நேபாள பூகம்பத்தில் இருந்து தப்பினோம்!

தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் பிரமுகர் கே. ராமசந்திரன் தனது மனைவி ரதிதேவியுடன் நேபாளத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தபோது..
நேபாள பூகம்பத்தில் இருந்து தப்பினோம்!

தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் பிரமுகர் கே. ராமசந்திரன் தனது மனைவி ரதிதேவியுடன் நேபாளத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தபோது... அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்ப இடிபாடுகளில் சிக்காமல் தப்பி வந்த அனுபவத்தை கே. ராமசந்திரன் இங்கே எழுதுகிறார்.

தொலைக்காட்சியில் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேபாள யாத்திரை குறித்து வந்த விளம்பரத்தைக் கண்டு, சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்திற்கு ஜனவரி மாதமே முன்பணம் செலுத்திப் பதிவு செய்து கொண்டோம்.  காத்மாண்டு சென்றடைந்ததிலிருந்து நேபாளம் 7 நாள்கள் சுற்றி அனைத்து தரிசனங்கள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு உள்பட அனைத்தும் அவர்கள் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்கள்.

20.4.2015 அன்று காலை 6-50 மணி இண்டிகோ விமானம் ஏறி 9-35 மணிக்கு டில்லி சேர்ந்தோம்.

அங்கிருந்து சரியாக 3-45 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் சென்றடைந்தோம். நேபாள நாட்டிற்கு இந்தியாவிலிருந்து செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையில்லாவிடினும் விமானத்திலிருந்து இறங்கியவுடனே அங்குள்ள அலுவலகத்தில் ஒரு படிவம் மூலம் நமது வருகையைப் பதிவு செய்த பின்னரே நமது பெட்டி, பைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல அனுமதி கிடைக்கும்.

எங்களை அழைத்துச் செல்ல யாத்ரா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நபர் கையில் பெயர் எழுதிய ஒரு பலகையை வைத்துக்கொண்டு காத்திருந்தார். யாத்ரா நிறுவனமானது தங்குவதற்குத் தரமான ஹோட்டல் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எங்களை அழைத்துச் சென்று தங்க வைத்த ஹோட்டல் ரிவர்சைட் மிகவும் சுமாரானது. மேலாளரிடம் மிகுந்த தர்க்கத்திற்குப் பின் நான்காம் மாடியில் ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்த அறையில் படி ஏறிச் சிரமத்துடன் சென்றோம்.

நேபாளத்தில் பொதுவாக எந்தக் கட்டிடத்திலும் லிப்ட் வசதி கிடையாது என்று கூறினார்கள்.

இரவு உணவை நேரில் கொண்டுவந்து தந்த மேலாளர் அதிகாலையில் 4-30 மணிக்கே தயாராக இருக்க வேண்டும் என்றும் எனவே ஒருநாள் மட்டுமே இந்த அறையில் தங்குவதால் பொறுத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இரவு உணவாக இடியாப்ப சேவையும் சட்னியும் அளிக்கப்பட்டது.

மறுநாள் 22-4-2015 அதிகாலையில் இரண்டு குளிர்பதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளில் மொத்தம் 73 பேர் பயணத்தைத் தொடங்கினோம். முந்தின தினம் சுயம்புநாத ஸ்தூபியைக் காண்பிப்பதாகக் கூறியவாறு எங்களுக்குக் காட்டவில்லை. காரணம் அந்த நேரம் இருள் சூழ்ந்து விட்டதாலும் பெரும் தூறல் இருந்ததாலும் மறுநாள் காட்டுவதாகச் சொன்னவர்கள் அப்போதும் வெளியிலேயே பேருந்தில் இருந்தவாறே பார்த்துக் கொள்ளும்படியும் இறங்கி ஏறினால் பிற இடங்களுக்குச் செல்ல மிகுந்த தாமதமாகி விடலாம் என்றும் கூறிவிட்டார்கள். (25-4-2015 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் அந்த ஸ்தூபி அழிந்துவிட்டதாகப் பின்னர் தெரிந்து கொண்டோம்.)

பின்னர் ஸ்ரீகுகேஷ்வரி தேவி (சக்திபீடம்) ஆலயம் சென்று தரிசித்தோம். அங்கிருந்து நேராகப் பழமையான புகழ்பெற்ற பசுபதிநாதர் ஆலயம் சென்று தரிசித்தோம். வேத விற்பன்னர்கள் மூலம் சங்கல்பம், பூஜைகள் செய்த பின்னர் சிவனின் சந்நிதிக்குச் சென்றோம். புராணத்தில் அங்கு சிவனின் உடலின் மேற்பாகம் இருப்பதாகவும் கீழ்பாகம் கேதார்நாத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். இங்குள்ள சிவலிங்கம் நான்கு முகங்கள் கொண்டதாக இருக்கின்றது. அதன்பிறகு ஸ்ரீபுதனில்காந்த நாராயணன் ஆலயம் சென்றோம். ஒரு பெரிய குளத்தின் நடுவே ஆதிசேஷன் படுக்கையில் மகாவிஷ்ணு சயனக்கோலத்தில் வீற்றிருப்பது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. அங்கு சிறிதுநேரம் கண்டு களித்த பின்னர் பொக்காரா நகரத்திற்குப் புறப்பட்டோம்.

பொக்காரா நகரில் பொக்காரா இன் என்ற ஹோட்டலில் மிக அருமையான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் படுக்கச் சென்ற நேரம் 1-15 மணி.  

மறுநாளும் அதாவது 23-4-2015 அதிகாலையில் 4-30 மணிக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டபடி எல்லோரும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். நேராக பொக்காரா விமான நிலையத்தை அடைந்து ஜோம்ஸோம் என்ற ஊருக்கு விமானத்தில் பயணித்தோம். நெருக்கமாக உள்ள இரு மலைகளுக்கிடையே விமானம்

பறக்கும்போது நம்மை அறியாமலேயே நம் உதடுகள் பிரார்த்தனையை உச்சரிக்கத் தொடங்கி விட்டன. 20 நிமிடங்களிலேயே ஜோம்ஸோம் சென்றடைந்தோம். சிறிய பேருந்துமூலம் தங்கி இருக்கும் ஹோட்டல் பிரைட்-இன் சென்றோம். நல்லதொரு ஹோட்டல், நல்லதொரு அறை. காலை உணவுக்குப் பின்னர் ஜீப் மூலம் 25 கி.மீ. பயணம்.

சாலைக்குப் பதிலாக ஜீப்பானது ஆற்றுக்குள் தண்ணீர் ஓடாத உலர்ந்த சரல்களுக்கிடையே சென்றது. நமது எலும்புகளெல்லாம் சற்று அவ்வப்போது இடம் மாறி மீண்டும் நிலைக்குத் திரும்பியதுபோல் உணர்ந்தோம்.  

  பின்னர் முக்திநாத் அடிவாரம் சென்றடைந்தோம். அங்கிருந்து மட்டக்குதிரை மூலம் சுமார் 2 கி.மீ. போய் முக்திநாத் ஆலயத்திற்கு அரை கி.மீ. தூரத்திலிருந்து நடைப் பயணம். ஒரு வழியாக முக்திநாத் சென்ற பக்தி உணர்வும் புளகாங்கிதமும் மெய்சிலிர்க்கச் செய்தது. (குளிரும் கூடத்தான்) சிறிய, ஆனால் புகழ்பெற்ற முக்திநாத் ஆலயம் அதைச் சுற்றிலும் 108 தீர்த்தங்கள் நம்மைப் புனித நீராட அழைக்கின்றன. எங்கள் குடும்பத்தினருக்கு தீர்த்தங்களைப் புரோக்ஷிக்க மட்டுமே முடிந்தது. குளிரில் நீராடத் துணிவில்லை. மறுநாள் 24-4-2015 காலை ஜோம்ஸோம் விமான நிலையம் சென்று 6-45 மணிக்கு விமானம் ஏறி 7-15 மணியளவில் மீண்டும் பொக்காரா சென்றடைந்தோம்.

பொக்காரா ஓர் அழகான சுத்தமான ஊர். ஆனந்தமான தட்பவெப்பம். நானும் என் மனைவியும் மட்டும் காலை வேளையில்  நகர்வலம் கால்நடையாகவே வந்தோம். மறக்க முடியாத அனுபவம்.

மதிய உணவுக்குப் பின்னர் பேருந்தில் புறப்பட்டு விந்தியவாசினி ஆலயம் சென்று தரிசித்தோம். தரை மட்டத்திலிருந்து சுமார் 200 அடி உயரத்தில் சிறு குன்றின் மீது கட்டப்பட்ட கோயில் அது. பின்னர் ஃபெவா ஏரி என்றழைக்கப்படும் மிகப் பெரிய ஏரிக்குச் சென்று அதன் நடுவில் கட்டப்பட்டுள்ள வாராஹி தேவி கோயிலுக்குப் படகில் சென்று தரிசித்தோம். படகு சவாரியின்போது அனைவரும் உயிர்காக்கும் கவசம் தரித்துச் செல்வது அவசியம். அதன்பிறகு 5000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகின்ற தரை மட்டத்திலிருந்து 300 அடி ஆழமான ஒரு நீண்ட குகைக்குள் சென்று தேவி அருவி என்ற அருவியையும் அங்கு தவக்கோலத்தில் இருக்கும் சிவனையும் தரிசித்தோம்.

சிலர் குகைக்குள் இறங்கிவர அச்சப்பட்டு தயங்கினர்.

அன்று இரவு நல்ல தூக்கம். காலை உணவுக்கு 7 மணிக்குமேல் வந்தால் போதும் என்று கூறி விட்டனர். அதுதான் நேபாளத்தைப் புரட்டிப்போட்ட 25-4-2015 } பூகம்பம் வந்த நாள். நாங்கள் ஸ்ரீ மனோகாம்னா தேவி ஆலயத்தை நோக்கி மிக நீண்ட பயணத்தைப் பேருந்தில் மேற்கொண்டோம். சுமார் 4 மணி நேரம் தொடர்ந்த பேருந்துப் பயணத்தில் பயணிகள் யாவரும் "பாத்ரூம்' வசதி உள்ள இடமாக நிறுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். அனைவரும் கழிவறையிலிருந்து வெளியேறிப் பேருந்தில் ஏறும்போது திடீரென்று அங்குள்ள மக்களின் அலறல் கேட்டது. என்னவென்று கேட்டபோது மலையிலிருந்து பாறை உருண்டு வருவதாகவும் விரைந்து அங்கிருந்து சென்றுவிடும்படியும் கூறியவுடன் நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம். கழிவறைக்காக நாங்கள் அங்கே பேருந்தை நிறுத்தாவிட்டால் பாறை உருண்டு எங்கள் பேருந்தில் விழுந்திருக்க வாய்ப்பு உண்டு.  

ஏனெனில் சரியாகப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் உருண்டு விழுந்த பெரிய பாறை பாதையில் கிடந்ததைப் பார்த்தோம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி சுமார் 3 மணிநேரம் தவித்தோம். ஒருவழியாக ஸ்ரீ மனோகாம்னா தேவி ஆலயம் செல்லும் அடிவாரத்தை அடைந்தோம். மலை உச்சியில் அமைந்த அந்த ஆலயத்திற்கு கேபிள் காரில் செல்வதாகத் திட்டம். "திடீர்' பூகம்பத்தினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.  

ஏமாற்றத்தினால் வந்த வழியே திரும்பினோம். மீண்டும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இரவு 10 மணியளவில் சிட்வான் தேசியப்பூங்காவைச் சென்றடைந்தோம்.

நேபாளத்தில் எனக்குப் பிடிக்காத ஒன்று என்னவென்றால் அசைவம் அல்லாத ஒரு உணவு விடுதி கூட இல்லை என்பதுதான். சாதாரணமாக அசைவ உணவு விடுதியில் ஒரு டீ கூட அருந்தும் வழக்கம் எனக்குக் கிடையாது.

பூகம்பத்தைப் பற்றி எங்களுக்கு முதன்முதலில் தெரியப்படுத்தியது தூத்துக்குடியிலிருந்து எனது மைத்துனர்தான். நாங்கள் சிட்வான் தேசியப்பூங்காவில் ஒரு மிக அருமையான அறையில் தங்கியிருந்தோம். அங்கு தொலைக்காட்சியில் பூகம்பத்தின் பேரழிவைப் பார்த்தோம்.

மறுநாள் 26-4-2015 காலையில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். யாத்ரா நிறுவனத்தின் மேலாளர் நேபாள அரசின் அனுமதிக்குப் பிறகே அடுத்த பயணத்தைத் தொடர முடியும் என்றார். 10-30 மணியளவில் பேருந்துப் பயணம் மீண்டும் தொடங்கி ஜனக்பூரை நோக்கிச் சென்றோம்.

மிக நீண்ட பயணத்திற்குப் பின்னர் மாலை 6 மணிக்கு தனுஷ்தாம் என்ற இடத்தை அடைந்தோம். ராமாயணத்தில் சிவதனுஷை ராமர் முறித்து சீதையை மணமகளாக அடைந்த இடம் அது. மூன்று பகுதிகளாக உடைந்த அந்த வில்லானது ஒரு பகுதியை அந்த இடத்திலும் மற்றொரு பகுதி கைலாயத்திலும் மூன்றாவது பகுதி பாதாளத்திலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள வில்லின் பகுதி ஒரு பழமையான மரத்தின் கீழ் சிறிய மணல் குன்று போல் நீண்டு கிடக்கிறது.

தனுஷ்தாமிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் ஜனக்பூரை அடைந்தோம். அங்குதான் ஜனகமகாராஜா அரண்மனை மற்றும் ராமர் சீதை திருமணம் நடந்த இடங்கள் உள்ளன. எங்கள் பேருந்து ஜனக்பூரைச் சேரும்போது இரவு மணி 7-45. எனினும் அப்போது எங்களை  ஹோட்டலில் அனுமதிக்கவில்லை. காரணம் இரவு 8-30 மணிக்குப் பூகம்பம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன் பிறகே ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படுவோம் என்று தெரிவித்ததனால் சாலையிலேயே முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.

8-30 மணிக்கு ஹோட்டலினுள் அனுமதிக்கப்பட்டோம். எல்லோரும் பதற்றத்தில் இருந்தனர்.   சிலர் ஹோட்டல் அறைக்குள் தூங்காமல் திறந்த வெளியில் உறங்கினர்.

எங்கள் குடும்பத்தினரும் சென்னையிலிருந்து வந்திருந்த 3 பேர் கொண்ட மற்றொரு குடும்பத்தினரும் மறுநாள் பயணத்தைப் பற்றி ஆலோசித்தோம். அதாவது மொத்தமுள்ள 73 நபர்களில் 12 பேர் தவிர மீதிப்பேர் பேருந்திலேயே கோரக்பூர் வழியாகத் தங்கள் ஊருக்கு ரயில் மார்க்கமாகச் செல்பவர்கள். நாங்கள் 6 பேர் மட்டும் ஒரு குழுவாக இணைந்து டில்லி விமானத்தில் டில்லி சென்று மீண்டும் டில்லி-சென்னை விமானம் மூலம் ஊர் திரும்புவது என்ற முடிவெடுத்தோம்.

ஜனக்பூர்-காத்மாண்டு விமான டிக்கெட் மற்றும் காத்மாண்டு-டில்லி விமான டிக்கெட் ஆகியவற்றை ரத்து செய்தோம். உடன் வந்த நண்பர் குடும்பத்தினர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் பாட்னா-டில்லி விமான டிக்கெட் வாங்க முடிந்தது.   மறுநாள் காலை 6 மணிக்கு டாக்ஸியில் புறப்பட்டு பாட்னா செல்ல டாக்ஸி ஏற்பாடு செய்தோம். இறைவன் கருணையினால் பாட்னா மார்க்கம் என்ற யோசனை எங்களுக்கு ஏற்பட்டது. இரவு 12-00 மணிக்குப் படுக்கச் சென்று மறுநாள் 27-4-2015 காலை 4-30 மணிக்கு எழுந்து குளித்து முடித்து 5-30 மணிக்கு ஹோட்டல் வரவேற்பறையில் வந்து டாக்ஸி குறித்து வினவியபோது பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இரவில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸி கேன்சல் ஆகிவிட்டதாக ஹோட்டல் மேலாளர் கூறினார். ஜனக்பூரிலிருந்து 180 கி.மீ. தூரம் பாட்னா. பயண நேரம் 5 முதல் 6 மணி  நேரம் ஆகலாம் என்று கூறினார்கள். ஒரு பாட்டரி ஆட்டோவை அமர்த்திக்கொண்டு இரண்டு மணி நேரம் நகரைச் சுற்றி இரு டாக்ஸிகளைத் தலா ரூபாய் 7500 வீதம் அமர்த்திக்கொண்டு ஹோட்டலுக்கு வந்து கொஞ்சம் உப்புமாவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு மதியத்திற்காக கொஞ்சம் பூரியை டப்பாவில் அடைத்துக்கொண்டு 8-30 மணிக்கு பாட்னா புறப்பட்டோம். ஓட்டுநரை விரட்டிக்கொண்டே வழியில் சீத்தாமாரி (சீதை பிறந்த ஊர்) யில் அவர் காலை உணவை முடிக்கச்செய்து மதியம் 1 மணிக்கு பாட்னா நகரை அடைந்தோம். ஓட்டுநருக்கு விமான நிலையம் வழி தெரியவில்லை. தூத்துக்குடியில் எங்கள் பருப்பு மில்லில் பணியில் உள்ள பாட்னாவைச் சேர்ந்த நபரிடம் போனில் தொடர்பு கொண்டு ஓட்டுநர் வழி கேட்டறிந்து விமான நிலையம் சென்றோம். 2-20 மணிக்கு டில்லி விமானம் புறப்பாடு. 1-15 மணிக்குள் விமான நிலையம் சேர வேண்டும். போக்குவரத்து நெருக்கடியில் எப்படியும் 1-50 ஆகும் எனத்தெரிந்தது. மீண்டும் தூத்துக்குடிக்கு மைத்துனரிடம் தொடர்புகொண்டு நிலைமையைக் கூறியவுடன் அவர் தனது மகன் மூலம் இண்டிகோ விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நேபாளத்திலிருந்து உயிர் பிழைத்து வரும் உறவினர்களுக்காக அரைமணி நேரம் விமானத்தை தாமதிக்க வேண்டுகோள் விடுத்தார். அதிலும் இறைவன் எங்கள் பக்கம். மும்பையிலிருந்து பாட்னா வர வேண்டிய விமானம் அரைமணி தாமதமாகவே வந்து சேர்ந்தது.

  செல்போனிலிருந்த  டசத எண்ணைக் காண்பித்து அச்சிட்ட டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு போர்டிங்பாஸ் பெற்று உள்ளே நுழைந்தோம்.  டில்லி சென்றடைந்தவுடன் சென்னை புறப்படும் விமானத்திற்காக இரவு 8-20 வரை காத்திருந்து சென்னை நோக்கிப் பயணித்தோம். இரவு 11-30 மணிக்கு சென்னை வந்தடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். மறுநாள் ரயில் மூலம் தூத்துக்குடி சுகமே வந்து சேர்ந்து எங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம்.

முக்திநாதர் ஆலயத்தின் முன்பாக

108 தீர்த்தங்களின் முன்பாக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com