நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீதிபதியாவேன் என்று நினைக்கவில்லை!

கிராமத்துவாசி அரசு வேலைக்குச் சென்றாலே அது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் ஏதோ ஓர் மூலையில் விவசாயியின்

News image
Updated On :11 மே 2014, 5:11 am

வே.சுந்தரேஸ்வரன்

கிராமத்துவாசி அரசு வேலைக்குச் சென்றாலே அது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் ஏதோ ஓர் மூலையில் விவசாயியின் மகனாகப் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கே தலைமை நீதிபதியானார் என்றால் அது நம்ப முடியாத செய்தியாகத்தான் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்த உயரத்தை எட்டிப் பிடித்து அண்மையில் அப்பதவியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார் தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பி. சதாசிவம்.

 தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கடப்பாநல்லூரைச் சேர்ந்த கிராம விவசாயியின் மகனான இவர், அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி மட்டுமின்றி, அக் கிராமத்தின் முதல் பட்டதாரியாகவும் மிளிர்ந்தவர். அரசு வழக்குரைஞராகப் பணி தொடங்கி உச்ச நீதிமன்றத்தின் 40-ஆவது தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பணியாற்றி கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி அப்பதவியில் இருந்து ஓய்வும்பெற்றார். புது தில்லி கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது:

கிராமத்துப் பின்னணியில் வளர்ந்து நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி வரை சென்ற அனுபவம் பற்றி?

 கிராமச் சூழலில் பிறந்து, வளர்ந்தேன். விவசாயக் குடும்பம். அரசாங்க உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. பி.ஏ. முடித்த பிறகு சட்டக் கல்லூரியில் பி.எல். படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. எனது திருமணத்திற்குப் பிறகுதான் சட்டப் படிப்பை சென்னையில் படித்தேன். அப்போதெல்லாம், சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பது மிகப் பெருமை. ஏனெனில், தமிழ்நாடு, பாண்டிச்சேரிக்கு ஒரே சட்டக் கல்லூரி அதுதான். அப்போது கூட  நான் நீதிபதியாவேன் என நினைக்கவில்லை. 1973-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தேன். அரசு வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி 1996-ஆம் ஆண்டு நீதிபதியானேன். அப்போதிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை 18 ஆண்டுகள் நான்கு மாதங்கள் பணியாற்றியுள்ளேன். இப் பணிக் காலம் முழு மனநிறைவைத் தந்தது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வெளியேறும் போது எனக்கு முழு மன நிறைவைத் தந்தது.

நீங்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் "மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) தேசிய அளவில் நடத்தப்பட்டது குறித்து....?

 நான் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியபோது என்னிடத்தில் இந்தியாவில் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விவரங்கள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்கள் எல்லாம் தெரியப்படுத்தினர். எல்லா வழக்குகளையும் நீதிமன்றம் மூலம் நாம் தீர்வு காண முடியாது என்று கருதினேன். அதனால், எல்லா மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினேன். அதில், குடும்ப நல வழக்குகள், நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை திருப்பிவிடுவது, அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வசூல், வங்கிகளுக்குச் சேர வேண்டிய வசூல் இவையெல்லாம் முன்னுரிமை அளித்து தீர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்காக அரசு அதிகாரிகள் பங்கேற்புடன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 அதன்படி, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேசிய மெகா லோக் அதாலெத் எனும் உச்ச நீதிமன்றத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸிங் மூலம் இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் தொடர்பு கொண்டு லோக் அதாலத் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று ஒருநாள் மட்டும் 70 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. அவற்றில் 20 லட்சம் வழக்குகள் "ப்ரீ-லிட்டிகேசன்' எனும் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே பைசல் செய்துவைக்கப்பட்டன.  நிகழாண்டில் தேர்தல் சமயத்தில் கூட ஏப்ரல் 12-ஆம் தேதி, இரண்டாவது முறையாக தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதில் 20 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. அதில் 3 லட்சம் வழக்குகள் "ப்ரீ-லிட்டிகேஷன் வழக்குகளாகும். மேலும், இதேபோல ஆண்டுக்கு இரு லோக் அதாலத் நடத்துமாறு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.

உங்களது பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த அனைத்துப் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறதே...?

 நான் பதவியேற்ற முதல் நாளிலேயே உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து கேட்டறிந்தேன். உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 2,038 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நீதிமன்ற உதவியாளர் பணியிடம் முதல் பதிவாளர் பணியிடம் உள்பட 351 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போன்று பதவி உயர்வு அளிப்பதும் 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அதையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய காலத்தில்தான் 31 நீதிபதிகள் பணியிடமும் நிரம்பி இருந்தது. ஆனால், பலன் உடனே கிடைக்கவில்லை. நான் உள்பட சிலர் ஓய்வு பெற்றுள்ளோம்.

நீங்கள் விசாரித்த பல வழக்குகளில் உங்கள் நினைவில் நிற்கும் வழக்கு எது?

 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை வெடிகுண்டு வழக்குதான். உச்ச நீதிமன்ற வரலாற்றில் 1950-இல் இருந்து தற்போதைய தேதி வரை இதுதான் மிகப்பெரிய வழக்கு. 24 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. மும்பையில் தடா நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை மட்டும் 16 ஆண்டுகள் நடத்தினார். இந்த வழக்கை நடத்திய நீதிபதிகள் ஒரு சிலர் பாம்பே உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகிவிட்டனர். அவ்வளவு பெரிய வழக்கை என்னிடத்தில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கபாடியா நம்பிக்கை வைத்து அளித்தார். நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நானும், நீதிபதி பி.எஸ். சௌகான் அடங்கிய அமர்வு அந்த வழக்கை விசாரித்தோம். உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு 6 மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் ஒருவரைத் தவிர, மற்றவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் "அம்பு எய்தவனைத்தான் தண்டிக்க வேண்டும். அம்பைத் தண்டிக்கக் கூடாது' எனும் தமிழ்ப் பழமொழியைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான பிறகு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்ததுண்டா?

 நான் வீட்டில் இருந்து புறப்படும் போது எனது தந்தையை நினைத்துக் கொண்டுதான் உச்ச நீதிமன்றத்திற்குப் போவேன். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்லும் பாதையில் நுழையும் போதெல்லாம் என் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பேன். வளர்ந்து வந்த பாதை என் நினைவில் நிழலாடும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் நான் நீதிமன்றத்தில் பணியாற்றினேன்.

பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஒப்பிடும் போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் எந்த வகையில் உள்ளது?

 இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியும், நீதிமன்றம், நீதிபரிபாலனம், அரசாங்கம், சட்டமியற்றுதல் ஆகியவை எல்லாம் பொருந்துமாறும் எல்லாவற்றுக்கும் சம வாய்ப்புக் கொடுத்துள்ள மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டம். உலகத்திலேயே நமது அரசியல் அமைப்புச் சட்டம்தான் மிகச் சிறந்தது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் அம்பேத்கர் போன்ற தலைவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.  நான் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது அரசியலமைப்பின் சிறிய கையேட்டை எடுத்துச் சென்று இளம் வழக்குரைஞர்களுக்கு அளிப்பதுண்டு.

மரண தண்டனை பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அது ஒழிக்கப்பட வேண்டுமா?

 நீதிபதிகளின் தீர்ப்புகளைக் கொண்டே அது பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும். இதை முடிவு செய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசுதான்.

இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?

 இளைஞர்கள் அவர்களுக்கு உண்டான பணியை நன்கு செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இளம் வழக்குரைஞர்கள் தங்களை நாடி வருவோரின் வழக்குகளை நன்கு ஆராய்ந்து, எளிதில் பலன்பெற்றுத் தரும் வகையில் பணியாற்ற வேண்டும்.

 ஓய்வுக்குப் பிறகு எதிர்காலப் பணி என்ன?

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி 65-ஆவது வயதில் பணி நிறைவு பெற்றுள்ளேன். என்னுடைய அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னையிலோ அல்லது எனது கிராமத்திலோ குடியிருப்பேன். முதலில் எனது விருப்பம் நான் பிறந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.