திருநங்கை வேடத்தில் "சஞ்சாரி ' விஜய்
1975-ஆம் ஆண்டில் "சோமனதுடி' படத்தில் நடித்த வாசு தேவராவுக்கும், 1987-ஆம் ஆண்டில் "தபரணகதே' படத்தில் நடித்த


1975-ஆம் ஆண்டில் "சோமனதுடி' படத்தில் நடித்த வாசு தேவராவுக்கும், 1987-ஆம் ஆண்டில் "தபரணகதே' படத்தில் நடித்த சாருஹாசனுக்கும் பிறகு கன்னடத் திரை உலகுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது சஞ்சாரி விஜய்க்கு கிடைத்துள்ளது. "நானு அவனல்லா - அவளு' படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
கன்னடத் திரையுலகில் பிரபலமான ரங்காயனா
ரகு - மங்களா தம்பதியரின் மகனான விஜய், கடந்த 8 ஆண்டுகளாக நாடகத் துறையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடத்திவரும் நாடகக் குழுவின் பெயர்தான் "சஞ்சாரி'. இதன் காரணமாகவே இவரை "சஞ்சாரி விஜய்' என்று அழைக்கிறார்கள். 2011-ஆம் ஆண்டில் ரமேஷ் அரவிந்த் நடித்த படத்தின் மூலம் கன்னடப் படங்களில் நடித்த இவர், தமிழில் "உன் வீட்டு சமையலறையில்' உள்பட 11 படங்களில் நடித்திருக்கிறார்.
""நானு அவனல்லா - அவளு'' திரைப்படத்தின் கதை, சென்னையில் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றில் பணிபுரியும் திருநங்கை "லிவிங் ஸ்மைல்' வித்யாவின் வாழ்க்கை வரலாறாகும். அவர் எழுதிய ""நான் வித்யா - ஒரு திருநங்கையின் பயணம்'' என்ற புத்தகத்தைப் படித்த தயாரிப்பாளர் லிங்க தேவரு, அதைப் படமாக்க விரும்பி, இந்தப் புத்தகத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்த டாக்டர் தமிழ்ச்செல்வி மூலமாக உரிமை பெற்றார்.
இதை திரைக்கதையாக அமைக்க கன்னடத்தின் புகழ்பெற்ற இயக்குநர் கிரிஷ் காசரவல்லி, சேஷாத்திரி, எழுத்தாளர்கள் கோபால கிருஷ்ண பை, மனு சக்கரவர்த்தி ஆகியோர் உதவினர். மக்கள் பரபரப்பாக கூடும் இடங்களில் படப்பிடிப்பை நடத்தியதோடு, 150-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை ஒரேசமயத்தில் வைத்து ஒவ்வோர் இடமாக மாற்றி படப்பிடிப்பு நடத்தியது புதிய அனுபவமாகவும் சவாலாகவும் இருந்ததாக தயாரிப்பாளர் லிங்க தேவரு கூறினார்.
திருநங்கைகள் பெயருக்கோ அவர்களது வாழ்க்கை முறைக்கோ களங்கம் ஏற்படாதவகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது பற்றி விஜய் என்ன சொல்கிறார்?
""சிறந்த நடிகருக்கான தேசிய விருது எனக்குக் கிடைக்குமென்று எதிர்பார்க்கவே இல்லை. தேசிய அளவில் மம்முட்டி, அமீர்கான், சாஹித் கபூர் ஆகியோர் பெயர்கள் இருந்ததாக அறிந்தேன். இப்படத்தில் நடிக்கும்போது அந்தப் பாத்திரத்தை முற்றிலுமாக உணர வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் அதிகமாகத் தங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்று 15 நாள்கள் அவர்களது வாழ்க்கை முறைகளைத் தொடர்ந்து கண்காணித்தேன். பல திருநங்கைகள் உதவி செய்தனர். அவர்களைப் பற்றிய பல தகவல்களை இணையதளத்தின் மூலமாகவும் அறிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோது புதுமையான பாத்திரமாக இருக்கிறதே என்ற எண்ணத்தில்தான் நடித்தேன். ஏற்கெனவே நாடகத் துறையில் இருந்த அனுபவம்தான் இதை ஏற்கும் துணிவைத் தந்தது. இதற்குக் கடினமான உழைப்பும் தேவைப்பட்டது. ஏற்கெனவே "உக்ரணே' (உன் வீட்டு சமையலறையில் தமிழ் பதிப்பு) படத்தில் ஓரினச் சேர்க்கை ஹேர் டிரஸ்ஸராகவும், "தசவலா' படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன்.
பல படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் சரியான வரவேற்பு இல்லை. இருந்தாலும் என்னுடைய கடின உழைப்புக்கு என்றாவது ஒருநாள் பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
நான் நடித்த "நானு அவனல்லா - அவளு' மற்றும் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட "ஹரிவு' ஆகிய படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். என்னைப் பொருத்தவரை நான் ஒரு நடிகன். வர்த்தக சினிமா என்றோ அதற்கிணையான சினிமா என்றோ வித்தியாசம் பார்க்க முடியாது. இதுவரை நடித்த படங்களில் எட்டு முதல் பத்து படங்கள் வர்த்தக ரீதியானவை என்றாலும் இரண்டு படங்கள் இந்த வகையில் சேராமல் விருதுகளைப் பெற்றுள்ளன. நடிகன் என்ற முறையில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம்தான் முக்கியம். இதுதான் தொடர்ந்து படங்களில் நடிக்க எனக்கு உற்சாகத்தைத் தருகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...