
கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசு "முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' அளிக்கிறது. 2013 ஆம் ஆண்டுக்கான இந்த விருதைப் பெற்றிருப்பவர் முனைவர் ந.தெய்வசுந்தரம். அவரும் அவர் குழுவினரும் உருவாக்கியுள்ள அந்த மென் பொருளின் பெயர்: மென்தமிழ்.
இந்த "மென்தமிழ்' எவ்வாறெல்லாம் செயல்படுகிறது? இதை எப்படி உருவாக்கினீர்கள்? கணினித் தமிழ் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்? என்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்துக் கேள்விகளை அடுக்கினோம்:
""நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறை, மொழியியல்துறை தலைவராகப் பணியாற்றி 2010 இல் ஓய்வு பெற்றேன். கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அப்போதே இருந்தது. எனவே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஒரு பிரிவாக கணினி மொழியியல்துறையை 2001 இல் உருவாக்கினோம். இதில் எம்சிஏ, பிஇ, தமிழ் முதுகலை படித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். இதன் மூலம் தமிழைக் கணினியில் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தர முடிந்தது.
எந்த மொழியைக் கணினியில் பயன்படுத்தினாலும் கணினிக்கு உகந்த முறையில் அதை மாற்றித் தர வேண்டும். தமிழ் இலக்கணத்தைக் கணித வாய்ப்பாடாக மாற்ற வேண்டும். உதாரணமாக மயங்கு என்ற (தன்வினைச்) சொல், மயக்கு என்ற (பிற வினைச்) சொல்லாக மாறும். பின்னர் அதுவே மயக்கம் என்ற பெயர்ச் சொல்லாக மாறும். மயங்கு - மயக்கு - மயக்கம் எனப் படிப்படியாக கணிதத்தில் போல வரும். அதுபோல தயங்கு என்ற தன்வினைச் சொல் தயக்கம் என்ற பெயர்ச் சொல்லாக மாறும்போது இடையில் தயக்கு என்ற சொல் வருவதில்லை. என்றாலும் தயங்கு என்ற தன்வினைச் சொல், தயக்கம் என்ற பெயர்ச் சொல்லாக மாறுவதில் கணித அடிப்படை இருக்கிறது. இந்த மொழிரீதியான கணித அடிப்படையைப் பயன்படுத்தி, தமிழைக் கணினி மயமாக்க முடியும். இது தமிழுக்கு மட்டுமல்ல, எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
கணினித் தொழில்நுட்பம், மொழியியல் அறிவு, தமிழ் அறிவு ஆகிய மூன்றும் இருந்தால்தான், தமிழைக் கணினிமயமாக்க முடியும் என்பதால் கணினி மொழியியல்துறையை சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தி வளர்த்தோம். ஆனால் அது இப்போது செயல்படவில்லை.
என்றாலும் ஓய்வு பெற்ற பின்பு, கடந்த 5 ஆண்டுகளாக நானும் மொழியியலாளர்களான அ.கோபால், கி.உமாதேவியும், மென்பொருள் பொறியாளர்களான நயினார் பாபு, ம.பார்கவி, மு.அபிராமி ஆகியோரும் கடுமையாக உழைத்து இந்த "மென்தமிழ்' மென் பொருளை உருவாக்கினோம். அதற்குத்தான் இப்போது விருது கிடைத்திருக்கிறது.
இந்த மென்பொருள் பலவிதங்களில் பயன்படுகிறது.
இப்போது பிழையின்றித் தமிழில் எல்லாராலும் எழுத முடிவதில்லை. நன்றாகத் தமிழ் கற்றவர்களுக்கே சிலநேரங்களில் எந்த ன, ழ, ர - வைப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. மூன்று சுழி ணா- வா? இரண்டு சுழி ன - வா? வல்லின ற - வா? இல்லை இடையின ர - வா? என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. அப்படிக் குழப்பம் ஏற்படும்போது இந்த மென்பொருளில் உள்ள மயங்கொலிச் சொல் அகராதி சரியான எழுத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டும்.
பழங்கள் என்பதை பழம்கள் என்று ஒருவர் தவறாகத் தட்டச்சு செய்துவிட்டால், இந்த மென்பொருள் அதைச் சரியாக திருத்திவிடும். அவனை பற்றி என்று தட்டச்சு செய்திருப்பதை அவனைப் பற்றி என்று சரியாகத் திருத்திவிடும்.
இந்த மென்பொருளில் உள்ள சொற்பிழை திருத்தி எத்தனை பக்கமானாலும் அதிலுள்ள தவறான சொற்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டுக் காட்டும். தவறான சொல்லின் மீது சுட்டியை அழுத்தினால், சரியான சொல்லை மென்தமிழ் உங்களுக்குப் பரிந்துரைக்கும்.
இப்போது தமிழில் நிறைய ஆங்கிலச் சொற்களை - பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதும் பழக்கம் இருக்கிறது. எங்கள் "மென்தமிழ்' பிறமொழிச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை மாற்றிக் கொடுத்துவிடும். உதாரணமாக, "சைக்கிளில் ஏறி காலேஜுக்குப் போய் டீச்சரைப் பார்த்துவிட்டு லைப்ரரி சென்றேன்' என்று எழுதியிருந்தீர்கள் என்றால், அதை அப்படியே சுட்டியில் தேர்ந்தெடுத்து, தமிழ்ச் சொல் சுட்டி என்ற மெனுவை அழுத்தினால், எங்கள் "மென்தமிழ்' அதை, "மிதிவண்டியில் ஏறி கல்லூரிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்துவிட்டு நூலகம் சென்றேன்' என்று நல்ல தமிழில் மாற்றிக் கொடுத்துவிடும்.
அதுபோல எண்களை எழுத்தாக மாற்ற முடியும். 150 என்பதை நூற்றைம்பது என்று மாற்றிவிடும். அதுபோல நூற்றைம்பது என்பதை 150 என்று எண்ணாகவும் மாற்றிவிடும். எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் மாற்றிக் கொடுத்துவிடும். வங்கிகளில் இந்த எண் - எழுத்து மாற்றி பெரிய அளவில் பயன்படும்.
தமிழில் தட்டச்சு செய்யும் போது உதாரணத்தை
உ-ம் என்றும் எடுத்துக்காட்டு என்பது எ-டு என்றும், பின்குறிப்பு என்பதை பி-கு என்றும் நீங்கள் தட்டச்சு செய்தால்போதும், இந்த மென்தமிழ் அவற்றை முறையே உதாரணம், எடுத்துக்காட்டு, பின்குறிப்பு என்று விரிவாகவே மாற்றிக் கொடுத்துவிடும்.
இந்த மென்தமிழில் உள்ள சொற்பிழை திருத்தி, சந்திப் பிழை திருத்தி ஆகிய இரண்டையும் எம்எஸ் ஆபிஸில் உள்ள வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட், அவுட்லுக் ஆகிய எல்லாவற்றிலும் பயன்படுத்த முடியும்.
தமிழில் நிறைய வேறுபட்ட எழுத்துருக்கள் (Fonts) பயன்படுத்தப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் Tamil unicode font ஆக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
தமிழில் உள்ள பல்வேறு விசைப் பலகைகளையும் இந்த மென்தமிழில் இணைத்திருக்கிறோம். எனவே எந்த விசைப் பலகை முறையிலும் தமிழைத் தட்டச்சு செய்ய முடியும்.
தட்டச்சு செய்தவற்றை .doc, .doxs, .rtf, .epu, .xml என்ற பலவிதமான கோப்பு வடிவங்களில் (File formats) சேமிக்க முடியும்.
இந்த மென்தமிழில் பலவகையான அகராதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் -தமிழ், அயற்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, ஆட்சிச் சொல் அகராதி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மென்தமிழை உருவாக்குவது சாதாரண வேலை என்று நினைத்துவிடாதீர்கள். உதாரணமாக, தமிழில் பிறமொழியைக் கலந்து எழுதினால் அதை நல்ல தமிழில் மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது. அதற்காக தமிழில் கலந்து எழுதும் 10 ஆயிரம் சொற்களை இதில் சேர்த்திருக்கிறோம். அவ்வப்போது சேர்த்தும் வருகிறோம். இந்த 10 ஆயிரம் சொற்களைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
கணினித் தமிழ் என்றால் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது மட்டுமல்ல, தமிழ் மொழியை கணினிக்குக் கற்றுக் கொடுப்பதுமாகும். அப்படிக் கற்றுக் கொடுத்தால்தான் தவறாகத் தமிழை எழுதினால், அதைச் சரியாக கணினி மாற்றித் தரும். அந்த வகையில் சொற்பிழை திருத்தி, சந்திப் பிழை திருத்தி ஆகிய இரண்டும் கணினித் தமிழ் வரலாற்றில் எங்கள் சாதனை என்றே சொல்லலாம்.
வாழ்வின் எல்லாத்துறைகளிலும் தமிழைப் பயன்படுத்த அரசும், பல்கலைக்கழகங்களும், பல்வேறு நிறுவனங்களும் விரும்ப வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அப்போதுதான் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் தவிர்க்க முடியாதவகையில் பயன்படுத்தப்பட்டு வரும் கணினியில் தமிழை நாம் பயன்படுத்த முடியும். இல்லையென்றால், வீட்டில் பேசப்படும் மொழியாக மட்டுமே தமிழ் இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.