
அந்த காலை நேரத்தில் பக்கத்து வீட்டம்மாள், பார்வதியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தான் ரவி.
""தம்பி... ஒரு சின்ன உதவி..!'' தயங்கியபடி கேட்டாள்.. கண்களைச் சுருக்கி!
""அட, உள்ள வாங்கம்மா'', ரவி உள்ளே திரும்ப, அந்த அம்மாளும் பின் தொடர்ந்து வந்தாள்.
""வாங்க... மொதல்ல உட்காருங்க.. அப்பறம் சொல்லுங்க..'', தானும் ஒரு சேரில் அமர்ந்தபடி கேட்டான் ரவி.
""நீங்க வேலைக்கு கிளம்பறீங்க போல!'' பார்வதி கேட்க,
""ஆமாம்மா.. இன்னும் அரைமணி நேரம் இருக்கு.. சொல்லுங்க..'' என்ற ரவி, "கலா... பக்கத்து வீட்டு அம்மா வந்திருக்காங்க... டீ கொண்டு வாயேன்..' என்று உரக்கக் குரல் கொடுத்தான்.
அவன் மனைவி சமையலறையை விட்டு வெளியே வந்து ""வாங்கம்மா'' என்று கேட்ட பின் ""டீ'' போட தயாரானாள்.
தயக்கத்தை விட்டு பேச ஆரம்பித்தாள் பார்வதி.
""தம்பி, என் வீட்டுக்காரருக்கு கொஞ்ச நாளா அடிக்கடி மயக்கமா வருது.. டாக்டர்கிட்ட போனோம். பி.பி, சுகர் எல்லாம் பார்த்தாங்க.. அதுல ஒண்ணுமில்லையாம்.. தலைக்குள்ள ஏதோ பிரச்னை இருக்காம்... அதுக்கு டெஸ்ட் பண்ணனும்னாங்க... பேர் கூட சொன்னாரு.. சீட்டியாம்... செலவு ரொம்ப ஆகுமாம்... ஆனா கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சும்மாவே பண்ணலாம்னாங்க.. அதான் உங்ககிட்ட வந்தேன்..'' நிறுத்தினாள் பார்வதி.
ரவிக்குப் புரிந்தது. அவன் அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறான். அங்கு பொதுமக்களுக்கு ஸ்கேன் ஃப்ரீயாக எடுப்பதுண்டு. அதற்காகத்தான் இந்த அம்மாள் வந்திருப்பதும் புரிந்தது.
சுமார் பத்து வருடங்களாகப் பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பார்வதியின் கணவருக்கு, வயசு எழுபதுக்கு மேலிருக்கும். அவர் என்னவாக இருந்தார் என்பது ரவிக்குத் தெரியாது. சுமாரான வருவாய் உள்ள குடும்பம்தான். ஒரே மகனும் வழக்கம்போல தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். எனவே உதவலாம் என நினைத்தான்.
""சரிம்மா, அவரு ரெடியா இருக்காரா? வண்டில உட்காந்து வருவாரா..?'' ரவி கேட்க
""ம்... வருவாங்க''
""சரிம்மா... டாக்டர் பாத்த பழைய சீட்டு எடுத்து வெச்சுக்க சொல்லுங்க.. இப்ப நானே வர்றேன்''
""ரொம்ப நன்றி தம்பி'' என்று சொல்லி கிளம்பிய பார்வதிக்கு, கலா டீயைக் கொடுக்க அவசரமாக அதைப் பருகிவிட்டு, மீண்டும் நன்றி சொன்னாள்.
இருபது நிமிடங்கள் கழித்து... ரவியின் பைக் சத்தம் கேட்டு... வினாயகமூர்த்தி மெதுவாக வெளியே வந்தார். ""பாத்து போய்ட்டு வாங்க'' என்ற பார்வதியின் அறிவுரைக்கு தலையாட்டியபடி.. ரவியின் பைக்கில் மெதுவாக ஏறி அமர்ந்தார்.
""உங்களுக்குச் சிரமம் தம்பி!'' அவர் சொன்னார்.
""அட... இது சின்ன உதவிதாங்க..!''
அரசு மருத்துவமனை. பிரம்மாண்டமாய் விரிந்து எழும்பியிருந்தது. காம்பவுண்டுக்குள் நுழையும்போதே பினாயில் மற்றும் டெட்டால் வாசனை சூழ்ந்து கொண்டது. முதலில் ஒரு கட்டடத்திற்குள் வினாயகத்துடன் சென்ற ரவி, வாசலில் நின்ற வாட்ச்மேனிடம், ""நமக்கு தெரிஞ்சவரு'' என்று சொல்லி அழைத்துச் சென்றான். ஏனோ நிறையப் பேரை அந்த வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. அந்த கட்டடத்திற்குள் நிறைய கவுண்டர்களும், அதில் சீட்டெழுதும் நபரைச் சுற்றி நிறைய ஜனங்களும் குழுமியிருந்தனர். இதில் யார் நோயாளி, யார் கூட வந்தவர்கள் என்றுகூட புரியாமல், ஒரே இரைச்சலாக காணப்பட்டது. சீட்டு எழுதுபவர் அசால்ட்டாக கிறுக்கிக் கொண்டிருந்தார், டாக்டர்போல்.
""ஐயா.. இங்கேயே இருங்க.. நான் கையெழுத்து போட்டுட்டு வந்துடறேன்.. கொஞ்சம் ஃபார்மாலிட்டி இருக்கு, அத முடிச்சிட்டு நேரா பெரிய டாக்டர்கிட்ட போலாம்!''
விநாயகத்தை ஓர் ஓரமாக அமரச் செய்துவிட்டு ரவி புறப்பட்டான்.
விநாயகத்திற்கு அந்தச் சூழ்நிலை புதிதாக இருந்தது. ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் ஏன் இவ்வளவு சந்தைக்கடை போன்ற சூழ்நிலை? உடல் முடியாதவர்களை பொறுமையாக, மென்மையாக நடத்த வழியில்லையோ? சீட்டு போடும்போதே குறுக்கே ஓர் ஊழியர், தனக்கு வேண்டியவர் பேரைச் சொல்லி ஒரு சீட்டு வாங்கிச் சென்றார்.
சக்கர நாற்காலியில் ஒரு கால்கட்டு பேஷண்டை தள்ளிச் சென்ற ஊழியர் கூட வருபவரிடம், ""யோவ், நீ கொடுக்கற ரெண்டு ரூபாய்க்கு, ரொம்ப அலுங்காம குலுங்காம தள்ளிகிட்டுப் போக முடியாது. புரிஞ்சுதா, இன்னும் ஏழு பேருக்குக் கட்டு மாத்தனும்!'' அலுத்துக் கொண்டார்.
இரண்டு இளம் பெண்மருத்துவர்கள் லேட்டஸ்ட் ஆங்கிலப்படம் பற்றி பேசிக் கொண்டே சென்றனர். ஒரு வயதான அம்மாள் போவோர் வருவோரிடம், ""இருபத்திரண்டுக்கு எப்படி போகணும்...?'' என்று விசாரித்துக் கொண்டிருந்தார். நடுவில் ஒரு கரை வேஷ்டி ஆசாமி கூடவே சில எடுபிடிகளுடன் பந்தாவாக பவனி சென்றார்.
இதுபோல் இன்னும் எத்தனையோ காட்சிகள் கண்டு, விநாயகம் தான் முன்பு ஒருவரை பார்க்கச் சென்ற அமைதியான பெரிய மருத்துவமனையை ஞாபகப்படுத்திக் கொண்டார். மயக்கம் வேறு எப்போது வருமோ? என்று அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
அதற்குள் ரவி வந்தான். நேராக ஒரு கவுண்டரில் சென்று, ""இன்னிக்கு நியூரோ.. ஓபி யாரு?'' என்று விசாரித்தான்.
"என்னப்பா.. உனக்கு மரை கழண்டிருச்சா?' என்று கேட்டவரை.. ""சீ விளையாடத.. தெரிஞ்சவருக்காகக் கேட்டேன்...'' என்றான்.
"நம்ப மாணிக்கவாசகம்தான்...!'
""ஐயோ.. அந்தாளு ஷார்ட் டெம்பராச்சே...! ம்..''
""அட.. உங்க ரிலேஷன்னு சொல்லுப்பா!''
""இல்ல.. இது ட்ரீட்மெண்ட் இல்ல.. ஸ்கேனுக்கு எழுதி வாங்கணும்.. அதுவும் கொஞ்சம் ரெகமெண்ட் வேற பண்ணனும்..''
"கஷ்டம்தான்.. ட்ரை பண்ணுப்பா..'
அவர்கள் உரையாடல் முடிந்து, ரவி ஒரு சீட்டோடு விநாயகத்திடம் வந்தான்.
""ஐயா, உங்க தொழில் பெட்டிக்கடைன்னு போட்டிருக்கேன். கேட்க மாட்டாங்க, அப்படி கேட்டாச் சொல்லுங்க.. ம், வயசுகூட சும்மா எழுபத்தஞ்சுன்னு போட்டிருக்கேன்.. சரியா இருக்குமா..?''
""பரவால்ல தம்பி.. ஒரு வயசுதான் கம்மி.. பாவம் உங்களுக்குத்தான் சிரமம்'' விநாயகம் சிரித்தார்.
""அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. நம்ப அதிர்ஷ்டம், டாக்டர் நல்ல மூடுல இருந்தா, இன்னிக்கே ஸ்கேன் பண்ணிடலாம், பாக்கறேன்'' என்று விநாயகத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு ஒரு மாடிப்பக்கம் சென்றான் ரவி.
இன்னும் அந்த அம்மாள் இருபத்திரண்டுக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தாள்.
போகும்போதே விநாயகம் கேட்டார், ""ரொம்ப கூட்டமா இருக்கே...?''
""ஆமாம்.. இன்னிக்கு திங்கள்கிழமையாச்சே.. நீங்க பயப்படாதீங்க.. இன்னிக்கு இல்லாட்டி நாளைக்குள்ள நம்ப வேலை முடிஞ்சிடும்..'' சொன்ன ரவி வெள்ளை யூனிஃபார்ம் நபரிடம் சென்றான்.
""பாபு.. இவரு நமக்கு வேண்டியவரு.. வசதி இல்லாதவரு.. இன்னிக்கு ஒரு சி.டி.ஸ்கேன் பண்ண முடியுமா?''
""என்னப்பா நீ..? ஏற்கெனவே முன்னூறு பேர் வெயிட்டிங் தெரியுமா? ஒருவேளை சீஃப் பெர்சனலா ரெகமெண்ட் பண்ணா.. கடைசியா வேணாப் பார்க்கலாம்..!'' பாபு சொன்னார்.
""சரி.. பெரிய டாக்டரை உடனே பார்க்க முடியுமா?''
"முடியும்.. ஆனா ஓ.பி...ல ஒரு கையெழுத்து வாங்கிட்டு வா.. நானே அழைச்சுக்கிட்டுப் போறேன். ஆனா அங்கே ஒரு கறார் பேர்வழி இருக்கான்.. அவன்கிட்ட தெரிஞ்சவன், தெரியாதவனெல்லாம் கிடையாது'
""எவ்வளவு வெட்டணும்?''
""பத்து கொடு!''
""சரி'' என்ற ரவி.. விநாயகத்தை மாடியில் ஒரு பெரிய ஹாலுக்குள் அழைத்துச் சென்றான். அங்கே சுமார் அம்பது பேர்கள் அமைதியாக காத்திருந்தனர். சுவரில் "நரம்பியல் துறை' எனப் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.
ரவி, ஒரு வெள்ளை யூனிஃபாமை தனியாக அழைத்துச் சென்று, பிறகு திரும்பினான்.
""ஐயா, ஒரு அரை மணில நாம நேரா பெரிய டாக்டரையே பாத்துடலாம்..!'' என்று சொல்லி கூடவே அமர்ந்தான்.
விநாயகத்தின் வாயில், ""தம்பி.. உங்களுக்குச் சிரமம்'' என்ற வார்த்தைகள் வெளிவருவதற்கு முன்பே, ரவி அவரைத் தடுத்தான். பிறகு தன் செல்லில் '' இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்'' என்று யாருக்கோ சொன்னான்.
திடீரென அந்த அறை பரபரப்பானது. ஓர் ஆஜானபாகுவான பெரிய டாக்டர். சுமார் பத்துப் பதினைந்து பயிற்சி மருத்துவரோடு உள்ளே நுழைந்தார். அவரது கோட்டில் ""டாக்டர் மாணிக்கவாசகம்'' என்ற லேபிள் இருந்தது.
ரவி எழுந்து நின்றான். தான் முன்பு பேசிய அதே நபரையே மீண்டும் தேடிப் பேசினான். பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து, ரவி.. விநாயகத்தை அங்கிருந்த சீஃப் டாக்டர் அறைக்கு அழைத்துச் சென்றான். கதவு முனையில் இருவரும் நின்றிருந்தனர்.
உள்ளே சீஃப் டாக்டர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். சுற்றி அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருக்க.. ரவியிடம் பேசிய நபரும் டாக்டர் செல்போனில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான். பிறகு ரவியை அழைத்தான். டாக்டரின் காதில் கிசுகிசுத்தான்.
பெரிய டாக்டர் விநாயகத்தைப் பார்த்தார். எதுவும் பேசவில்லை. ரவி தந்த சீட்டில் ஏதோ எழுதினார். பிறகு.. ""யு ஹேவ் டு வெயிட் அட்லீஸ்ட் ஒன் வீக் மேன்'' எனச் சொன்னார்.
ரவியின் நண்பன், ரவியைப் பார்த்துக் கண்ணடித்தான். மூவரும் வெளியே வந்தனர்.
""ரவி சார்.. இவரு இத எழுதிக் கொடுத்ததே பெரிய விஷயம்.. வாங்க ஸ்கேன்ல நம்மாளுதான் இருக்கான். கொஞ்சம் முன்னாடி முடியுமான்னு பார்க்கலாம்''
மீண்டும் மூவரும் வேறு ஓர் அறையை நோக்கிச் சென்றனர். நடப்பதெல்லாம் விநாயகத்திற்கு ஓரளவு புரிந்தது.
ஒரு நபருக்கு அடிக்கடி மயக்கம் என்று வந்தால், அது நரம்பு சம்மந்தப்பட்ட நோய். அதற்கு அவர் இலவசமாக மருத்துவம் பார்க்க முறைப்படி வெளியே ஓ.பி. சீட்டு வாங்கி, சாதாரண டாக்டரிடம் காண்பித்து.. அவர் நரம்பியல் வல்லுநருக்கு பரிந்துரை செய்து, அங்கு மருத்துவம் கொடுத்து, அது பலனில்லாமல் போனால் மட்டுமே, அந்த நோயாளி பெரிய மருத்துவரைப் பார்த்த பின்பு, அவர் ஸ்கேன் போன்ற பெரிய சோதனைகளுக்கு எழுதித் தருவார். இதுபோன்று ஏற்கெனவே பலர் இருப்பதால்.. ஒரு ஸ்கேன் மிஷினை வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் இருபதிலிருந்து, முப்பது பேருக்கு மட்டுமே எடுக்க முடியும். ஆனால் காத்திருப்போர் பட்டியலோ நூற்றுக்கணக்கில் இருக்கும்.
இதில் பணம், தெரிந்தவர்கள் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி கொஞ்சம் முன்னதாக டெஸ்ட் செய்து கொள்ளலாம். வெளியில் தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டால், எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை செல்வாகும். தொகை அதிகம் என்பதால் இங்கு கூட்டம். அதனால் சிபாரிசு.. என்ன செய்வது? விநாயகம் ஒருவாறு சகித்துக் கொண்டார்.
அந்த புது அறையில் சுமார் இருபது பேர்கள் காத்திருந்தனர். ரவியிடம் பேசிய ஒருவர் "ம்ஹும், சான்úஸ இல்ல'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். ரவி சோர்வுடன் விநாயகத்திடம் வந்தான்.
""ஐயா... இன்னிக்கு முடியாது போல தெரியுது... கொஞ்சம் இருங்க, நாளைக்காவது நடக்குமான்னு, கேட்டுப் பாக்கறேன்..'' மீண்டும் சென்றான்.
அதற்குள் ஒரு தாடி வைத்த ஆசாமி ரவியை மறித்தான். ""என்ன ரவி.. இந்தப் பக்கம்..?'' ரவி.. விஷயத்தை விளக்கினான். அதற்கு அந்த தாடி ஆசாமி.. ""ம்.. இரு.. ஒரு விஜபி கேஸ் வருது.. வேற வழியில பார்க்கலாம்..'' என்று ஒரு வழி சொன்னான்.
""எப்படிப்பா...?''
""அப்படித்தான்.. அதோட இவரையும் அனுப்பிடலாம்.. ''
ரவி... விநாயகத்திடம் வந்தான். அவர் எதுவும் பேசாமலிருந்தார். ""ஐயா தப்பா நினைக்காதீங்க.. உங்களால் நாளைக்கு அலைய முடியாது. அப்புறம் பாத்துக்கலாம்.. என்ன சொல்றீங்க?''
விநாயகம் பரிதாபமாக ரவியைப் பார்த்தார்.. பாவம் ரவி.. முடிந்தவரை முயற்சி செய்கிறான். தாடி நகர்ந்தான். அப்போது சொன்னான் ""ரவி.. பெரியவர் அப்படி உள்ள அந்த பெஞ்சுல உட்காரச் சொல்லு.. இப்ப டெஸ்ட் எடுத்தாலும்.. ஒபினியன் கெடைக்க ரெண்டு மணி நேரம் ஆகும்.. பொறுமையா இருந்து வாங்கிட்டு போகச் சொல்லு!''
அவன் சென்றதும், ரவி நிம்மதி ஆனான். எங்கிருந்தோ ஒரு கப் காபி வாங்கிக் கொடுத்தான்.
""ஐயா, ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.. நான் மத்தியானம் வந்து பாக்கறேன்.. அந்த பெஞ்சுல உட்காருங்க.. வேற எதாவது பிரச்னைன்னா.. இங்க புது பில்டிங்ல.. உள்ள ஆபீஸ் ரூம்ல.. எம்பேரச் சொல்லிட்டு வாங்க.. நான் அங்கதான் இருப்பேன், வரட்டுமாய்யா? எங்கயும் போகாதீங்க.. அவங்க கூப்பிடும்போது இருக்கனும்..'' விநாயகம் தலையாட்டினார். ரவி புறப்பட்டான்.
நேரம் ஓடியது. மதியம் இரண்டு மணி அளவில் ரவி மீண்டும் அங்கு வந்தான். ஆனால்.. விநாயகம் அங்கு இல்லை. விசாரித்தான்.
""என்னப்பா.. உன் ஆளு.., அரை மணி நேரம் கூட இல்ல.. கிளம்பிட்டாரு.. உடம்பு சரியில்லையா.., இல்ல, பொறுமை இல்லையான்னு புரியல... பேசி வச்சிருந்தது வீணா போச்சுப்பா.., ஏன்.. உங்கிட்ட சொல்லல...?'' ரவி பேசி வச்சிருந்த தாடி ஆசாமி சொன்னான்.
ரவிக்கு ஒன்றும் புரியவில்லை. சரி.. மாலை வீட்டில் போய் விசாரிக்கலாம்.. என்று தன் வேலைப்பளுவில் மீண்டும் ஆபீஸிற்கு திரும்பினான்.
அன்று இரவு. தன் வீட்டிற்குக் கூட செல்லாமல் ரவி பார்வதி அம்மாளின் வீட்டிற்குள் நுழைய.. ஹாலில் விநாயகமூர்த்தி வரவேற்றார்.
""வாங்க தம்பி... உட்காருங்க.. ''
""ஐயா.. ஏன் இப்படி.. எதுவும் சொல்லாம? பணம் வேற கொடுத்தாச்சு...'' ரவி சொல்ல விநாயக மூர்த்தி சிரித்தார்.
""தம்பி.. மொதல்ல உங்க உதவிக்கு நன்றி சொல்லணும்.. அப்பறம் எனக்கு அங்கு இருக்க முடியல.. சொல்லப்போனா பிடிக்கல தம்பி.. சொல்லிட்டு வரணும்னு நெனைச்சேன்.. ஆனா விட மாட்டீங்க.. அதான் சொல்லல என்னை மன்னிச்சிடுங்க..!''
ரவி சற்று பதறினான். ""ஐயா, எதுக்கு மன்னிப்பெல்லாம்.. வேலை முடியலேன்னு வருத்தந்தான்.. வேற ஒண்ணுமில்ல.. கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கனும்..!'' சொன்ன ரவியைப் பார்த்து விநாயகமூர்த்தி சொன்னார்.
""தம்பி.. எனக்குப் பொறுமை மட்டுமில்ல.. வீரம், பொறுமை, மன உறுதி, தியாகம், கட்டுப்பாடு, கண்ணியம் இதுபோல எல்லாத்தையும் கொண்டவன்தான் நான். ஆமாம்.. அதுவும் நாட்டுக்குன்னு வரும்போது, காந்திங்கிற ஒருத்தரோட சொல்லுக்கு.. நாடே தலையாட்டின கும்பல்ல நானும் ஒருத்தன்தான்''.. ரவி புரியாமல் பார்த்தான்.
""ஆமாம் தம்பி.. நான் பல வருஷம் ஜெயில்ல இருந்தவன்.. காந்தியோட இயக்கத்துல இருந்தவன்.. சுதந்திரத்துக்காகப் போராடினத சொல்லி, தியாகின்னு பென்ஷன் வாங்கறது கூட தப்புன்னு அத வேணாம்னு சொன்னவன். ஆனா.. இன்னிக்கு ஆஸ்பத்திரில.., பாத்த சில விஷயங்களும், அதுல நானும் ஒருத்தனான கொடுமையும் வேண்டாம் தம்பி.. என் மனசாட்சி இடம் கொடுக்கல.. என்மேலயே காரித் துப்பணும் போல இருந்திச்சு. அதான் வந்துட்டேன்..'' விநாயகம் கனமான குரலோடு சொன்னார்.
ரவிக்கு ஓரளவுப் புரிந்தது. ""ஐயா.. காலம் மாறுது.. நீங்க அதையே நினைச்சுகிட்டிருந்தா...'' ரவி முடிக்கவில்லை.. விநாயகம் ஆரம்பித்தார்.
"காலம் மாறுதா..? அது இதுக்கு பொருந்தாது தம்பி.. நீங்க ஆசையா, தியாக உணர்வோட கஷ்டப்பட்டு வளர்த்த ஒண்ணு.. மோசமா போய், உங்களையும் தப்பா மாத்தினா.. நீங்க பட்ட பாட்டுக்கு என்ன தம்பி அர்த்தம்? அந்த காலத்தில இவ்வளவு ஊழல், இவ்வளவு சிபாரிசு, இவ்வளவு அலட்சியம் கிடையாது.. ஆனா, அடிமையா இருந்தோம், அதப்பாத்து போராடி.. உயிர கொடுத்து.. சுதந்திரம் வாங்கி.. இப்ப நம்ம மக்களே சுதந்திரமா, ஊழல்.., சிபாரிசு.., அடாவடி.., அலட்சியம்..னு அதிகார வர்க்கத்தோட அடிமையா இருந்தா...இந்த அவல நிலைக்கா அன்னிக்கு அவ்வளவு பேர் அடி வாங்கினாங்க? அவமானப்பட்டாங்க. ஜெயிலுக்குப் போனாங்க? செத்தாங்க..? சொல்லுங்க தம்பி..?''
""ஐயா நீங்க சொல்றது புதுசில்லையே.., ஊர்ல நடக்குது.. பேப்பர்ல பாக்கறோம்.. அப்பறம் ஆஸ்பத்திரில மட்டும் எல்லாம் ஒழுங்கா நடக்கும்..னு எப்படிங்க எதிர்பார்க்க முடியும்...?'' ரவி பிராக்டிக்கலாக கேட்டான்.
""சரிதான் தம்பி.. அங்க ஓரளவு எதிர்பார்த்தது தப்புதான்.. நோயாளிங்க வர்ற எடமாச்சே.. குறைந்தபட்சம் கருணையோட இருப்பாங்கன்னு நெனைச்சேன்.. சுயநலம்னு வரும்போது பொறுத்துதான் போகனும்னு தோனிச்சு.. ஆனா ஒரு கட்டத்துல, ஏழைங்க, வயசானவங்க... குழந்தைங்க பயன்படுத்தற ஆஸ்பத்திரில கூட ஒரு குறுக்கு வழில, விஐபியோட சிபாரிசுல வந்த ஒரு நோயாளிகூட நானும் சேர்ந்து.. அதே குறுக்கு வழில அந்த டெஸ்டு எடுத்துதான் உயிர காப்பாத்தனுமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் தம்பி., இதே உயிர., சுதந்திரம் வாங்கறப்ப துச்சமா மதிச்சுத்தானே போராடினோம்?... இப்ப இத காப்பாத்த, இப்படி மட்டமா நடந்துக்கணுமான்னு தோனிச்சி.. அப்பறம் ஒரு நொடிகூட அங்க இருக்க மனசு ஒப்பல தம்பி.., சுதந்திரம்கிறது எல்லாருக்கும்.. எல்லாமும்.. நியாயமா.. உரிமையோட கிடைக்கணும்.. அதுக்குத்தான் போராடினோம்.. ஆனா எல்லாமே விழலுக்கு இறைத்த நீரா போச்சு.. மிஞ்சி இருக்கிறது சுயகௌரவம் ஒன்னுதான், அத விட மனசு வரல தம்பி., என்னை தப்பா நினைக்காதீங்க..!''
விநாயக மூர்த்தியின் ஆத்மார்த்தமான விளக்கம் ரவிக்குப் புரிந்தது. மௌனமாக விடை பெற்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.