காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவீன சுயம்வரம்!

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் நம் முன்னோர்கள். காரணம் அழகு, படிப்பு, பணம் , ஜாதகம் என 

News image
Updated On :29 நவம்பர் 2014, 12:06 pm

ஸ்ரீதேவி குமரேசன

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் நம் முன்னோர்கள். காரணம் அழகு, படிப்பு, பணம் , ஜாதகம் என  எத்தனையோ தடைகளினால் மணமேடை ஏற முடியாமல் இளமையைத் தொலைத்து ஏங்கி தவிக்கும் இளைஞர்கள் ஏராளம். எந்த குறையும் இல்லாதவர்களுக்கே இந்த நிலைமை என்றால்  மாற்று திறனாளிகளுக்கு கேட்க வேண்டுமா? அவர்களுக்காகவே சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதாபவன் அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏழை எளியவருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்காகவும் சுயம்வரம் வைத்து மணமக்களைத் தேர்வு செய்து திருமணம் நடத்தி வருகிறது. இதில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த மாதம் 58 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம் நடத்தப்பட்டது. இது குறித்து கீதாபவனின் மேனேஜிங் டிரஸ்ட்டியான அசோக் குமார் கோயல் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அறக்கட்டளையின் மூலம் வறுமையில் வாடுபவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக என்ன செய்யலாம் என்று  எல்லாரும் கூடி யோசித்தோம். அப்போதுதான் இந்த எண்ணம் வந்தது. உடனடியாகச் செயலில் இறங்கினோம். முதல் ஆண்டு குடிசைப் பகுதியில் இருந்து 30 ஜோடிகளைத் தேர்வு செய்தோம். மேலும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பில் இருந்து ஐந்து ஜோடிகளைத் தேர்வு செய்து கொடுத்தார்கள். மொத்தம் 35 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்.

அடுத்த ஆண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பில் இருந்து ஒரு விண்ணப்பம் வைத்தார்கள், ஏழை எளியவர்களுக்கு உதவ நிறைய அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் மாற்றுத் திறனாளிகள் அமைப்பிற்கு என்று எதுவும் இல்லை. அதனால் இந்த திட்டத்தை முழுவதும் எங்கள் அமைப்பு சார்ந்தவர்களுக்கு அளித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதனால் இரண்டாம் ஆண்டில் இருந்து  இந்தத் திட்டத்தினை முழுவதுமாக மாற்றுத் திறனாளிகளுக்காகவே பிரத்யேகமாக மாற்றினோம்.

ஒவ்வோர் ஆண்டும் முதலில் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறோம். அதற்காக முறையான அறிவிப்புகளை மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் மூலமும், மீடியாக்கள் மூலமும் மாவட்டம் தோறும் அறிவிக்கிறோம். அந்தந்த மாவட்டங்களிலேயே ஆண், பெண் தேர்வும் நடத்தப்படுகிறது.

அதன் பிறகு இறுதித் தேர்வு இங்கே சென்னையில் உள்ள கீதா பவனில் நடத்தப்படுகிறது.

அவரவருக்கான மணப்பெண், மண மகன் தேர்வான பின்பு அவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அந்த கவுன்சிலிங்கின் போது  மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் என சில தேர்வாளர்களை வரவழைத்து மணமக்கள் திருமணத்திற்கு தகுதியானவர்தானா? என்பதனைச் சோதித்து பின்புதான் அவர்களுக்கு திருமணத்திற்கான ஒப்புதல் அளிக்கிறோம்.

இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பித்தவர்கள் 1800க்கும் மேற்பட்டவர்கள். அதில் 108 ஜோடிகள் மட்டுமே சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். அதிலும் கவுன்சலிங் மற்ற தேர்வுகளுக்கு பின் 58 ஜோடிகளே தேர்வானார்கள். இதில் மாற்றுத்திறனாளி அல்லாத நல்ல நிலையில் உள்ள 7 ஆண்களும், 21 பெண்களும் மாற்றுத் திறனாளிகளை மணந்துகொள்ள முன்வந்தனர்.

இதில் சிறு வருத்தம் என்னவென்றால் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சிலருக்கு இன்னமும் சரியான பொருத்தம் அமையால் திரும்பிச் செல்கின்றனர். மேலும் இந்த சுயம்வரத்தில் பெரும்பாலும் ஆண்களே கலந்து கொள்கிறார்கள். பெண்கள் குறைவாகவே கலந்து கொள்வதனால் நிறைய ஆண்களுக்கு பொருத்தமான மணமகள் கிடைக்காமலும் திரும்பிவிடுகின்றனர்.

 திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்.  பொதுவாக நமது வீட்டில் நன்றாக இருக்கும் ஒரு மகனுக்கோ அல்லது மகளுக்கோ மாப்பிள்ளை தேடுவது என்பதே எத்தனை சிரமமான விஷயம். அப்படி இருக்க இங்கே பல ஜோடிகள் அதுவும் மாற்று திறனாளிகள் எனும் போது எத்தனை வலிகள்,பிரச்னைகள் இருக்கும். இருந்தாலும் இதை எல்லாம் தாண்டி ஜோடிகளின் திருமணத்தன்று, எங்கள் இல்லத் திருமணம் போன்ற ஓர்  உணர்வு இருக்கிறது. அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒவ்வொருஜோடிக்கும் அவர்கள் அணிந்து கொள்ள துணி மணிகள், தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டி,  பாத்திரங்கள், இரண்டு மாதத்திற்கான மளிகை பொருள்கள் என ஒரு குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருள்களையும் வழங்கி திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டுகளில் எங்கள் அறக்கட்டளையின் மூலம் திருமணம் செய்து கொண்டவர்களும் சிலர் ஒவ்வொரு ஆண்டு திருமணத்தின் போதும் தங்கள் உறவினர் திருமணம்போல் நினைத்து குழந்தைகள் குடும்பமாக வந்து கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும், தெரிவிக்கிறார்கள்'' என்றார்.

படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.