ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதியும் சேற்றுப் புண்ணும்!

எனக்கு வயது 70. நீரிழிவு நோய் காரணமாகவோ அல்லது ப்ராஸ்டேட் சுரப்பி அளவில் பெரிதாகிவிட்டதாலோ இரவில் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பாதங்களை அலம்பும்படி இருப்பதால் சேற்றுப்புண் கால் விரல்களின் இடுக்கில் ஏற்பட்டு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த உபாதை தீர மூலிகை மருந்துகள் உதவுமா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதியும் சேற்றுப் புண்ணும்!
Updated on
2 min read

எனக்கு வயது 70. நீரிழிவு நோய் காரணமாகவோ அல்லது ப்ராஸ்டேட் சுரப்பி அளவில் பெரிதாகிவிட்டதாலோ இரவில் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பாதங்களை அலம்பும்படி இருப்பதால் சேற்றுப்புண் கால் விரல்களின் இடுக்கில் ஏற்பட்டு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த உபாதை தீர மூலிகை மருந்துகள் உதவுமா?

ந.அனந்தராமன், புட்டபர்த்தி.

சேற்றுப்புண் ஏற்படுவதற்கான காரணம் டிரைகோபைட்டான் ரப்ரம் என்ற ஒருவகை காளான் அல்லது டீனியா பெடிஸ் எனும் ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன் என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். சேற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்களின் கால் விரல் இடுக்குகளில் தோல் உரிந்து கொப்புளங்கள் உண்டாகி, செதில் வடிவில் இருக்கும். அரிப்புடன் வலியும் எரிச்சலும் ஏற்படும். விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்துடன் பிசுபிசுப்பும், விரல்களை அசைத்தால் வலியும் கடுமையாக இருக்கும். கட்டை விரலிலிருந்து மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்களில் இந்த உபாதை அதிகமாக காணப்படும். மழைநீர் தேக்கத்தில் நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுபவர்களுக்கு வீட்டிற்கு வந்ததும் கால்களை ஒழுங்காகக் கழுவ முடியாத நிலைகளில் இருப்பவர்களுக்கு இந்த உபாதை பெரும் தொல்லையை ஏற்படுத்தும். தங்களுடைய நீண்ட கால சர்க்கரை உபாதை ஏற்படுத்தும் பலவீனமும் இந்த உபாதைக்கு எளிதாக வித்திடக்கூடும். சேற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கால்களைச் சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு, த்ரிபலை மற்றும் கருங்காலிக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு காய்ச்சப்படும் தண்ணீரை வெதுவெதுப்பாக பஞ்சில் முக்கி சேற்றுப்புண் பகுதியை ஒரு நாளில் இருமுறை அதிலும் முக்கியமாக இரவு படுக்கும் முன் கழுவி வர புண் விரைவாக ஆறிவிடும். "சுஸ்ருதஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத மருத்துவ புத்தகத்தில் புண்ணை ஆற்றக்கூடிய சிறப்பான மருந்துகளின் பட்டியலில் இந்த த்ரிபலையும், கருங்காலிக்கட்டையும் முன்னிடத்தை வகிப்பதாகக் காணப்படுகிறது.

மேலும், கருங்காலிக்கட்டை, நால்பா மரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, புங்கம்பட்டை ஆகியவற்றைக் கொண்டு காய்ச்சப்படும் கஷாயநீரில் கால்களை சேற்றுப்புண் பகுதியில் நன்றாக படும்படி வெதுவெதுப்பாக வைத்திருப்பதும் இந்தப் புண் ஆறுவதற்கு ஏற்றதொரு சிகிச்சைமுறையாகும்.

ஒருசில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களும் இந்த உபாதை குணமாக நல்ல பலனைத் தருபவை. நால்பாமராதி தைலம் எரிச்சலை நன்றாக மட்டுப்படுத்தும், அதனுடன் சிறிது பிண்ட தைலம் கலந்து பயன்படுத்தினால் அரிப்பும், எரிச்சலும் மட்டுப்படும். பிண்ட தைலத்துடன் முரிவெண்ணெய்யுடன் கலந்து சேற்றுப்புண் பகுதியில் போட்டால் வலியும், எரிச்சலும் நன்றாகக் குறையும். கிராமங்களில் சேற்றுப் புண்ணைக் குணப்படுத்த கடுக்காய்த் தோலை நன்றாக விழுதுபோல் அரைத்துப் பற்றுப் போடுவார்கள். இரவில் போட்டு மறுநாள் காலையில் கழுவிவிடுவதும் நல்லதே.

நீங்கள் ஒவ்வொருமுறையும் காலை அலம்பிய பிறகு விரல் இடுக்குகளைப் பஞ்சினால் துடைத்து அதன் பிறகு தயாராக்கி வைத்துள்ள திரிபலை நீரைக் கொண்டு பஞ்சினால் முக்கி எடுத்து விரல் இடுக்குகளைத் துடைத்துவிட்டுக் கொள்ளவும். இது ஒரு சிறந்த அய்ற்ண் ச்ன்ய்ஞ்ஹப்-ஆக வேலைசெய்யும்.

சர்க்கரை உபாதை - ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கம் - சேற்றுப்புண் என்ற இந்த முக்கோண உபாதையைத் தீர்ப்பதற்கு ஆயுர்வேத மூலிகைக் கஷாயங்களாகிய திக்தகம், மஹாதிக்தகம், ஆரக்வதாதி, படோல கடுரோஹிண்யாதி, படோல மூலாதி, நிம்பாதி, சோனிதாம்ருதம் போன்றவை தங்களுடைய நாடித்துடிப்பிற்கு தகுந்த மாதிரி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டால் இவை அனைத்தையும் விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். உட்புறப் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் உணவுகளாகிய தயிர், பால், வெண்ணெய், நெய், எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்து உட்புற வறட்சியை ஏற்படுத்தக் கூடிய பார்லி, குதிரைவாலி, திணை, வரகு ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com