புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வளர்ந்து வரும் திருமணத் தொழில்துறை!

இப்போது வீடு கட்டுவது எளிதாக மாறிவிட்டது. ஏற்கெனவே கட்டி வைத்திருக்கும் புதிய வீட்டில் குடி புகுந்துவிடலாம். அல்லது நாமே கட்டுவதென்றால், கட்டட ஒப்பந்ததாரரிடம் வீட்டைக் கட்டும்

News image
Updated On :21 ஜூன் 2015, 8:58 am

ந. ஜீவா

""வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்'' என்பார்கள். இரண்டுமே அவ்வளவு கடினம்.

இப்போது வீடு கட்டுவது எளிதாக மாறிவிட்டது. ஏற்கெனவே கட்டி வைத்திருக்கும் புதிய வீட்டில் குடி புகுந்துவிடலாம். அல்லது நாமே கட்டுவதென்றால், கட்டட ஒப்பந்ததாரரிடம் வீட்டைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்துவிடலாம்.

கல்யாணம் செய்வதும் இப்போது எளிதாக மாறிக் கொண்டிருக்கிறது. சென்னை மியூசிக் அகாடமியிலும், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் "வெட்டிங் வீக்' என்றொரு நிகழ்ச்சி நடந்தது. திருமணம் செய்வதற்கான உடை, உணவு, இடம், புகைப்படம், வீடியோ, மேடை அலங்காரம் என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்க அந்த நிகழ்ச்சி உதவியது.

கட்டடம் கட்டும் தொழிலைப் போல திருமணம் செய்து வைப்பதும் இப்போது ஒரு தொழில் போல, வளர்ந்து வருகிறது. அதைப் பற்றி அந்த நிகழ்ச்சியை நடத்திய மேரேஜ்கலர்ஸ்.காம் - இன் நிர்வாக இயக்குநர் பிரத்யும்ணா வெங்கட் நம்மிடம் பேசியதிலிருந்து...

Story image

""முதலில் எல்லாம் கூட்டுக் குடும்பம் இருந்தது. சொந்த, பந்தங்கள் அருகே இருந்தார்கள். திருமண வேலைகளை எல்லாம் ஆளாளுக்குப் பிரித்துக் கொள்வார்கள். எந்தச் சுமையையும் பங்கு போட்டுக் கொண்டு உறவினர்கள் சுமந்தார்கள். பொறுப்புகளை ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது. வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சொந்த பந்தங்கள் பிரிந்துவிட்டன. திருமண வேலைகள் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கு ஆலோசனைகள் சொல்லவும் கூட யாரும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது மிகப் பெரிய, கடினமான வேலை ஆகிவிட்டது.

அந்தக் கடினமான வேலையை எளிதாக மாற்றுவதற்காக நாங்கள் பல முயற்சிகளைச் செய்கிறோம். அவற்றில் ஒன்றுதான் நாங்கள் நடத்தும் இந்த "வெட்டிங் வீக்' நிகழ்ச்சி.

வாழ்க்கையில் ஒரு முறைதான் திருமணம். எனவே அதை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்றே எல்லாரும் நினைக்கிறார்கள். மிகச் சிறந்த உணவு, மிகச் சிறந்த ஆடை, மிகச் சிறந்த அணிகலன்கள், மிகச் சிறந்த திருமண மேடை அமைப்பு என எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததையே இப்போது எல்லாரும் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் எது  சிறந்தது  என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு உதவுவதே நாங்கள் நடத்தும் நிகழ்ச்சி.

மிகச் சிறந்ததையே எல்லாரும் விரும்பினாலும் அவரவர் தகுதிக்கேற்ப, செலவு செய்யும் திறனுக்கேற்பவே சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியும்.

மணமகன், மணப் பெண்ணுக்கான சிறந்த உடைகளை யார் தயாரிக்கிறார்கள்? சிறந்த நகைகளை யார் வடிவமைத்திருக்கிறார்கள்? அவர்கள் விரும்பும் விதவிதமான உணவுகளைச் சமைத்து தருபவர்கள் யார்? திருமண நிகழ்ச்சிகளைத் திரைப்படம் போன்ற தரத்துடன் யார் யாரெல்லாம் வீடியோ, புகைப்படம் எடுத்துத் தருகிறார்கள்? திருமணம் நடத்துவதற்கு சிறந்த, வசதியான மண்டபங்கள், ஹோட்டல்கள் எங்கெல்லாம் உள்ளன? என்பன போன்ற தகவல்களை நாங்கள் ஏற்கெனவே திரட்டி வைத்திருக்கிறோம். அதை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே நாங்கள் நடத்துகிற நிகழ்ச்சி.

திருமணத்துக்கு தேவையானவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? என்பதை இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விளக்குகிறோம். உதாரணமாக சிறந்த ஆடை என்றால் எது? எவ்வளவு விதமான ஆடைகள் வந்திருக்கின்றன? அவற்றை எப்படியெல்லாம் உடுத்த முடியும்? என்றெல்லாம் நிகழ்ச்சியில் சொல்லித் தந்தோம். ஒரு புடவையை 125 விதமாக கட்டுவது எப்படி என்று டோலி ஜெயின் என்பவர் கற்றுக் கொடுத்தார்.

"மேக் அப்' செய்வதில் வந்துள்ள புதுமைகள் எவை? வித்தியாசமான திருமண ஆல்பங்கள் எவை? என்றெல்லாம் விளக்குகிறோம்.

அதற்குப் பிறகு திருமணத்துக்குத் தேவையான அழைப்பிதழ்களைத் தயாரிப்பவர்கள், தாம்பூலத்துடன் சேர்த்துக் கொடுக்கும் வித்தியாசமான பரிசுப் பொருட்களை உருவாக்குபவர்கள், உடை தயாரிப்பாளர்கள், புகைப்படம் எடுப்பவர்கள், மேடை அலங்காரம் செய்பவர்கள், முழுத் திருமணத்தையுமே நடத்திக் கொடுப்பவர்கள் என எழுபத்தைந்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக வந்திருந்து தங்களுடைய தயாரிப்புப் பொருட்களைக் காட்டினார்கள்.

  மணப்பெண், மணமகனுக்கான விதவிதமான ஆடைகளை, அவர்கள் அணிந்தால் எப்படிக் காட்சியளிப்பார்கள் என்பதை கண்ணுக்கு முன் காட்டுவதற்காக பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஆண், பெண் மாடல்கள் ஆடைகள், அணிகலன்களை அணிந்து, நடை பயின்றார்கள்.

  இவ்வாறு ஒரு திருமணத்தை நடத்தத் தேவையான எல்லாவற்றையும் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். அதுமட்டுமல்ல, ஒவ்வொருவரும் தங்களுடைய தகுதிக்கு ஏற்றவற்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்யவும் நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.

  நமது நாட்டில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல மொழி பேசுபவர்கள், சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவினரின் ரசனையும், திருமணம் நடத்தும் முறையும் வேறுபட்டவையாக இருக்கின்றன. கேரள மணப்பெண்ணுக்கான உடை,  ஆந்திரமாநில மணப்பெண்ணுக்குப் பொருந்தாது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களின் உணவு, அசைவப் பிரியர்களுக்குப் பொருந்தாது. பழைய முறைப்படி திருமணம் செய்து கொள்பவர்களின் சடங்கு, சம்பிரதாயங்கள், நவீன சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பொருந்தாது.  எனவே எல்லாருக்கும் தேவைப்படுகிற, பொருந்தக் கூடிய திருமணம் சார்ந்த உடை, அணிகலன்கள், உணவு, மேடை அலங்காரம், திருமணம் நடைபெறும் இடங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும், நாங்கள் தர வேண்டியிருக்கிறது. அவ்வளவு தகவல்களையும் நாங்கள் திரட்டி வைத்திருக்கிறோம்.

திருமணம் நடத்துவதற்கு மட்டுமல்ல, திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் தேனிலவு செல்ல உகந்த சிறந்த இடங்கள், சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்கள், அந்த இடங்களில் உள்ள ஹோட்டல்கள், பயணம் செய்ய உதவும் போக்குவரத்து வசதிகள் பற்றிய தகவல்களையும் நாங்கள் தருகிறோம். நாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கு கொண்டார்கள்.

இப்படிப்பட்ட  நிகழ்ச்சிகள்  மூலமாக மட்டுமல்ல, எங்களுடைய Marriagecolours.com மூலமாகவும் இதே சேவையை நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் இணைய தளத்துக்குள் ஒருவர் புகுந்து, அவருடைய பட்ஜெட்டுக்குப் பொருத்தமான உடை, நகைகள், உணவு, மேடை அலங்காரம், தேனிலவு செல்லும் இடம், புகைப்படம், வீடியோ என எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். உதாரணமாக ஒருவர் பத்து லட்சம் ரூபாயைத் திருமணச் செலவுக்காக ஒதுக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் திருமணத்துக்குத் தேவையான ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து கொண்டே வருவார். அப்படித் தேர்வு செய்து கொண்டு வரும்போது, பட்ஜெட்டைத் தாண்டி ஏதேனும் ஒன்று வருமானால், இணையதளம் உடனே அதைத் தெரிவிக்கும். உடனே அவர் தேர்ந்தெடுத்த ஒன்றை விட்டுவிட்டு புதிதாக, தனது பட்ஜெட்டுக்குப் பொருத்தமான இன்னொன்றைத் தேர்வு செய்து கொள்ள முடியும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.