அண்மையில் மறைந்த எழுத்தாளர் "கலைமாமணி' விக்கிரமன் குறித்து அவருடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்கள் கூறியவை:
அசோகமித்திரன்

எனக்கும் விக்கிரமனுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலப் பழக்கம்.
1966-இல் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். அப்போது "கணையாழி' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தேன். விளம்பர உதவி கேட்டுத்தான் விக்கிரமனை முதலில் சந்தித்தேன்.
அவர் முதலில் "அமுதசுரபி' என்னும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவருடைய பத்திரிகையின் விசேஷம் என்னவென்றால் லா.ச.ராமாமிருதம் எழுதிய கடினமான, பிரமிக்கத்தக்க எண்ணற்ற நாவல்கள் அதில் வெளிவந்தன.
"அமுதசுரபி'யில் நானும் நிறைய கதைகளை எழுதியிருக்கிறேன். ஆங்கிலம், தெலுங்கு, இன்னும் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட என்னுடைய பல கதைகளும் "அமுதசுரபி'யில் வெளிவந்தன.
"தந்தைக்காக' என்று நான் எழுதிய தொகுப்பு ஒன்றும் "அமுதசுரபி'யில் வெளியானது.
அதுபோன்று என்னுடைய "பதினெட்டாவது அட்சக்கோடு' என்ற 40-50 பக்கம் கொண்ட நீண்ட கட்டுரையை அவர் பிரசுரித்தார்.
விக்கிரமனின் இயற்பெயர் "வேம்பு'. அவருக்கு கல்கியின் நாவல்கள் மீது அளவில்லாத ஈடுபாடு உண்டு. அதனாலேயே கல்கியின் "பார்த்திபன் கனவு' என்ற சரித்திர நாவலில் வந்த விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தின் பெயரைத் தனது புனைபெயராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அவர் "நந்திபுரத்து நாயகி' போன்ற வரலாற்று நாவல்களும், சமூக அக்கறை கொண்ட குறு நாவல்களையும் நிறைய எழுதி இருக்கிறார். கலைமாமணி விருது பெற்றவர்.
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வந்தார். அதுபோன்ற ஈடுபாடுகளுக்குப் பெரும் பொறுமையும் உழைப்பும் தேவை. இரண்டுமே விக்கிரமனிடம் நிறைய இருந்தன.
அவருடைய நாற்பது ஆண்டு காலச் சிறுகதைகளை பத்துப் பத்து ஆண்டுகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தார். அதில் ஓர் பத்தாண்டுத் தொகுப்புக்கு என்னுடைய முன்னுரையை வற்புறுத்திப் பெற்றார்.
என்னை விட வயதில் பெரியவர். அவருடைய இழப்பு என்னைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கிருஷ்ணன்

"கங்காபுரிக் காவலன்' என்ற வரலாற்று நாவல் மூலம் தற்கால தமிழ் இலக்கியத்தில் சரித்திரம் படைத்தவர் விக்கிரமன். அமுதசுரபி மாத இதழுக்கு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்தவர். கோபுலுவின் நெருங்கிய நண்பர். தமிழ் எழுத்தாளர்களை சங்கம் நிறுவி ஒருங்கிணைத்ததில் இவர் பங்கு முக்கியமானது. தன் கடைசி மூச்சு வரையில் எழுதிக் கொண்டிருந்தவர். பொருளாதாரத்தில் நலிவுற்ற எழுத்தாளர்களுக்கு, தான் நிறுவிய எழுத்தாளர்கள் நல நிதி அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்தவர். அவரின் தமிழ்ப்பணியை காலம் மறக்காது.
ஏர்வாடி ராதாகிருஷ்ணன்

புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் விக்கிரமனுக்கு நிகர் விக்கிரமனே!
"திருமணம் வெறும் நிகழ்வுகள் அல்ல' என்ற எனது முதல் சிறுகதையை ஒரு பிரபலமான பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். அங்கிருந்து இது பிரசுரிக்க ஏற்றது அல்ல என்று திருப்பி அனுப்பியிருந்தார்கள். அதை மீண்டும் அமுதசுரபிக்கு அனுப்பியிருந்தேன். அங்கே அந்த கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அது தந்த உற்சாகத்தில் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.
அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். எல்லாரிடமும் எளிமையாக பழகக்கூடியவர்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் 25 ஆண்டுகள் பொதுச் செயலாளராகவும், இணை செயலாளராகவும் நாங்கள் இருவரும் இணைந்து நிறையப் பணிகள் செய்திருக்கிறோம்.
1886- இல் ரோம், பாரிஸ் நாடுகளுக்கு கலைஞர்கள்- எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு பயணம் செய்தோம். அங்கே கலைஞர்களுக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்து அவருக்கு சிறிய வருத்தம் இருந்தது. அதைப்பார்த்த டெல்லி கணேஷ் அவரிடம் சொன்னார்: ""எல்லாருக்கும் மரியாதை கிடைப்பதனால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று இல்லை, எல்லாம் தெரிந்தவர்களுக்கு மரியாதை கிடைக்காததும் பாவமில்லை. யு ஆர் அல்வேஸ் கிரேட் சார்'' என்றார்.
அதுபோன்று மூத்த பத்திரிகையாளர்கள் சாண்டில்யன், சுந்தா, லஷ்மி, கோமகள் உள்ளிட்ட எழுத்தாளர்களுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பட்வாரி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். எழுத்தாளர்கள் நலனுக்காக ஒரு நீண்ட கோரிக்கையை எடுத்துக் கொண்டு சென்றோம். அவர் எங்கு சென்றாலும் எழுத்தாளர்கள் நலனையே கருத்தில் கொண்டு கோரிக்கையுடனேயே செல்வார். இதனால் அவருக்கு "கோரிக்கை செல்வர் விக்கிரமன்' என்ற பெயரும் உண்டு.
எழுத்தாளர்களுக்கு சலுகை வாங்கி தருவதில் முழு முயற்சியுடன் ஈடுபடுவார். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அவருடைய மணிவிழாவில் கொடுத்த நிதியைக் கொண்டு எழுத்தாளர் நல நிதி என்று ஒரு டிரஸ்ட் தொடங்கி அந்த நிதியில் கிடைக்கும் வட்டியில் இருந்து மிகவும் வறுமையில் உள்ள எழுத்தாளர்களுக்கு உதவி வந்தார்.
அதுபோன்று அவருக்கு மூத்த பத்திரிகையாளர்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் ஆசையிருந்தது. என்னுடைய நூல் வெளியீடுகளில் வரவேற்புரை, நன்றியுரை, வாழ்த்துரை என அவருடைய பங்களிப்பு ஏதாவது ஒரு வகையில் இருக்கும். எனக்கு தந்தையைப் போல வழிகாட்டி வந்தார். அவர் மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.
ஸ்டாலின் குணசேகரன்

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கலைமாமணி விக்கிரமன். தமிழுக்கும் இலக்கியத்திற்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். பாரதியார் மீது அளவற்ற பக்தி கொண்டவர். ஈரோடு மாநகரில் கடந்த 2012இல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், மிக மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்கு பிரமாண்டமான வகையில் பாராட்டுவிழா ஒன்று நடத்த விரும்பினோம். தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களின் வழிகாட்டுதல்படி ஏழுபேர் கொண்ட எழுத்தாளர்கள் பட்டியல் உருவானது. விக்கிரமன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி, நீல.பத்மநாபன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், டி.செல்வராஜ் ஆகிய எழுவரும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி மாபெரும் இலக்கிய எழுச்சி. விக்கிரமன் ஐயாவை சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்துச்சென்றோம். பல வருடங்களாகவே நடக்கமுடியாமல் இருந்தார். ""மாடியில் வசிக்கிறீர்களே எப்படி இறங்குவீர்கள்?'' என்று கேட்டேன். ""கீழே இறங்கி வருடக்கணக்காகிறது, ஈரோடு புத்தகத் திருவிழாவை நீங்கள் அற்புதமாக நடத்திவருகிறீர்கள். இதைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் எப்படியோ வந்துசேர்ந்துவிட்டேன். இந்த விழாவுக்கு வந்ததும் எனக்கு பத்து வயது குறைந்துவிட்டது'' என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.
பாரதி சொன்னது போல் வெடிப்புறப்பேசினார் என்றுதான் கூறவேண்டும். விழாவில் விந்தன், அகிலன், ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் கரங்களால் விக்கிரமனுக்கு விருதும் பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விக்கிரமன் பேச்சு இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அட்டைப் படம் : ப. ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


