ஏழைப் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்!
முன்னேறிய நாடு என்று எதைச் சொல்லலாம்? தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்


முன்னேறிய நாடு என்று எதைச் சொல்லலாம்? தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வசதி, தனிநபர் வாழ்க்கைத் தர உயர்வு இவையெல்லாம் உடைய நாட்டை முன்னேறிய நாடு என்று சொல்லலாமா?
""அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எந்த நாட்டில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்களோ, அந்த நாடே முன்னேறிய நாடு'' என்கிறார் முருகானந்தம்.
பெண்களுக்கான குறைந்த விலை சானிட்டரி நாப்கினை உருவாக்கிப் புகழ்பெற்ற அவரை, உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 மனிதர்களில் ஒருவராக "டைம்' இதழ் தேர்ந்தெடுத்திருக்கிறது. கோவை சோமயாம்பாளையத்தில் ஜெயாஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ்ûஸ அவர் நடத்தி வருகிறார். குறைந்தவிலை சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரங்களைச் செய்வதுடன், அந்த இயந்திரங்களை வாங்குபவர்களுக்கு சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
""மாதவிலக்குச் சமயத்தில் சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்தாமல், சாதாரண துணிகளை என் மனைவி பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். "ஏன் சுகாதாரமான சானிட்டரி நாப்கினை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது?' என்ற என் கேள்விக்கு என் மனைவி சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. "இவ்வளவு விலை கொடுத்து சானிட்டரி நாப்கின் வாங்கினால், வீட்டில் பால் வாங்குவதை நிறுத்திவிட வேண்டியதுதான்' என்று அவர் சொன்னதும், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தை அது எனக்கு ஏற்படுத்தியது.
அப்போது பெரிய நிறுவனங்கள்தாம் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதிலும் அவர்கள் செய்த விளம்பரங்களில் மேட்டுக்குடிப் பெண்கள்தாம் அதைப் பயன்படுத்துவதாகக் காட்டினார்கள். ஜீன்ஸ் அணிந்த ஓர் இளம் பெண் நாய்க்குட்டியைத் துரத்திச் செல்வதாகக் காட்டினார்கள். அவள் அந்த நிறுவனத்தின் சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துவாகக் காட்டினார்கள்.
நான் ஒரு சானிட்டரி நாப்கினை வாங்கிப் பார்த்தேன். அதில் 10 கிராம் பஞ்சு இருந்தது. 1994 இல் அந்தப் பஞ்சின் விலை வெறும் பத்துப் பைசாதான். ஆனால் அந்தப் பஞ்சைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கினை ஆறு ரூபாய்க்கு விற்றார்கள்.
இப்படி அதிக விலையாக இருப்பதால்தான் 90 சதவீதப் பெண்கள் ஆரோக்கியமில்லாத சாதாரணத் துணிகளை சானிட்டரி நாப்கின்களாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்தால், அதிக அளவில் பெண்கள் பயன்படுத்துவார்களே என்று தோன்றியது.
1995 இல் என் ஆராய்ச்சி தொடங்கியது. நான் தயாரித்த சானிட்டரி நாப்கின்களை அணிந்து பார்த்து, குறை நிறைகளைச் சொல்ல யாருமே இல்லை. மனைவியும் கூட ஒரு கட்டத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். என்ன செய்வது? நானே சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்தத் தொடங்கினேன். பந்தைப் பயன்படுத்தி அதில் ஆட்டு ரத்தத்தை நிரப்பி, சானிட்டரி நாப்கினில் அந்த ரத்தம் கசியும்படி ஏற்பாடு செய்தேன். சானிட்டரி நாப்கினை அணிந்து கொண்டு நான் நடந்தேன். உடற்பயிற்சி செய்தேன். சைக்கிள் ஓட்டினேன். அப்போதுதான் தெரிந்தது நான் உருவாக்கிய சானிட்டரி நாப்கினில் உள்ள குறைகள்.
சாதாரணப் பஞ்சை அதுவரை நான் தயாரித்த சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தி இருந்தேன். அந்தப் பஞ்சு ஈரத்தை உறிஞ்சும். ஈரத்தை உறிஞ்சிய பஞ்சில் சிறிது அழுத்தம் கொடுத்தால், அந்த ஈரம் திரும்பவும் வெளியே கசியும். எனவே மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பஞ்சைப் பயன்படுத்தி சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்துப் பார்த்தேன். இதற்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பான சானிட்டரி நாப்கின்னை நான் உருவாக்கிவிட்டேன்.
பெரிய நிறுவனங்கள் சானிட்டரி நாப்கின்னைத் தயாரிப்பதற்காக விலை உயர்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அதன் விலை ரூ.3.5 கோடி வரை உள்ளது. நான் சிறிய இயந்திரத்தை ஒரு லட்சம் ரூபாய் விலையிலும், சற்றுப் பெரிய இயந்திரத்தை ரூ.3 லட்சத்திலும் உருவாக்கியிருக்கிறேன்.

சானிட்டரி நாப்கின்னைத் தயாரிக்க இயந்திரங்களை உருவாக்கியாயிற்று; சானிட்டரி நாப்கின்களையும் தயாரித்தாயிற்று. ஆனால் அவற்றை எப்படிச் சந்தைப்படுத்துவது? என் மனைவி உட்பட பெண்களின் துணையோடுதான் சந்தைப்படுத்த முடிந்தது.
இப்போது இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் நான் தயாரித்த இயந்திரங்கள் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. அது மட்டுமல்ல, நைஜீரியா, கென்யா, உகாண்டா, நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் குறைந்த விலை சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஓர் ஊரில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் சானிட்டரி நாப்கின்களைக் கொடுத்துவிட்டால், தேவைப்படும் பெண்கள் அந்தப் பெண்ணிடமே சானிட்டரி நாப்கின்களை வாங்கிக் கொள்வார்கள். ஒரு முழு பாக்கெட்டையும் வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒன்றிரண்டு கூட வாங்கிக் கொள்ளலாம். எனவே பல கிராமங்களில் மகளிர் குழுக்கள் மூலமாக இயந்திரத்தை வாங்கி சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இது பெண்களுக்கான வேலை வாய்ப்பாகவும், தொழில் வாய்ப்பாகவும் இருக்கிறது. இன்னொருபுறத்தில் பெண்களின் உடல்ரீதியான இயற்கை நிகழ்வை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ள முடிகிறது.
ஆனால் ஆரம்பத்தில் சானிட்டரி நாப்கின்களைச் சந்தைப்படுத்தும்போது பல சிக்கல்களை எதிர்கொண்டோம். நீலகிரி பகுதியில் படகர் இனத்துப் பெண்கள் மத்தியில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. சானிட்டரி நாப்கின்களை அணிந்து கொண்டால் குல தெய்வம் கண்ணைக் கெடுத்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். உத்தரபிரதேசத்தில் பெண்கள் வீசியெறியும் சானிட்டரி நாப்கின்களை நாய் கடித்துவிட்டால், கணவன் இறந்துவிடுவான் என்று நம்புகிறார்கள்.
இருந்தாலும் எங்களுடைய விடா முயற்சியால் நாடு முழுவதும் 877 மையங்களில் சானிட்டரி நாப்கின்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. எங்களிடம் இயந்திரம் வாங்குபவர்களுக்குச் சானிட்டரி நாப்கின் தயாரிக்கப் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி பெற்றவர்கள் அதற்குப் பிறகு சொந்தமாகச் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
என்னுடைய ஆராய்ச்சியையும், சானிட்டரி நாப்கின் தயாரிப்பையும் பார்த்தவர்கள் எல்லாரும் என்னை நிரம்பப் படித்தவன் என்று நினைக்கிறார்கள். நான் பட்டம் எதுவும் பெறவில்லை. நான் ஒரு பட்டறையில் சாதாரண வெல்டராகத்தான் இருந்தேன். அந்த அனுபவத்தை வைத்துத்தான் நான் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். ஆனால் இப்போது இதைப் பற்றிப் பேச என்னை வெளிநாடுகளில் கூட அழைக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசுகிறேன். பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் பெருமைப்படுவது, ஏழைப் பெண்கள் வாங்கிப் பயன்படுத்தும் விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கியதற்குத்தான்.
பள பளவென்று சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், மிகவும் வசதியான வாழ்க்கையுள்ள நாட்டில் பெண்களின் நிலை மோசமாக இருந்தால் அதை முன்னேறிய நாடு, வளர்ச்சி பெற்ற நாடு என்று சொல்ல முடியாது. பெண்களின் நிலையில் முன்னேற்றம் உள்ள நாடே வளர்ச்சி பெற்ற நாடாகும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...