முடியாதது
இருளை அழித்து, மெதுவாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சுவரில் இருந்த கடிகாரம் மணி ஐந்தரை என்று அடித்துக் கூறியது. நந்தன் படுக்கலாமா என்று அரை மனதாக யோசித்தான்.


இருளை அழித்து, மெதுவாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சுவரில் இருந்த கடிகாரம் மணி ஐந்தரை என்று அடித்துக் கூறியது. நந்தன் படுக்கலாமா என்று அரை மனதாக யோசித்தான். இரவு முழுவதும் படித்து விட்டு, பகலில் தூங்குவது என்பது ஒரு மாதமாக வழக்கமாகி விட்டது. நவம்பரில் பரீட்சை. அவன் ஸி .ஏ . ஃ பைனல் எழுதப் போகிறான். ஒவ்வொரு முறை தேர்வுக்குத் தயாராகும் போதும், பகல் இரவாகவும், இரவு பகலாகவும் மாறிவிடுகிறது. ராட்சதர்களுக்குத்தான் பொழுது இப்படி இருக்கும், இந்தப் பரீட்சைகள் எல்லாம் நம்மை ராட்சதனாக்கத் தயார்ப்படுத்துகின்றன என்று அவனது சிநேகிதன் கோபு சிரித்தது நந்தனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. இந்த அதிகாலையில் யார் என்று வியப்புடன் நந்தன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். ஒலா டாக்ஸியிலிருந்து மாடியில் குடியிருக்கும் பத்மநாப மாமா இறங்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால், ஒரு பெண் இறங்கினாள் இளம் பெண். சல்வார் கமீஸ் அவளை உயரமாகக் காட்டியது. மாநிறம். குறு குறு வென்ற முகம். வெட்டப்பட்ட தலை முடி. பார்க்க லட்சணமாக இருந்தாள். யார் இது?
""என்ன ஜன்னல் வழியா வேடிக்கை பாத்துண்டு இருக்கே?'' என்று அவனுக்குப் பின்னால் அம்மாவின் குரல் கேட்டது. காபி தம்ளருடன் நின்றிருந்தாள்.
""மாடியாத்துக்கு யாரோ கெஸ்ட் வரா போலிருக்கே''
அம்மா கையிலிருந்து தம்ளரை வாங்கிக் கொண்டான்
""ஓ... வந்துட்டாளா? அனந்தலக்ஷ்மி நேத்தி சொல்லிண்டிருந்தா. அவ தங்கை பொண்ணு பாம்பேலேர்ந்து வரப் போறான்னு இப்பதான் முதல் தடவையா பெங்களூருக்கு வரா. அவளை அழைச்சிண்டு எல்லா இடத்துக்கும் போய் சுத்திக் காமிக்கணும்னு சொல்லிண்டிருந்தா'' என்றபடி அம்மா அவன் குடித்து விட்டுக் கொடுத்த காபித் தம்ளரை வாங்கிக் கொண்டு வெளியே போனாள்.
"சரி, காபியைக் குடித்த பின் இனிமேல் தூங்குவதற்கு சான்ஸ் இல்லை' என்று நினைத்தபடி, நந்தன் காலில் ஷூவை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். அதே நேரம் மாடியிலிருந்து மாமா இறங்கிக் கொண்டிருந்தார். கூடவே அந்தப் பெண்ணும்.
"" குட்மார்னிங் மாமா'' என்றான் நந்தன்.
""குட்மார்னிங் நந்து. இன்னிக்கி என்ன விசேஷமா வாக்கிங் கிளம்பிட்ட? இப்பதானே உனக்கு ராத்திரி ஆரம்பிச்சிருக்கணும், தூங்கறதுக்கு?'' என்று சிரித்தார்.
பதில் எதுவும் கூறாமல் நந்தனும் சிரித்தான் .
இப்போது மூவரும் சாலைக்கு வந்து விட்டனர் .
""நந்து, இவதான் இந்து, என்னோட நீஸ். பாம்பேலேர்ந்து வந்திருக்கா'' என்று அறிமுகம் செய்து வைத்தார். அவளிடம், ""இவன் நந்து. இன்னும் ஆறு மாசத்திலே நந்தன் சார்டர்ட் அக்கெüண்டண்ட்''
இந்து அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். முகமே முழுதாக மலர்ச்சியடைந்து விகசித்தது . எவரையும் கவரும் புன்னகை.
நந்தன் பதிலுக்கு "ஹலோ' என்றான்.
மூவரும் நடந்து சென்றார்கள். இரு பக்கமும் விரிந்திருந்த மரங்களின் உதவியினால் எழுந்த காற்றில் குளிர்ச்சி கலந்திருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நாய்க் குட்டிகள் என்று சாலை ஓரங்கள் விறுவிறுப்பான நடைகளையும், ஓட்டங்களையும் எதிர்கொண்டிருந்தன.
அப்போது பத்மநாபனின் கைபேசி ஒலித்தது. அவர் எடுத்துப் பேசினார். பிறகு அவர்களைப் பார்த்து, ""என் பாஸிடமிருந்து கால். இன்னும் அரை மணி நேரத்துல நான் அவரைப் பாக்கணுமாம். அப்ப நீங்க ரெண்டு பேரும் வாக்கிங்கை முடிச்சிட்டு வாங்கோ'' என்று அவர்கள் பதிலுக்காகக் காத்திராமல் வந்த வழியே திரும்பினார்.
அவர்கள் இருவரும் மேலே நடந்தார்கள் .
""வாகனங்களினால் கற்பழிக்கப் படாத இந்த மாதிரி சுத்தமான சாலைகளைப் பார்க்க மனதுக்கு இதமாக இருக்கிறது'' என்றாள் இந்து .
""விட்டா கவிதை எழுதிடுவீங்க போல இருக்கே?'' என்று சிரித்த நந்தன், ""நீங்க சொல்றது சரிதான். இன்னும் மத்த இடங்கள்லாம் கூட இருக்கு. இதே மாதிரி. பொதுவா அழகான ஸிட்டி இது.''
""முதல்ல நாம இந்த நீங்க, வாங்க, போங்கவை நிறுத்திடறோம். சரியா?'' என்று இந்து சிரித்தாள் .
""உங்க... ஸாரி, உன் இஷ்டம்'' என்றான் நந்தன் .
""இந்த ஊர் பென்ஷனர்களுக்கான தெய்வலோகம், ரொம்ப சோம்பேறித்தனமான ஊர் என்றெல்லாம் எவ்வளவு பொய்கள்'' என்றாள் இந்து. ""பாம்பேயின் சுறுசுறுப்புக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல என்று அல்லவா நான் இங்கே பார்க்கிறேன்?''
""ஆங்கிலேயரிலிருந்து, அடுத்த ஊர்க்காரர்கள் வரை இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு கட்டி விட்ட கதை அதெல்லாம்'' என்றான் நந்தன் .
இந்து அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் பார்வை அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது .
""ஒபாமாங்கறான், காமரான்ங்கறான், ஏஞ்சலா மெர்கெல்ங்கறான், எல்லாரும், அவாவா, ஊர்லேர்ந்து கிளம்பி மூவாயிரம் மைல், அஞ்சாயிரம் மைல்னு பிரயாணம் பண்ணி இந்த சோம்பேறிப் பய ஊருக்கு எதுக்கு வரணும்? இது ஒரு சிலிகான் வேல்லின்னு பணத்தைக் கொண்டு வந்து கொட்டறது எதுக்காக?'' என்றான் நந்தன். தொடர்ந்து. ""இது சோம்பேறித்தனமான ஊர்ன்னு கிளப்பி விட்டதே யாராவது சோம்பேறிப் பயலாத்தான் இருக்கணும்''
""ஹலோ, நீ எப்போ கவர்மெண்ட்டுக்கு பி.ஆர்.ஓவா ஆனே?'' என்று இந்து நந்தனைப் பார்த்துச் சிரித்தாள் .
அப்போது, சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து ஒரு பெண் நந்தனைப் பார்த்துக் கையசைத்தாள். சாலையைக் கடந்து அவர்களருகே வந்தாள் .
""ஹாய் அஞ்சு'' என்று நந்தன் அவளைப் பார்த்துச் சிரித்தான் .
""இவ அஞ்சனா. என் ஸீனியர். என் வழிகாட்டி'' என்று அவளை இந்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் நந்தன் .
""வழிகாட்டியா? அப்படின்னா இவன் என்னை திட்டறான்னு அர்த்தம்''
""திட்டறேனா?''
""ஆமாம். நீ ஒரு யூஸ்லஸ் ஃ பெல்லொவா இருக்கறதுக்கு நான்தான் காரணம்னு சொல்றே''
இந்து வாய்விட்டுச் சிரித்தாள் .
அஞ்சனா இந்துவைப் பார்த்து, ""பாம்பேல படிச்சிண்டு இருக்கியா?''என்று கேட்டாள் .
""இல்லை, நான் வேலை பாக்கறேன்'' என்று இந்து தான் வேலை பார்க்கும் கம்பெனியின் பேரைச் சொன்னாள்.
""மை காட்... இந்த உலகம் எவ்வளவு சிறியது?''என்றாள் அஞ்சனா. ""அப்போ உனக்கு பார்த்தாவை தெரிஞ்சிருக்கணுமே? மார்கெட்டிங் சீஃப்'' என்றாள் அஞ்சனா.
""ஓ யெஸ். ஆனால் எனக்கு நேரடியா பழக்கம் இல்லை'' என்றாள் இந்து .
""ஆனால், அது ஒன்றும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இல்லை'' என்றாள் அஞ்சனா.
இந்து ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். பிறகு நந்தனையும். அவன் ஏதோ நீந்தத் தெரியாதவன் குளத்தில் விழுந்து விட்டவன் போல் காட்சியளித்தான்.
""உங்களுக்கு பார்த்தாவை எப்படித் தெரியும்?'' என்று இந்து அஞ்சனாவிடம் கேட்டாள்.
அஞ்சனா அவள் கண்களை நேராகச் சந்தித்தபடி, ""எனது பழைய கணவனை எனக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?'' என்று கேட்டாள் .
இந்து அவளை அதிர்ச்சியுடன் நோக்கினாள். நந்தன் நீச்சல் தெரியாதவன் போல் விழித்தது ஏன்? என்று அவளுக்கு இப்போது புரிந்தது போலிருந்தது.
""ஐ யாம் ஸாரி'' என்றாள் இந்து .
அஞ்சனா அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டபடி நடந்தாள். ""இட்ஸ் ஆல்ரைட். இது அப்படி ஒன்றும் வருத்தப்பட வேண்டிய விஷயமில்லை.''
அஞ்சனாவிடமிருந்து மெல்லிய நறுமணம் வீசிற்று. இந்து கடைக் கண்ணால் அவளை ஒரு முறை பார்த்தாள். மாநிறத்துக்கும் சற்று மட்டு. கறுப்பு என்று சொல்வதை அது தடுத்திருந்தது. ஆனால் அவளது முக அமைப்பும், உயரமும் எவரையும் கவரும் அழகுள்ளவளாக அவளைக் காண்பித்தது.
இந்து பார்த்தாவைப் பார்த்திருக்கிறாள். படிப்பும் வேலையும் மின்னும் தோற்றமாகத்தான் அவள் மனதில் அவனைப் பற்றிய பிம்பம் இருந்தது. இவள் அழகுக்கு முன்பு அவனால் நிற்க முடியவில்லையோ?
""நந்தன், எனக்கு காபி சாப்பிடணும் போல இருக்கு'' என்றாள் அஞ்சனா. எதிர்ப் புறத்தில் ஒரு சிறிய கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள் சிலர்.
நந்தன் தான் போய் வாங்கிக் கொண்டு வருவதாகக் கிளம்பினான்.
"" என்ன நீ பேசறதை நிறுத்திட்டே? உங்க ரெண்டு பேர் மூடைக் கெடுத்துட்டேனா?'' என்றாள் அஞ்சனா .
"" சே... சே..., அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. ஆனால் நீங்க சொன்னது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்தது. நந்தனுக்கு ஏற்கெனவே விஷயம் தெரிந்திருக்கலாம்'' என்றாள் இந்து.
அஞ்சனா சிரித்தாள் தலையை அசைத்தபடி. ""ஈகோ பிராப்ளம். அது நந்தனுக்கும் தெரியும்.''
""உங்க அழகு பார்த்தாவை காயப்படுத்தி விட்டதோ?'' என்று கேட்டாள் இந்து.
அஞ்சனா அவளை உற்றுப் பார்த்தாள்.
""ஸாரி, நான் அதிகப் பிரசங்கித்தனமா பேசிருக்கக் கூடாது''
அஞ்சனா இந்துவின் கையை பற்றிக் கொண்டாள். ""நீ சொன்னதில் ஒரு தப்பும் இல்லை. ஆனா என் அழகு மட்டும் காரணமில்லே. படிப்பும் வேலையும் தந்த அதிகார போதையை ,பார்த்தா வீட்டுக்குக் கூட்டிண்டு வந்தது, எங்களைப் பிரிச்சுடுத்து.''
அப்போது நந்தன் திரும்பி வருவதை இந்து பார்த்தாள்.
""நந்தன் வரான்'' என்று அஞ்சனாவிடம் சொன்னாள்.
""ஆமாம். இன்னிக்கு ஆபிஸ் தான். நந்தனும் அவன் ஃ பிரெண்ட்சும் பரீட்சையெல்லாம் முடிச்சிட்டு வந்தப்பறம்தான் டூர் எல்லாம்'' என்றாள் அஞ்சனா. ""பெங்களூருக்கு நீ வரது இதுதான் முதல் தடவையா?'' என்று கேட்டாள்.
இந்து ""ஆம்'' என்று தலையை அசைத்தாள்.
நந்தன் கொண்டு வந்த காபிக் கப்பை வாங்கிக் கொண்டார்கள் இருவரும் .
""இவனுக்கு பரீட்சை இல்லாவிட்டால், உனக்கு ஊர் சுத்தி காமிக்க சரியான ஆள்'' என்று அஞ்சனா நந்தனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
""ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா, இந்த உலகத்திலேயே, பெங்களூர் மாதிரி ஒரு ஊர் கிடையாதுன்னு நீ ஊருக்கு திரும்பிப் போறதுக்குள்ளே உன்னை ப்ரெயின் வாஷ் பண்ணிடுவான்.''
""இன்னிக்கு வரப்பவே, ஒரு சாம்பிள் ஆயிடுத்து'' என்று இந்து நந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.
""úஸம் சைட் கோலா?'' என்று நந்தனும் சிரித்தான். ""ஒரு லேடிய சமாளிக்கறதே பெரிய கஷ்டம். ரெண்டு பேர்னா நோ சான்ஸ்''
அவர்கள் மூவரும், மேலே நடந்தார்கள். நந்தனின் பரீட்சையைப் பற்றி, இந்து பெங்களூரிலும், மைசூரிலும் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி, அஞ்சனாவின் வேலையைப் பற்றி, கன்னட, தமிழ் சினிமாக்கள் பற்றி என்று பேசிக் கொண்டே நடந்தார்கள். விடை பெறும் போது இந்துவை ஒருநாள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருமாறு அஞ்சனா சொன்னாள்.
இந்துவும், நந்தனும் சற்று தூரம் மெüனமாக நடந்தார்கள்.
இந்து மெüனத்தைக் கலைத்து, ""பாவம்'' என்றாள்.
""யார்?''
""அஞ்சனாதான். இல்லையா?''
"" நீ எதுக்கு அவளைக் கண்டு பரிதாபப்படறே?''
""இவ்வளவு அழகா இருக்கா. இவ்வளவு படிச்சிருக்கா. என்ன ஒரு வாழ்க்கை அவளுக்கு?''
நந்தன் அவள் முகத்தைப் பார்த்து, ""அவ்வளவுதானா?''என்று கேட்டான்.
""வாட் டூ யூ மீன்''
""அஞ்சனா சொன்னதைக் கேட்டுட்டு நீ ஒரு முடிவுக்கு வந்துட்டே''என்றான் நந்தன் குற்றம் சாட்டும் குரலில்.
""ஆமா. அவதான் சொன்னா. பார்த்தா ஒன் அப் மேன் ஷோ காண்பிச்சதுதான் டைவர்சுக்கு காரணம்னு.''
""ஒன் அப் சரிதான். ஆனால் யார் ஒன் அப் என்பதுதான் விசாரணைக்குரிய விஷயம்'' என்றான் நந்தன் ஆங்கிலத்தில்.
""நந்தன், நீ என்ன சொல்றே?''
""நீ ஒரு பக்கத்தை மட்டும் கேட்டுட்டு எந்த முடிவுக்கும் வர வேணாங்கறேன்.''
இந்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
""எங்க ஆபிஸ்லயே அஞ்சனாவுக்கு ரொம்ப தலைக்கனம்னு பேரு. ஆடிட்ல ரொம்ப கெட்டிக்காரி. சீக்கிரம் என்னை பார்ட்னரா ஆக்கிடுவா. இவ்வளவுக்கும் என்னை விட ஒரு நாலைந்து வயசுதான் பெரியவ.''
""அவ கெட்டிக்காரத்தனத்தையும், பார்ட்னர் ஆகப் போறதையும் பொறுத்துக்க முடியாத பொறாமைக்காரங்க அவளுக்குத் தலைக் கனம்னு சொல்லி இருந்தா?''
நந்தன் அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். ""அஞ்சனா உன்னை இவ்வளவு சீக்கிரம் மயக்கிட்டான்னு சொல்ல மாட்டேன். அது உன்னை நான் தாழ்த்தி பேசற மாதிரி ஆயிடும். ஆனா, பெண்ணுக்கு பெண்...''
""இது இன்னொரு விதமான கெüரவ வசவு'' என்றாள் இந்து. தொடர்ந்து, ""ஆனா, எனக்கு ஒண்ணு புரியலே நந்தன்'' என்றாள்
"" என்னது?''
""அஞ்சனா ரொம்ப தலைக்கனம் பிடிச்சவள்னு மத்தவா சொல்றாங்கறே. அவ சொல்றதை நான் அப்படியே எடுத்துக்க வேண்டாங்கிறே.?''
""ஏன்னா, நாணயத்தின் மறுபக்கத்தையும் நீ பார்க்கணும்னுதான் நான் சொன்னேன்'' என்றான் நந்தன்.
""அஞ்சனா இப்படி இருக்கறவள்னா அவளை நீ எப்படி உன்னோட வழிகாட்டின்னு சொன்னே?''
நந்தன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அவன் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பது உடனடியாக அவனிடமிருந்து பதில் வராததிலிருந்து தெரிந்தது.
பிறகு சொன்னான்: ""அவள் எனக்கு என்னோட வேலையில் வழிகாட்டிதான். ரொம்ப இன்ட்ரஸ்ட் எடுத்துண்டு சொல்லித் தருவா. கிரேட் மைண்ட். அது எங்க ஆபிஸ்ல ஒரு வம்பா கூட இருக்கு?''
"" வம்பா?''.
""எதுக்கு என்கூட மாத்திரம் நெருங்கி பழகறான்னு. ஆனா அவ அதைப் பத்திக் கவலை படறவள் இல்லே. பார்கிங் டாக்ஸ்ம்பா'' என்று சிரித்தான் நந்தன் .
""அவ பார்த்தாவை விட்டு பிரிஞ்சு வந்ததைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும்னா. உனக்கு பார்த்தாவையும் தெரியுமா?'' என்று கேட்டாள் இந்து.
""பார்த்தாவை எனக்கு ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு முந்தியே தெரியும்'' என்றான் நந்தன்.
""எப்படி?''
""அவன் என் சித்தியின் பையன். ரொம்ப ஏழைக் குடும்பம். கஷ்டப்பட்டு சொந்த முயற்சில மேல வந்தவன். அவனுக்கு ஈகோ இருந்தா அதிலே தப்பு ஒண்ணும் இல்லேன்னு கூட நான் சொல்லுவேன். அப்படி ஒரு கஷ்டத்லேர்ந்து மேலே எழுந்து வந்து எல்லோரையும் ஒரு தடவை திரும்பிப் பார்க்க வைக்கிற அளவுக்கு உசந்திருக்கான். அவா ரெண்டு பேரும் பிரிஞ்சு போனதுக்கு அவன் மட்டும் காரணமில்லே. அவளோட ஈகோவும்தான். இன் ஃ பாக்ட், பார்த்தா ஒண்ணும் அவ்வளவு மோசமானவன் இல்லே'' என்றான் நந்தன் .
""ஆணுக்கு ஆண்...'' என்றாள் இந்து புன்னகை செய்தபடி.
வீடு வந்து விட்டது.
இந்து மாடிப் படியேறி வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினாள்.
கதவைத் திறந்த அவள் பெரியம்மா, ""வந்துட்டியா? பெரிய வாக்கிங்கா?'' என்று சிரித்தாள். ""ஒரு நிமிஷம் இரு. காபி கலந்துண்டு வரேன்'' என்று உள்ளே சென்றாள் .
அவள் வேண்டாம் என்று சொல்லவில்லை. களைப்பாக இருந்தது. ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
மனது அஞ்சனாவைப் பற்றியும், நந்தனைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து வந்த சில மணி நேரங்களுக்குள் ஒருவரின் சிக்கல் நிரம்பிய வாழ்க்கை தன் கவனத்துக்கு வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.
பெரியம்மா காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு அவள் எதிரே உட்கார்ந்து கொண்டாள்.
இந்து ஒரு வாய் அருந்தி விட்டு, ""சூப்பர் பெரீம்மா'' என்று சிரித்தாள். ""பெரீப்பா வந்து உடனே கிளம்பி போயாச்சா?'' என்று கேட்டாள்.
""ஆமா, அந்த பிராமணனுக்கு வேறே என்ன வேலை? எப்பப் பார்த்தாலும் ஆபிûஸக் கட்டிண்டு அழறதை தவிர'' என்று செல்லமாக அவரைத் திட்டினாள். எப்படி உன்னை தனியா விட்டுட்டு திரும்பினேள்னு சத்தம் போட்டேன். அப்புறம் மெள்ளமா சொல்றார், கீழாத்து நந்தன் உங்க கூட வந்தான்னு. எதுக்கு அவன் கூட விட்டுட்டு வந்தேள்னு கேட்டேன்?'' என்றாள்.
அவள் ஏன் அப்படிப் பேசுகிறாள் என்று இந்துவுக்குப் புரியவில்லை. அவளுடைய அம்மா கூட "என் அக்காவுக்கு நல்ல மனசுதான். ஆனா வாய் நீளம். ஜாக்ரதையா இருந்துட்டு வா' என்றுதான் இந்துவிடம் சொல்லி அனுப்பியிருந்தாள்.
""பெரீப்பாக்கு பதிலா இன்னொரு ஆள் வந்து சேர்ந்துண்டாச்சு அப்புறமா?'' என்றாள் இந்து.
""அது யார் அது?''
""நந்தனோட பாஸாம். அஞ்சனான்னு. வழில பார்த்தா. பேசிண்டே போனோம்'' என்றாள் இந்து.
அப்போது பெரியம்மாவின் முகம் லேசாகச் சுருங்கி, மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பியதை இந்து கவனித்தாள்.
""பெரீம்மா, உங்களுக்கு அஞ்சனாவைத் தெரியுமா?'' என்று கேட்டாள் இந்து.
""தெரியாம என்ன? உசரமா, வலது கன்னத்துல கூட ஒரு மரு இருக்குமே, அவதானே? தினம் இங்கே கீழே கற்பகத்தாத்துக்கு வந்திண்டிருப்பா''
"" தினமுமா?''
பெரியம்மா அதைக் காதில் வாங்காது தொடர்ந்தாள். ""கற்பகத்தோட தங்கை பையன்தானே அந்த அஞ்சனாவோட ஆத்துக்காரன்?. சொந்தம். போறாததுக்கு, நந்தன் அவள் கிட்ட வேலை பார்த்துண்டு இருக்கான்.''
""ஆனாலும் ரொம்ப அநியாயம் பெரீம்மா. இவ்வளவு கெட்டிக்காரியா, அழகா இருந்துண்டு என்ன பிரயோஜனம்?''
""கல்யாணம் ஆகி ரெண்டு வருஷங்கூட ஆகல. அதுக்குள்ளே டைவர்ஸ். எனக்கு இதெல்லாம் என் ஃபிரெண்ட் சொல்லித்தான் தெரியும். அவ, அஞ்சனா வீட்டுக்கு அடுத்த வீட்ல இருக்கா. தப்பு அஞ்சனா மேலதான். அவ அடிச்சு சொன்னா''
இந்து முகத்தில் கேள்விக் குறியை ஏந்திக் கொண்டு பெரியம்மாவைப் பார்த்தாள்.
""அவதான் புருஷனோட இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாளாம்.''
இந்து இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைத்தாள்.
""ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ண முடியலை. ஈகோ பிராப்ளம்னு அஞ்சனாவே சொன்னா'' என்றாள் இந்து.
""அதெல்லாம் சும்மா. அஞ்சனாவுக்கும், அவள் புருஷனுக்கும் தகராறு ஆரம்பிச்சதே, அவள் கீழாத்துக்கு வரதைப் பத்திதான். எதுக்காக அங்கேயே போய் விழுந்து கிடக்கேன்னு கலாட்டவாம்?'' என்றாள் பெரியம்மா.
இந்துவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் பெரியம்மா எதற்கு சுரீர் சுரீரென்று தீக்கங்குகளாக எறிந்து கொண்டிருக்கிறாள்? நந்தன் வீட்டில் போய் விழுந்து கிடப்பது என்றால்?
பெரியம்மா, ""சரி, நான் போய் சமையலை ஆரம்பிக்கிறேன். நீ குளிச்சிட்டு வா. பொங்கலும், கொத்சுவும் பண்ணி வச்சிருக்கேன். சாப்பிடு'' என்று எழுந்து போனாள்.
இந்து எழுந்திருக்காமல் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். ஒரே குழப்பமாக இருந்தது. யார் சொல்வது உண்மை? அஞ்சனா பார்த்தாவைக் குற்றம்சாட்டுகிறாள். நந்தனோ அது சரியில்லை, தப்பு அஞ்சனா மீதுதான் என்கிறான். பெரியம்மா குண்டைத் தூக்கிப் போடுகிறாள், அஞ்சனாவுக்கு நந்தன் மேல் நாட்டம் என்று. நந்தன் பார்த்தாவை ஆதரிப்பது போலும், அஞ்சனாவைக் குற்றம் சாட்டுவது போலும் பேசுவது தன்னை நல்லவன் போலக் காண்பிக்கும் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆடும் நாடகமா? எது உண்மை?
கண்டு பிடிக்கவே முடியாதது அது என்று இந்துவுக்குத் தோன்றிற்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...