம் சாராபாய் இவரது தந்தை. நாட்டியக் கலைஞரான மிருணாளினி இவரது தாய். 60-களிலேயே வரதட்சணை  மரணங்களை எதிர்த்து நடனங்கள் மூலமாகவே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர். இவரது பாட்டி அம்மு சுவாமிநாதன் அரசியல் ஆர்வலர். அத்தை லெப்டினென்ட் கர்னல்  லட்சுமி சேகல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். தாய்மாமா பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன். எமர்ஜென்ஸியை எதிர்த்தவர்.

சிறுவயதில் அம்மாவின் முந்தானையைப் பிடித்து சுற்றி வந்ததால் "கன்றுகுட்டி' என்று பெயரெடுத்த இவர், 14ஆவது வயதில் அப்பா செல்லமானார். காரணம் அம்மாவின் நேரத்தை இவர் அதிகமாக எடுத்துக் கொள்கிறாரே என்ற ஆதங்கமாம். அகமதாபாத் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மெண்ட்டில் (ஐஐஎம்) எம்பிஏ படிக்க வேண்டுமென்று முடிவெடுத்தபோது, படிப்பை முடித்தவுடன் அப்பா ரிடையர் ஆனவுடன் அவருடன் சேர்ந்து லாப குறிக்கோள் இன்றி ஓர் அமைப்பை உருவாக்கி ஏழை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் வித்தியாசமான கல்வியை அளிக்க வேண்டுமென்று மல்லிகா நினைத்தாராம்.

ஆனால் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி இவரது தந்தை கேரளாவில் காலமானதைத் தொடர்ந்து மறுநாள் இறுதிச்சடங்கு முடிந்த கையோடு இவரது தோழிகள் இவரை ஜனவரி முதல் தேதியன்று ஐஐஎம் நுழைவுத் தேர்வு எழுத அழைத்துச் சென்று விட்டார்களாம். விடைத்தாளைத் தவிர மற்ற அனைத்தும் என் கண்ணீரால் நனைந்தது நன்றாக நினைவிருக்கிறது என்று கூறும் மல்லிகா, பின்னர் 21ஆவது வயதில் "ஆர்கனைசேஷனல் பிஹேவியரில்' பிஎச்டி முடித்தார். போஸ்ட் டாக்டரல் ஸ்டெடிஸ் செய்ய விரும்பியபோது காதல் வயப்பட்டு, திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் முறிந்துவிட்டதாம். "இதனால் அப்பாவின் மறைவுக்குப் பின்னர் என்னுடைய மனதில் ஏற்பட்ட ஆழமான மனச்சோர்வு அதிகமாகியது. அம்மாவுடன் அமர்ந்து மணிக்கணக்கில் ஆற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்படியே எவ்வித இலக்குமில்லாமல் நான்கைந்து மாதங்கள் ஓடின.

ஒருநாள் காலை நான் நடனம் கற்றுக்கொள்ளப் போவதாக அம்மாவிடம் கூறினேன்'' என்று கூறும் மல்லிகா, அம்மாவின் நாட்டியசாலையான "தர்ப்பணா'வில் சேர்ந்தார்.

தர்ப்பணாவில் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது அவருடன் சிறுவயதில் ஸ்ரேயெஸ் பள்ளியில் படித்தவர்களே அதிகமிருந்தனர். நாட்டியத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு தர்ப்பணா அகாதெமி சார்பில் "சாவித்திரி, ப்ளேம் ஆப் தி ப்யூச்சர்' என்ற நாட்டிய நாடகத்தைப் பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடத்தினார். கூடவே திரையுலக வாய்ப்புகளும் வந்தன. பிரபாத் முகர்ஜி இயக்கத்தில் இவரது முதல் படம் "சோனால்' வெளியானதைத் தொடர்ந்து வெளிவந்த இவரது "முத்திபார்சாவல்' தேசிய விருது பெற்றது. பி.எஸ். தாப்பாவின் ""ஹிமாசலே சே ஊன்சே'' இவருக்கு கமர்சியல் சினிமா ஒத்து வராது என்பதை உணர்த்தியது. ஆனால், இயக்குநர் சத்தியதேவ் துபே இவரைச் சமாதானப்படுத்தி அமிதாப் பச்சன் நடித்த "ஹீரா பெஹ்ரி'யில் நடிக்க வைத்தார். பாட்டும் நடனமும் இணைந்த காட்சியில் பலமுறை நடன இயக்குநரின் ஸ்டெப்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரீடேக்குகள் எடுக்கவே, பக்கத்திலிருந்த நாற்காலியை தூக்கி வீசியெறிந்து தனக்கும் சினிமாவுக்கும் ஒத்துவராது என்று கூறி சினிமாவுக்கு "குட்பை' கூறி வெளியேறிவிட்டார் மல்லிகா.

வெறும் பரதநாட்டியக் கலைஞராக இருந்தால் மட்டுமே போதாது என்று கருதியவர் பீட்டர் ப்ரூக்கின் நாட்டிய நாடகமான மகாபாரதாவில் திரௌபதியாக நடிக்க ஒப்புக் கொண்டார். 1984-ஆம் ஆண்டு முதல் இந்த நாடகம் தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆங்கிலத்திலும், பிரெஞ்ச் மொழியிலும் உலக நாடுகள் முழுவதிலும் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர் ""சக்தி: தி பவர் ஆஃப் உமன்'' என்ற நாட்டிய நாடகத்தை தானே தயாரித்து இயக்கி நடத்த முயற்சித்தபோது உடனிருந்தவர்கள் இதை தற்கொலை முயற்சி என எச்சரித்தனர்.

ஆனால் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகளிலேயே புதிய பரிணாமத்தை உருவாக்கி வெற்றி பெற்றதாகக் கூறும் மல்லிகா, "என்னுடைய கிளாசிகல் நடனம்தான் எனக்குள் சக்தியை அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து நான் செய்யாவிட்டால் மூச்சு விடுவதற்கான காற்றே எனக்குக் கிடைக்காது. ஏனெனில் என்னுடைய பலமே நாட்டியம்தான். என்னை சாதாரணமாக வழிநடத்திச் செல்லும் அதீதமான சக்தி என்றும் கூறலாம்' என்கிறார்.

தர்ப்பணாவில் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றதன் மூலம் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இதற்கு ஐஐஎம் அனுபவமும் சுதந்திரமாக உருவாக்கக்கூடிய பொறுப்பையும் தனக்களிக்கப்பட்டதே காரணம் என்கிறார். இதுதவிர "ஜனவாக்' என்ற அமைப்பின் மூலம் இந்திய பாரம்பரிய கிராமிய நடனங்களையும் மலைவாழ் மக்களின் நடனங்களையும் மேம்படுத்த தர்ப்பணாவில் மாபின் பப்ளிஷிங் என்னும் நூல் பதிப்பு நிறுவனத்தை மாஜி

கணர் பிபின்ஷா துணையுடன் அமைத்தார்.

அடுத்து தனது கனவுத்திட்டமான சாத் டிவியைத் தொடங்கினார். இதன் மூலமாகவே தன் வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று கருதிய மல்லிகா, வழக்கமாக மக்கள் பார்த்து வரும் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமென்று கருதினார். ஒரு மாதத்திற்குப் பின்னர் குஜராத்தில் ஒளிபரப்பப்பட்ட இவரது நிகழ்ச்சிகளுக்கு எவ்வித வரவேற்பும் கிடைக்காததால் மாற்றுத் திட்டமொன்றைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இவரது மகன் ரேவந்தா (29) தர்ப்பணாவிலிருந்து விலகி அவரது அப்பாவுடன் வசித்து வருகிறார். மகள் அனஹிதா (22) ஆஸ்திரேலியாவில் நாடகத்துறை குறித்து படித்து முடித்துள்ளார். ""தனிப்பட்ட முறையில் எனக்கான இடத்தை மீண்டும் தேடி வருகிறேன். தாய் என்ற முறையில் அல்ல. இதை என்னுடைய குழந்தைகளும் விரும்ப மாட்டார்கள். ஆனால், அவர்களுடன் எனக்கு உறவுமுறை உண்டு. ஒருவேளை தனிமையாக இருப்பதாக உணர்ந்தால் என்னுடைய குழந்தைகளுக்காக ஒதுக்கி வைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்'' என்கிறார் மல்லிகா. சபர்மதி நதிக்கரையோரம் இவர் வாங்கியுள்ள பண்ணை நிலம் இருபதாண்டுகளாக ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அதை இயற்கை விவசாய நிலமாக மாற்றினார். கூட்டுறவு பால் பண்ணை ஒன்றையும், நெசவு ஆலை ஒன்றை உருவாக்கியதும் இவரது சாதனையாகும்.

ஒவ்வொரு முறையும் பயந்தால் நாம் நடத்தும் போராட்டம் தவறோ என்ற நிலைமை ஏற்படலாம் என்ற கருத்தில் காந்தியுடன் கற்பனையாக உரையாடுவதுபோல் "சுவாகிரந்தி: தி  ரெவல்யூஷன் வித் இன்'' என்ற நாட்டிய நாடகத்தை உருவாக்கினாராம். ""எப்போது நீ பயப்படுகிறாயோ அப்போது நீ நடத்தும் போராட்டத்தில் உண்மைக்கு மதிப்பில்லை. தியாகியாகவும் ஆக முடியாது. இறப்பதிலும் அர்த்தமில்லை'' என்று கூறுவதுபோல் காட்சிகளை அமைத்திருந்தாராம். "அப்போது நான் பயப்படவில்லை. இப்போது பயத்தை உணர்கிறேன். என்னுடைய குடும்பத்திற்காக. நான் ஜோன் ஆப் ஆர்க்கும் அல்ல. வேறுவழியிலும் வாழ முடியுமென்று தோன்றவில்லை.

மக்களைச் சந்திக்காமல் தனிமையாக இருப்பது ஏன்? எனக்கு இருப்பது ஒரு முகம் மட்டுமே. அதன் மூலம் நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்தவே விரும்புகிறேன். இத்தனை பிரச்னைகளுக்கும் இடையே வலியும் கசப்புமாக நான் செய்யும் காரியங்கள் சரியானது என்று மக்கள்தான் எனக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஏனெனில் இந்த உலகம் மூடநம்பிக்கை, முகமூடிகள் நிறைந்தது. அவர்களுக்கு எதிரே என்னை வெளிப்படுத்திக் கொள்வது முக்கியமல்ல'' என்கிறார் மல்லிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.