ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செல்லுலாயிட் நோய் பாதித்தால்...!

வயது 38. செல்லுலாயிட் என்ற நோயின் பாதிப்பால் இரண்டு கால்களும் மிகுந்த வலியுடனும் வீங்கியும் நிறம் சிறிது இளஞ்சிவப்பாக மாறி, குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டுவருகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செல்லுலாயிட் நோய் பாதித்தால்...!
Updated on
2 min read

வயது 38. செல்லுலாயிட் என்ற நோயின் பாதிப்பால் இரண்டு கால்களும் மிகுந்த வலியுடனும் வீங்கியும் நிறம் சிறிது இளஞ்சிவப்பாக மாறி, குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டுவருகிறேன். முகம், கழுத்து, கைகள் மை பூசியது போல மிகவும் கறுத்துவிட்டது. அதிக ஆங்கில மருந்துகள் உட்கொண்டதால் சர்க்கரை நோய் வந்துள்ளது. சிறுநீரகத்தில் அல்புமின் பிரச்னை உள்ளது. இரத்தத்தில் கொழுப்பும் அதிகம் உள்ளது. இதற்கு ஆயுர்வேதத்தில் மருந்துள்ளதா?

- இ.நவீன் குமார், வெண்ணந்தூர், இராசிபுரம்.

கால்களுக்குச் செல்லும் இரத்தக்குழாய்கள், தசைநார்கள், எலும்புகள், அவற்றைச் சுற்றியுள்ள மஜ்ஜைகள் போன்ற பல பாகங்களையும் தாக்கக் கூடிய செல்லுலாயிடிஸ் எனப்படும் கடுமையான பாதிப்பினால் தோலில் உள்ள உணர்வுகளை அறிவிக்கும் நரம்புகள், அணுக்களின் சிதைவு ஆகியவற்றால் கடுமையான வலி, வீக்கம், நிறமாற்றம் ஆகியவை ஏற்படவே செய்யும். இதற்குத் தகுந்த சிகிச்சையை உடனே செய்யாமல் காலதாமதம் செய்தால், இதுபோன்ற உபாதைகள் உருவாவதற்கு வழிவகுத்துவிடும். திரிபலை எனும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மற்றும் கருங்காலிக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாய நீரால் பாதிக்கப்பட்டுள்ள தோல் பகுதியை வெதுவெதுப்பாக அலம்புவதும், அதன் பிறகு அதை நன்றாகத் துடைத்து ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சூரண மருந்தை அந்தப் பகுதியில் தூவுவதால் அணுக்கிருமிகள் நசிப்பதுடன் இரத்தத்தையும் அது சுத்தப்படுத்துகிறது. செல்லுலாயிடிஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் கடும் பத்தியங்களை அனுசரிக்கவேண்டும். புளித்த தயிர், பிசுபிசுப்பை உடலில் ஏற்படுத்தும் சீஸ், பன் பட்டர் ஜாம், பிரட் வகையறாக்கள், கேக்குகள், புலால் வகை உணவுகள் இனிப்பு புளிப்பு மற்றும் உப்புச் சுவை அதிகம் உள்ள உணவு, பகல் தூக்கம், குளிர்ந்த நீர், மாவுப்பண்டங்களாகிய இட்லி, தோசை, வடை, நூடுல்ஸ், குளிர்பானங்கள் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சரக்கொன்றைப் பட்டையை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரக்வதாதி கஷாயம், வேப்பம்பட்டையை வேறு சில மூலிகைகளுடன் காய்ச்சப்படும் திக்தகம் கஷாயம், வில்வம் துளசி ஆகியவற்றை வேறு பல மூலிகைகளுடன் சேர்த்து ஆட்டினுடைய சிறுநீருடன் சேர்த்தரைத்துத் தயாரிக்கப்படும் வில்வாதி எனும் குலிகை, பேதி மூலம் குடலையும் இரத்தத்தையும் தோலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடிய மாணிபத்ரம் எனும் லேஹ்ய

மருந்து, செல்லுலாயிடிஸ் உபாதையை குணப்படுத்தக்கூடிய சிறந்த ஆயுர்வேத மருந்துகள், நோயினுடைய தாக்கத்தை அறிந்த உடனேயே இவற்றைப் பயன்படுத்த நிவாரணம் விரைவில் கிடைக்கலாம்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள சர்க்கரை உபாதையினுடைய தாக்கம், அல்புமின் பிரச்னை, இரத்தத்திலுள்ள கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க தேத்தாங்கொட்டை, கருங்காலிக்கட்டை மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கதககதிராதி எனும் கஷாயத்தை சிலாசத்து எனும் பற்பத்துடன் சாப்பிட ஏற்ற மருந்து. நாவல்கொட்டையின் உட்பகுதியில் உள்ள பருப்பை மட்டும் எடுத்து நிழலில் காய வைத்து மையப்பொடித்து மூன்று சிட்டிகை வீதம் வெந்நீருடன் ஒரு நாளில் இருவேளை சாப்பிடவும். குடல் உட்புற சுத்தத்தை என்றென்றும் நீங்கள் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதால் பசியினுடைய செயலானது சீராக இருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதனால் எளிதில் செரிக்காத மைதாப்பொருட்கள், எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்கள், ஓர் இரவு வைத்திருந்த மறுநாள் சாப்பிடக் கூடிய எந்தவகையான உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். காலையில் புழுங்கலரிசி கஞ்சி, மதியம் மிளகு சீரகம், தனியா சேர்த்த ரஸம், கறிவேப்பிலைத் துவையல், நெல்லிக்காய் மோர் பச்சடி, நன்கு வேக வைத்த காய்கறி கூட்டு என்ற வகையில் அமைத்துக் கொள்வதே சிறந்தது. இரவில் படுப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்பாகவே கோதுமை ரவை உப்புமா, கோதுமையினால் தயாரிக்கப்பட்ட சுக்காரொட்டி, சப்பாத்தி, பச்சைப்பயறும் சின்ன வெங்காயமும் சேர்த்த கூட்டு என்ற வகையில் சாப்பிடுவதும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வை தரக்கூடிய சிறந்த உணவுப்பட்டியல் என்று குறிப்பிடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com