உங்களை அறியுங்கள்... உற்சாகம் பெறுங்கள்!
ஏவிஸ் என்று பலருக்கும் அறிமுகமான ஏ. விசுவநாதன் ஒரு முன்னாள் பத்திரிகையாளர். இன்று அவர் நடத்தும் உற்சாகமூட்டும் சொற்பொழிவுகள்


ஏவிஸ் என்று பலருக்கும் அறிமுகமான ஏ. விசுவநாதன் ஒரு முன்னாள் பத்திரிகையாளர். இன்று அவர் நடத்தும் உற்சாகமூட்டும் சொற்பொழிவுகள் தோல்வியில் துவண்டு இருப்பவர்களைத் தூக்கி எழ வைப்பவை. வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று வழி காட்டுபவர். இந்த வகையில் தாம் எழுதிய "ஃபால் லைக் அ ரோஸ் பெடல்' (ரோஜா இதழ் போல் விழ) என்ற ஓர் ஆங்கில நூலை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுப் பேசினார்.
எதிர்மறையான சூழல்கள், தடங்கல்கள், பண வசதிக் குறைவுகள், ஒரு பழம் வாங்கக்கூட இயலாத சூழல்கள் என்று வீழ்ந்து கிடந்த சூழ்நிலையில் எப்படி எழுந்து நின்று முன்னேறினார் என்பது அவருடைய சாகசமான சரித்திரம். (தேர்வு முடிவுகள் வெளியாகிற சமயத்தில் மனமுடைந்து போகும் மாணவ சமுதாயத்துக்கு உற்சாகம் அளிக்கவும், தற்கொலை வரை போகிற விவசாயிகளைத் தடுத்து நிறுத்தவும், ஏவிûஸக் கூப்பிட்டு அவர்களிடம் பேசச் சொல்லலாம்)
அடையாறு "ஒடிசி' புத்தகக் கடையின் மாடியில் நடந்த "ப்ளிஸ் காச்சர்ஸ்' நிகழ்ச்சியில், ஏவிஸூடன், ஒவியர் பார்வதி நாயரும், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் வெங்கட்ராமும் பங்கெடுத்துக் கொண்டதுதான் சுவாரசியத்தைக் கூட்டியது. (வீட்டுக்கு வந்தவுடன் ப்ளிஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ்ப் பதம் என்ன என்று அகராதியைப் புரட்டினேன். ஸ்வர்க்க இன்பம், பேரானந்தம் என்று போட்டிருந்தது. பேரானந்தத்தை விரும்பாத மானுடரும் உண்டோ?)
கூட்டங்களில் எல்லாம் தன் மனைவி வாணி தம்மை முதலில் அறிமுகப்படுத்திய போது சங்கோசப்பட்டாராம் ஏவிஸ். ""இன்றைக்கு நான் அப்படி உணரவில்லை. ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது, கூட்டத்தினருக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் அவர் மனைவி மிஷல். அதற்குப் பிறகு எனக்கு அந்த சங்கோசம் போய்விட்டது'' என்றார் ஏவிஸ்.
ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர். ஓவியர். குழந்தைகளுக்காக எழுதுபவர் என்று பல முகங்கள் பார்வதி நாயருக்கு. அம்மாவும் ஓவியர் என்பதால் வீட்டில் தடை எதுவும் சொல்லவில்லையாம். ""பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியதுதான். ஆனால் அதுவே குறியாக இருந்தால் குறிக்கோள் நிறைவேறாது'' என்றார் பார்வதி. சிங்கப்பூரில் தாம் சில காலம் வசித்த போது, ஆர்ட் காலரியில் கண்காட்சி பற்றி எழுதிக் கொடுப்பதன் மூலம் தமக்கு ஓர் இடம் அங்கே கிடைத்ததாகச் சொன்னார். ஜாகர்த்தாவுக்குப் போனவர், ஒரே நாளில் அங்கே இருந்து புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை விவரித்தார். வெறும் ஹேன்ட் பேகுடன் சிங்கப்பூர் திரும்பினாராம்.
சரி, சிங்கப்பூர், ஜாகர்த்தா என்று போனவர், ஏன் கலைகளை ரசிக்கும் மும்பை, தில்லி என்று போகாமல், சென்னையைத் தேர்ந்தெடுதீர்கள் என்று ஒரு கேள்வியை எழுப்பினார் ஏவிஸ். ""இங்கே அதற்கான சூழல் சரியாக இல்லாவிட்டாலும், வாழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் பார்வதி நாயர். மேலும், என் தாயார் இங்குதான் வசிக்கிறார் என்றார்.
வெங்கட்ராம் மெகானிகல் இஞ்சினீயரிங் படிக்க அவர் பெற்றோர் அவரை 80-களில் மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே "சர்க்கரை மாபியா' நடத்தி வந்த பொறியியல் கல்லூரிகள் நிறைய இருந்தன. தமிழ் நாட்டில் பெரிய அளவுக்கு இஞ்சினீயரிங் கல்லூரிகள் இருக்கவில்லை. கரும்புத் தோட்டங்கள் சூழ்ந்த பிரதேசத்தில், மழை பொழிந்த மறுநாள் சூழ்நிலையே அற்புதமாக இருக்கும் என்றார். அங்கே படிக்கப் போனவர், ஒரு நாள் மீட்டர்காஜ் ரயில் வண்டித் தொடர் ஒன்று ஷோலாப்பூர்-பூனா மார்க்கமாகச் செல்வதைத் தம் கையிலிருந்த காமிராவில் படம் பிடித்தார். ""அன்றைக்குப் பிடித்த புகைப்படப்பித்து, இஞ்சினீயரிங் துறையை மறக்கடிக்கச் செய்துவிட்டது. அதுதான் தொழிலின் வித்து'' என்றார் வெங்கட்.
பிறகு கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோக்களில் எல்லாம் புகுந்து பார்த்திருக்கிறார். அதன் பிறகு காமிராவை வைத்துக்கொண்டு கவிதையே எழுதத் தொடங்கிவிட்டார் வெங்கட். இவர் புகைப்படம் எடுக்காத கோடம்பாக்க பிரமுகர்கள் இருக்க முடியாது. அமிதாபின் 70 ஆவது பிறந்த நாள் வைபவத்தைப் புகைப்படம் எடுக்க விசேஷமாக அழைப்புப் பெற்றவர் வெங்கட். அதே போல் இவர் எடுக்காத தொழில் துறைகள் இருக்காது. எத்தனை பெரிய நிறுவனங்கள் உண்டோ அத்தனைக்கும் படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் வெங்கட்.
""உங்களுக்கு வீட்டில் எதிர்ப்புக் கிளம்பவில்லையா?'' என்ற ஏவிஸின் கேள்விக்கு, இல்லை என்றார் வெங்கட். ""உனக்கு எது பிடித்ததோ அதைச் செய்'' என்று அனுமதி வழங்கிவிட்டார்களாம். ""அந்தக் காலகட்டத்தில், பையன்கள் எந்தப் படிப்புப் படிக்க வேண்டும் என்று பெற்றோர்தாம் தீர்மானிப்பார்கள்'' என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
தமது புகைப்படங்களின் வெற்றிக்கு வெளிச்சம்தான் காரணம் என்றார் வெங்கட். லைட் இல்லாவிட்டால் ஏது வாழ்க்கை என்று கேட்டார். மேலிருந்து விழும் ஒளிதான் தம் புகைப்படங்களின் தரத்தை உயர்த்தக் காரணம் என்றார். தாம் அமைக்கும் ஒளி அமைப்புதான் தம் புகைப்படங்களை வித்தியாசமாகக் காண்பிக்கின்றன என்றார். ""எல்லோரும் என்ன காமிரா வைத்திருக்கிறாய், என்ன லென்ஸ் பயன்படுத்துகிறாய் என்று கேட்கிறார்கள். அவை அல்ல முக்கியம்'' என்றார் வெங்கட்.
""வாழ்க்கையின் வசதிக்கு பணம் அவசியம் தான். ஆனால் அதுவே உங்கள் குறிக்கோள் நிறைவேறத் தடையாகவும் மாறிவிடும்'' என்றார் ஏவிஸ். உங்களுக்கு வயதான பிறகு, நீங்கள் எதைச் சாதிக்கவில்லை என்று வருந்துகிறீர்களோ, அதுவே உங்கள் வெற்றிக்குத் தடையாக இருந்திருக்கும் என்ற ஜோசப் கேம்ப்பெல்லின் மேற்கோளைச் சுட்டிக் காட்டினார்.
""நீங்கள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா புகைப்படங்களை அந்தக் காலத்தில் பார்த்திருந்தால், அவர்களா இவர்கள் என்று வியப்பீர்கள். அவர்கள் தம்மை அழகாகக் காண்பிக்க வெகுவாக உழைக்கிறார்கள். தே ஒர்க் ஆன் இட்'' என்று ஒரு சின்ன ரகசியத்தையும் பகிர்ந்துகொண்டார் வெங்கட்.
வெங்கட்டின் புகழ் பெற்ற புகைப்படங்களும், பார்வதி நாயரின் வித்தியாசமான ஓவியங்களும் அருகே இருந்த திரையில் மாறி மாறி வந்துகொண்டே இருந்தன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டம், வெங்கட்டுக்காக வந்ததா, பார்வதிக்காக வந்ததா, ஏவிஸக்காக வந்ததா என்று பிரித்துச் சொல்ல முடியாது. ஆனால் வாழ்க்கையில் தங்கள் குறிக்கோளை எட்டி, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் தேவை என்று நம்பியவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள் ஏவிஸின் வசீகரமான வார்த்தைகள், அவர் சொல்லும் மேற்கோள்கள் எல்லாம் சிந்தித்துப் பார்க்க வைக்கிற ரகம்.
அடுத்த கூட்டம், ஜூலை கடைசி சனிக்கிழமை. கர்நாடக இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு கலக்குக் கலக்கி வரும் பியானோ இசைக் கலைஞர் அனில் சீனிவாஸ் பங்கேற்பார் என்று அறிவித்தார் ஏவிஸ். நிச்சயம் அனில் சீனிவாஸ் பேச்சாலும், பியானோ வாசிப்பாலும் கூட்டத்தை வசீகரித்துவிடுவார் என்றால், ஏவிஸ்ஸின் ஆயுதம் கவர்ச்சியான பேச்சு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...