நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடுகளால் உலகைக் கட்டியவர்!

'கோபுலு' என்று அன்புடன் ஏராளமான ரசிகர்களால் பாராட்டப்பெற்ற சித்திர மேதை, ஓவிய உலக பிதாமகர் மறைந்துவிட்டார்.

News image
Updated On :10 மே 2015, 9:40 am

சுமன்

'கோபுலு' என்று அன்புடன் ஏராளமான ரசிகர்களால் பாராட்டப்பெற்ற சித்திர மேதை, ஓவிய உலக பிதாமகர் மறைந்துவிட்டார். அவர் தீட்டிய கோடுகளை ஒரே நீளமாகப் பிரித்தால் இவ்வுலகை மூன்று முறைக்கு மேல் வலம் வரும்! உலகை தன் கோடுகளால் கட்டிப் போட்டவர்! அவர் வரைந்த ஓவியங்கள், கார்ட்டூன்கள், ஜோக்குகள் மற்றும் பெயின்டிங்குகளைப் பட்டியலிட்டுக் காட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களில் பல பாகங்களில் புத்தகங்கள் வெளியிட வேண்டியிருக்கும்!

ஓவியங்கள் உயிரோட்டமாக இருக்கும். மனதிற்குள் கேரக்டர்களை "ப்ராணப்ரதிஷ்டை' செய்து விடுவார் போலும்! தன் குரு திரு "மாலி'யை தெய்வமாக மதிப்பவர்.

"உனக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்கு..., என்னைவிட நன்னா ட்ராயிங் போடறே' என்று கூறுவாராம் மாலி! இன்றுள்ள முன்னணி ஓவியர்களுக்கும் மற்றும் ஓவியம் பயில்வோருக்கும் அவர் ஆசிரியன், வழிகாட்டி, குரு என்றால் அது மிகையன்று!

ஒருமுறை சரஸ்வதி பூஜை கொண்டாட வாசனுடைய பண்ணை வீட்டிற்குச் சென்றபோது அங்குள்ள வேலைக்காரர், ""அம்மா சரஸ்வதி தேவி! என் கைகளில் சக்தியைக் கொடு. மனதில் உற்சாகத்தைக் கொடு'' என்று வேண்டிக் கொண்டாராம். அதை நினைவு கூர்ந்து என்னிடம் ஒரு சரஸ்வதி பூஜையன்று தெரிவித்தார். ஒரு வேலைக்காரரை எப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்!

""கண்கள் இரண்டும் காதுகள் இரண்டும் கொடுத்த கடவுள் வாய் மட்டும் ஒன்றுதான் கொடுத்திருக்கிறார். ஏன் தெரியுமா? மனிதன் நிறையக் கேட்கணும்..., நிறையப் பார்க்கணும்... ஆனா குறைச்சலாத்தான் பேசணும்... ருசிக்கணும்'' என்பார்.

தங்கள் கதைகள் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளிவருவதை எழுத்தாளர்கள் பெருமையாகக் கருதினார்கள். ஒரு முறை ஓர் எழுத்தாளர் அவருடைய கதைக்கு மிகப் பொருத்தமாக படம் வந்ததைப் பாராட்டியபோது, ""ஓவியம் என்பது ஒரு பக்க வாத்தியம் மாதிரி... அது சரியா இருந்தா எழுத்து நன்னா சோபிக்கும்'' என்று தன்னை ஒரு பக்கவாத்தியக்காரராக அடக்கத்துடன் தெரிவித்து கொண்டார்!

பார்க்கிற காட்சிகள், கேரக்டர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு காமிராவைப்போல் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் அவருடைய திறன் அதிசயிக்கத்தக்கது. இல்லையெனில் பிரபலமான மனிதர்களின் படங்கள் ஓரிரு நிமிடங்களில் ஒரு ரெஃபரன்ஸ் (மாதிரி) இல்லாமல் வெள்ளைத்தாளில் எங்ஙனம் உயிர்த்தெழும்?

சம்பளம் தவிர ஆனந்த விகடனில் படைப்புகளுக்குத் தனிச் சன்மானம் உண்டு! கோபுலு ஆயிரக்கணக்கான ஜோக்குகளைத் தன் படத்துடன் விகடனில் வெளியிட்டார்.

அதற்குக் கிடைத்த சன்மானத்தை தனியாகச் சேமித்து தற்போதுள்ள அவருடைய வீட்டை வாங்கியதாகச் சொல்வார்!

""இந்த வீடு எல்லோருக்கும் சந்தோஷத்தைக்

கொடுக்கும். ஏன்னா இது ஜோக்குகளால் கட்டிய வீடு'' என்று மகிழ்ச்சியுடன் சொல்வார்.

""என்னுடைய குரு "மாலி' தன் அனுபவத்தை என்னிடம் தந்தார். அதுபோல என்னை பின்பற்றுபவர்களுக்கும் என்னுடைய அனுபவங்கள் கிடைக்கும். இது ஒரு ரிலே ரேஸ் மாதிரி...,

தென்னை ஓலைகள் விழுந்து கொண்டே இருக்கும்... அப்போதுதான் அது உயரும்... அது மட்டுமல்ல...அது தன் தழும்புகளை மரத்தில் விட்டுச் செல்லும். மரம் ஏறுபவர்களுக்கு அது உதவியாயிருக்கும் அல்லவா?'' என்பார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கதையைப் படிக்காமல் படம் போட மாட்டார்! மற்றவர் ஜோக்குகளுக்குப் படம் போட மாட்டார்!

எனக்குத் தாய் தந்தையர் இட்ட "சுப்பிரமணியன்' என்ற பெயரைச் சுருக்கி "சுமன்' என்று பெயர் வைத்தவர் அவரே. கல்கி ஆண்டுவிழாவில் அல்லயன்ஸ் சீனிவாசனிடம், " இவன் என்னுடைய ஏகலைவன்' என்று கூறியபோது நான் திகைப்படைந்தேன்.

இந்தத் தகுதிக்கு நான் ஏற்றவனா? என்று இன்றுவரை மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.