சாப்பிட்டவுடன் எனக்கு வயிற்றில் பாரமான உணர்ச்சி ஏற்பட்டு மலப்போக்கு ஏற்படுகிறது. ஆங்கில மருத்துவர்கள் இதை கேஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளக்ஸ் என்று கூறுகிறார்கள். இதைக் குணப்படுத்துவது எப்படி?
ஒ.சங்கர், மேட்டூர்.
நீங்கள் உணவினுடைய முற்பாதியில் பருப்புப்பொடி, மிளகு சீரகப்பொடி, ஐங்காயப்பொடி ஆகியவற்றில் ஒன்றைக் கலந்த எளிதில் ஜீரணமாகக் கூடியதும் வயிற்றில் பாரமான உணர்வு ஏற்படுத்தாததுமான உணவை நிரப்பி மற்றவற்றை அளவில் குறைத்துச் சாப்பிடலாம். முற்றிய மாங்கொட்டையினுள் உள்ள மாம்பருப்பை உலர்த்தி வைத்துக் கொண்டு அத்துடன் கருவேப்பிலையும், சிறிது மிளகும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சூடாக்கித் தாளித்து சிறிது உப்பு சேர்த்துக் கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். மாந்துளிரையும், மாம்பருப்பின் இடத்தில் உபயோகிக்கலாம். இது வயிற்றோட்டத்தைக் குறைக்கும். உணவு சாப்பிடும் முன் மலக்கழிவிடம் சென்று, உந்துதல் இருந்தால் மலஜலம் கழித்து கை, கால்கள் வாய் ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்து கொண்ட பிறகு உணவு அருந்துவது நல்லது.
வயிற்றினுடைய செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமாக தனக்கு விருப்பப்படாத ஆனால் உடலுக்கு நல்லது என்று வலுக்கட்டாயமாக சாப்பிடும் உணவுகள், வயிற்றில் வாயுவையும் மலச்சிக்கலையும் ஏற்படுத்தக்கூடிய கடலை, பயறு போன்ற உணவுகள், அதிகம் வெந்து போனநிலையில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுகளைச் சாப்பிடுதல், வேகாத பச்சையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவை அடிக்கடி சாப்பிடுதல், வெந்ததையும், வேகாததையும் ஒருசேரச் சேர்த்துச் சாப்பிடுதல், எளிதில் செரிக்காத மைதாப்பொருட்கள் சாப்பிடுதல், சிறிதும் எண்ணெய்ப் பசை இல்லாமல் வறட்சி தரும் உணவுகளைச் சாப்பிடுதல், குளிர்ச்சியான வீரியமுடையதும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்து எடுக்கப்பட்ட பானங்களை குளிர்ந்த நிலையிலேயே குடித்தல், கெட்டுப் போன பூஞ்சைக்காளான் படிந்த உணவுகளைக் கவனமின்றிச் சாப்பிடுதல், இரத்தத்தில் உட்புழுக்கத்தை ஏற்படுத்தும் ஊறுகாய், மசாலாப்பொருட்கள், வினிகர் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், காய்ந்து போன நீர்ப்பசையற்ற கறிகாய்கள் அல்லது தண்ணீரில் அதிகநேரம் வைத்திருந்து எடுக்கப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடுதல், மனசஞ்சலத்துடன் உணவு உண்ணுதல் மற்றும் சோகம், கோபம், அதீத பசி போன்ற நிலைகளில் உணவைச் சாப்பிடுதல் ஆகியவற்றால் உண்ட உணவு செரிப்பதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் தன்னுடைய அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூலில் அழகாகக் குறிப்பிடுகிறார்.
உணவு வயிற்றில் வந்து சேர்ந்தவுடன் வயிற்றிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு மூளைக்கு செய்தியை எடுத்துச் செல்கின்றன. மூளையிலிருந்த மலப்பைக்கு உடனடியாக ஓர் உத்தரவைப் பிறப்பித்து மலக்கழிவிற்கு வழிவகுக்கிறது. அதனால் இந்த க்ரியா ஊக்கிகளாகிய நரம்பு மண்டலங்களை அமைதியுறச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளாகிய தாடிமாதி க்ருதம், தாடிமாஷ்டகம் சூரணம், முஸ்தாரிஷ்டம், ஜீரகாரிஷ்டம், வில்வாதி குலிகை, ஜீரகவில்வாதி லேஹ்யம் போன்றவற்றில் தகுந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிடலாம்.
வில்வம் மற்றும் கோரைக்கிழங்கு ஆகிய இரு மூலிகைகள் இந்த நோய்க்குச் சிறப்பானவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இவையிரண்டையும் வகைக்கு பத்து கிராம் வீதம் எடுத்து பெருந்தூளாக இடித்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி, அரை லிட்டர் தயிருடன் கலந்து நன்றாக மத்திட்டு சிலுப்பி, வெண்ணெய் நீக்கி அந்த மோரை உணவுடன் சாப்பிடுவது, கேஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளக்ஸ் எனும் உபாதைக்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படும்.
முற்றாத வில்வக்காய் சுளைகள் பத்து கிராம், வெல்லம் இரண்டு கிராம், நல்லெண்ணெய் ஐந்து மில்லி, திப்பிலி மூன்று கிராம், சுக்குப்பொடி இரண்டு கிராம் வீதம் கலந்து நன்றாக மத்தித்து காலை, மாலை இருவேளை வெறும் வயிற்றில் சுமார் நாற்பதெட்டு நாட்கள் சாப்பிட தங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதை நன்றாகக் குணமாகக் கூடும்.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் இந்த உபாதைக்கு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியது. மலப்பையில் மலத்தினுடைய வெளியேற்றத்தினால் ஏற்படும் வெற்றிடத்தில் அபானவாயுவினுடைய சஞ்சாரமானது கூடுவதால் அது மேலும்மேலும் இந்த உபாதைக்கு வலுவூட்டுமென்பதால் நல்லெண்ணெய்யின் உபயோகத்தால் அதை அமைதியுறச் செய்து மலத்தைக் கட்டும் தன்மையும் அதற்கிருப்பதால் அதன் சிறப்பை இதில் எடுத்துக்கூற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

