"நாட்டியக் குறளான்', "திருக்குறள் நாட்டிய வேந்தர்' இவை எல்லாம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுந்தரமகாலிங்கத்துக்குக் கிடைத்த பட்டங்கள்.
திருக்குறளைப் பாடி, நடனம் ஆடி மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார் அவர்.
இதுவரை ஒன்றல்ல, இரண்டல்ல 1850 நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.
""பழந்தமிழ் இலக்கியங்கள் பல இருக்க, திருக்குறளை மட்டும் நடனம் ஆடி கற்றுத் தர வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?'' என்ற கேள்வியோடு தொடங்கினோம்.
""ஏனென்றால் அது தெய்வீக நூல்'' என்கிறார் சுருக்கமாக.
67 வயதாகும் அவர் ஓய்வாக வீட்டில் முடங்கிக் கிடக்காமல் பல ஊர்களுக்குச் சென்று பள்ளிகளில் இந்த "முத்தமிழ் குறள் நிகழ்வு'களை நடத்தி வருகிறார்.
ஆசிரியர்கள் பொதுவாக நடனம் ஆடுவதில், பாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நீங்கள் எப்படி?
நான் மதுரை அருகே உள்ள பரவை என்ற ஊரைச் சேர்ந்தவன். என்னுடன் பிறந்தவர்கள் 5 பேரும் என் மூத்த சகோதரிகள். நான் கடைசி. என் சகோதரிகள் பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்ததும் பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பாடும் பாடல்களைப் பாடி, நடனம் ஆடுவார்கள். அதைப் பார்த்ததும் எனக்கும் நாட்டியத்தில் ஆர்வம், பாடுவதில் ஆர்வம் வந்துவிட்டது. நான் முறையாக நாட்டியம் கற்கவில்லை. பாடவும் கற்கவில்லை. என்றாலும் என் பாடல்களைக் கேட்ட இசை வல்லுநர்கள் நான் எங்கே இசை கற்றேன்? என்று வியப்புடன் கேட்பார்கள்.
திருக்குறளைப் பாடி நடனம் ஆடி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
எவ்வளவோ இலக்கியங்கள் இருந்தாலும் அவையெல்லாம் திருக்குறளுக்கு நிகரானதாக ஆக முடியாது. திருக்குறள் ஒன்றைப் படித்தாலே உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் படித்த மாதிரி. அது வாழ்க்கைக்கான வழிகாட்டி. அதை மாணவர்கள் கற்றால் போதும், சிறந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அதனால்தான் திருக்குறளைத் தேர்ந்தெடுத்தேன்.
பாடவும், நடனம் ஆடவும் பொருத்தமாக அறிவு நூலாகிய திருக்குறள் எப்படி இருக்க முடியும்? கற்பனை வளத்துக்கு அதில் இடம் இருக்கிறதா?
ஏன் முடியாது? முடியும் என்பதைத்தான் என் நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றனவே.
நான் மாணவர்களுக்கு முதலில் திருக்குறளைப் பாடி, அதன் பொருளை விளக்குவேன்.
பின்பு வெறும் ராகத்தை மட்டும் இரண்டொரு முறை பாடுவேன். பின்பு அந்த ராகத்தோடு திருக்குறளைப் பாடுவேன். திருக்குறளின் பொருளுக்கேற்ப முக பாவங்களை மாற்றிக் காட்டுவேன். இதனால் மாணவர்கள் என் நிகழ்ச்சியுடன் ஒன்றிப் போய்விடுவார்கள்.
உதாரணமாக, "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்ற திருக்குறளை ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் விளக்கினால், யாருக்கும் சிரிப்பு வராது. அதையே நான் ஆடிப் பாடி நடித்துக் காட்டும்போது சிரித்துவிடுவார்கள். அன்பில்லாதவர்கள் பிறர் பொருளைத் திருடுவார்கள் என்பது போல நான் நடித்துக் காட்டுவேன்.
"மோப்பக் குழையும் அனிச்சம், முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என்ற குறளை எப்படியெல்லாம் முக பாவத்துடன் நடித்துக் காட்ட முடியும் தெரியுமா? திருக்குறளில் கற்பனை வளத்துக்கு நிறையவே இடம் உள்ளது.
நீங்கள் தமிழாசிரியரா?
தமிழாசிரியராகப் பணி புரிந்து தலைமையாசிரியராக ஓய்வு பெற்றவன். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியாகி ஓய்வு பெற்றேன்.
உங்களுடைய நிகழ்ச்சிக்கு முத்தமிழ் குறள் நிகழ்வு என்ற பெயர் வைத்திருக்கிறீர்களே?
தொடக்கத்தில் "குறள் நாட்டியாஞ்சலி' என்றுதான் பெயர் வைத்திருந்தேன். இப்போது நான் நடத்தும் நிகழ்ச்சியில் திருக்குறளை விளக்கிப் பேசுகிறேன். அதில் இயல் தமிழ் இருக்கிறது. திருக்குறளைப் பாடுகிறேன். இசைத் தமிழ் இருக்கிறது. நடனம் ஆடி திருக்குறளைச் சொல்லித் தருகிறேன். நாடகத் தமிழ் இருக்கிறது. அதனால்தான் முத்தமிழ் குறள் நிகழ்வு என்று அழைக்கிறேன். முதன்முதலில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்ற ஊரில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு ஒன்றில் திருக்குறளை நடனமாடி கற்றுத் தரும் நிகழ்ச்சியை நடத்தினேன். இப்போது ஓய்வு பெற்ற பின்பும் பல ஊர்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
ஆசிரியராகிய நீங்கள் நடனமாடுவதை, பாடுவதைப் பற்றி பிறர் என்ன நினைத்தார்கள்?
பெரும்பான்மையான ஆசிரியர்கள் பாடங்களை விளக்கிச் சொல்லித் தருவார்கள். அந்தத் திறமைதான் அவர்களுக்கு அதிகம் இருக்கும். ஒரு சில ஆசிரியர்கள் பாடும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் மாணவர்கள் முன்னிலையில் பாடுவதற்கு கூச்சப்படுவார்கள். ஆனால் நடனமாடும் ஆசிரியர்கள் என்னைப் போல ஒரு சிலரே இருப்பார்கள்.
முகத்துக்கு நேரே பலர் பாராட்டிப் பேசினாலும், முதுகுக்குப் பின்னே இழிவாகப் பலர் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை.
எனது நோக்கம், திருக்குறளை மாணவர்களுக்கு நன்கு பதியும்படி சொல்லித் தருவதுதான். அதை நான் நடனமாடி, பாடி சொல்லித் தருகிறேன். இதில் எனக்குப் பெருமை உண்டு.
ஓய்வு பெற்ற பின்பு வீட்டில் முடங்கிக் கிடக்காமல் பல வெளியூர்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்துவதில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் என் வாழ்நாள் உள்ளவரை திருக்குறளை மாணவர்களுக்கு நடனம் மூலம் எடுத்துச் செல்லவே விரும்புகிறேன்.
உங்களைப் போலவே திருக்குறளைப் பாடி நடனம் ஆடிக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. என்னுடைய தாக்கத்தினால் என் பேத்தி ஹரிணி திருக்குறளைப் பாடி நடனம் ஆடிப் பரிசு வாங்கி வந்திருக்கிறாள். அதுவும் மூன்றுவிதமாக. முதலில் திருக்குறளுக்குப் பரத நாட்டியம் ஆடி இருக்கிறாள். அதற்குப் பிறகு அதை மேற்கத்திய நடனத்திலும், மூன்றாவதாக கிராமப்புற நடனத்திலும் ஆடியிருக்கிறாள். இது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
நீங்கள் திருக்குறளை எந்த இசையில் பாடுகிறீர்கள்?
சினிமாப் பாட்டின் ராகங்களில் திருக்குறளை என்னால் பாட முடியும். ஆனால் நான் பாடுவதில்லை. சினிமாப் பாட்டு ராகம் தவிர, பல ராகங்களில் நான் பாடுகிறேன். ஆயிரம் ராகங்களில் நான் பாடினாலும் எல்லாமும் ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.
நிகழ்ச்சிகள் நடத்த எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது?
நான் நிகழ்ச்சி நடத்துவதைக் கேள்விப்பட்டு, பல பள்ளிகளில் என்னை அழைக்கிறார்கள். வெளியூர்களுக்குச் சென்றும் நடத்துகிறேன். அரசு ஆதரவு தந்தால் இன்னும் சிறப்பாக திருக்குறளை நடனம் மூலம் நான் கற்றுத் தருவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.