நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விநாயகர் உருவங்களைச் சேகரிப்பவர்!

எனது வீட்டையே கோயிலாக மாற்றியிருக்கிறார் திருவண்ணாமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் காசாளராகப் பணிபுரியும் ஹெச்.அரவிந்தன்.

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 11:53 am

சரவண பெருமாள்

எனது வீட்டையே கோயிலாக மாற்றியிருக்கிறார் திருவண்ணாமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் காசாளராகப் பணிபுரியும் ஹெச்.அரவிந்தன்.

வீட்டினுள் சென்றதும் நவராத்திரி கொலுவைப் போல 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்களைக் கொண்டு விநாயகர் கொலு அமைக்கப்பட்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

விநாயகர் கிரிக்கெட் குழு, விநாயகர் இசைக் குழு, மருத்துவப் பணி செய்யும் விநாயகர், நவதானியங்களால் செய்யப்பட்ட விநாயகர், குளியல் சோப்புகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட விநாயகர், நெருப்புக்கோழி முட்டையில் ஸ்டிக்கர்களை ஒட்டி செய்யப்பட்ட விநாயகர், பபுல் கம் பயன்படுத்தி செய்யப்பட்ட விநாயகர், அரிசியில் செய்யப்பட்ட மிக மிகச் சிறிய விநாயகர், கொட்டைப் பாக்கு விநாயகர், ருத்ராட்ச விநாயகர், வயலின் வாசிக்கும் விநாயகர், மடிக்கணினி பயன்படுத்தும் விநாயகர், தசாவதார விநாயகர், இலை ஓவிய விநாயகர், வண்ண நூல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட விநாயகர் என பார்க்க.. பார்க்க... வீடு முழுவதும் விநாயகரின் நவீன அவதார உருவங்கள் வந்து கொண்டே இருந்தன.

பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பைப் பயன்படுத்திப் பேசும் தாத்தா விநாயகர், கார்ட்லெஸ் போனில் பேசும் மகன் விநாயகர், செல்போனில் பேசும் பேரன் விநாயகர் என விநாயகரின் 3 தலைமுறைகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்கள் நாட்டில் பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டுகின்றனர்.

தங்கத்தில் செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எடை 100 கிராம்களைத் தாண்டும். விநாயகர் உருவம் பொறித்த தங்க மோதிரங்கள், தங்க கீ செயின்கள், விநாயகர் உருவம் பொறித்த தங்க நாணயங்களும் இதில் அடங்கும்.

விநாயகர் உருவங்கள், நாணயங்களைச் சேகரிக்கும் ஆர்வம் வந்தது எப்படி? ஹெச்.அரவிந்தன் சொல்கிறார்:

""நான் 1989-ல் இங்கு புதிதாக வீடு கட்டி குடியேறினேன். அப்போது, வீட்டின் சுற்றுச் சுவரில் விநாயகர் படம் வைப்பதற்காக வித்தியாசமான விநாயகர் படத்தைத் தேடி அலைந்தேன். அப்போதுதான், வித்தியாசமான விநாயகர் உருவங்களை வீட்டில் சேகரித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது. இவ்வாறு நான் வாங்கிய விநாயகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, 1996 முதல் வீட்டிலேயே விநாயகர் கொலு வைக்கத் தொடங்கினேன். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், உருவங்கள், விநாயகர் உருவம் பொறித்த தங்க நாணயங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். சுமார் 3,000 விநாயகர் உருவம் பொறித்த திருமண அழைப்பிதழ்கள், காலண்டர்கள், டைரிகள், தீப்பெட்டிகளையும் சேகரித்து வைத்துள்ளேன்.

ரூ. 10 மதிப்புள்ள விநாயகர் சிலையில் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள விநாயகர் சிலைகள் வரை வாங்கி வைத்துள்ளேன். விநாயகர் உருவங்களைச் சேகரிப்பதற்காகவே, அவ்வப்போது சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், கோவா, ஹரித்துவார், ரிஷிகேஷ், ஜெய்ப்பூர் சென்று வருவேன்.

வெளி நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்தும் விநாயகர் உருவங்கள், சிலைகளை வாங்கி வந்து வைத்துள்ளேன். தாய்லாந்து நாடு விநாயகர் உருவத்துடன் வெளியிட்டுள்ள ரூபாய் நாணயங்கள், தபால் தலைகளையும் சேகரித்து வைத்துள்ளேன்.

நான் மட்டுமின்றி என்னுடைய அண்ணன், அண்ணி, மகள்களும் அவரவர் செல்லும் ஊர்களில் இருந்து விநாயகர் உருவங்களை வாங்கி வருவார்கள்.

இந்த விநாயகர் சிலைகளைச் சேகரிக்க பல லட்சங்களைச் செலவழித்துள்ளேன். இனியும் தொடர்ந்து விநாயகர் சிலைகள், உருவங்கள், நாணயங்களைச் சேகரிப்பேன். கொலு வைத்து பக்தர்களிடம் நன்மதிப்பைப் பெறுவேன்'' என்றார் ஹெச்.அரவிந்தன்.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே விநாயகர் கொலுவைப் பார்க்க வந்தது பள்ளிச் சிறுவர்-சிறுமியர் கூட்டம். அவர்களுக்கு வழிவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.